Tuesday, 18 October 2011

அறிவியல் சிந்தனைகளை யாராலும் வெல்ல முடியாது

வர் எந்தவித படாடோபமும் இல்லாமல் இன்று இந்திய நாட்டின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்கிறார். இவரின் சொந்த வாழ்க்கையும் அலுவலக வாழ்க்கையும் அறிவியலுடன் இணைந்தே உள்ளது. இவர் மொழி பெயர்த்த போலீஷ் மொழி மற்றும் மலையாளக்கவிதைகள் உட்பட இதுவரை 103 நூல்களை எழுதியுள்ளார். இந்த நூல் பட்டியலில் அதிகமாக அறிவியல் நூல்களே ஆக்கிரமித்துள்ளன. மேலும் இவரது நூல்கள் 4 முறை தமிழக அரசு விருதுபெற்றுள்ளார். தொடர்ந்து பள்ளி மாணவர்களை சந்திப்பதும் அவர்களுக்கு அறிவியல் ஆர்வம் ஊட்டுவதுமான விண்வெளி விஞ்ஞானத்தைப் பற்றி சொல்லித்தருவதுமான பயணத்தில் இருந்த இவரை புதிய புத்தகம் பேசுது இதழக்காக சந்தித்தோம். அந்த நேர்காணலில் - பதிவு செய்யப்பட்ட சில பகுதிகள்...                 சந்திப்பு: முத்தையா வெள்ளையன்

கே: உங்களுக்கு அறிவியல் துறையில் ஈடுபாடு வரக் காரணம் என்ன?

பதில்: இது எல்லாரும் சொல்றதுதானே. நான் திருநெல்வேலியை சேர்ந்தவனாக இருந்ததால் இயல்பாகவே தமிழில் ஆர்வம் இருந்தது. எட்டு, ஒன்பதாம் வகுப்புகளில் படிக்கும் போது பல தமிழ் செய்யுள்களை எழுதுவேன். அந்த செய்யுளை படித்தால் யாருக்கும் விளங்காது. அதில் ஒன்று
பதிஉறை பதி விதி சேதித்து சதி செய்யின் பதி கதி சீத பேதி பற்றினூங்கு நதி குதியினும் மீயே -  இதை எழுதிவிட்டு இதற்கு பொழிப்புரையும் நானே எழுதுவேன். அப்பர் கிராப்டன் நடுநிலைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியையும் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்த புதிதில் நான் நன்றாக படிக்கிற மாணவன். முன்பு கணக்கில் பூஜ்யமெல்லாம் வாங்கி இருக்கிறேன். இந்த நேரத்தில் மெல்ல மெல்ல அறிவியல் பாடத்தின் பக்கம் சென்றேன். தமிழ் படித்த மாதிரியே அறிவியலையும் படித்தேன். எனக்கு கணக்கு பாடத்தில் ஆர்வம் வர காரணமே ஜான் செல்வராஜ் என்ற ஆசிரியர்தான். அவர் கணக்குப் பாடத்தைப் பற்றி சொல்லும்போது ‘கணக்குங்கிறது ஒரு நாய் மாதிரி, அதை பார்த்து நீங்க பயந்து ஓடினால் பின்னாடியே துரத்திக்கிட்டே வரும். அந்த நாயை நீ திரும்பிப்பார்த்து தோ.. தோ... என்று கூப்பிட்டால் அது உன் பின்னாலே வரும்’ என்று சொல்வார். இதற்குப் பிறகு கணக்கு பாடம் எனக்கு சுலபமாக வர ஆரம்பித்தது. இப்படியே சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் 1969-ல் எஸ். எஸ்.எல்.சி.யை தமிழ் வழியில் தேர்வு எழுதினேன். அந்த தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் பள்ளிக்கூடத்தில் முதல் மாணவனாக வந்தேன்.

அப்போது எங்க மாதிரி வீடுகளில் படித்தவர்கள் கிடையாது. எங்க வீடும் அப்படித்தான். எங்கப்பா திராவிடர் கழகத்தில் திருநெல்வேலியில் வட்டச் செயலாளராக இருந்தார். ஜி.டி. நாயுடு மீது பெரிய மதிப்பு வைத்திருந்தார். பள்ளி இறுதித் தேர்வில் 600க்கு 503 மதிப்பெண்கள் எடுத்தாலும் படிப்பிற்கான உதவித் தொகை கிடைத்ததால் மேலே படித்தேன்.

மேற்படிப்பை பொறுத்தவரைக்கும் அறிவியல் துறையில் வேதியியலை தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதைப் படித்தால் கண்டிப்பாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யலாம். அது£வது குறைந்த பட்சம் வங்கியிலாவது வேலை கிடைக்கும் என்பதால் படித்தேன். படித்த உடனே திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சராபாய் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் அறிவியல் உதவி ஆய்வாளர் (Scientfic assitant-A) வேலை கிடைத்தது. அங்குதான் அறிவியல் துறையில் ஆர்வம் வந்தது.

நாட்டுப்புறவியல் ஆய்வு துறை பேராசிரியரான லூர்து, பேரா. க.ப. அறவாணன், பொன்னரசு, சிவசு போன்றோர்கள் எனக்கு ஆசிரியர்களாக இருந்தார்கள். அவர்கள்தான் தமிழில் எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது.

கே: பத்திரிகையில் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?

நான் அங்கு வேலைக்கு சேர்ந்தது 1973 நவம்பர் 19 அந்த வருடம் விண்வெளி துறையின் பத்தாவது ஆண்டு. அது எப்படி என்றால் 1963 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதிதான் இந்திய மண்ணிலிருந்து முதன்முதலாக ராக்கெட் செலுத்தப்பட்டது. நைக்கி அப்பாச்சி என்று அதற்குப் பெயர். அது வானிலை ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டது.

அந்த விண்வெளி ஆய்வு மையத்தில் ‘கவுன் டவுன்’ என்ற பத்திரிகை தனிச்சுற்றாக வந்தது. அந்தப் பத்திரிகை ஆங்கிலத்தில் வந்தாலும், வட்டார மொழி என்ற அடிப்படையில் மலையாளத்தில் கட்டுரைகளும், கதைகளும், கவிதைகளும் வந்தன. மேலும் தேசிய மொழி என்ற அடிப்படையில் இந்தி மொழி ஆக்கங்களும் வந்தன. அந்த பத்திரிக்கைக்கு நான் தமிழில் ஒரு கவிதை எழுதி அனுப்பினேன். அப்போது ஆசிரியராக இருந்தவர் ஆராவமுதன் என்ற விஞ்ஞானி. அவர் தன்னை வந்து பார்க்கச் சொன்னார். அவரைப் போய் பார்த்த போது, இது மத்திய அரசு நடத்துகிற பத்திரிகை. எல்லா பக்கமும் பிரதிகள் போகும். அதில் தமிழ் மொழியை பிரசுரித்தால் மற்ற எல்லா மொழிக்காரர்களும் கேட்பார்கள். அதனால் ராக்கெட், விண்வெளி சம்பந்தமாக தமிழில் எழுதுங்கள். அதை பிரசுரிப்பதில் பிரச்சனை இருக்காது. அப்படி பிரச்சனை வந்தாலும் அறிவியல் சம்பந்தமானதுதான் என்று சொல்லி விடலாம் என்றார். அப்போது நான் தமிழ் படைப்பிலக்கியம் சாரந்து பல்வேறு பத்திரிகைகளிலும் இயங்கிவந்தேன். இன்சாட், ஐ.ஆர்.எஸ். ஹேலி வால்நட்சத்திரம் பற்றி கவிதைகள் எழுதினேன். பின்னாளில் அந்த அறிவியல் கவிதைகள் பூமித்தொட்டில் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது.

நான் இப்படி எழுதிக் கொண்டிருந்த போது வேதியியல் துறையில் இருந்தேன். எங்கள் விண்வெளி மையத்தில் பயண மின்னணுவியல்(avionics) ஒன்று இருக்கிறது. அதன் வேலை என்பது ராக்கெட் செலுத்தும் போது அந்த பயணத்தை கட்டுபடுத்தக்கூடியது. இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் இரா.மா.வாசகம். இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். பின்னாளில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தார்.

இவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தயாரித்த களஞ்சியத்தில் தமது ‘ஆப்பிள்’ என்ற திட்டத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருப்பதாக சொன்னார். இந்த மாதிரி கட்டுரைகளை நீங்கள் எழுதலாம் என்றார். இந்த ஆப்பிள் திட்டம் என்பது பிரெஞ்நாட்டினுடைய ஏரியன் ராக்கெட்டில் அவர்களுடைய செயற்கை கோளுடன், நம்முடைய செயற்கைகோளும் சக பயணியாக சென்றது. இந்த திட்டத்தின் இயக்குனரும் இவர்தான். நாம் பின்னாளில் அனுப்பிய இன்சாட் செயற்கை கோள் முதல் இன்றைக்கு அனுப்புகிற செயற்கைகோள் வரைக்கும் உள்ள அத்தனை தகவல் தொழில் நுட்ப செயற்கை கோளுக்கும் இந்த ஆப்பிள் திட்டம்தான் ஆதாரமானது. இப்படித்தான் அறிவியல் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். அந்த களஞ்சியத்தின் பதிப்பாசிரியராக உலோ. செந்தமிழ் கோதை இருந்தார். அவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் செயற்பொறிஞர்.

Hyperbolic navagation system  என்பதை அதிபர வளைவு பயண அமைப்பு என்கிற தலைப்பெல்லாம் வைத்து, மொழி பெயர்த்துக் கொடுத்தேன். பிறகு நானாக ஒரு கட்டுரை எழுதி தருகிறேன் என்று சொல்லி ஏவூர்தி உந்து எரி பொருள்கள் (Rocket propellants) என்று எழுதினேன். ஏனெனில் அதில் திட எரிபொருள்களும், திரவ எரிபொருள்களும் உள்ளன. தயாரிப்பு சார்ந்து பல வேறுபாடுகள் உள்ளன. இதெல்லாம் வைத்து எழுதினேன்.

இதே காலக் கட்டத்தில்தான் தஞ்சை தமிழ் பல்கலையில் அனைத்திந்திய அறிவியல் தமிழ் கழகம் என்ற ஒரு அறிவியல் அமைப்பு துவக்கப்பட்டது. இதற்கு பேரா. அகத்தியலிங்கம் தலைவர், பேரா. இராம. சுந்தரம் செயலாளர். இவர்கள் நடத்திய முதல் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அந்த கருத்தரங்கில் மொழியியல் பேராசிரியர்கள் தமிழ் பேராசிரியர்கள், தமிழ் இலக்கியங் களில் உள்ள அறிவியல் செய்திகளை சொல்லக்கூடியவர்களைச் சந்தித்தேன்.

பொதுவாக விஞ்ஞானத்தைப் பொறுத்தவரைக்கும் நாம் படித்த பாடம் ஒன்றாக இருக்கிறது. அதைத் தமிழில் எப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம். இதெல்லாம் வைத்துதான் அதிகாரப்பூர்வமான அறிவியல் தமிழில் எழுதுவதற்கு எனக்கு வழி வகுத்தது.

ஐராவாதம் மகாதேவன் ஆசிரியராக இருந்தபோது, தினமணிசுடர் வெளிவந்தது. ‘ரகசியமாக இருந்த குளிர் சுடர்’ என்ற என்னுடைய முதல் கட்டுரை தினமணி சுடரில்தான் வந்தது. இந்த கட்டுரை பாஸ்பரஸ் பற்றியது. இதை வெறுமனே விஞ்ஞான தகவல்களாக சொன்னால் யாரும் படிக்க மாட்டார்கள். ஒரு தினசரி பத்திரிகையில் வெளிவரும்போது அதற்கான வாசகத்தன்மையில் வர வேண்டும். அதற்காக பிணம் எரிக்கும்போது பிணம் எழுந்திருக்குமா? ஆமாம் பிணம் எழுந்திருக்கும். ஏனெனில் நம்ம உடம்பில் பாஸ்பரஸ் இருப்பதால்தான்.

அதாவது உடம்பில் உள்ள எலும்புகளில் உள்ள பாஸ்பரஸ் எரியும் போது அது பாஸ்ஃபீனாக மாறும். அப்போது ஒளிரும். ஆனால் குளிராக இருக்கும். இதற்கு பாரதியார் எழுதிய தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா பாட்டையும் வைத்துதான் எழுதினேன். உடம்புக்குள்ள இருக்கிற பாஸ்பரஸ் பாஸ்ஃபீனாக விடைத்துக் கொண்டு வெளியே வரும். அப்போதுதான் படுத்திருக்கும் உடம்பு எழுந்திருக்கும். அது சும்மா தட்டி விடுகிற வேலை பார்த்தவர்தான் ஜேம்ஸ் பாண்ட் சின்ன வயதில் செய்த வேலை. ஆனால் இதை நம் ஊர்களில் கொள்ளிவாய் பிசாசு என்று சொல்கிறார்கள். இந்த எழுத்து நடையும் சராசரி வாசகனுக்கு பிடித்துப் போயிற்று. ஆனால் களஞ்சியத்தில் எழுதும் போது நேரடியாக பாடம் படிப்பதை போன்றுதான் எழுத வேண்டும். அறிவியலை எளிமையாக எடுத்து சொன்னால் பத்து பேருக்கும் புரியும் என்ற முடிவுக்கு வந்தேன். தொடர்ந்து எழுதுவதற்கும் ஆர்வம் வந்தது.

கே: நீங்கள் எழுதிய ஒளியை வெளியே விடாத கருந்துளை என்ற கட்டுரை பரவலாக அறியப்பட்டது. அதைப் பற்றி கூறுங்கள்

பதில்: நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்திற்கு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சந்திசேகர் ஒரு முறை வந்து இருந்தார். கருந்துளை வீண்மீன்கள் பற்றிய கண்டுபிடிப்புதான் அவருடையது. அவருடைய நேர்காணல் எங்களுடைய நிறுவனத்தின் இதழில் வந்தது. அதில் உள்ள தகவல்கள் மிகவும் சுவாரசியமானதாக இருந்தது. அந்த தகவல் என்பது பூமியைச் சுற்றி செய்கைகோள் மாதிரி ஒன்று சுற்றி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருந்தால் சுற்றுகிற பொருள் பூமிக்குள் வந்து விழுந்துவிடும். ஒரு வேளை விழுகாமல் இருக்க வேண்டும் என்றால் அதிகவேகமாக சுற்ற வேண்டும். இதே மாதிரி ஈர்ப்பு விசை மிகுந்த பொருள் அருகில் ஒளி செல்லும் போது, ஒளிக்கதிர் வளைந்து, சுற்ற ஆரம்பித்து விடும் என்று ஒரு தத்துவம். ஒளியின் வேகம் ஒரு நிமிடத்துக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர். இப்படிப்பட்ட ஒளிக்கதிர் வளையுமா என்றால் வளையும் என்பதுதான் ஐன்ஸ்டீனின் தத்துவம்.

ஐன்ஸ்டின் கண்டுபிடித்த முக்கியமான தத்துவங்களில் ஒன்று சார்பியல் தத்துவம். இந்த தத்துவம் ஒளியைப் பற்றியது. 1919 ஆம் ஆண்டு ஒரு சூரிய கிரகணத்தின் போதும் இதை நிருபிக்கவும் செய்தார்கள். அதாவது ஒரு விண் மீனிலிருந்து வரக்கூடிய ஒளி சூரியனை கடந்து வரும்போது வளைந்திருப்பது பதிவாகியுள்ளது. அதே சமயம் இந்த ஒளி இன்னும் அதிகமாக வளைந்தால் சூரியனை சுற்ற ஆரம்பிக்கும். அதன் ஈர்ப்பு விசை அதிகமானால் அந்த பொருளுக்குள்ளே ஒளி விழுந்துவிடும். அதனால் சூரியனைவிட அதீத ஈர்ப்பு விசைப்பொருட்களின் உள்ளே விழுந்த ஒளியினால் உள்ளுக்குள் ஒளிபிராவகம் ஏற்படும். ஆனால் அந்த ஒளி வெளியே வராது. இருட்டாகவே இருக்கும். இதுதான் கருந்துளையைப் பற்றிய கருத்து. அதாவது அதீதமான ஈர்ப்பு இருந்தால் ஒளியைக் கூட வெளியே வராது இதை வைத்துத்தான் ஒளியை வெளியே விடாத கருந்துளை வீண்மீன் என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன்.

கே: நீங்கள் பெரும்பாலும் சிறு பத்திரிகைளில் ஏன் எழுதுகிறீர்கள்?

ஆமாம் நான் பெரும்பாலும் பெரும் பத்திரிகையில் எழுதுவதில்லை. சிறு பத்திரிகைகளில்தான் எழுதி வருகிறேன். கலைக்கதிர், மஞ்சரி, கலைமகள் ஆகியவற்றில் எழுதி இருக்கிறேன். அறிக அறிவியல் என்ற பத்திகையில் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த பத்திரிகையை குன்றக்குடி அடிகளார்தான் நடத்தி வருகிறார். இதில் எழுதிய ‘விஞ்ஞானம் கற்கிறார் வேலுத்தாத்தா’ என்னும் தொடரில் ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் தன்னுடைய தாத்தாவிற்கு அறிவியல் சொல்லி கொடுக்கிறமாதிரி இருக்கும். நான் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்த போது எழுத்தாளர் ஆ. மாதவன் அவர்களுடைய நட்புக் கிடைத்தது. நான் எழுதுகிற தமிழுக்கு அவர்தான் குருநாதர். மேலும் நான் எழுதுவதை செப்பனிட்டுக் கொடுப்பார். அதைப்போல தி.க.சியும் வல்லிகண்ணணும் எனக்கு மிக உந்துதலாக அமைந்தனர். அதே திருவனந்தபுரத்தில் எனக்கு இன்னொரு வாய்ப்பாக திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் தொடர்பும் கிடைத்தது. அதில் பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளாக இணைச்செயலாளராக இருந்தேன். அங்கே ‘கேரளத் தமிழ்’ என்ற பத்திரிகையும் வெளிவந்து கொண்டிருந்தது. அதில் இணை ஆசிரியராக இருந்தேன். கேரளத்தில் தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினர். தூர்தர்சனில் தமிழ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள். அதற்கு பொறுப்பாக பாலக்காட்டைச் சேர்ந்த டி. சாமியார் என்பவர் இருந்தார். அதில் நான் எழுதிய நதிகள் ஒருங்கிணைப்பு பற்றிய நாட்டிய நாடகம்தான் முதல் படைப்பாக வந்தது. அந்த நாடகம் கடைசியாக கொட்டுங்கடி கொட்டுங்கடி கும்மி இசைக் கோலங்கள் தீட்டு களிக்கட்டும் பூமி தட்டுங்கடி தட்டுங்கடி தாளம் சமத்துவ சங்கீதம் முட்டட்டும் சக்கரவாளம் கொட்டுங்கடி கொட்டுங்கடி கும்மி என்று முடிவடையும். பேரா. கே.ஏ. குணசேகரன் நிகழ்ச்சியையும் அங்கே முதன் முதலாக நடத்தினோம். இதற்கெல்லாம் காரணம் அப்போது கேரள தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இருந்த முருகேசன் என்பவர்தான். அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருந்ததால் எல்லா தளத்திலும் செயல்பட முடிந்தது. இப்போது அவர் உயிருடன் இல்லை. மொழியியலைப் பொறுத்தமட்டில் பேரா. கி. நாச்சிமுத்து அவர்களின் தொடர்பும் மேலும் என்னை செழுமைப்படுத்தியது. அவர் தற்போது புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
இந்தக் காலகட்டத்தில் பெங்களூரிலிருந்து டாக்டர். கார்லோஸ் நடத்திய நிஜம் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதில் ஜென் கவிதைகள் பற்றி எழுதினேன்.

கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே என்ற இரு கோட்பாடுகளுக்கிடையே அறிவியல் கருத்து என்பது யாருக்காவது கண்டிப்பாக போய் சேரணும் என்பதற்காகத்தான் எழுதினேன். அறிவியல் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தபோது மொழி பெயர்ப்புகளும் செய்தேன். முதன் முதலில் வந்த மனோரமா இயர் புக்கில் வந்த அறிவியல் தொழில் நுட்பம் பற்றியக் கட்டுரையை மொழி பெயர்ப்பு செய்தேன். அதில் இன்று வரை பெரிய மாற்றங்கள் இல்லை. Science Reporter -ன் ஆசிரியர் பீமன் பாஸின் இரண்டு புத்தகங்களை மொழி பெயர்த்தேன். அவை விண்மீன்கள் உள்ளே (NCBH), விண்மீன்களை கண்டு ரசிப்போம் (NBT)  அந்த புத்தகத்தை மொழி பெயர்க்கும் போது Twinkle Twinkle little Star என்பதை மின்னும் மின்னும் சிறு விண்மீனே என்று நான் எழுதவில்லை. ஏனெனில் இப்படி ஒரு கவிதை தமிழில் இல்லை. அதனால் ‘சுட்டு விழிச்சுடர் கண்ணம்மா’ என்ற பாரதியாரின் பாட்டில் வரும் ‘பட்டுக் கரு நீலப் புடவை தன்னிலே பதித்த நல் வைரங்கள்’ என்று தொடங்கி வான் நட்சத்திரங்களைப் பற்றி எழுதினேன். இது மொழிபெயர்ப்பாக இல்லாமல் தமிழிலே எழுதப்பட்டது போன்று இருக்கும். இந்த முறைகளிலே மொழிப்பெயர்ப்புக் கட்டுரைகள் எழுதினேன். கருத்தரங்குகளிலும் பேசி வந்தேன்.

கே: நீங்கள் சமீபத்தில் என்ன புத்தகம் எழுதினீர்கள்?

சமீபத்தில் அறிவியல் வரலாறு ஒன்று எழுதியுள்ளேன். அதில் அறிவியலின் தோற்றமும் வரலாறும் என்பதை பற்றிய தொடர் முத்தாரம், அறிக அறிவியல் இதழில்களில் வெளிவந்தது. இரண்டாயிரம் பக்கங்களில் மூன்று புத்தகங்களாக செம்மொழி மாநாட்டிற்கு முன்பே வந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழில் இந்த ஒலிக்குறிக்கு, இந்த வடிவம்தான் என்று எப்படி வந்தது? உதாரணமாக தமிழில் ‘க’ என்ற எழுத்தும், அதற்க்கான உச்சரிப்பும் எப்படி வந்தது? உலகத்தில் உள்ள எல்லா மொழிகளில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை இருபத்தி ஐந்து முதல் முப்பதுக்குள்தான் இருக்கின்றன. இந்த தமிழ் எழுத்துக்களுக்கு நட்சத்திர கூட்டங்களின் உருவம்தான் ஆரம்பம். Aries  என்பதை நாம் ஏறு எனலாம். மேஷம் என்றும் சொல்கிறோம். இதனுடைய தோற்றம் தலைக்கு கொம்பு வைத்த மாதிரி இருக்கும் அதனால் அதை பார்க்கும் போது ‘a’ மாதிரியும் இருக்கும். இன்னொரு பக்கத்தில் ‘’ (ஆல்பா) மாதிரியும் இருக்கும். இதற்கு ஏன் ஆல்பா என்ற பெயர் வந்தது? உருது மொழியில் அலிஃப் என்றால் ஆடு என்று அர்த்தம். அநேகமாக இதைச் சொல்லாமல் உரையாசிரியர்கள் கடவுள் பெயரை சொல்கிறார்கள். இந்தமாதிரி பல அறிவியல் செய்திகள் எண்பத்தி எழு வாரங்களாக முத்தாரத்தில் வெளிவந்தது. கடைசியாக நானோ தொழில்நுட்பம் வரை இந்த தொகுப்பில் வருகிறது. தமிழில் ‘நானோ தொழிற் நுட்பம்க’ பற்றிய முதல் நூல் கூட என்னுடையதுதான்.

கே: 2020 நூலை மொழிப்பெயர்க்கும்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமோடு பணி புரிந்த அனுபவத்தை சொல்லுங்கள்?

ப: அவரும் நானும் ஒரே நிறுவனத்தில் பல துறைகளில் வேலை செய்து இருக்கிறோம். அப்போது ‘அக்னி’ ஏவுகணை வெற்றி பெற்றநேரம். அதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி காண்பித்தேன். அந்த கட்டுரையின் முதல் பகுதியில் நான் எப்போதும் எழுதும் பாரதியார் பாட்டிலிருந்து ஒரு பாட்டை எழுதினேன். அந்த பாட்டு, ‘அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்’ என்று தலைப்பிட்டு எழுதினேன். இதை அப்துல்கலாம் படித்தவுடன் என் முதுகில் தட்டிப் பாராட்டினார். பிறகு கட்டுரையைப் படித்துவிட்டு இரண்டு திருத்தங்களை மட்டுமே செய்தார். அன்று தொடங்கிய நட்பு ‘இந்தியா 2020’ நூலில் என்னையும் இணைத்துக் கொண்டது. அப்போது என்.சி.பி.எச்.ல் தோழர் சுப்பிரமணியம் செயலாளராக இருந்தார். அவர் அப்துல்கலாமிடம் இந்தியா 2020 நூலை பிரசுரம் செய்து கொள்ள அனுமதிக் கேட்டிருக்கிறார். அதற்கு கலாம்சார் நல்ல மொழி பெயர்ப்பாளரோடு வாருங்கள் என்று சொல்லிவிட்டாராம். அந்த நூலின் இணை ஆசிரியர் ய.சு. ராஜன் அவரும் எங்கள் துறையில் பெங்களூரில் பணியாற்றியவர்தான். அதற்குப் பிறகு அந்தப்புத்தகத்தை நானே மொழி பெயர்த்து தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிட்டோம். அந்த வெளியிட்டு விழாவில் டாக்டர் அப்துல் கலாம் சார் இந்த நூலின் மொழிபெயர்ப்பு பற்றி பேசும் போது, என்னைப் பற்றிக் குறிப்பிட்டு ‘நெல்லை சு. முத்து எங்களோடு ஒத்த அலைநீளத்தில் சிந்திக்கிறார்.’ Matching waveLength உடையவர் என்றார். அப்போது தோழர் நல்லகண்ணு கூட இருந்தார். எனக்கு மிக பிரமிப்பாக இருந்தது. இந்த புத்தகத்தைப் பொறுத்தவரைக்கும், நேரு எழுதின ஞிவீsநீஷீஸ்மீக்ஷீஹ் ஷீயீ மிஸீபீவீணீ என்ற நூல் கடந்த கால இந்தியா, காந்தியின் சத்திய சோதனை என்ற நூல் அவர் காலத்தின் நிகழ் கால இந்தியா. டாக்டர் கலாம் எழுதிய இந்தியா 2020 எதிர்கால இந்தியா என்று மேடையிலே பேசினேன்.

இந்தியா 2020 சிந்தனையை ஒரு சிலர் கிண்டல் பண்ணுகிறார்கள். 2020-ல் இந்தியா வல்லரசாகி விடுமா என்று அப்படி யாரும் நோட்டீஸ் போர்டில் ஒட்டமாட்டார்கள். அது ஒரு குறியீடு. வளர்ச்சி நோக்கி வழிகாட்டி அதில் ஐந்து துறைகளை முக்கியமாகக் குறிப்பிடுவார். இது ஒரு கருத்து சித்தாந்தம். அதில் நல்ல உள்ளங்கள் நல்ல அலுவலர்கள், நல்ல தலைவர்கள் தான் முக்கியம். எதிர்காலத்தில் அத்தகைய தங்க முக்கோணம் மாணவர்களிடம்தான் உருவாக வேண்டும். அறிவியல் சிந்தனை சார்ந்து அவர்கள் நல்ல மனிதர்களாக உருவாக வேண்டும்.

கே: அறிவியல் தமிழின் தேவைகளும் பயன்பாடுகளும் எப்படி உள்ளன?

: ஏறக்குறைய நிறைய சொற்கள் பயன்பாட்டில் வந்துவிட்டன. அறிவியல் தமிழில் இரண்டு வகைகள் உண்டு. அவற்றில் ஒன்று அறிவியல் செய்திகளை தமிழில் சொல்வது, மற்றொன்று அறிவியலை தமிழில் பயில்வது, இதில்தான் சிலருக்கு முரண்பாடு வருகிறது. அதாவது அறிவியல் செய்திகளை தமிழில் சொல்ல முடியுமா என்றால் முடியும். அறிவியலைத் தமிழ் வழியாக கற்க முடியுமா? என்றால் அது நம்முடைய கைகளில் இல்லை. ஏனெனில் அரசு, அறிஞர்கள் பாடநூல் உருவாக்குவோர் ஆகியோரின் கைகளில் இருக்கிறது. ஆனால் பொதுவாக அறிவியல் தமிழ் என்று இந்த இரண்டு வகைகளையும் ஒன்றாகப் பார்ப்பதால் இதுவரைக்கும் பெரிதாக ஒன்றுமே நடக்கவில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் அறிவியல் செய்திகளை சொல்ல முடிந்தாலும், தொழில்நுட்பச் செய்திகளை சொல்லும்போது சில மொழிச் சிக்கல்களும் அதற்கான மாற்றங்களும் தேவைப்படுகிறது.

இதில் பிரச்சனை என்பது தமிழில் மொழி பெயர்க்க உரிய சொற்கள் வேண்டும். கலைச் சொற்கள் வேண்டும். சில சமயங்களில் அப்படியே எடுத்தாள்வதற்கு ஒலிபெயர்ப்புச் சொற்களும் வேண்டியிருக்கும். சில சமயங்களில் புதிய சொற்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக Mass என்ற வார்த்தைக்கு தமிழில் நிறை என்று அறிவியல் துறையில் எழுதிக் கொண்டிருந்தோம். ஆனால் அறிவியலில் நிறைக்கும், எடைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதைப் பொறுத்தவரைக்கும் அறிவியல் ரீதியாக எடை என்பதை நிறை ஈர்ப்புக்கு உட்பட்ட நிறையைத்தான் எடை என்கிறோம். இதை இன்னும் எளிமையாக சொல்வதென்றால் என்னுடைய எடை பூமியில் 60 கிலோ என்றால் சந்திரனில் என்னுடைய எடை 10 கிலோதான் இருக்கும். ஏனெனில் சந்திரனில் ஈர்ப்பு விசை குறைவதால் எடையும் குறைகிறது. ஆனால் என் உடலில் உள்ள நிறைகள் குறைவதில்லை. இந்த வார்த்தை சற்றே கவனக்குறைவாக பயன்படுத்தினால் தவறாகிவிடும். இதையே சில இடங்களில் பொருண்மை என்ற வார்த்தையையும் பயன்படுத்துகிறார்கள். அதற்கு சிஷீழீஸீtமீஸீt ஷீயீ னீணீttமீக்ஷீத்தான் இப்படி பயன்படுத்துகிறார்கள். இதுவும் ஒரு புதுச்சொல்தான்.
அடுத்ததாக எடையை குறிக்க கிலோ என்று சொல்கிறோம். நாம் ஏன் பவுண்டை பயன்படுத்தவில்லை. சர்வதேச அலகு என்ற வகையில் சில விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். அதனால் அதே ஒளிமுறையில் சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால் ஒளிபெயர்ப்பு தேவைப்படுகிறது. இதற்கு அடுத்ததாக ஒரு உரு பெயர்ப்பு தேவைப்படுகிறது. உதாரணமாக பாடப்புத்தகத்தில் படங்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் மொழி இல்லை. வேதிக்குறியீடுகள் கணித சமன்பாடுகள் மாதிரி ஒரு மனிதனுக்கு நினைவில் வைத்துக்கொள்ள சின்ன சின்ன வாக்கியங்களாக இருப்பதுவும் நல்லதுதான். ஆகவே மொழிபெயர்ப்பு, ஒலி பெயர்ப்பு, உருபெயர்ப்பு என்ற இந்த மூன்று வகையின் கலவை சரியாக இருந்தால்தான் அறிவியல் தமிழ் பயன் தரும்.

அடுத்ததாக இந்த அறிவியல் தமிழ் மூன்று தளங்களாக இருக்கிறது. ஒரு விழிப்புணர்வுக்காக இதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அதாவது பாமரர்களுக்கு என்று ஒரு மொழி நடை இருக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களில் படித்த ஒரு மொழி நடை இருக்கிறது. இதற்கு மேல் அறிஞர்களுக்கு என்று ஒரு மொழி நடை இருக்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் இப்படி இல்லை. தமிழில் இருக்கிறது. இந்த இடத்தில்தான் அரசியல்வாதிகளும், சில அறிவியல் பேராசிரியர்களும் குழப்புகிறார்கள். ஆங்கிலத்தில் உள்ளதையே வார்த்தையாக உச்சரிக்கலாம் என்கிறார்கள்.

தமிழில் இருக்கிற சில கலைச் சொற்கள் இன்று தவறனதாகவும், வழக்கொழிந்தும் போய்விட்டது. உதாரணமாக ‘மின்னணு’ என்றால் மின்னியல் கொண்ட அணு என்றுதான் அர்த்தம். அது சிலீணீக்ஷீரீமீபீ ணீtஷீனீ இல்லையே? இது எப்படி என்றால் வீடு கட்ட நினைத்து செங்கலை சரியாக தயாரிப்பதிலேயே நேரம் முழுவதும் செலவிடுவதைப்போலதான் ஆயுசே முடிந்து விடும். அதே நேரம் அறிவியல் வார்த்தைகள் பரப்புவதிலே இருந்தால் அறிவியல் பரவாது. இன்றைக்கு நிறைய பேராசிரியர்கள் கலைச்சொல் தயாரிப்பில் இருக்கிறார்கள். அது பத்து வருடம் கழித்து வழக்கொழிந்து போகும் அபாயமும் உண்டு.

இந்த கலைச்சொல் தயாரிப்பில் மொழியாளர்கள், தமிழ் அறிஞர்கள், விஞ்ஞானிகள், நவீன இலக்கியவாதிகள் பங்கு கொண்டு அதிகாரப்பூவமாக அறிவிக்க வேண்டும். எழுத்தாளர் சுஜாதா எழுதும் போது ‘ஆட்டம்’ என்றுதான் எழுதுவார். ஆனால் ஆட்டம் என்ற தமிழ் சொல்லுக்கு வேறு ஒரு பொருள் இருக்கிறது. அதற்கு ‘அணு’ என்ற வார்த்தை இருக்கிறது. அது சரியோ தப்போ அதை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த வார்த்தை எல்லோருக்கும் விளங்குகிறது.

இந்தியா 2020 புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் றிமீக்ஷீநீமீஸீtணீரீமீ என்பதை விழுக்காடு என்று எழுதினேன். அப்போது கலாம் சார் மத்திய முதன்மை அறிவியல் ஆலோசகராக இருந்தார். மேலும் பேராசிரியர் தளத்திலும் முதல் விஞ்ஞானியளாகவும் இருந்தார். அதனால் நல்ல தமிழில் நூல் வரவேண்டும் என்று விரும்பினார். அப்போது மொழிபெயர்த்த அத்தியாயத்தை கொண்டு போய் காண்பித்தேன். சென்னையில் பாதுப்புத்துறை விருந்தினர் இல்லத்தில் சந்தித்தேன். அப்போது இரவு 12 மணி இருக்கும். நானும் அவரும் மட்டும்தான் இருந்தோம்.

அவர் அந்த மொழியெர்ப்பைப் படித்துக் கொண்டே வரும் போது விழுக்காடு என்று எழுதியிருக்கிறீர்கள். அது percentage தானே. அந்த இடத்தில் எல்லாம் சதவிகிதம்னு மாற்றி எழுதியிருங்க. விழுக்காடு என்பது பல்லை உடைப்பது மாதிரி இருக்கிறது என்றார். இந்தப் புத்தகத்தை படித்தால் மொழிபெயர்ப்பாக இல்லாமல் நேரடியான தமிழில் எழுதியிருப்பதை உணரலாம். இந்த புத்தகத்தில் உள்ள சில பகுதிகள் ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் சேர்க்கப்பட்டது. ஒரு பொது வாசிப்புக்காக எழுதப்பட்டது பின்னாளில் பாடத்திட்டமாக மாறியது என்பது அந்த புத்தகத்தில் உள்ள எழுத்து நடைதான் காரணம். குமுதம் இதழில் பு(து)த்தகம் பகுதியில் டாக்டர் கலைஞர் எழுதிய மதிப்புரை இன்னொரு சிறப்பு.

கே: அறிவியல் புனைக்கதை எழுத்தாளரான பெ. நா. அப்புசாமியின் எழுத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள்?

பாளையக்கோட்டையில் இருந்த பேராசிரியர் வளனரசு என்னை பெ.நா. அப்புசாமியோடு ஒப்பிட்டு அறிமுகப்படுத்தினார். பெ.நா.வின் வாழ்க்கை வரலாற்றை புதுகை தென்றல் பத்திரிகையில் எழுதினேன். நான் வானத்தை அளப்போம் என்ற புத்தகம் எழுதினேன். அவர் அந்த காலத்திலே ‘வானை அளப்போம் ’ என்று கட்டுரை எழுதி இருக்கிறார் என்று பின்னாளிலே தெரிந்தது. கதைகள் எழுதுவதில் அறிவியல் செய்திகளை சொல்வதில் ஒரு விதம். இன்னொன்று அறிவியலை கற்பனையாக சொல்கிற புதினங்கள். நானும் அறிவியல் புதினம் ஒன்று எழுதியிருக்கிறேன். மாக்கோள் மைந்தர்கள் என்பது தலைப்பு. சமீபத்தில் ஒளரங்காபாத்தில் நடந்த தேசிய கருத்தரங்கில் தமிழில் இதுவரையிலான அறிவியல் புனைகதைகள் பற்றிய கட்டுரை ஒன்று படித்தேன்.

தமிழ்ச் சூழலில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியல் செய்திகள் உள்ள கதைகள் இருந்தன. அது சில சமயங்களில் பஞ்சதந்திர கதைகளாகவும், விட்டலாச்சாரி கதைகளாகவும் இருந்தன. ஆனால் அதிலும் சில அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. மற்றொரு காலகட்டத்தில் அறிவியல் விழிப்புணர்ச்சிக் கதைகளும் எழுதப்பட்டன.

உதாரணமாக கல் உப்பு பற்றிய ஒரு கதை. அந்த கல் உப்பு நம் உடம்புக்கு நல்லது. அயோடைஸ்டு உப்பு விமரிசனத்துக்குரியது. உண்மையிலேயே அதில் அயோடின் சேர்ந்து இருந்தால் கூட அதில் யதார்த்தமாக இருக்க வேண்டிய மெக்னீசியம் இல்லாமல் போய் விடுகிறது. ஆனால் நம்முடைய உடம்புக்கு மெக்னீசியம் தேவை. இந்த மெக்னீசியம் நம்முடைய வயிற்றில் உள்ள அசிடிட்டியைக் குறைக்க கூடியது. இது தவிர வேதியியல் முறைப்படி அயோடின் கலப்பது இரண்டு வகையில் இருக்கிறது. அதாவது அயோடைடு உப்பு என்பது வேறு. அயோடேட் உப்பு வேறு. இந்த மாதிரி ‘டேபிள் சால்ட் உப்பு’ இரண்டில் எதை வேண்டுமானாலும் கலந்தால் மணல் மாதிரி உதிரும். உப்பும் இப்படித்தான் உருமாறுகிறது. இந்த மாதிரி டேபிள் சால்ட் உப்பு வெள்ளைக்காரர் களுக்குத்தான் தேவை. நமக்குத் தேவை இல்லை. ஏனெனில் நாம் சமைக்கும்போதே உப்பைப் கறியில்தான் போட்டு சாப்பிடுகிறோம். அவர்கள் சமைப்பதில் உப்பு சேர்ப்பது இல்லை. சாப்பிடும்போது தனியாகச் சேர்க்கிறார்கள். மேலும் அவர்களுடைய தட்பவெப்ப சூழ்நிலை வேறு. இந்த மாதிரி டேபிள் சால்ட் உருவாக்கி, அந்த உப்பில் பிசுபிசுப்பு தன்மை இல்லாமல் பயன்படுத்துகிறார்கள். இது முதலாளித்துவத்தின் கூறுகளில் ஒன்று என்றும் சொல்வார்கள். அடிப்படையில் இந்த டேபிள் சால்ட் உடம்புக்கு நல்லது அல்ல. மேலும் நம்முடைய வயிற்றில் ‘அசிடிட்டி’ நிறைய இருக்கிறது. நூற்றுக்கு மூன்று கிராம் வீதம் ‘அசிடிட்டி’ சுரக்கிறது. இந்த அளவுக்கு இருப்பதினால்தான் நாம் சாப்பிடுகிற எல்லா பொருட்களும் செரிமானம் ஆகிறது. அசிடிட்டி என்பது ஹைட்ரோ குளோரிக் அமிலம்தான். இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் அயோடைடும் சேரும் போது நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் உள்ள புரதங்கள் சிதைந்து குளோராமினாக மாறும். இதனால் கேன்சர் போன்றவைகள் உருவாகலாம். ஆனால் இதில் யாருக்கு எந்த வியாதி வரும் என்று சொல்ல முடியாது. அது ஒவ்வொரு தனிப்பட்ட உடல்நிலை, நோய் எதிர்ப்பு சக்தி, சாப்பாட்டில் சேர்க்கும் உப்பின் அளவை பொறுத்தது. இதைத்தான் கல்லுப்பே சரணம் என்ற கதையா எழுதினேன் தினமணி கதிரில் வந்தது. அந்த கதை எழுதி எத்தனையோ வருஷமாச்சு. ஆனாலும் திருப்பூர் கிருஷ்ணன் எப்போதாவது என்னைப் பார்த்தால் இந்த கதையைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார்.

இரா. நடராசன் எழுதிய ஆயிஷா போன்ற கதைகள் அறிவியல் கருத்துகளை நேரடியாகச் சொல்லுபவை. இது தவிர புனைகதைகள் என்பது எதிர்காலம் சார்ந்து ஒரு சிந்தனையை வளர்ப்பதாக இருக்க வேண்டும். மேலை நாட்டு எழுத்தாளர்களான ஹெச்.ஜி. வெல்ஸ், ஜுலி வெர்னி ஆகியோரின் விஞ்ஞானக் கதைகள் எத்தனையோ மனிதர்களுக்கு இன்னும் ஆதர்ஷமாக இருக்கிறது. இந்த எழுத்துகளின் உந்துதலால்தான் ராபர்ட் கொட்டார்டினால் உலகின் முதலாவது திரவ எரிபொருள் ராக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாதிரி அறிவியல் புனை கதைகளுக்கு இப்படி ஒரு பங்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

அறிவியல் புதினங்களை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு உலகம் அழிவது, வேறு கிரகத்திலிருந்து மனிதர்கள் இறங்கி வருவது என்பதுதான் அநேகம். மேலும் காலத்துக்கு முந்தியது, பிந்தியது என்றுதான் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் தூரம் போனால் தொழில்நுட்ப செய்திகள்தான் சொல்லுகிறார்கள். உதாரணமாக குரங்கிலிருந்து மனிதன் பிறக்கவில்லை. குரங்கும், மனிதனும் ஒரே மாதிரி நிலையிலிருந்து பரிணமித்தார்கள் என்பதுதான் உண்மை. இதில் மனிதனுடைய வளர்ச்சிக்கு அதிகமாக இருக்கிறது. மேலும் மொழிக்குள்ள மரபணு ஃபாக்ஸ்பி 2 என்ற மூலக்கூறுதான். சில உயிரினங்களில் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம்.

எனது ‘மாக்கோள் மைந்தர்கள்’ அறிவியல் புதினம் தொடர்பான சில செய்திகள் சொல்கிறேன். நம்முடைய உடம்பில் உள்ள D.N.A, R.N.A போன்றவைகள் எல்லாமே கார்பன் சார்ந்தவைதான். அதாவது கரிம வேதியியல்தான். நாம் சாப்பிடுகிற பொருட்கள் எல்லாமே புரதம் அல்லது கார்போ ஹைட்ரேட்தான். கார்பன் என்கிற கரிமப் பொருள் இல்லாத உயிரினம் உலகில் இல்லை. எதிர்காலத்தில் சிலிக்கான் சார்ந்த உடம்பாகக் நம்முடைய உடம்பு மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இப்போது அந்த மாற்றம் இயல்பாக நடந்து வருகிறது. இப்போது கண், காது, இதயம் போன்ற உறுப்புகளின் மாற்று அறுவைச்சிகிச்சைகளுக்கு இந்த சிலிக்கான் மின்னணு கருவிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

அறிவியலுக்கு இரண்டு முகங்கள் உண்டு. அதில் ஒன்று புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கிற அறிவியல். இது புற வசதிகளை பெருக்குகிறது. மற்றொன்று அகவியல் சிந்தனைகளை வளர்த்தது அக நுட்பத்தைத் தூய்மைப்படுத்துகிறது. இந்த அறிவியல் சிந்தனைகளை யாராலும் வெல்ல முடியாது. ஏனெனில் அதற்கு அறிவியல்தான் அடிப்டையாக இருக்கிறது. இதனால் நம்முடைய பாடத்திட்டங்களில் தொழில் நுட்பங்களும், பத்திரிகைகளில் அறிவியல் சிந்தனைகளும் வெளிவருகின்றன. அறிவியலில் கண்டுப்பிடிப்பது என்பது புதியதல்ல. பொதுவாக பொருத்தமில்லாத இரண்டு செய்திகளைப் பொருத்திப் பார்த்தால் புதிய சிந்தனை பிறக்கும். இதுதான் அறிவியல் கண்டுப்பிடிப்பின் அடிப்படை. இதற்கு உதாரணமாக கூடன்பர்க் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்ததைக் கூறலாம்.

கே: நீங்கள் அறிவியல் பரப்பலுக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளீர்கள். அதை பற்றி கூறுங்கள்?

: புதுதில்லி அறிவியல் தொழில்நுட்படத்துறை வழங்கி வரும் அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதினைத் தமிழ்நாட்டில் முதன் முதலாக குன்றக்குடி அடிகளார்தான் பெற்றார். 2003-ல் எனக்கும் வட நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் பகிர்ந்தளித்தனர்.
இந்த விருதை வாங்கியவுடன் என் சொந்த ஊருக்கு நான் படித்த ஆரம்ப பள்ளிக் கூடத்திற்கு சென்றேன். அங்கே நான் படித்த சூழ்நிலை எப்படி இருந்ததோ அப்படியே மாணவர்கள் இன்றும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அதே வறுமை இன்னும் இருக்கிறது. எனக்கு கிடைத்த பரிசுத் தொகையான ஐம்பாதாயிரம் ரூபாயை ஐந்து பிரிவாக வைப்பு நிதியில் வைத்து நான் படித்த, என் மகன், மகள் படித்த ஆரம்பப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருடம் தோறும் தமிழ், அறிவியல், கணக்கு ஆகிய பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு அறக்கட்டளை பரிசாக கொடுக்க ஏற்பாடு செய்து இருக்கிறேன். ஒரு விஞ்ஞானி ஊக்குவிக்கிற பரிசு என்ற வகையில் அந்த மாணவர்கள் நிறைய சாதனைகள்    செய்யட்டுமே.
-நெல்லைசு.முத்து

Wednesday, 12 October 2011

புதிய முறையில் உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் என்ற திருவிழா துவங்கிவிட்டது. புதிய வகையில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடப்பதற்கான முன்மாதிரியாக இந்த உள்ளாட்சித் தேர்தல் அமையும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்திருக்கிறார். அது என்ன புதிய முறை என்று புரியவில்லை. வழக்கமான முறையில்தான் இந்த தேர்தலும் நடக்கிறது. சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தலின் குட்டி வடிவத்தில்தான் அனைத்தும் நடக்கின்றன. வேட்பாளர்களின் பிரச்சாரம், பண வினியோகம் துவங்கி வாக்குப் பதிவு முறை வரை அனைத்தும் பழைய பாணியில்தான் இருக்கின்றன. உண்மையிலேயே புதிய முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியுமா? முடியும். ஆனால், அது அரசாங்கத்தின் கையில் இல்லை.
உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றி சற்று புரிந்துகொள்வது நல்லது. அதிகாரப் பரவல், வேர்க்கால் மட்ட ஜனநாயகம், முற்றூடான ஜனநாயகம் என்றெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றி சொல்கிறார்கள். உண்மையில் அது அப்படியில்லை. முதலில் உள்ளாட்சி அமைப்புகள் மத்திய மாநில அரசுகளில் திட்டங்களை நிறைவேற்றும் அமைப்புகளாக இருக்கின்றன. அதிகார அமைப்புகளாக இல்லை. மாநகராட்சி போன்ற உயர் அமைப்புகள் சொந்த நிதி அடித்தளத்தைப் பெற்றிருந்தபோதும், சொந்தமாக முடிவெடுப்பதற்கு ஓரளவு வாய்ப்பிருந்தபோதும் அவற்றை முழுமையான மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகள் என்று கொள்ள முடியாது. ஊராட்சி மட்டங்களில் பார்த்தால் மாவட்ட நிர்வாகத்தின் எடுபிடியாக உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியில் அரசு அதிகாரிகள், மாவட்ட மட்ட அரசியல்வாதிகளின் கொள்ளைக்குத் துணை போகும் அமைப்புகளாக உள்ளாட்சிகள் உள்ளன.
இரண்டாவதாக அந்தந்த மட்ட ஆதிக்கப் புள்ளிகளின் நலனுக்காகவே உள்ளாட்சிகள் இயங்குகின்றன அல்லது இயக்கப்படுகின்றன. சோனியா போன்றவர்கள் சில நூறு கோடிகளில் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் கருணாநிதி, ஜெ போன்றவர்கள் சில கோடிகளில் கொள்ளையடிக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் அந்தந்த மட்டங்களுக்கு ஏற்ப சில பத்து லட்சங்களில் அல்லது லட்சங்களில் கொள்ளையடிக்கிறர்கள். இப்படி கொள்ளையில்தான் மாறுபாடு.
பெருமுதலாளிகள் வனங்களையும் சுரங்கங்களையும் கொள்ளையடிக்கிறார்கள் என்றால், கிராமப்புற பெரும் புள்ளிகள் ஆற்று மணலை, குவாரிகளை, புறம்போக்குகளை கொள்ளையடிக்கிறார்கள். அளவில்தான் வேறுபாடு. பெருமுதலாளிகள் நலனுக்காக நாடாளுமன்றம் இருப்பது போல உள்ளூர் பெரும்புள்ளியின் நலனுக்காக பஞ்சாயத்து மன்றம் இருக்கிறது.
நேரு போன்றவர்கள் பற்பல ஏக்கர்களை வளைத்துப்போட்டிருக்கிறார்கள் என்றால், ஊராட்சித் தலைவர்கள் பற்பல செண்ட்டுகளை வளைத்துப்போடுகிறார்கள்.
கருணாநிதியோ மன்மோகனோ கம்பெனிகளுக்கு சலுகை செய்துவிட்டு நாட்டுச் செல்வத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் உள்ளாட்சித் தலைவர்கள், மணல் அள்ளுவோருக்கும், குவாரி நடத்துவோருக்கும், ஒதுக்கப்புறமான கிராமங்களில் அமைந்த கம்பெனிகளுக்கும் வள ஆதாரங்களை விற்பனை செய்துவிட்டு கொள்ளையடிக்கிறார்கள்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குறுமாதிரியாகத்தான் உள்ளாட்சி ஜனநாயகமும் இருக்கிறது. உதாரணமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபின்பு மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை நாளொன்றுக்கு ரூபாய் 30 லட்சம் அதிகரித்துள்ளதாம். தேர்தல் செலவில் பாதி மது வினியோகம் என்று வைத்துக்கொண்டால் கூட 20 நாட்களுக்கு 6 கோடி ரூபாய் ஆகிறது. எனில் குறைந்தது ஒரு மாவட்டத்தில் தேர்தல் செலவு 12 கோடிகளுக்கு மேலிருக்கலாம். இது ஓர் உத்தேசக் கணக்குதான். தேன் எடுப்பவன் புறங்கையை நக்குவான் என்பது பழைய கதை. இப்போது வருமானத்தைக் கணக்கிட்டே தேர்தல் செலவு செய்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தலின் குறிப்பான அம்சம் உள்ளூர் பெருந்தனக்காரர்களின் ஆதிக்கம். உதாரணமாக, சமீபத்தில் மிகவும் பேசப்பட்ட மண்டலமாணிக்கம் பஞ்சாயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து. தலைவராக ஓர் தலித் வர வேண்டும். அந்த பஞ்சாயத்தில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள தலித்துகள் பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், 4 வீடுகள் உள்ள சக்கிலியர் சாதியிலிருந்து ஒருவரைத் தலைவராக்கிவிட்டு ஆப்பநாட்டு மறவர் வகையறா ஒருவர் பஞ்சாயத்தில் கொள்ளையடித்து வருகிறார்.
தன்னிடம் வேலை செய்யும் தலித் பெண்ணைத் தலைவராக்கிவிட்டு பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர், பெண் தலைவிக்கு பதிலாக மன்றக் கூட்டங்களை நடத்துபவர் என்று நிறைய கதைகள் தமிழகமெங்கும் உள்ளன.
வட்டிக் கடை நடத்துபவர், கிராம நிலத்தை கையில் வைத்திருப்பவர் அல்லது அவரின் கையில் உள்ள ஓர் எடுபிடி என்று கிராம ஆதிக்கத்தின் மையம் யாரோ அவரே உள்ளாட்சியின் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறார்.
ஓர் சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். வேலையுறுதித் திட்டத்தில் கூலி போதவில்லை என்று கிராம சாலையை மக்கள் மறித்தனர். அங்கு வந்த யூனியன் அதிகாரி ஏதோ பேசி சமாளித்துவிட்டு புறப்பட்டார். அவர் வந்து போன டீசல் செலவுக்காக பஞ்சாயத்து கிளர்க் பணம் அளித்தார். பணம் எங்கிருந்து வந்திருக்கும் என்கிறீர்கள்?
ஆக, அதிகாரிகளின் கொள்ளைக்குத் துணை போவது, உள்ளூர் பணக்காரரின் கைப்பாவையாக, கொள்ளைக்காடாக இருப்பது இதுதான் உள்ளாட்சி.
எனவே, உள்ளாட்சித் தேர்தல் என்பது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வேர்க்கால் வடிவம். அவ்வளவுதான். எனில், இந்த தேர்தலை புதிய மாதிரியில் நடத்துவது எப்படி? நிச்சயம். தேர்தல் வாரியம் சொல்லும் முறையில் அல்ல.
தமிழகக் கிராமங்களின் இன்றைய நிலை என்ன? அனைத்து நகரங்களுக்கு பெருநகரங்களுக்கு செல்லும் நகரப் பேருந்துகள் அதிகரித்துவிட்டன. காலையில் கிராமங்களிலிருந்து உழைப்பாளிகளை அள்ளிச்சென்று மாலையில் கொண்டுவந்து இறக்கிவிடுகின்றன. கிராமத்தில் வேலை இல்லை. விவசாயக் கூலி போதுமானதாக இல்லை. அதிலும் முக்கியமாக உழைப்புக்கு மரியாதை இல்லை.
கிராம மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. கைகள் நடுங்கும் வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு முதியோர் உதவித் தொகை கொடுக்கப்படுவதில்லை.
இரு சக்கர வாகனத்தில் கிராமத்தை முன்னிரவு நேரத்தில் நெருங்கும்போது சாலையின் இரு பக்கமும் எழுந்து நிற்கும் பெண்கள் தென்படுவார்கள். திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் புதிதாகப் போடப்பட்ட கிராம சாலையில் மற்றொரு சாதிப் பெண்கள் மலம் கழித்துவிட்டார்கள் என்று மிகப்பெரும் தாக்குதலே நடந்தது. இந்தியா 2020ல் வல்லரசாக மாறும் என்று சொன்ன அப்துல் கலாமுக்கு நிதர்சன‌ அறிவே கிடையாது என்று தோன்றுகிறது.
வேலை, கூலி, கௌரவம் என்ற மூன்றும்தான் கிராமப்புற உழைப்பாளிகளின் பிரச்சனையாக இருக்கிறது. இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகமும் சரி ‘வேர்க்கால் மட்ட முற்றூடான ஜனநாயக’மும் சரி இப்பிரச்சனைகளைப் பற்றி கவலைபட்டதேயில்லை.
மாற்றம் எங்கே இருக்கிறது? இந்த வகைப்பட்ட அரசியலை முற்றிலுமாக மறுப்பதில் இருக்கிறது. இந்திய ஜனநாயகம், உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகள், அதிகார வர்க்கம், நில உடமையாளர்களின் ஜனநாயகமாக இருக்கிறது என்பதற்காக, வேர்க்கால் மட்ட ஜனநாயம் உள்ளூர் பெருந்தனத்தின், அதிகார வர்க்கத்தின் ஜனநாயகமாக இருக்கிறது என்பதற்காக அதனை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது. முன்னாளைய சாதி அதிகார நாட்டாமைச் சபைகளை விட கிராம சபை உயர்ந்ததுதான். ஆனால், அதனை நடப்பாக, உண்மையானதாக ஆக்குவதுதான் பெரும் பிரச்சனை. உள்ளூர் ஆதிக்கத்தின் கருவியாக இருக்கும் பஞ்சாயத்து மன்றத்தை உள்ளூர் ஆதிக்கத்திற்கு எதிரான போர்வாளாக ஏன் மாற்ற முடியாது? கிராமத்தில் ஏறக்குறைய 90 சதம் மக்கள் உழைப்பாளிகளாக இருக்கும்போது ஏன் உழைப்பாளிகளின் அதிகாரத்தை நிறுவ இந்தத் தேர்தலை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த முடியாது?
நிச்சயம் இந்தியாவை ஜனநாயக மக்கள் குடியரசாக மாற்றுவதற்கு வெகு தூரம் செல்ல வேண்டும். மக்கள் அதிகாரத்தைக் கட்டமைக்க கிராமங்களை உழைப்பாளர்களின் அதிகார மையமாக்க வெகு நீண்ட தூரம் போக வேண்டும். உழைக்கும் மக்கள் எதிர்த்து நிற்க ஆரம்பித்துவிட்டால் எந்த அதிகாரத்தைத் தகர்ப்பதற்கும் நாளாகாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கெடுக்கிறது. வேறு வழியே இல்லாமல் கூட்டணியில்லாமல் நிற்கும் கட்சிகள் போல அல்லாமல், கொள்ளைக்கார கட்சிகளோடு கூட்டு இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் தனியாக தேர்தலை எதிர்கொள்கிறது.
மதுரை மாவட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். யார் இதுநாள் வரை மக்களின் தலைவர்களாக நின்று போராட்டங்களை வழிநடத்தியிருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் வேட்பாளர்கள். தேர்தல் செலவு ரூபாய் 650 (தலித்), 750 (இதரர்) தாண்டக்கூடாது என்பது முதல் நிபந்தனை. தேர்தல் செலவையும் கட்சிக் கிளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை.
உள்ளூர் பெருந்தனத்தின் கையாளாக இருக்க மாட்டேன், ஊழலில் ஈடுபட மாட்டேன், உள்ளாட்சியின் காண்ட்ராக்டுகளை எடுத்துக்கொள்ள மாட்டேன், 100 நாள் வேலையில் 119 சட்டக்கூலி கிடைக்கப் போராடுவேன் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை அளிக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் எம்எல் கட்சி வேட்பாளர்களில் 70 சதம் பெண்கள் என்பது மற்றொரு கவனத்திற்குரிய செய்தி.
இந்த வேட்பாளர்களின் பிரச்சாரம் கிராமங்களில் வரவேற்பு பெறுகிறது. சாராயம் தராமல், ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், ஊழல் எதிர்ப்பு, உள்ளூர் மற்றும் அதிகார எதிர்ப்பு என்ற முழக்கங்கள் சரியானவை தேவையானவை என்கின்றனர் பொது மக்கள். திமுக, அதிமுக கட்சியினர் எம்எல் கட்சியின் வேட்பாளர்களுக்கு விலை பேச ஆரம்பித்துள்ளனர். இப்போதைய விலை வார்டு உறுப்பினருக்கு 20 ஆயிரம். ஆனால், அவர்களின் பேரம் வெற்றிபெறவில்லை.
உள்ளாட்சித் தேர்தலின் அடுத்த கட்டம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் உப தலைவரைத் தேர்ந்தெடுப்பது. அது அடுத்த கட்ட பணப்பாய்ச்சலுக்கான இடம். எம்எல் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பணம் அளிப்பவருக்கு உபதலைவர் பதவிக்கு வாக்களிக்கக் கூடாது. தகுதியான யாரும் உபதலைவருக்குப் போட்டியிடவில்லை என்றால் வாக்களிக்கக் கூடாது என்று இப்போதே கட்சி உத்தரவிட்டிருக்கிறது.
இப்படியாக புதியதொரு முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கட்சியும் மக்களும் முயற்சியெடுத்திருக்கிறார்கள். சிறிய ஆனால், கௌரவமான தொடக்கம் என்று இதனைச் சொல்ல வேண்டும். ஆனால், இன்னும் கடினமான சவால்கள் இனிதான் இருக்கின்றன.
- சி.மதிவாணன்