Sunday, 12 February 2012

ஆஸ்துமாவிற்கான உணவு

”குளிர் காலத்தில வரும்; தூசியிலே நின்னா வரும்”, என்ற நிலைமையத் தாண்டி, ’எப்போதுமே நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் என நெஞ்சுக்குள் ஏதோ சிம்பொனி கேட்டுக் கொண்டேயிருந்த ஆஸ்துமாக் காலம் அது.


டவுண் வாகையடி முக்கு வரை பஸ்ஸில் போய், டபுள்ஸ் வைக்கத் தெரியாத அப்பாவின் சைக்கிளுக்காக காத்திருப்பேன். திருனெல்வேலி டவுணில் ,அந்த எண்பது வயதுக் கணபதியாபிள்ளை ஓமியோபதி டாக்டர் தாத்தாவைப் பார்க்கத் தான் இந்த பயணம்., தன் வீசிங்கிற்காக அந்த இனிப்புச் சவ்வரிசிகளை எடுக்கும் போது, “என்ன சாப்பிட்டான் அவன்?” என திட்டுவாரே, அதற்கு என்ன பதில் சொல்லலாம் என யோசித்திக் கொண்டிருக்கும் போது அப்பா அருகில் வந்து நிற்பார். ”ஏல, ரொம்ப நேரமா நிக்கியா? ”ஏபிசி பஸ் ஸ்பீடுக்கு என்னாலே சைக்கிள் மிதிக்க முடியாதுல்லா, என்று கூறிக் கொண்டே, ஏறிக்கோலே” என்பார். நான் பின் ஸீட்டில் ஏறி அமர்ந்து கொள்ள, டபுள்ஸ் அடிக்க தெரியாத அப்பா, வீசிங்கில் நடக்க முடியாத என்னை உட்கார வைத்து உருட்டிக் கொண்டே டாக்டர் வீட்டுக்குச் செல்வோம்.

”ராத்திரியில் அதிரசம் திங்காதே! சளி பிடிக்கும்னு சொன்னா கேக்கிறியா? இதுல சாயந்திரம் கிரேப்ஸ் வேற தின்னியாமே?..அம்மா சொன்னா..ஏன் சாப்பாட்டில கட்டுப்பாடே இல்ல..அப்புறம் எப்டி வீசிங் சரியாகும்..?” திட்டு முடியும் போது டாக்டர் வீட்டு வாசல் வந்திருக்கும்..ம்ம் அப்புறம் அவர் ஆரம்பிப்பார். எனக்கு மட்டும்,” ஏன் இப்படி? அத திங்காத; இத திங்காதேன்னு. ஜெயந்தி மட்டும் எல்லத்தையும் சாப்பிடறா அவளுக்கு ஒண்ணும் வரலே; எனக்கு மட்டும் இப்படி இழுக்குது..”அன்றைக்கு எனக்கு இருந்த கேள்வி இன்னும் பலருக்கு இப்போதும் இருக்கிறது.


காய்ச்சல் தலைவலியில் இருந்து எச்.ஐ.வி.எயிட்ஸ் வரை நோயினை விரட்ட, உணவு ஒரு முக்கிய அம்சம். ஆஸ்துமா சிகிச்சையில் உணவு ஒரு மருந்தும் கூட.எப்படி?
ஆஸ்துமா இருந்தால் காலை பானமாக மறந்தும் பாலோ அல்லது எந்த பவர் சீக்ரட் எனர்ஜியோ கலந்த பாலோ கொடுக்கத் தேவையில்லை.. பல் துலக்கியதும் முதலில் 2-3 குவளை நீர் வெதுவெதுப்பான நிலையில் அருந்துவது நல்லது,. அதன் பின் பால் கலக்காதத் தேநீர் சிறந்தது. “காபி/தேநீர் சாப்பிட்டா அதே மாதிரி கருப்பாயிடுவே,” என்று உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தயவு செய்து பூச்சாண்டி காட்டாதீர்கள். வெளுத்த பாலை விட கறுத்த தேநீரும் காபியும் எவ்வளவோ மேல்.

நல்ல வீசிங்கில் இரவில் சிரமப்பட்டிருந்தால் கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி என இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை உதிர்த்து போட்டு கசாயமாக வைத்து இனிப்பிற்குத் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், நெஞ்சில் இரவில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி உடனடி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக இந்த கலவை கசாயத்தைக் காலை பானமாக குடித்துவர இரைப்பு கண்டிப்பாய்க் கட்டுப்படும். கூடவே தும்மல் இருந்தால் முசுமுசுக்கை இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவில் வீசிங்கில் சிரமப்பட்டவர்க்கு காலை உணவு சாப்பிடப் பிடிப்பதில்லை. பசியும் இருப்பதில்லை. எளிதில் செரிக்கக் கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல், மிளகு ரச சாதம், இட்டிலி என ஏதொவொன்றை சாப்பிடுவது நல்லது. ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல், அரை வயிற்றிற்கு சாப்பிடுவதும் வேண்டும். இடையில் தேநீர் சப்பிடுவதும் நல்லது.

மதிய உணவில் நீர்சத்துள்ள சுரை,புடலை, சவ்சவ் இவற்றைத் தவிர்க்கலாம். மிளகு, தூதுவளை ரசத்துடன் நிறைய கீரை காய்கறிகள் சேர்த்து சாப்பிட வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், சீரணத்தை வேகப்படுத்தி எளிதில் மலம் கழிக்க வைக்கும் உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். வாயு உண்டாக்கும், செரிக்க நேரமாகும் கிழங்கு வகைகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள் நல்லதல்ல. மோர் சேர்ப்பது தவறல்ல. தயிரை தவிர்க்கலாம். சில வகை காய்களுக்கு சிலருக்கு அலர்ஜி இருக்கலாம். அவரவர்கள் அதை அடையாளம் காண வெண்டும். அதே சமயத்தில் தன் நாவிற்கு பிடிக்காததை எல்லாம், “அய்யோ எனக்கு பவக்கா அலர்ஜி! வெண்டக்கா ஒத்துக்காது” என நடிக்கத் துவங்கினால் இழப்பு கூடும்; இழுப்பும் கூடிடும்.


மாலையில் தேநீரோ/ சுக்குக் கசாயமோ எடுப்பது இரவு சிரமத்தை பெருவாரியாகக் குறைக்கும். இரவு உணவினை முடிந்தவரை ஏழரை மணிக்கு முன்பதாக எடுத்துப் பழகிக் கொள்வது நல்லது. கோதுமைரவை கஞ்சி, இட்டிலி நல்லது. பரோட்டா, பிரியாணி என படுக்கைக்குப் போகும் முன் புகுந்து உணவில் விளையாடுவது நல்லதல்ல. படுக்கைக்கு போகும் போது காலிவயிறு ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்தும்.

பல ஆஸ்துமா நோயினருக்கு வாழைப்பழம் குறித்து தேவையற்ற அச்சம் உள்ளது. நாட்டு வாழைப்பழம் (தென் மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது), மலை வாழைப்பழம் தினசரி மாலை வேளையில் சாப்பிடலாம்.மலத்தையும் இளக்க அது உதவிடும். ஆற்றலையும் தரும். மோரிஸ் அல்லது தற்போது சந்தையில் கிடைக்கும் ஹ்ய்பிரிட் மஞ்சள் வாழை கடைசிச் சாய்ஸாக இருக்கலாம். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை பழங்களை மருந்து எடுத்துவரும் காலத்தில் கண்டிப்பாக 6-7 மாதம் முற்றிலும் தவிர்ப்பது வேண்டும். பகல் பொழுதில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாசித் துண்டுகள் சிறிது மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.

இனிப்பு பண்டங்கள் ஆஸ்துமாவிற்கு நல்லதல்ல. ரொம்பா ஆசைப்பட்டால் பகல் வேளையில் கொஞ்சமாய் சுவைக்கலாம்.அதுவும் குளிர் காலத்தில் தேவையில்லை. 

பெரியவர்கள் மதிய உணவிற்குப் பின்னர் 2 வெற்றிலை சவைப்பதும் ஆஸ்துமாவிற்கு நல்லது தான். வெற்றிலையும் மிளகும் ஆஸ்துமா நோயில் பயனளிப்பதை நம்ம ஊர் சித்தர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு ஆய்வாளர்களுமே சொல்லியுள்ளனர். வெற்றிலையுடன் புகையிலையை மட்டும் மறந்தும் சேர்த்துவிட வேண்டாம். புற்று நோய் வந்துவிடும்.

சிவப்பரிசி அவல், புழுங்கல் அரிசி கஞ்சி, திப்பிலி ரசம், தூதுவளை ரசம், முசுமுசுக்கை அடை, முருங்கைக் கீரை பொரியல், மணத்தக்காளி வற்றல், இலவங்கப்பட்டைத் தேநீர், இவையெல்லாம் ஆஸ்துமாகாரர் மெனு கார்டில் அவசியம் இடம் பெற வேண்டும்.
சிறந்த உணவுத் தேர்வுடன், சரியான சித்த மருத்துவம், மூச்சுப்பயிற்சி எனும் பிராணாயாமம் இருந்தால் ஆஸ்துமாவைக் கண்டு பயம் கொள்ளத் தேவையே இல்லை.

பயறுகள் - மருத்துவப் பயன்கள்


 ஏழைகளின் புலால் என்று அழைக்கப்பட்டது பயறுகள். ஆனால் இன்று  பணக்காரனோ ஏழையோ பயமில்லாத முதுமைக்கான முதல் தேர்வு பயறுதான் என்ற நிலை. அரிசி, கோதுமை தானியங்கள் மீது அலாதி பயம் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் பயறுகள், தன்னுள்ளே பொதிந்துள்ள புரதத்தாலும், அதன் தாவர நுண்கூறுகள் தரும் அலாதி மருத்துவ பயன்களாலும், அன்றாட உணவில் இடம்பெற வலியுறுத்தப்படுகின்றன.
எது பயறு? சிப்பிக்குள் பொதிந்துள்ள முத்தைபோல், அழகான பச்சை நிற கதவுகளுக்குள் பத்திரமாய், வரிசையாய் பொதித்து வைக்கப்பட்டு விளையும் அவரைக் குடும்பத்து தாவரங்கள்தாம் இந்த பயறுகள். பாசிப்பயறு, உளுந்து, துவரை, மைசூர் பருப்பு, கொண்டைகடலை, பட்டாணி, ரஜ்மா.... என இதன் பட்டியல் நீளம். முழுதாய் இருப்பின் பயறு என்றும், உடைத்து இருந்தால் பருப்பு என்றும் செல்லமாய் அழைக்கப்படும் இந்த உணவு ஓர் உன்னத உணவு.

தானியமும் பயறும் உணவுக்குடும்பத்தின் தலைவனும் தலைவியும் மாதிரி. ஒவ்வொரு தானியமும் ஒவ்வொரு வித புரதமும், கூடவே கார்போஹைட்ரேட்டும் கொண்டிருக்கும். பயறும் அப்படித்தான். அரிசியில் இல்லாத புரதச்சத்து பாசிப்பயறில் இருக்கும்; உளுந்தில் இருக்கும். அதனால் தான் பயறையும் அரிசியையும் கூட்டணியாகக் கொண்டு இட்லியும் பொங்கலும் அன்று படைக்கப்பட்டன. கார்போஹைட்ரேட், புரதம் என்ற அறிவியல் தெரியாத போது அதன் அவசியம் தெரிந்து கூட்டாய்ச் சமைத்ததை நினைக்கையில் வியப்பும் பெருமிதமும் வருகிறது. இட்லி சாம்பார் சட்னி என்பது சரிவிகித சம உணவு என்பது புரியாமல் ஓட்ஸுக்கும் பிட்சாவுக்கும் வரிந்துகட்டிக் கொண்டு வக்காலத்து வாங்கும் நாகரீகக் கூட்டம் நகைப்பிற்குரியது.

சாதாரணமாய் 20-25% புரதச்சத்தைத் தன்னுள் கொண்டிருக்கும் பயறுகள், வளரும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவை. அதன் அவசியம் புரியாமல் ஒதுக்கியதில்தான், எத்தனையோ ஊட்டச்சத்து பானங்கள்  கலர்கலராய் விளம்பரங்களுடன் விடாது  நம்மை விரட்டி வீட்டுக்குள் வந்து விட்டன. உயரமாய் வளர வைப்பேன்; புத்திசாலியாக்குவேன்; என உள்வரும் அத்தனை ஊட்ட உணவுகளுக்கும் சிறிதும் சளைத்ததல்ல இந்த பயறுகள். நோய் எதிர்ப்பாற்றல் நன்றாயிருக்க சரியான பயறு உணவு தினசரி அவசியம். பயறுகள் ஸிக்ஸ் பேக் கனவான்களுக்கான முக்கிய உணவு. தசைகளை இறூக்கமாக வளர்ப்பதற்கு பயறு அவசியம். கூடவே உடற்பயிற்சியும் வேண்டும். அதை மறந்து, “சார்! தினம் முளைப்பாரி கட்டி பல பயறு சாப்பிடுகிறேன். ஸிக்ஸ் பேக் வரலையே” –என்று கேட்டால், சத்தமாய் ஏப்பமோ இல்லை வேறு எதுவுமோ வரலாம். ஸிக்ஸ் பேக் வராது. உணவும் உடலுழைப்பும் ஒன்றாய் சேர்ந்தால் மட்டுமே அரோக்கியமும் அழகும் வசப்படும். பயறு விஷயத்திலும் அப்படித்தான்.

சர்க்கரை நோயாளிகளின் அலாதிப் பசியைப் போக்குவதிலும், அதனால் திடீர் சர்க்கரை உயர்வு(hyperglycemia) ஏற்படாமல் பார்த்துக் கொள்வதிலும் சிறப்பானவை. சர்க்கரை நோயில், இன்று வலியுறுத்தப்படுவது லோ கிளைசிமிக் உணவுகளைத்தான். பயறுகள் லோ கிளைசிமிக் தன்மை கொண்டவை. மாலை வேளையில் பசியுடன் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு முளைகட்டிய பாசிப்பயறு சுண்டலோ, சிவப்பு நிற மூக்குக் கடலைச் சுண்டலோ சிறந்த சிற்றுண்டிகள். அவை உடனடி பசியையும் குறைப்பதுடன், இரவில் அதிக பசியில், அதிக உணவை சாப்பிட்டு காலையில் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்து கலவரப்படுத்தாமல் இருக்க உதவிடும்.
பெரும்பாலான பயறுகள் கொழுப்புச் சத்து குறைவானவை..அல்லது சற்றும் இல்லாதவை. அதிக கொழுப்புச் சத்து உள்ள  நபர்கட்கு, அன்றாட உணவுத் தேர்வில் பயறுகள் இருக்கும் போது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு (low density lipo protein-LDL)கிட்ட்த்தட்ட 22% குறைவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பயறுகளின் அரசி என்றால் உளுந்தைச் சொல்லலாம். பெண்களின் கருப்பையை வளமாக்குவதில் உளுந்துக்கு இணையான உணவு ஏதும் இல்லை. சோயாவும் அது போன்றதே. உளுந்தின் முழுபயறை சப்பாத்திக்கு ’தால்’செய்வது போல வாரம் இருமுறை செய்து வய்துக்கு வந்த பெண்கள் இருக்கும் வீட்டில் செய்வது நல்லது. உளுந்தக்களிக்கு கொந்தளிக்கும் பல குமரிகள் சப்பாத்திக்கான தால் என்றதும் சாத்வீகமாகுவது சமீப காலத்திய மாற்றம். உளுந்தைப்பொறுத்த மட்டில் வாய்ப்புக் கிடைத்தால் தொலி நீக்காதபடி பயன்படுத்துவது நல்லது. தொலியில் உள்ள நிறமிச் சத்து பல கருப்பை சார்ந்த நாட்பட்ட நோய்களை நீக்க்கூடியதும் கூட.

பாசிப்பயறு, கொண்டைக்கடலை, இவற்றை முளைகட்டிச் சாப்பிடுவது அதன் புரதச்சத்து உடலில் விரைவாக சேர ஏதுவாகும். அதே நேரத்தில் முளை கட்டிய பயறுகள் உடல் எடை குறைத்திடவும் உதவிடும். ஆதலால், வளர வேண்டிய சிறு குழந்தைகளுக்கு வருத்து பொடித்த பயறுக் கஞ்சியும், உடல் எடை குறைய டயட்டில் இருக்கும் நபர்கட்கு  முளைகட்டிய பயறும் நலம் பயக்கும். பால் புரதத்தை விட, புலால் புரதத்தை விட, பயறுப்புரதங்கள் விலை குறைந்தவை; உடலில் முழுமையாய் அதிகமாய் உட்கிரகிக்கப்படுபவை. குறிப்பாய் பாசிப்பயற்றின்protein efficiency ratio பிற புலால் புரதங்களைக் காட்டிலும் துரிதமானது.

அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பது புரதத்திற்கும் பொருந்தும். போஷாக்கா வளர்க்கணும் என்றோ.. நாங்க வசதிபடைத்தவர் என நினைத்தோ பொங்கலில் முந்திரியை கரண்டி கரண்டியாக அள்ளிப்போட்டு சாப்பிடுவதும், வருத்த முந்திரியில்லாமல் எப்டீங்க போர்டு மீட்டிங் என வாரம் மூன்று மீட்டிங் சாப்பிட நடத்துவதும் இரத்தத்தில் யூரிக் அமிலத்தை உயர்த்தி வலது கால் பெருவிரல் வீங்கி வலிக்கிறதே யார் கிட்ட போகலாம் என யோசிக்க வைக்கும்? ’கவுட் ஆர்தரைட்டிஸ்’ எனும் ஒரு வித மூட்டுவலிக்கு அதிக புரதம் ஒரு முக்கிய காரணம். அதிக புரதம் உடலில் கொழுப்பாய்ச் சேமிக்கப்படும் என்பதாலும் அளவிற்கு அதிகமாக பயறுகள் அவசியம் இல்லை. அதன் மேலும் பயறு சிலருக்கு வாயுவை அதிகப்படுத்தும் என்பதால், எப்போதும் இஞ்சி, பூண்டுடன் பயறைச் சாப்பிடுவது சரி. வாய்வுக் கோளாறு ஏற்கனவே உள்ளவர்கள் பாசிப்பயறு, உளுந்து மட்டும் சேர்க்கலாம். பிறவற்றைத் தவிர்ப்பது நல்லது.

சின்ன வயசிலேயே..பெரிய மனுஷியாவது....



கருத்தரிக்கும் கடமை ஒன்றுக்காகமட்டும் படைக்கப்பட்டதல்லமாதவிடாய் என்பதை நவீனஅறிவியல் உணர்ந்தது சமீபத்தில்தான். மாதவிடாய் துவங்கியதுமுதல் முடியும் வரை. அந்த மூன்றுநாட்கள் சோர்வையும் வலியையும்களைப்பையும் போக்கும்விஷயத்தில் மட்டும் தான் கவனம்கொண்டிருந்தது மருத்துவ உலகம்.இன்னும் கருத்தரிப்பு சார்ந்தவிஷயத்தில் வரும்இடையூறுகளுக்கு மட்டும் மாதவிடாய் உற்றுப்பார்க்கப்பட்டது.

மாதவிடாய் முடிவுக்குப் பின் வந்தகால்சிய குறைவின்ஆஸ்டியோபோரோசிஸ், அல்சர், மார்பகப் புற்றுநோய் மற்றும் மனஅழுத்தம் ஆகிய துன்பங்கள்தாம் அட! இந்த மாதவிடாய் பல்வேறுஉடல் செயல்பாடுகளுடன்தொடர்புடையது போலும் என்றபுரிதலை துவக்கியது.
சரியாக 11-14 வயதில் துவங்கும்இந்த மாதவிடாய் தற்போது 8வயதில் 9 வயதில் துவங்க ஆரம்பித்துள்ளது..ஏனிந்த அவசரம்? எப்படிநிகழ்கிறது இந்த மாற்றம்? என்ற சிந்தனை இன்று பல மருத்துவஆய்வாளர்களிடையே வேகமாக எழுந்துள்ளது. உணவா? வாழ்வியலா?பாரம்பரியமா? சுற்றுச்சூழலில் நிகழும் மாசுக் குவியலா? மன அழுத்தமா?மருந்தா? இன்னும் என்ன காரணத்தால் இந்த அவசரமாக வெகு இளம்வயதில்ஏற்படுகிறது இந்த மாதவிடாய் என்ற ஆய்விற்கு இன்னும் சரியாய் முடிவுகிடைக்கவில்லை.. ஆனால் பல முக்கிய காரணங்கள் முதல் ஆய்வுத் தகவல்அறிக்கைகள் வந்து சேர ஆரம்பித்துவிட்டன. என்ன அவை?

முதலில் பால்.  “அடிக்கடி பால்வேண்டாம்” என எழுத துவங்கியதில்,லல்லுபிரசாத் தலைமையில் பால்கம்பெனிகாரர்கள் பலர் என்று என் பல் பிடுங்க என்று வரப்போகிறார்களோத்தெரியவில்லை..இருந்தபோதும் பால்மீதான குற்றச்சாட்டுக்கள்வலுப்பெற்றுகொண்டே இருக்கின்றன.சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில்சிறுவயதில் அதிகம் பால் மட்டும்குடிக்கும் குழந்தைகள் சீக்கிரமாகபூப்பெய்துகிறார்கள் என்ற தகவல்வந்துள்ளது. இனி பெண் குழந்தைகளை கூடுதல் பால் கொடுத்து, பாலூட்டிவளர்த்த கிளியாக்க வேண்டாம்..அப்புறம் 4 ம் வகுப்பு படிக்கையிலேயேஅதிகம் அவஸ்தைப்பட வைக்கும் அந்த குழந்தையை.
பால் மட்டுமல்ல..பால்பவுடர் கலந்துசெய்யப்படும் சாக்லேட்டுகளாலும் இதுநிகழக் கூடும். கன்னாபின்னாவென மில்க்சாக்லேட் சாப்பிடும் கூட்டம் இன்று நடுத்தரவர்க்கத்தில் அதிகம்..என் குழந்தை கண்டகண்ட மிட்டாய் எல்லாம் சாப்பிடுவதுகிடையாது, ஒன்லி மில்க் சாக்லேட்” என்றுபெருமைப்படும் அப்பாவி அம்மாவின்குழந்தை ஓவர் வெயிட்டாகத் தான் திரியும்.இந்த குட்டி குண்டுக்கள் கூட விரைவில்பூப்படையும் என்கிறது அறிவியல். இன்னும்இது போன்ற சிறுவயது குண்டு குழந்தைகள்விரைந்து மிக இளம் வயதில் பூப்படைவதுமட்டுமல்லாமல், சரியாக மாத மாதம்இதனைப் பெறுவதில்லை.. சினைப்பையினுள் நீர்க்கட்டிகள் உருவாகி பின்னர் பூப்பும் முழுமையாய் irregular ஆகிவிடும். Polycystic ovarian disease இன்று அதிகம் பெருகி, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதற்கும், இளவயது குண்டும், சீக்கிரம் பூப்பெய்துவதும் காரணமாகிவிடும்.
அதிகபட்ச புலால் உணவை இளம்வயதில் சாப்பிடுவதும் சீக்கிரம் பூப்பெய்வதற்கான காரணம் என்று சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. “சிக்கனில்லாமல் எம் பொண்ணு சாப்பிடவே மாட்டாளாக்கும்” என்று இனி பெருமை கொள்ள வேண்டாம். அதிலும் தற்போது மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழிக்கறிகளில் சேர்க்கப்படும் சில ஹார்மோன்கள் 8வயதிற்கு முன்னர் பூப்பெய்துவதற்கானக் காரணமாக கருதுகிறார்கள்..”இந்த மேனாட்டு கோழிக்கறி கடைகள் பல இப்போது படு அலங்காரமாக வந்திருக்கிறதே! அதில் பள்ளிப்பாளையம் நாட்டுக் கோழியை வைத்து நக்கட்ஸ் செய்கிறார்களா அல்லது சிகாகோ கோழியா” என்பது எனக்கு தெரியவில்லை..ஒரு வேளை பாஸ்போர்ட் விசா இல்லாமல் வந்த கோழிக்கறி எனில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. அதற்காக சிறு பிள்ளைங்களுக்கு கோழியே காட்ட வேண்டாம் என்றல்ல. காலை இட்லிக்கு கொத்துக்கறி; மத்தியானம் சிக்கன்பிரியாணி, மாலை சிக்கன் லாலிபப் என புகுந்து விளையாடுவதை, “வளர்ற பிள்ளை அதைப்போயி..” என பேசாமல் இருக்க வேண்டாம்.
பிராய்லர் கோழியில் மட்டுமல்ல, புலாலிறைச்சியில் அதிக எடை கிடைக்க பல ஹார்மோன்கள் சேர்ப்பது, எல்லா விலங்கிறைச்சியிலும் நடக்கிறது. இதில் சேர்க்கப்படும் ஈஸ்டர்டியால் ஹார்மோன் கொஞ்சம் கூடுதலாக அப்படியே இறைச்சியிலும் இருப்பதுதான் இந்த இளம் வயது பூப்பிற்கு காரணம் என மேல்நாடுகளில் சண்டையே நடந்து வருகிறது. நாம தான் இந்தியாவை உரம் போட்டு வளர்க்க, அத்தனை வெளிநாட்டுக் குப்பையையும் சிகப்புக்கம்பளம் விரித்து கடை விரிக்கிறோமே! நாளை நாமும் இந்த கூக்குரலிட வேண்டியிருக்கலாம்.
மாடு கூடுதலாகப் பால் பீச்சRCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் சேர்ப்பதை மேனாட்டு FDA – வே அங்கீகரித்திருக்கிறது. நம்ம ஊர் பாலிலும் அது இருக்க கூடும் என கொஞ்ச நாள் முன்னால் ஒரு பயம் இருந்துவந்தது. பல இடங்களில் பால் அதிகரிக்க வைக்க மறைமுகமாக மருந்துகள் பயன்படுத்தியதை கண்டறிந்து சில  நடவெடிக்கைகளும் எடுக்கப்பட்டது. தற்போதைய நிலைமை அந்த கோமாதாவிற்குத்தான் வெளிச்சம். இந்த RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் பாலிலும் தயிரிலும் மில்க் சாக்லேட்டிலும் இருக்கும் பட்சத்தில், அதுவும் குழந்தைகளை விரைவில் பூப்பெய்த வைக்கும்.
அட! கொஞ்சம் சீக்கிரம் வயதிற்கு வந்தால் என்ன? என்போருக்கு ஒரு செய்தி...மார்பகபுற்று நோய் வரும் வாய்ப்பு சீக்கிரம் வயதிற்கு வரும் குழந்தைகட்குத்தான் அதிகமாம். அதுவும் தற்போது மார்பகப் புற்றுநோய் மிக அதிகமாக வருவதில் மருத்துவ உலகம் திணறிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு கூடுதல் செய்தி.. விரைவாக பூப்பெய்தும் பெண்களின் வாழ்நாள் விகிதம் சரியான வயதில் பூப்பெய்தும் பெண்ணைக்காட்டிலும் குறைவு என மருத்துவப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.
எப்போதும் இல்லாத அளவு இப்போது ஓட்ஸ் வியாபாரம் பெருகிவருகிறது. வணிக உத்திகள் சரியாக இருந்தால் எதையும் எங்கும் கொண்டு செல்ல்லாம் என்ற விதிக்கு தற்போதைய உதாரணம், சத்தியமங்கலம் காடு முதல் சங்கரங்கோயில் முள்ளிக்குளம் வரை அமோகமாக விற்கப்படும் ஓட்ஸ்தான். இந்த ஓட்ஸிலும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து கூடுதலாக உள்ளது. ஐஸோஃப்லாவின்ஸ், லிக்னைன் சத்துக்கள் அதிகமுள்ள எந்த தாவரமும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் உடலுக்கு தரக் கூடியவை அந்த வரிசையில் எள், உளுந்துக்கு இணையாக ஓட்ஸ்-உம் ஒய்யாரத்தில் உள்ளது. “நாங்க ஒட்ஸ் சாப்பிட்டு ஒல்லியாயிட்டு இருக்கோம்னு,” நினைச்சு  ’நாகரீக’ பாட்டிகள் ஒரு டம்ளர் உங்க பேத்திக்கும் இனி அடிக்கடி தர வேண்டாம்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு-என்பதை மறக்க கூடாது. கோழியோ, பாலோ ஓட்ஸோ எப்போதோ சாப்பிடுவது நிச்சயம் கேடு கிடையாது. விளம்பரம் பார்த்தோ, வசதியாக இருக்கிறதே என்ற சோம்பலிலோ, குழந்தைகள் அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதுதான் ஆபத்தாகக் கூடும்.

Thursday, 9 February 2012

Monday, 6 February 2012

முகவரியை தொலைக்கும் தமிழன் !



   பொதுவாகவே உறவினர்களின் வீடுகளுக்கோ நண்பர்களின் வீடுகளுக்கோ அடிக்கடி செல்வது என்பது எனக்கு ஏனோ பிடிப்பதில்லை சன்யாசம் பெறுவதற்கு முன்பாகவே இந்த பழக்கம் என்னிடம் இயல்பாக ஒட்டி இருந்தது அதற்கு காரணம் இல்லை என்று சொல்லிவிட முடியாது ஒரு வீட்டிற்கு நாம் போனவுடன் நம்மை கவனிப்பதற்காகவும் உபசரிப்பதற்காகவும் அவர்கள் எவ்வளவோ பிரயத்தனம் எடுத்து கொள்கிறார்கள் அதனால் அவர்கள் மன உளைச்சல் அடையவில்லை என்றாலும் நமக்கு அதை பார்த்தவுடன் நம்மால் தானே அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்ற எண்ணம் வந்துவிடுகிறது இதனால் அவர்களோடு இயல்பாக பழக முடியாமல் சில நேரங்களில் விருப்பம் இருந்தாலும் அது வேண்டாம் இது வேண்டாம் என்ற நடிக்க வேண்டிய சூழல் வருகிறது இதனாலேயே நான் அதை பெருமளவு தவிர்த்து விடுவேன் 

சன்யாசம் வாங்கிய பிறகு இந்த எண்ணம் அதிகமாகவே வந்து விட்டது என்பதை விட சன்யாசத்தை காரணம் காட்டி பல அழைப்புகளை தவிர்த்து விட கூடிய வாய்ப்பு கிடைத்து விட்டது ஆனாலும் எப்போதுமே யார்வீட்டிற்கும் போகாமல் இருக்க கூடிய வாய்ப்பு அமையும் என்று சொல்வதற்கு இல்லை தவிர்க்க முடியாத சூழ்நிலை வரும் போது போய்தான் ஆகவேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது அந்த வகையில் ஒரு நண்பரின் வீட்டிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன் அவர்களுக்கு என்னை கண்டவுடன் ஆனந்தம் வராதவன் வந்திருக்கிறானே என்ற மகிழ்ச்சி அதனாலோ அல்லது அவர்களது இயல்பாலோ ஏராளமான தின்பண்டங்களை என் முன்னால் ஐயனார் சாமிக்கு படைப்பது போல் படைத்து விட்டார்கள் அவைகளை பார்த்தவுடன் எதையும் சாப்பிட முடியாத அளவிற்கு மலைத்து போனேன் என்பது ஒருபக்கம் இருந்தாலும் உண்மையில் அதிர்ந்து போனேன் என்பது தான் உண்மையாகும் 


அவர்கள் என் முன்னால் வைத்திருந்த தின்பண்டங்களின் பல என்னவென்றே எனக்கு தெரியாது விதவிதமான வடிவங்களில் வித்தியாசமான வண்ணங்களில் அவைகள் இருந்தன இந்த பலகாரங்கள் அனைத்துமே வீட்டில் செய்ததா என்று அவர்களிடம் கேட்டேன் எதோ ஒரு விசித்திரமான ஜீவனை பார்ப்பது போல் என்னை பார்த்த அந்த வீட்டு அம்மணி இவைகளை எப்படி வீட்டில் செய்ய முடியும் எல்லாமே கடைகளில் வாங்கியவைகள் என்று பதில் தந்தார்கள் கடையில் வாங்கியவைகள் என்றால் இந்த பலகாரங்கள் என்றோ செய்யபட்டிருக்க வேண்டும் நாளானாலும் கெட்டு போகாமல் இருக்க எதாவது ரசாயனங்கள் கலக்கபட்டிருக்க வேண்டும் இவைகளை சாப்பிட்டால் உடல்நலம் கெட்டுவிடாதா என்று அந்த அம்மணியிடம் கேட்டேன் 

நீங்கள் சொல்வது விசித்திரமாக இருக்கிறது காலையில் விழித்தது முதல் இரவு உறங்கும் நேரம் வரை ஓய்வு என்பதே கிடையாது ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை தான் இருக்கிறது இதில் பலகாரங்களை வீட்டில் செய்ய நேரம் என்பதே கிடையாது அதற்கு ஒதுக்குகின்ற நேரத்தில் வேறு எதாவது உருப்படியான வேலையை செய்யலாம் பணம் கொஞ்சம் அதிகமாக செலவானாலும் கூட கடைகளில் வாங்கி கொள்வது தான் சிரமம் இல்லாத காரியம் இதில் உடல்நலம் ஆரோக்கியம் சுகாதாரம் என்று பார்த்தால் அவசரமான காலத்தில் வாழவே முடியாது என்று பதில் சொன்னார் அந்த பெண்மணி 


முன்பு காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குளிர்ச்சியான நீராகாரம் பருகுவோம் வயிற்றில் உள்ள எரிச்சல் பித்தம் எல்லாம் கட்டுக்குள் இருக்கும் பழைய சாதம் வத்த குழம்பு மாங்காய் வடு தயிர் என கிராமிய காலை உணவுகள் வாயிற்ற மாட்டும் அல்ல நெஞ்சத்தையும் நிரப்பும் சூடான இட்லி சாம்பார் தேங்காய் பாலோடு ஆப்பம் இடியாப்பம் பொங்கல் என்று நீளுகின்ற காலை சிற்றுண்டிகளின் பெயர் பட்டியலே நாக்கில் நீர் ஊற செய்யும் 

ஆனால் இன்று நமது குழந்தைகள் இட்லி தோசையை கூட அருங்காட்சியங்களில் பாக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் காய்ந்து போன பன்னை பிரட் என்ற பெயரில் காலை உணவாக உட்கொள்வதும் வாயிலேயே நுழையாத பெயர் கொண்ட நூடுல்ஸ்,பீசா என்று வேகாத செரிமானம் ஆகாத உணவுகளை எதோ தேவாமிர்தம் போல் சாப்பிடுகிறார்கள் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் செய்யப்படுகிற அதிரசம் முறுக்கு பணியாரம் சீடை போன்றவற்றின் பெயர்களை கூட நமது குழந்தைகள் மறந்து வருகிறார்கள் 


மணக்க மணக்க வெண்டக்காய் சாம்பார் வைத்து வாழைப்பூ பொரியல் செய்து கத்தரிக்காய் கூட்டு வைத்து சம்பா அரிசி சாதத்தில் மதிய உணவை வாழை இலையில் சாப்பிட்ட காலமெல்லாம் கனவாக போய்விட்டது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது பருத்தி கொட்டையை ஊற வைத்து ஆட்டுக்கல்லில் ஆட்டி பாலெடுத்து அதில் சாதம் சமைத்து கட்டியாக பருப்பில் பிசைந்து காரமான மிளகாய் துவையலை தொட்டுக்கொண்டு சாப்பிட என் பாட்டி தருவார்கள் அந்த சுவை இன்று ஐந்து நட்சத்திர உணவில் கூட இல்லை என்று சொல்வதை விட நட்சத்திர உணவுகள் அதன் பக்கத்தில் கூட வரமுடியாது என்று தான் சொல்ல வேண்டும் 

கம்பங்களி,கேழ்வரகு கூழ்,சோளச்சோறு என்பதெல்லாம் இன்று கிடைக்கவே கிடைக்காத உணவாக இருக்கிறது ஆனால் இத்தகைய பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு கொண்டு இருந்த காலம் வரை தமிழன் ஆரோக்கியமாக இருந்தான் இன்று நாகரிகம் என்ற போர்வையில் வேண்டாதவைகளை சாப்பிட்டு வரக்கூடாத வரவே முடியாத நோய்களை வரவழைத்து கொண்டு அவஸ்த்தை படுகிறான் கம்பளி சொக்காவும் காஸ்மீர் குல்லாவும் போட்டுக்கொண்டால் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கும் ஆனால் அதற்காக அதை உசிலம்பட்டி சந்தையில் வைகாசி மாத உச்சி வெயிலில் போட்டுக்கொண்டு ஒருவன் திரிந்தான் என்றால் அவன் பைத்தியகாரன் மட்டுமல்ல நாளடைவில் சரும நோய் வந்து சொரிந்தே செத்து போய்விடுவான் 


தண்ணீரில் தான் மீன் வாழ்கிறது என்பதற்காக ஆற்று மீனை பிடித்து கடல் நீரில் போட்டால் அதுவால் வாழமுடியாது அதே போலத்தான் இடத்து இடம் சூழலுக்கு சூழல் பருவநிலை மாறுபடுகிறது அந்த பருவ நிலைக்கு ஏற்றார்போல உடையும் இருக்க வேண்டும் உணவும் இருக்க வேண்டும் இன்றைய தமிழன் தான் முனுசாமி தேவரின் மகன் என்பதை மறந்து ராபட் கிளைவின் பேரன் என்று நினைத்து கொண்டு பன்னையும் பிரட்டையும் தின்று வையிற்றை கெடுத்து மருத்துவமனை கட்டிலில் இருபது வயதிலேயே வந்து விழுந்து விட்டான் புற்று நோய் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் மன நோய் என்பவைகள் முன்பு யாருக்கோ ஒருவருக்கு தான் அரிதாக வரும் இன்று இந்த நோய்களில் எதாவது ஒன்று வீட்டுக்கு ஒருவருக்கு இருக்கிறது இதற்கு காரணமென்ன அந்த நோய்களின் மூலம் என்ன என்பதை யோசிக்கவே மறந்து விடுகிறோம் 

என்று வயலில் போட்ட தழை உரம்,தொழுவுரம்,வேப்பம் புண்ணாக்கு என்பவைகள் மாறி யூரியா பொட்டாசியம் என்று வந்ததோ அன்றே நமது பூமி விஷத்தன்மையை பெற்று விட்டது விஷத்தில் பயிராகும் தானியங்கள் மனிதனுக்கு நோயை தராமல் ஆரோக்கியத்தையா தரும் பாதி கெட்டது போதாது என்று மீதியை கெடுத்து கொள்ளவும் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு விட்டோம் இதனால் அவதியும் படுகிறோம் ஆனால் அதிசயம் என்னவென்றால் நமது தொல்லைகளுக்கெல்லாம் காரணம் என்னவென்று அறியாமலேயே பல புதிய தொல்லைகளை பட்டு கம்பளம் விரித்து வரவேற்று கொண்டிருக்கிறோம் தமிழனை போல் முகவரியை தொலைத்து விட்ட இனம் எதுவுமே இல்லை என்று வருங்கால உலகம் கைகொட்டி சிரிக்கும் நிலையை நாமே வரவழைத்து கொண்டிருக்கிறோம்.

Saturday, 4 February 2012

தாம்பத்ய நலவாழ்விற்கு உதவிடும் நல்லுணவுகள்



குடும்ப அமைப்பு என்பது மனித வாழ்வின் பரிணாமத்தில் ஒரு முக்கிய மைல்கல். கிட்ட்த்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இனக்குழுக்களாக (ஒரு கூட்டமாக அல்லது மனித மந்தையாக) திரிந்தோம். பின் இனக்குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வெற்றி பெற்ற கூட்டமும் அதன் தலைவனும், தான் சேர்த்த பொருளும் உடைமையும் தனக்கும் தன் மகனுக்கும் மட்டும் இருக்க வேண்டும் என்ற சிந்தனை வலுவாக எழுந்தது. அப்போது தான், பெண்ணை குழு வாழ்க்கையில் இருந்து விலக்கி, தன்னுடைமையாக்கி, தன் மகவைச் சுமப்பதில் இருந்து அந்த குழந்தைய ஆளாக்கும் பொறுப்பையும், தன்னையும் தன் குடுமபத்தையும் காக்கும் பொறுப்பையும் அவளுள் திணித்தான். அப்போதிலிருந்து அடுப்பங்கறைக்கும் படுக்கையறைக்கும் பந்தாடப்படும் பெண்களில் பலர் நிலைமை இன்றைக்கு வரைக்கும் பெரிதாய் மாறவில்லை. 

அதன்பின் கொஞ்சமாய் நடந்த மாற்றமும், அதன் நீட்சியாய்  நிகழும் தற்போதைய வணிகக் கலாச்சாரமும், நம் மரபுகளின் தளைகளை உடைப்பதற்குப் பதிலாக, அதனுள் களைகளை கவனமாக நட்டுவருகிறது. சார் சார்..உணவே மருந்துன்னு எழுதச் சொன்னால், பெண்ணியம் பன்னாட்டியம்-னு எதேதா பேச ஆரம்பிச்சிட்டீங்களேன்னு மண்டையக் கசக்க வேண்டாம். வரலாறு தெரியாமல் வாழ்வை நாம் நகர்த்தப் பழகியதால் தான் புதிய சிந்தனை, புதிய படைப்பு, ஏன் புதிய ரெசிபி எதுவும் பெரிதாய்ப் பயனுள்ளதாய் பிறக்க மாட்டேங்கிறது.
 “காலையில் கொஞ்சம் அதிகமாய் தும்முகிறார்; பிர்த்டே கிரீட்டிங்க்ஸ் எஸ்எம்எஸ்-கவித்துவமாகவே இல்ல..அதனால விவாகரத்துக்கு போறோம்,”-னு சொல்ற புதுமணத் தம்பதிகள் இன்று ஏராளம்.  ‘குடும்ப கோர்ட்டுக்கள் கூடுதல் நேரம் வேலைசெய்ய வேண்டும்; ஃபைல்கள் குவிகின்றன’ என உச்ச நீதி மன்றம் போன வாரம் கூவிச் சொன்னதுக்கு  இணையதள ஃபேஸ்புக்கில்,  “ஏனிந்த கொலவெறி”- தமிழ் வெண்பாவிற்கு அப்புறம் கூடுதல்  “லைக்”- ஓட்டு விழுந்திருக்கிறது. இனக்குழுக்களில் இருந்து பிரித்து ஆளப்பட்ட பெண், இன்று குடும்பக்குழுவில் இருந்து கூட்டமாய் வெளியேற ஆயத்தமாவது போல் உள்ளது சமீபத்திய திருமண முறிவு புள்ளிவிபரங்கள்.

சரி! திருமண பந்தத்தை ஃபெவிகால் போட்டு ஒட்டிவைக்க சிறப்பு உணவுகள், மூலிகை ரெசிபிகள் இருக்கிறதா என்று கேட்டால், உண்டு..ஆனால் அவை ரெடிமேட் இல்லை. கஸ்டம் மேட்.. கிச்சனில் துவங்கும் காதல், இடித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது கிளுகிளுப்பாகி, இரவில் இதமான தாம்பத்யமாகும் வித்தைக்கு நீங்கள்தான் கூடுதல் மெனக்கெட்டு, அக்கறைப்பட்டு சமைத்து, அலங்கரித்து, அழகாய்ப் பரிமாறி, உடன் உட்கார்ந்துச் சாப்பிட்டு, சமைத்ததைப் பாராட்டி, அவ்வப்போது  “அன்றைக்கு செஞ்சியே கோதுமை ரவா இட்லி..சூப்பர்” என்பது போல் அங்கீகரித்திருக்க வேண்டும். பார்த்தவுடன் பலருக்கு பற்றிக்கொண்டு வரும் உப்புமா கூட இந்த ஃபார்முலாவில் இருந்தால் தாம்பத்ய வாழ்விற்கான சிறப்புணவாயிருக்கும். சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

ஆணும் பெண்ணும் ஆரோக்கியமாக இருப்பது திருமண வாழ்விற்கு அடிப்படை. ஆரோக்கியமான தம்பதியால் மட்டுமே அன்பான மகிழ்வான வாழ்வை நடத்த முடியும். ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். அடிவயிற்றில் திருகு வலியை வைத்துக் கொண்டு ரொமான்ஸ் பண்ணுவது கஷ்டம். மலச்சிக்கலுடன் இருந்து கொண்டு எப்படி கனிவாய்க் காதல் பார்வை பார்க்க முடியும்? அப்படியே ட்ரை பண்ணிணாலும் “ஏன் இப்படி முறைக்கிறீங்க?..ன்னு,” யுத்தம் துவங்கலாம். ஆதலினால் காதல் செய்வீர் அடிப்படை ஆரோக்கியத்துடன்.

சோர்வில்லாத முகம் உடல் தாம்பத்ய வாழ்வின் அடித்தளம். நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த மாதிரியே எப்பவும் “லுக்”-கோடு இருக்கும் துணையைப் பார்த்தால் காதலாய் இராது.பாவமாய்த் தான் இருக்கும். எப்போதும் புத்துணர்வாய் இருக்க தினசரி ஒரு வேளை பழங்கள் எடுப்பது மிக மிக அவசியம். ஒருவேளை தைராய்டு இருந்தால் குணப்படுத்த வேண்டும். சர்க்கரை கட்டுக்குள் இல்லையென்றால் அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். அப்போது சோர்வு மறையும்.

பழங்களில் குறிப்பாக மாதுளை காதல் பெருக்கும் ஒரு கனி என சீனமருத்துவமும் நவீன தாவரவியலாளர்களும் பலகாலமாய்ச் சொல்லி வருகிறார்கள். கொஞ்சம் கூடுதல் விலை என்றாலும் மாதுளை மரத்தில் விளையும் வயாகரா. காய்ந்த திராட்சை(கிஸ்மிஸ்), ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு கொய்யா இவையெல்லாம் உடலையும் மனதுக்குமான ’கெமிஸ்ட்ரி’டீச்சர்ஸ். இனி ஆஸ்பத்திரிக்கு மட்டுமல்ல, வீட்டுக்கும் பழம் வாங்கிச் சென்று பழகுங்கள். உடல் வியாதி மட்டுமல்ல மன வியாதியும் போய்விடும்.

காமம் பெருக்கும் கீரைகள் என்று, சிறு கீரை, முருங்கைக்கீரை, தூதுவளைக் கீரை என ஒரு பட்டியலையே சித்த மருத்துவம் சொல்லியிருக்கிறது. இனி கிள்ளுக்கீரை என அலட்சியமாக கீரையைப் பார்க்காமல், கீரையை நரம்பு டானிக்காக பாருங்கள். கீரையில் பொதிந்துள்ள கனிமங்களும், உப்புக்களும் பல நரம்பு பலப்படுத்தும் சத்துக்களும் வேறு தாவரங்களில் குறைவு. சின்ன குழந்தைகளாய் இருக்கும் போதே கீரையை விரும்பி உண்ணும் பழக்கத்தை உண்டாக்குங்கள்.. கீரை மட்டும் பிடிக்காது எனச் சொல்லும் இளைஞர்-யுவதி கூட்டம் பெருகி வருகிறது. பின்னாளில் அவர்கள் நரம்பு டாக்டரையோ, கரு உருவாக்க உதவி செய்யும் கம்பெனிகளையோ நாடாமல் இருக்க அந்த கீரைகள் உதவிடும். பாலி சிஸ்டிக் ஓவரி கூடி வருவதற்கும் “கீரை சாப்பிடமாட்டேங்”கிற பிள்ளையின் பிடிவாதமும், “செல்லத்துக்கு நூடுல்ஸ் தரவா?” எனும் அம்மாவின் அலட்சியமும் தான் ஒரு முக்கிய காரணம். ஹை கிளைசிமிக் தன்மையுடைய உணவை கீரை லோ - கிளைசிமிக் ஆக்கும். அதன் ஆல்ஃபா அமைலோஸ் இன்ஹிபிடார்ஸ் சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரை வேகமாக உறிஞ்சப்படுவதைத் தடுக்கும்.

கருத்தரிக்க தயாராக இருக்கும் புதுமணப்பெண் ஃபோலிக் அமில விட்டமின் சத்து எடுத்துக் கொள்வது அவசியம். கீரைகள், வெண்டைக்காய் மாமிச உணவுகளில் ஃபோலிக் அமில சத்து இடைக்கும். ஆண்கள் பாதாம், சாரைப்பருப்பு கலந்த பசும்பால் அருந்துவதும்., முடிந்தால் ½சிட்டிகை அதில் சாதிக்காய் போட்டு அருந்துவது  நலம். (ஒரு சிலருக்கு சாதிக்க்காய் மலச்சிக்கல் தரக்கூடும்..அவர்கள் அதனைத் தவிர்க்கலாம்). இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது கூட தாம்பத்ய வாழ்விற்கு உதவிடும். அதன் பொட்டாசிய சத்தும் டெஸ்டோஸ்டீரோனை தூண்டும் சத்துக்களும் அதற்கு சான்றளிக்கின்றன. மாதவிடாய் சீராக இல்லாத இளம்பெண்கள், உணவில் தொலிஉளுந்து, சோயா, வெந்தயம், பூண்டு இவற்றை எடுப்பதும், வாய்ப்பிருப்பின் கற்றாழைச் சாறு ஜூஸ் சாப்பிடுவதும் அவர்கள் தாம்பத்ய வாழ்விற்கும் கருத்தரிப்பிற்கும் நல்லது.
காய்கறிகளில் முருங்கைக்கு முதலிடம். பாக்யராஜ் பரிந்துரைத்ததாலல்ல. மருத்துவ உலகமும் வரிந்து கட்டிக் கொண்டு முருங்கையின் கீரை காய், விதை க்கு ஆண்களின் விந்தணுக்களைக் கூட்டும் சக்தியுண்டு என்பதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு வெண்பூசணி, இருவருக்குமே வெண்டைக்காய், டபுள் பீன்ஸ், சுரைக்காய், கேரட், பீட்ரூட், சிகப்பு பொன்னாங்காணி கீரை, திருமண வாழ்விற்கான அவசியமான காய்கறிகள்.
ஸ்ட்ராபெர்ரியை வாங்கி சாக்லேட் சாஸில் முக்கி, சந்தனப் பேழையில் தந்தாலும், கொடுப்பவர் முகமலர்ச்சியும், வாங்குபவர் அகமகிழ்வும்தான் தாம்பத்யம் தூண்டும். அதற்கு உடலும் மனமும் ஆரோக்கியமாகவும் குதூகலமாகவும் இருப்பது மிக மிக அவசியம். 7 நட்சத்திர விடுதி விருந்தை விட, மொட்டைமாடி நிலவொளியில் பரிமாறப்படும் கம்பங்கூழ்  “ஒஸ்தி”!