Wednesday, 14 November 2012

வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை



Aadhavan Dheetchanya is one of the outstanding social thinkers reinforcing every initiative to empower the SC/ST fraternity through literary, media and community endeavors. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் புதுவிசை கலாசாரக் காலாண்டிதழின் சிறப்பாசிரியருமான ஆதவன் தீட்சண்யா அவர்களின் ஆக்கங்கள் மலையாளம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதை உக்கிரமான மொழியில் எதிர்கொள்ளும் ஆதவன், எழுதுவதோடு தன்னுடைய வேலை முடிந்தது என்றில்லாமல், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் என மாநிலம் முழுவதும் பிரயாணம் செய்தபடி இருக்கிறார்.

In his blogs, books, speeches and videos, there are practical views on social inequalities. ஆதவன் தீட்சண்யா அவர்கள் இயற்றி உள்ள "இப்பல்லாம் எவன்டா சாதி பாக்குரான்னு அப்பாவி போலவே கேட்கிறான்' எனும் இந்த அருமையான பாடல் தமிழகத்தில் சமூக நீதிக்கும், பகுத்தறிவுக்கும் எள்ளளவும் இடமில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது!


பாட்டின் நடுவில் வரும் "அம்பேத்கர் பெயரை பிள்ளைக்கு சூட்டி ஆனந்தம் கொள்பவர் எத்தனை பேர்?" என்ற கேள்விக்கு என்ன பதில் கூறலாம்? மிக முக்கியமான இந்த படலை அழகாகப் பாடியுள்ள வைகறை கோவிந்தன் குழுவினர் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்! தமிழ் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையை இந்த பாடலின் வரிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன!

An inspiration to numerous youth belonging to the Scheduled Communities, Aadhavan Dheetchanya continues his dynamism in creativity for social change! Let us wish him all success!

Thanks Centre for Media and Public affairs (CMPA)Venkat Raj
.

கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்

கலப்புமண எதிர்ப்பு அரசியல்
விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்

Author :ஸ்டாலின் ராஜாங்கம்

2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள புதுக்கூரைப்பேட்டை என்னும் கிராமத்தில் சாதிமீறிக் காதலித்த காரணத்திற்காகத் தலித்தான முருகேசன் வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகி ஆகிய இருவரையும் ஊரின் ஆதிக்க சாதியினர் கொடூரமாகக் கொலைசெய்தனர். வன்னியர்களின் இக்கொடூரச் செயலுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் மறைமுகமான ஆதரவு இருந்ததாகச் சொல்லப்பட்டது. இக்கொடூரக் கொலையில் ஈடுபட்ட ஊர்க்காரர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு அக்கட்சி சட்டரீதியாக உதவியதாகவும் கூறப்பட்டது. புகாரை அந்தக் கட்சி இதுவரை மறுக்கவில்லை. ஆனால் கடந்த 2012 ஏப்ரல் மாதம் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் ராமதாஸ் முன்னிலையில் வன்னியர் பெண்களைப் பிற சாதி ஆண்கள் காதலிக்கவோ மணக்கவோ அனுமதிக்கக் கூடாது என அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடு வெட்டி குரு பேசிய சாதிமறுப்புத் திருமணம் குறித்த அக்கட்சியின் நிலைபாடு தெளிவாகிவிட்டது. புதுக்கூரைப்பேட்டைக் கிராமத்தில் நடந்த இரட்டைக்கொலை விவகாரத்தில் அக்கட்சியின் மௌனத்திற்கான காரணத்தையும் குரு இதன் மூலம் தெளிவுபடுத்திவிட்டார்.
 
அரசியல் மேடையொன்றில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக இது வெளிப்படையாக விடுக்கப்பட்ட அறைகூவல். வடமாவட்டங்களில் அரசியல் ஆதரவோடும் சாதி வெறியோடும் ஆதிக்க சாதியினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இப்படுகொலைகளைக் குறித்து இமையம் எழுதியுள்ள ‘பெத்தவன்’ என்ற தேர்ந்த சிறுகதையும் (உயிர்மை, செப்டம்பர் 2012) அண்மையில் வெளியாகியுள்ளது.
 
இதேபோலக் கடந்த சில வருடங்களாகக் கொங்கு மண்டலத்தின் ஆதிக்க சாதியான கொங்குவேளாளர் அமைப்புகளில் சில வெளிப்படையாகச் சாதி மறுப்புத் திரு மணத்திற்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளன. சாதி கடந்த காதல், திருமணங்களைக் கொலை உள்ளிட்ட கொடூரமான வழிமுறைகளின் மூலம் தடைசெய்துவரும் அச்சாதியினர் அரசியல்ரீதியில் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு சாதிமறுப்புத் திருமணங்களுக்கெதிரான தம் சட்ட விரோதச் செயல்பாடுகளுக்கு அரசின் அங்கீகாரத்தை வெளிப்படையாகக் கோரத் தொடங்கியுள்ளனர். ஆதிக்க சாதியினரிடமிருந்து தலித்துகளைப் பாதுகாக்கும் தலித் வன் கொடுமைச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி கடந்த பல வருடங்களாக அரசை வலியுறுத்திவரும் சில கொங்கு வேளாளர் அமைப்புகள் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி கோவையில் நடத்திய கூட்டமொன்றில் கலப்புத் திருமணச் சட்டத்தைத் தடைசெய்ய வேண்டுமென்னும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கலப்புத் திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகச் செய்திகள் வந்தன. கலப்பு மணச் சட்டத்தை ரத்துசெய்யும்படி அரசைக் கோரியுள்ள இந்த அமைப்புகள் தமக்கென இணையதளம் ஒன்றையும் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.
 
கொங்குப் பகுதியின் முதன்மை ஆதிக்க சாதியினரான கொங்கு வேளாளர்களை அரசியல்ரீதியில் ஒன்றிணைக்கவும் சாதி அடையாளத்தை ஓட்டுவங்கி அரசியலுக்குப் பயன்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளின் தொடர்ச்சியே இது போன்ற நடவடிக்கைகள். சமூக மாற்றத்தின் காரணமாக இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காதல், கலப்பு மணங்களைக் கண்டு ஆதிக்கச் சாதிகள் பதற்றமடைந்திருப்பதன் அடையாளமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். எண்ணிக் கையில் பெரும்பான்மைச் சாதிகள் மட்டுமல்லாது எண்ணிக்கையில் சிறுபான்மை இந்து சாதி அமைப்புகளும் இதே கோரிக்கையை ஆங்காங்கு எழுப்பத் தொடங்கியுள்ளன. சாதி ஒதுக்கீடுகளும் பிரதிநிதித்துவமும் ‘சமூகநீதி’யாகிவிட்ட நம் சூழலில் தத்தம் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு சாதியும் தங்களின் எண்ணிக்கையைச் சிதறிவிடாமல் காக்க விரும்புகின்றன. கடந்த சில பத்தாண்டுகளில் பெரும் எழுச்சிபெற்றுவரும் ஒடுக்கப்பட்டோரின் அரசியல், ஆதிக்க சாதியினருக்குப் பெரும்பதற்றத்தை உருவாக்கியுள்ளது. காதல் திருமணங்கள் மூலம் சாதியமைப்பு சிதைவதைக் கண்டு சாதியமைப்புகள் வெளிப்படையாக இவ்வாறு பேசத் தொடங்கியுள்ளன. சாதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும் அதை மேலும் இறுக்கமானதாக மாற்றுவதற்குமான முயற்சிகளை ஆதிக்க சாதி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இவை போன்ற நடவடிக்கைகள் கிராமப்புறங்களில் வாழும் தலித்துகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதில் சந்தேகமில்லை. இது போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் அந்த அமைப்பு இந்திய அரசியல் சாசனத்தின் நோக்கங்களுக்கு வெளிப்படையாகச் சவால்விட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பிற்போக்கான, காட்டுமிராண்டித்தனமான இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அறிவு ஜீவிகளும் ஜனநாயக சக்திகளும் அரசியல் கட்சிகளும் மௌனம் காப்பது கடும் கண்டனத்திற்குரியது.
 
அம்பேத்கர் 1916ஆம் ஆண்டு கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் கருத்தரங்கில் இந்தியாவில் சாதியின் அமைப்பியக்கம் பற்றிச் சமர்ப்பித்த கட்டுரையில் சாதி முறையின் தோற்றுவாய்க்கும் அது நீடித்திருப்பதற்குமான காரணங்களில் முக்கியமானதாக அகமணமுறையைக் குறிப்பிட்டார். ஒத்த குழுவில் ஆண் பெண் விகிதத்தில் நிகழும் வித்தியாசம் அதையொட்டிப் பெண்கள்மீது திணிக்கப்படும் விதவைக் கோலம், உடன்கட்டை ஏறுதல், ஆண்களின் துறவு, வயது குறைந்த பெண்ணை மணம் முடித்தல் போன்ற போக்குகளை இதன் தொடர்ச்சியாக விவரித்தார். 1936இல் சாதிஒழிப்பு என்ற தலைப்பில் தயாரித்த உரையொன்றில் சாதி யொழிப்புக்கு உண்மையான வழி கலப்புமணம்தான் என்னும் தான் நம்புவதாகக் குறிப்பிட்டார். இதைத் தவிர வேறெதுவும் சாதியைப் பலவீனப்படுத்த முடியாது என்றும் இதைப் புரிந்துகொள்வதே நோயின் மூலத்தைக் கண்டறிவதாகும் என்றும் அறிவித்தார்.
 
சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி அரசாங்கத்தை எதிர்க்கும் அரசியல்வாதியைவிடத் தீரம்மிக்கவன். இச்சூழல் சார்ந்து ஏற்படும் சவாலான நிலையையும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சமூகத்தின் பொதுப் புத்தியாகிவிட்ட சாதியச் சூழலைச் சமரசமில்லாமல் எதிர்கொள்ளும் சீர்திருத்தவாதியென்று யாரையும் நம்மால் குறிப்பிட முடியவில்லை. அரசியல்வாதிகளிலிருந்து நூலிழை இடைவெளியிலேயே அறிவுலகமும் உலகமும் செயற்பட்டுவருகிறது.
 
பிராமணரல்லாதோரின் சாதியமைப்பு பற்றிய அறிவுத்துறை விவாதங்கள் சாதியமைப்பைப் பாதுகாப்பதில் அவற்றுக்குள்ள பங்களிப்பைக் குறித்து முறையாக விவாதிப்பதைத் தவிர்க்கின்றன. இந்த விஷயத்தில் எல்லோருமே மௌனம் காக்க விரும்புகிறார்கள். கலப்பு மணத்திற்கு எதிரான தற்போதைய சாதி இந்துக்களின் குரல்கள் அரசியல் தளத்தில் பேசப்பட்டு வந்த சாதி ஒழிப்பு அல்லது சாதி மறுப்பு என்னும் கருத்தியலை தீவிரமாக மறுபரிசீலனை செய்யக் கோருகிறது.
 
சாதி மறுப்புத் திருமணம் என்பது கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழக அளவில் இயக்கரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்த ஒன்று. பிராமண ஆதிக்கத்திற்கெதிராகத் தமிழகத்தில் உருவான பிராமணரல்லாத இயக்கத்தின் அடையாளமாகவே இது இருந்து வந்தது. இப்போது அந்த அடையாளத்தின் எச்சங்கள்கூட இல்லை. சாதி மறுப்பு கைவிடப் பட்டுச் சடங்கு மறுப்பு என்பதாகச் சுய மரியாதைத் திருமணங்களின் சீர்திருத்த எல்லை சுருங்கிவிட்டது. தாலி மறுப்பு, சடங்கு மறுப்பு போன்ற சாதியக் கட்டுமானத்தில் எந்த விரிசலையும் ஏற்படுத்தாத சுயமரியாதைத் திருமணங்களைக் கண்டு ஆதிக்கசாதியினர் ஒருபோதும் பதற்றமடைவதில்லை. அத்தகைய திருமணங்கள் சமூகக் கட்டமைப்பில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாதவரை அவற்றை வரவேற்பதிலும் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இருந்து வந்த சமூகப் பாதுகாப்பு பலவீனமடைந்ததற்குப் பின்னால் உள்ள அரசியல்ரீதியான காரணங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.
 
ஆனால் சாதாரண மனிதர்களிடையே சாதி கடந்த காதல், கலப்பு மணங்கள் இயல்பான செயல்பாடுகளாக நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இத்திருமணங்கள் பற்றிய பிரகடனங்கள் ஏதும் அவர்களிடம் இருப்பதுமில்லை. சாதி கடந்த காதல், கலப்புமணத்திற்கு எதிரான ஆதிக்க சாதியினரின் வன் முறை சாதியத்தின் ஒரு பகுதியாக எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. சாதிக்கட்டுமானத்தை மீறும் சொந்தக் குழந்தைகளைக் கொலைசெய்தாவது சாதியின் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு ஆதிக்க சாதியினர் தயங்குவதே இல்லை. அதைப் பற்றிய பெருமிதமும் சாதிய மனத்தின் ஒரு கூறு என்றே சொல்லலாம். நாகரிகச் சமுதாயம் சாதிய வன்முறைகளுக்கும் கௌரவக் கொலைகளுக்கும் எதிராக இருப்பதுதான் சாதியத்திற்குப் பெரிய சிக்கல். முன்புபோல அவற்றை எளிமையாகச் செய்ய முடியவில்லை. ஆகவேதான் அதற்குச் சட்ட அங்கீகாரத்தைக் கோருகிறார்கள். இதற்கு முதல் காரணம் சமூக அடிநிலைச் சக்திகளான தலித்துகளுக்குக் கல்விரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு. நவீன வாழ்வு சார்ந்த மாற்றங்கள் மற்றொரு முக்கியக் காரணம். இதன் விளைவாகக் காதலும் கலப்பு மணங்களும் திட்டமிடப்படாத, இயல்பான போக்காக வளர்ந்து வரு கின்றன. காதல், திருமணம், குடும்பம் சார்ந்த மதிப்பீடுகளும் கருத்தியல்களும் வேகமாக மாறிவருகின்றன.
 
சாதி கடந்த திருமணங்களுக்கு ஆதரவாக இருந்துவந்த, முன்பு சாதி ஒழிப்பை ஒரு வேலைத்திட்டமாகக் கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் இவ்விசயத்தில் மேற்கொண்டு வரும் மௌனம் பரீசிலிக்கத்தக்கது.
 
சாதி ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எழுந்துள்ள இக்குரல்களில் தீவிர தலித் எதிர்ப்பு வேர்கொண்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். அதனால்தான் திராவிட இயக்க அமைப்புகளோ தமிழ்த் தேசிய அமைப்புகளோ சாதியமைப்புகளின் கலப்புமண எதிர்ப்பைத் தீவிரமாக எதிர்கொள்ளவில்லை. பெரியார் திராவிடர் கழகம் தவிர வேறு யாரும் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை. மேற்படி கூட்டம் நடந்த மண்டபத்துக்கு வெளியே அதைக் கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களைத் தமிழகக் காவல் துறை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற பிரச்சினைகளின்போது அவற்றைக் கண்டனம் செய்வதன் மூலம் நாம் திருப்தியடைந்துவிடுகிறோம். கண்டனம் தெரிவிப்பதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் சடங்காக மாறிவிட்ட சூழலில் குறிப்பிட்ட பிரச்சினையின் கருத்தியல் பின்னணியையும் அது ஏற்படுத்தி வரும் மாற்றங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்வது அவசியம். இதற்கான விவாதங்களை அறிவுஜீவிகள் மட்டுமே உருவாக்க முடியும். மேற்கண்ட சாதியினர் சாதியமைப்பால் பயன்படுத்தப்படுகிறவர்கள் என்ற கருத்தைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இன்றைய சாதியமைப்பின் நலன்களைப் பாதுகாப்பதில் இவர் களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இந்நிலையில் பிராமணரல்லாத சாதிகளின் குரலாகச் செயல்பட்ட திராவிட இயக்கங்களின் கருத்தியல் பின்னணிகளைப் பேசுவதில் ஈடுபட்டு வந்த எஸ். வி. ராஜதுரை, அ. மார்க்ஸ் உள்ளிட்ட திராவிட சார்பு மற்றும் இடதுசாரி அறிவுஜீவிகள் தற்போதைய சூழலில் இயக்கக் கருத்தியல் குறுக்கீடுகளை நிகழ்த்த வேண்டியது அவசியம்.
 
ஒரு காலக்கட்டத்தில் திராவிட இயக்கத்தால் சாதி மறுப்புத் திருமணங்கள் கொள்கையளவில் வற்புறுத்தப்பட்டிருந்தாலும் அந்த இயக்கத்தின் மையச் சக்திகளாக விளங்கிய ஆதிக்க சாதிகள் அதை ஏற்கவில்லை. சாதியை ஒழிப்பதற்கான வழிமுறைகளில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட சமபந்தி போஜனம், கலப்புமணம் ஆகிய இரண்டு கொள்கைகளுக்கும் ஆதரவில்லாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியைத் தன்னுடைய சாதி ஒழிப்பு (1936) என்னும் நூலில் எழுப்பும் அம்பேத்கர் இவ்விரண்டு கொள்கைகளும் இந்துக்களின் புனிதமான நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக இருப்பதானாலேயே அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கிறார். இங்கிருக்கும் ஒவ்வொரு சாதியினரும் தங்களை இந்துக்களாகக் கருதிக்கொள்கிறார்கள். இந்து மதத்தின் மொத்தப் பிரதிநிதியாகப் பிராமணர்கள் காட்டப்பட்டு எதிர்க்கப்பட்டாலும் பிற இந்து சாதிகளிடம் இந்து மனோபாவமே செயற்படுகிறது. ஓர் இந்துவுக்கு சாதியே முதல் அடையாளம். கலப்புமணம் பற்றிப் பேசும் அம்பேத்கர் சாதியைப் போற்றும் மதத்தைக் கற்பிக்கும் சாஸ்திரங்களை எதிர்க்க வேண்டும் என்கிறார்.
 
சாஸ்திரங்களைப் புறக்கணித்தால் மட்டும் போதாது, அவற்றின் அதிகாரத்தையே மறுக்க வேண்டும் என்றார். இங்குச் சாஸ்திரத்தின் குறியீடான பிராமணன் மட்டுமே புறக்கணிக்கப்பட்டான். மாறாக சாஸ்திரம் கற்பிக்கும் சாதி அதிகாரம் புறக்கணிக்கப்படவில்லை. ஒவ்வொரு சாதி இந்துவின் உளவியலிலும் சாதி என்னும் அதிகாரம் இவ்வாறுதான் குடிகொண்டிருக்கிறது. அதுதான் இன்றைய எதிர்ப்பின் கருத்தியல் அடிப்படை. இவ்விடத்தில் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரும் கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வந்த சாதி அமைப்புகளே இப்போது கலப்புமண எதிர்ப்பிலும் ஒருசேரக் குரலெழுப்புகின்றன. கலப்புமண எதிர்ப்பைக் கூர்மையாக்கும் கொங்கு வேளாளர் அமைப்பும் தலித் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரிவரும் தேவரினப் பாதுகாப்புப் பேரவை போன்ற பிற சாதி அமைப்புகளும் அணிசேர்க்கத் தொடங்கியுள்ளதை இங்குக் கவனிக்க வேண்டும். மறுபுறம் தம் சாதி பற்றி இந்த அமைப்புகள் உருவாக்கிப் பரப்பிவரும் பிம்பங்கள் கூர்ந்து கவனக்கத்தக்கவை. தம்மை ஆண்ட பரம்பரையாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பு ஒவ்வொரு சாதிக்கும் இருக்கிறது. அதற்கான வரலாற்றுச் சான்றுகளை அவை தேடுகின்றன. ஆனால் இட ஒதுக்கீடு முதலான சலுகைகளைக் கோருவதற்காகத் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகவும், வஞ்சிக்கப்பட்டவர்களாகவும் காட்டிக்கொள்ளவும் முற்படுகின்றன. தீரன் சின்னமலையைக் கொங்கு வேளாளர் சாதியைச் சேர்ந்தவர் என நிறுவுவதில் வெற்றி பெற்றுவிட்ட கொங்கு வேளாளர் அமைப்புகள் தம்மை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென நீண்ட காலமாகக் கோரி வருகின்றன. ஆதாயங்களுக்காகத் தம்மைத் தலித்துகளைவிட மோசமாக ஒடுக்கப்பட்டவர்களாகக் காட்டிக்கொள்வதற்கும் தயங்குவதில்லை. பலவேளைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு இணையாகத் தங்களுக்கும் சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றனர்.
 
பெரியாரியத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் சாதி கடந்த திருமணத்திற்கெதிரான இத்தகைய அமைப்புகளின் நடவடிக்கைகளைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பதற்குக் காரணமுண்டு. வாக்கு வங்கி அரசியல் முக்கியக் காரணம். சாதி ஆதிக்கத்தையும் தங்களுடைய நலனையும் ஒருசேரத் தக்கவைத்துக்கொண்ட இக்கட்சிகள் இச்சாதியினரையோ சாதி அமைப்புகளையோ பகைத்துக்கொண்டு அரசியல் நடத்த முடியாது. இந்நிலையை உருவாக்கியது இக்கட்சிகளே. அரசியல் பெரும்பான்மைக்காக எண்ணிக்கை சிதையாமல் காப்பது, சிறு சிறு குழுக்களை ஒன்றாக்குவது என்றெல்லாம் சாதிப் பெரும்பான்மை வாதம் கூர்மை பெற்று வருகிறது. தமிழகத்தில் மதச் சார்புடைய கட்சி செல்வாக்குப் பெறமுடியாமல் போகலாம். ஆனால் சாதியைப் பகைத்துக்கொள்ளும் எந்தக் கட்சியும் இங்கு ஆட்சிக்கு வர முடியாது என்பதே கசப்பான உண்மை.
 
 Thanks  நவம்பர் 2012 காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை