மருத்துவக் குணங்கள்:
- அகத்திக் கீரை இந்தியாவில் எங்கும் ஏராளமாக வளரக் கூடியது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இருப்பினும் இதன் இருப்பிடம் மலேசியா எனக் குறிப்பிடுகிறார்கள்.
- இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர்.
- அகத்தியில் சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற மூன்று அகத்திகளும் உணவுக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. உண்ணும் அகத்தியில் இரண்டு அகத்திகளே உள்ளன. ஒன்று வெள்ளை நிறப் பூக்களை உடையது. இதனையே பொதுவாக அகத்தி என்ற பெயரால் குறிப்பிடுவார்கள். மற்றொன்று செந்நிறப் பூக்களை உடையது இதனைச் செவ்வகத்தியென அழைப்பார்கள். பொதுவாக அகத்தியும், செவ்வகத்தியுமே உணவாக, மருந்தாகப் பயன்படுகின்றன.
- அகத்தி மரம்போன்று 6 முதல் 9 மீட்டர் (20 அடி முதல் 30 அடி) உயரம் வளர்ந்த போதிலும் இது செடியினைத்தைச் சேர்ந்ததே ஆகும். மிக விரைவில் வளரக்கூடிய பயிர் வகையைச் சார்ந்தது இச்செடி. ஆயினும் நீண்ட நாட்கள் வாழக்கூடிய தன்மை பெற்றதில்லை.
- பெரும்பாலும் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் இச்செடியில் வெற்றிலைச் கொடிக்கால்களில் வெற்றிலைக்கு நிழல் தருவதாகவும் வெற்றிலைக் கொடிக்குக் கொழு கொம்பாக உதவவும் பயிர் செய்கிறார்கள்.
- அகத்திக் கீரை உணவாகப் பயன்படுகிறது. இக்கீரையை வேகவைத்து பொரியலாகச் செய்துண்பர். கீரையுடன் தேங்காயைச் சேர்த்துக் தாளிதம் செய்து உண்ணலாம். மற்றும் பருப்புடன் சேர்த்து வேகவைத்து உண்பதும் உண்டு. இதனைக் குழம்பாகவும், மிளகு நீர் செய்தும் உண்ணலாம்.
- அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்களும் மருத்துவ நூலாகும் கூறியிருக்கின்றனர்.இக்கீரை கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் நல்ல தீவனமாகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு, கோழி உணவோடு காய்ந்த அகத்திக் கீரையைச் சேர்த்து தீவனமாகக் கொடுத்தால் குஞ்சுகள் நன்கு வளர்ச்சி பெறுகின்றன.
- கால்நடைகளுக்கு இக்கீரையத் தீவனமாகக் கொடுத்தால் அதிகமாகப் பால் கறக்கிறது என நம்பப்படுகிறது. ஆனால் இது ஒரு தவறான கருத்து என விஞ்ஞான ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.
- அகத்திக் கீரையைத் தானமாகக் கொடுப்பது மிகவும் சிறப்புடைய செய்கையாகக் கருதப்படுகிறது. அதிலும் பசுக்களுக்குக் கொடுத்தல் பூர்வ-கர்மவினைகள் யாவும் விலகும் என்பர். ஆனால் இக்கீரையைத் தின்று கொண்டிருக்கும் கறவை மாட்டின் பாலில் உடலுக்கு நன்மை தரும் அனேக நற்குணங்கள் நிரம்பி இருக்கும். இப்பாலைச் சாப்பிடுவதால் அகத்திக் கீரையை உண்பதால் உண்டாகும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.
- இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச்சிறந்த புரதமாகக் கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
- அகத்திக் கீரையில் 73 விழுக்காடு நீரும் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும் 2.1 விழுக்காடு தாதுப்புக்களும் இருக்கின்றன. இதில் 2.2 விழுக்காடு நார்ச்சத்தும் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 விழுக்காடு இந்தக் கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
- சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் இக்கீரையில் அதிகம் இருப்பதைக் காணலாம். 93 கலோரி சக்தியைக் கொடுக்க வல்லது. நூறு கிராம் கீரையில் 1,130 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 80 மில்லிகிராம் மணிச்சத்தும் 3.9 மில்லிகிராம் இரும்புச் சத்தும் அடங்கி இருக்கின்றன.
- இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். உயிர் சத்தான வைட்டமின் A, நூறு கிராம் கீரையில் 9, 000 உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லிகிராமிலும், ரைபோ பிளேவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் C 169 மில்லி கிராம் இருக்கின்றன.
- அகத்தியின் இளம்பூவும், மொட்டுக்களும் உணவாகச் சமைக்க உதவுகின்றன. பொதுவாக இப்பூவை தனியாகச் சமைத்து உண்பதில்லை. ஆனால் வடநாட்டில் பூவையே தனியாகச் சமைத்துண்கின்றனர்.
- இதன் காயையும் கறி சமைத்து உண்ணலாம். அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன.
- அகத்திக் கீரை குடலில் தேங்கும் மலம் மற்றும் நிணநீர் ஆகிய அசுத்தங்களைச் சுத்தம் செய்யும் ஆற்றல் பெற்றது மலர்ச்சிக்கலை நீக்கி மலத்தை உடைத்து வெளியேற்றும் தன்மை பெற்றது.
- அகத்திக் கீரை பித்தச் சூட்டையும் தணிக்க வல்லது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும். இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையைது.
- வெய்யிலில் சுற்றி அலைபவர்கள், தேயிலை, காப்பி போன்ற பானங்களைப் பருகிப் பித்தம் அதிகப்பட்டவர்கள், மலச்சிக்கல் உள்ளோர் அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை உண்பது நல்லது.
- இடு மருந்துகளின் வேகம் தணிய வயிற்றைவிட்டு இடு மருந்துகள் கழியவும் இந்த அகத்தி மிகவும் பயன்படுவதாக நம்பப்படுகிறது...