‘‘மறுபடி மறுபடி காதலில் விழுவது... ஆனால், ஒரே நபருடன்! திருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்கிற ரகசியம் இதுதான்...’’ என்கிறது ஒரு பொன்மொழி. மேலோட்டமாகப் பார்த்தால் காமெடியாக தெரிந்தாலும், நடைமுறையில் முயற்சி செய்து பார்த்தவர்கள், அது எத்தனை உண்மை என ஒப்புக் கொள்வார்கள்!
நமது இந்தியத் திருமணங்களில், கல்யாணத்தோடு காணாமல் போகிறது காதல்! நிச்சயித்த திருமணங்களிலோ, ஆசையும் மோகமும் அடுத்த நாளிலிருந்தே குறையத் தொடங்குகிறது. இதில் எங்கிருந்து மறுபடி மறுபடி காதலிப்பது... அதுவும் ஒரே நபரை?
‘ஆணும் பெண்ணும் சமம்’ எனப் புரட்சியாகப் பேசினாலும், தன் வீட்டில் மகனுக்கோ, மகளுக்கோ திருமணத்துக்கு வரன் பார்க்கும் போது, அந்தப் புரட்சி சிந்தனை ஒளிந்து கொள்கிறது பலருக்கும். பெண்ணைவிட, பையன் அதிகம் படித்திருக்க வேண்டும். அதிகம் சம்பாதிக்க வேண்டும். பெண்ணைவிட ஆண் உயரமாக, கம்பீரமாக இருக்க வேண்டும்.
இன்னும் எல்லா விஷயங்களிலும் ஆண்தான் சில படிகள் மேலிருக்க வேண்டும். இதன் உள்ளர்த்தம் என்ன? எல்லாவற்றிலும் தன் கை ஓங்கியிருந்தால்தான், மனைவியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கணவனால் முடியும். இதுதான் எழுதப்படாத விதி.
காதலும் கட்டுப்பாடும்-தண்ணீரும் எண்ணெயும் போல. இரண்டும் இணக்கமாக இருக்க வாய்ப்பே இல்லை. கட்டுப்பாடு இருக்கும் இடத்தில் காதல் காணாமல் போய் விடும். உறவுகள் இனிக்க காதலுக்கு மட்டுமே அனுமதி. சுதந்திரம் என்பது கணவன்-மனைவி இருவருக்கும் பொது. ஆனால், பெரும்பாலான கணவர்கள், சுதந்திரம் என்பது என்னவோ தான் பெரிய மனது வைத்து, தன் மனைவிக்குக் கொடுக்கும் மிகப் பெரிய விஷயம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
காதலிக்கும் போதோ, கல்யாணமான புதிதிலோ, துணை என்ன பேசினாலும், அதை நேரம், காலம் மறந்து ரசிப்பார்கள். அபத்தமாகப் பேசினாலும், அற்புதமாகத் தெரியும். உளறல்கள்கூட உன்னதமாகப்படும். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகத் தோன்றும்.
திருமணத்துக்குப் பிறகு, துணை பேசாமல் இருந்தால் தேவலை என்று தோன்றும். துணை சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதையே நிறுத்தி விடுவார்கள். ‘என்ன சொல்லப் போறேன்னு தெரியாதா’ என்கிற அலட்சியம்! என்ன செய்யலாம்? உங்கள் வாழ்க்கைத் துணையை விருந்தாளியைப் போல நடத்துங்கள். விருந்தாளி என்றால் வேண்டா விருந்தாளி மாதிரியல்ல.
உங்களுக்கு மிகப் பிடித்த, எப்போதும் நீங்கள் உடன் இருக்க விரும்புகிற, உங்களை எல்லா விஷயங்களிலும் ஈர்த்த ஒரு நபர் மாதிரி... அப்படியொரு விருந்தாளி, உங்கள் வீட்டுக்கு வருகிறார் என வைத்துக்கொள்வோம்... அந்த நபரை நீங்கள் எப்படியெல்லாம் உபசரிப்பீர்கள்... அவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது எனப் பார்த்துப் பார்த்து செய்வீர்கள்.
எந்த வகையிலும் அவர் மனம் நோகும்படி எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பீர்கள். நீங்கள் மிகவும் விரும்பி வாங்கி வைத்த அல்லது சென்டிமென்ட்டாக வைத்திருக்கும் பொருளை, விருந்தினர் தவறுதலாக உடைத்து விடுகிறார்... அந்த நபரின் மீதான உங்கள் மரியாதையும் அன்பும் அந்தச் செயலை மன்னித்து, மறக்கச் செய்யும்தானே? அவருக்குப் பிடிக்காததை நீங்கள் செய்யாமலிருப்பதிலும், உங்களுக்குப் பிடிக்காததை அவர் செய்தாலும் சகித்துக் கொள்ளவும் மனதளவில் தயாராவீர்கள்தானே? அதே அணுகுமுறையை வாழ்க்கைத்துணையிடமும் கடைப்பிடித்துப் பாருங்கள்.
உண்மையில் காதலிக்கிற போதும், கல்யாணமான புது ஜோரிலும் ஆணும் பெண்ணும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். போகப் போக எல்லாம் மாறுகிறது. வாழ்க்கைத்துணையிடம் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவோம். அதுவே நமக்குப் பிடித்த விருந்தினரிடம் நாம் கடுமையாகவோ, கோபமாகவோ நடந்து கொள்ள மாட்டோம். முதல் வகை வார்த்தைப் பரிமாற்றம் வன்முறை நிறைந்தது. அடுத்தது வன்முறையில்லா பேச்சுப் பரிமாற்றம்.
இந்த வகைப் பேச்சு வார்த்தைக்குப் பழகிவிட்டால், வாழ்க்கையில் எந்த நேரத்திலும், எந்த உறவிடமும் பிரச்னைகளே வராது. வன்முறையில்லாத வார்த்தைப் பரிமாற்றத்தை நான்கு படிகளாகப் பழகலாம். அதெப்படி? உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை உங்கள் துணை செய்கிறார் என வைத்துக் கொள்வோம். உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு, ஆகாயத்துக்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்து, ஆர்ப்பாட்டம் செய்வதுதான் பலரும் செய்கிற ஒன்று.
அப்படிச் செய்யாமல், அமைதியாக அதை எதிர்கொள்ளலாம். ‘நீ ஏன் அப்படிச் செய்தாய்?’ எனக் கேட்பதற்குப் பதில், ‘நான் அதை இப்படிப் பார்த்தேன்’ என உங்கள் எண்ணத்தைச் சொல்லலாம். நடந்த சம்பவத்தினால் உங்களுக்கு உண்டான மன வருத்தத்தைப் பற்றிப் பேசும் போது, ‘உன்னாலதானே இப்படி ஆச்சு... நீ என்னைக் காயப்படுத்திட்டே...’ என்று எதிராளியை சுட்டிப் பேசாமல், ‘எனக்கு மனசு கஷ்டமா இருந்தது’ என்று சொல்லிப் பாருங்கள்... அதே மாதிரி சம்பவம் மறுபடி நடக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறை கூறுகிற தொனியில் சொல்லாமல், அன்பாக, கனிவாகச் சொல்லுங்கள்.
‘உனக்கு அறிவே இல்லை... ஏன் இப்படிப் பண்ணினே...’ என எரிந்து விழுவதற்குப் பதில், ‘தயவு செய்து இதை இப்படிச் செய்ய முடியுமா?’ என வேண்டுகோளாகக் கேட்கலாம். இந்த நான்கு விஷயங்களையும் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் பின்பற்றிப் பாருங்கள்... உங்கள் துணையைக் காயப்படுத்தாமலே நீங்கள் விரும்பியதைப் பெறுவீர்கள். கணவன்-மனைவிக்கு இடையில் மட்டுமின்றி, பிள்ளைகள், வேலையாட்கள், சக ஊழியர்கள் என எல்லோரிடத்திலுமே அன்பையும் நட்பையும் உறவையும் வளர்க்கும் இந்த அணுகுமுறை.
21 நாள் டெஸ்ட்!
கணவன்-மனைவி இருவரும் கையில் ஒரே கலரில் கயிறு கட்டிக் கொள்ளுங்கள். 21 நாள்களுக்கு அதை அவிழ்க்கக் கூடாது. அந்த 21 நாள்களுக்கும் இருவரும், ஒருவரை ஒருவர் எந்த விஷயத்துக்கும் குறை சொல்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். ‘காலையில் எழுந்தது லேட்... சாப்பாடு சரியில்லை... நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதில்லை...’ - இப்படி எந்தக் குறையும் வரக்கூடாது. கோபம் வந்து கத்த வேண்டும் எனத் தோன்றினாலும், கையிலுள்ள கயிறு அதை ஞாபகப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், போகப் போக மாற்றத்தை உணர முடியும். எதிர்மறை எண்ணங்கள் குறையத் தொடங்கும். இருவருக்கிடையிலும் அன்யோன்யம் அதிகரிக்கும். 21 நாள்கள் கழித்து, கயிற்றைக் கழட்டினாலும், குறை சொல்லாத பழக்கம் தொடரும். அது சரி... அதென்ன 21 நாள் கணக்கு என்கிறீர்களா? எந்த ஒரு விஷயமும் பழக்கமாக மாற, குறைந்தது 3 வாரங்கள் தேவை. அதான்!
காசு மேல காசு!
இது இன்னொரு டெக்னிக். கணவன் - மனைவி இருவரும் தனித்தனியே ஒரு உண்டியல் வைத்துக் கொள்ளுங்கள். இருவரில் யார், யாரைப் பற்றிக் குறை சொன்னாலும், உடனடியாக தனது உண்டியலில் 5 ரூபாயை போட வேண்டும். ‘என்னைவிட பெட்டரான ஆள் உனக்குக் கிடைச்சிருப்பாங்களா?’ என்றும், ‘நானெல்லாம் ரொம்ப நல்லவன்(ள்)’ என்றும் சொல்லிக் கொள்கிறவர், ஒரே நாளில் உண்டியலில் சேரும் தொகையை வைத்து, தான் அப்படிப்பட்டவரில்லை என்பதை உணரலாம். முதல் சில நாள்களுக்கு உண்டியலில் கடகடவென காசு நிறையும். ஆனால், காசு போடப் போட, உங்களைக் குற்ற உணர்வு உறுத்தத் தொடங்கும். போகப் போக பணம் செலுத்துவது குறைய ஆரம்பிக்கும். குறை சொல்கிற உங்கள் மனப்பான்மையும் மாறத் தொடங்கும். உண்டியலில் சேர்ந்த தொகையில், உங்கள் வாழ்க்கைத் துணைக்கே ஏதேனும் அன்பளிப்பு வாங்கித் தந்து அசத்துங்கள்!
உங்கள் தோழியோ, நண்பரோ வலிய வந்து உங்களுக்கு ஒரு உதவி செய்கிறார் என வைத்துக் கொள்வோம். உங்களை தனது காரில் டிராப் செய்கிறார். சாப்பாடு வாங்கித் தருகிறார். உடல்நலமில்லாதபோது, அருகில் இருந்து கவனித்துக் கொள்கிறார்... இப்படி ஏதோ ஒன்று... அதை நன்றியோடு பார்ப்பீர்கள்தானே... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த உதவியை நினைவுகூரவும் பாராட்டவும் செய்வீர்கள் இல்லையா? உங்களுடனேயே இருக்கும் உங்கள் வாழ்க்கைத்துணை காலம் முழுக்க உங்களுக்கு அப்படி எத்தனையோ உதவிகளைச் செய்து கொண்டே இருக்கிறார். ஒரு நாளாவது அதற்கு நன்றி தெரிவித்திருப்பீர்களா?
‘கணவன்-மனைவிக்குள்ள என்ன தேங்க்ஸ் வேண்டியிருக்கு’ என்று அலட்சியமாகக் கேட்காதீர்கள். திருமணத்துக்குப் பிறகு கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகளாக சிலபலவற்றை எழுதப்படாத விதிகளாக நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆனால், கணவனையும் மனைவியையும் இணைப்பது காதல் மட்டும்தானே தவிர, இப்படி எந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை.
மனைவியாக வந்தவர், சமைத்துதானாக வேண்டும், வீட்டு வேலைகளை சுமந்துதானாக வேண்டும் என்றெல்லாம் எந்தச் சட்டமும், சாஸ்திரமும் சொல்லவில்லையே... அதையும் மீறி அவர் செய்கிறார் என்றால், அதை நன்றியோடு ஏற்றுக் கொள்வதுதான் கணவனுக்கு அழகு. மனைவிக்கும் இதே அட்வைஸ்தான். ஆனால், நாம் என்ன செய்கிறோம்... எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்கிறோம்.
ஒரு நாள் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றம் தந்தாலும், துணையின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறோம். நல்ல விஷயங்கள் நிறைய இருந்தாலும், அவற்றைத் தவிர்த்து, நெகட்டிவ் விஷயங்களை கவனிப்பதிலேயே ஆர்வமாக இருக்கிறோம். காதலும் கல்யாணமும் கசக்காமல் இருக்க... வாழ்க்கைத் துணையை விருப்பமான விருந்தாளியாகப் பார்க்கவும், பழகவும், நடத்தவும் முயற்சி செய்து பாருங்கள். உறவுகள் தித்திக்கும்.
(வாழ்வோம்!)
எழுத்து வடிவம்: மனஸ்வினி
(நன்றி குங்குமம் தோழி)