Tuesday, 25 March 2014
Wednesday, 12 March 2014
“எங்கேயும் எப்போதும் நாம் கண்காணிக்கப்படுகிறோம்!”
எந்த நேரமும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது கண்காணிப்பு! நம் கண்ணுக்குத் தெரிபவை சி.சி. டி.வி. கேமராக்கள் மட்டும்தான். ஆனால், நமது அலைபேசி பேச்சுகள் முதல், மின்னஞ்சல் உரையாடல் வரை சகலமும் இடைவிடாமல் கண்காணிக்கப்படுகின்றன. எதுவும் இங்கே அந்தரங்கம் இல்லை; எதுவும் ரகசியம் இல்லை. இந்தக் கண்காணிப்பின் அபாயத்தை, அதற்குப் பின்னுள்ள அரசியலை உரக்கப் பேசுகிறார் எழுத்தாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் மற்றும் வழக்குரைஞருமான ச.பாலமுருகன்.
''கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு, 'கம்யூனிகேஷன் மானிட்டரிங் சிஸ்டம்’ (Communication Monitoring System-CMS) என்ற திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. 400 கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டம், குடிமக்களின் அனைத்துவிதமான தகவல் தொடர்புகளையும் கண்காணிக்கிறது. செல்போன் பேச்சு, எஸ்.எம்.எஸ்., ஃபேக்ஸ், இ-மெயில்... ஆகிய அனைத்தையும் கண்காணித்து, தேவைப்படுவதை எடுத்துக்கொள்ளலாம். வழக்கமாக காவல் துறையினர், ஒரு குறிப்பிட்ட செல்போன் பேச்சை அல்லது இ-மெயிலைக் கண்காணிக்க வேண்டும் என்றால், அந்தச் சேவை வழங்குநரின் உதவியுடன் இடைமறிப்பார்கள். ஆனால், இந்தப் புதிய திட்டத்தின்படி எந்தவித இடையூறும் செய்யாமல் நேரடியாக எடுத்துக்கொள்ளலாம். இது அமலுக்கு வந்து இப்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நொடிகூட, நம் அனைவரின் செல்போன் பேச்சுகளும், இ-மெயில் உரையாடல்களும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. யாருடையது, எப்போது தேவை என்று நினைக்கிறார்களோ, அப்போது எடுத்துக்கொள்வார்கள்.
ஓர் அரசு, தன் சொந்த நாட்டின் குடிமக்களை ஏன் வேவு பார்க்க வேண்டும்? அதிகரித்துவரும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும் இத்தகையக் கண்காணிப்பு அவசியம் என்று அரசு சொல்கிறது. 'தீவிரவாதிகள்தான் எங்கள் இலக்கு’ என்று அரசு வெளித்தோற்றத்தில் சொன்னாலும், அதன் உண்மையான இலக்கு வேறு. அரசியல்-மனித உரிமை இயக்கங்களும் செயற்பாட்டாளர்களும்தான் அவர்களின் உண்மையான இலக்கு. அரசின் கொள்கைகளை எதிர்த்து, மக்கள் விரோதத் திட்டங்களை அம்பலப்படுத்தி, கார்ப்பரேட் பயங்கரவாதத்தைக் கண்டித்து என்னவிதமான போராட்டங்களை நடத்தப்போகிறார்கள் என்று அரசு உளவு பார்க்கிறது. அதை முளையிலேயே கிள்ளி எறிய நினைக்கிறது. இதற்காக பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்காணிக்கிறார்கள். தனி மனித உரிமைகளில் வரம்பு மீறித் தலையிடும் அரசின் இந்தத் திட்டத்தை, எந்தப் பிரதான அரசியல் கட்சியும் பெயரளவுக்குக்கூட கண்டிக்கவில்லை. இந்த மௌனம் மிக மிக ஆபத்தானது.''
''எனில், இத்தகைய கண்காணிப்பால் சாதாரணக் குடிமக்களுக்கு எதுவும் பிரச்னை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?''
''அப்படிச் சொல்ல முடியாது. அரசு தன் சொந்தக் குடிமக்களை வேவு பார்க்கிறது என்றால், மக்கள் அனைவரையும் குற்றம் செய்ய சாத்தியம் உள்ள கிரிமினல்களாகக் கருதுகிறது என்று பொருள். அதனால்தான் வீட்டு உரிமையாளர்கள் அனைவரும், தங்கள் வீட்டில் வசிக்கும் வாடகைதாரர்கள் குறித்த விவரங்களை காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்கிறார்கள். வட இந்தியர்கள், தங்கள் சொந்த ஊரின் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை காவல் நிலையத்தில் பதிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். 'இதில் என்ன தவறு? நாளையே ஒரு குற்றம் நடந்தால், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருக்குமே’ என்று தோன்றலாம். நடைமுறையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கும் தலித்களுக்கும் வாடகைக்கு வீடு கிடைப்பது இன்றும் கடும் சிக்கலானதே. அவர்கள் தங்கள் சொந்த அடையாளங்களை மறைத்துக்கொண்டுதான் குடியிருக்க வேண்டியிருக்கிறது. 'அடையாள அட்டையைக் கொடு’ என்றால், இனி இவர்களுக்கு வீடு கிடைப்பது இன்னும் சிக்கலாகும்.
ஏற்கெனவே ஏழைகளை கிரிமினல்களாகப் பார்க்கும் போக்கு அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் வட இந்தியத் தொழிலாளர்கள், மூன்றாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். சம்பளம் முதல் சிவில் உரிமைகள் வரை சகலத்திலும் அவர்களை 'தனக்கும் கீழானவர்களாகவே’ மனம் கருதுகிறது. இத்தகையக் கண்காணிப்புகளின் மூலமாக, இதுபோன்று விளிம்பில் இருக்கும் மக்கள் மேலும், மேலும் விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள். தங்கள் சொந்த விஷயங்கள் கண்காணிக்கப்படுகின்றன என்பது தெரிந்தால், சாதாரண மக்கள் சிந்தனை அளவிலேயே சுயதணிக்கை செய்துகொள்வார்கள். அதைத்தான் அரசும் விரும்புகிறது. அரசுக்கு எதிராகச் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டு வெறுமனே கேளிக்கைகளில் திளைத்திருப்பது அரசுக்கு ஆதாயம்தானே?''
''ஆதார் அட்டையையும் இந்தப் பட்டியலில் சேர்க்க முடியுமா?''
''நிச்சயம்... ஆதார் அட்டையும் ஒரு கண்காணிப்புக் கருவிதான். ஆதார் அட்டைக்குச் சேகரிக்கப்படும் தகவல்கள் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அரசின் எந்த ஒரு சேவையையும் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசோ, மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதார் அட்டையை இடைவிடாமல் சந்தைப்படுத்துகிறது. காரணம், மற்றவற்றைக் காட்டிலும் ஆதார் என்பது உளவு வேலையை எளிமையாக்குகிறது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவெனில், 'ஆதார்’ அட்டைக்கான மென்பொருள் சேவையை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை, அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ-விடம் நிதியுதவி பெறும் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள். 'மேங்கோ டிபி’ (Mongo DB) என்பது அந்த நிறுவனத்தின் பெயர். இந்தியாவின் பல கோடி மக்களின் தரவுகள் அடங்கிய முக்கியத்துவம் வாய்ந்த பணியை, இத்தகையப் பின்னணி கொண்ட நிறுவனத்திடம் வழங்குவது எவ்வளவு மோசமான செயல்! இதைவிடப் பொறுப்பற்ற ஓர் அரசின் ஆளுகையின் கீழ் நாம் முன் எப்போதும் வாழ்ந்தது இல்லை!''
''ஒருவேளை, பலரும் சொல்வதைப் போல, மோடி பிரதமரானால் இந்தக் கண்காணிப்பு குறையுமா?''
''ராகுல் வருவாரா, மோடி வருவாரா எனும் இந்த மனநிலை, மூன்றாவது கருத்து ஒன்று இருப்பதையே நிராகரிக்கிறது. இதுதான் மெய்யான ஆபத்து. மற்றபடி மோடி பிரதமர் ஆவதால் எல்லாம் மாறிவிடும் என்பது, ஒரு மாயத்தோற்றம். கண்காணிப்பு என்ற அம்சத்தையே எடுத்துக்கொண்டாலும் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. பல வகைகளிலும் மக்களை, அரசியல் செயற்பாட்டாளர்களை வேவு பார்க்கிறது. ஆனால், மோடியின் செல்வாக்குக் குறித்து ஊதிப் பெருக்கப்பட்ட பொய்களும் அரை உண்மைகளும் இணையத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. அதை ஏன் இந்தக் காங்கிரஸ் அரசு தீர்மானகரமான வகையில் தடுத்து நிறுத்தவோ, அம்பலப்படுத்தவோ முயலவில்லை? மாட்டார்கள். ஏனெனில், இவர்களுக்கு இடையில் கட்சிக் கொடிகளின் வண்ணங்களில் மாற்றம் இருக்கலாம்; ஆனால், அவர்களின் எண்ணங்கள் ஒன்றுதான்!''
''இத்தகையக் கண்காணிப்பு தொடர்ந்தால் என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?''
''இது போலீஸ் ஸ்டேட் ஆக மாறும். ஏற்கெனவே அப்படித்தான் மாறிக்கொண்டு இருக்கிறது. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் படிப்படியாக மறுக்கப்பட்டு வருகின்றன. ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தவும், அரங்கக் கூட்டம் நடத்தவுமே நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க வேண்டியுள்ளது. குடிநீர்ப் பிரச்னைக்குப் போராடினாலும், கல்வி உரிமைக்காக மறியல் செய்தாலும் போலீஸ்தான் வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் ஒன்பது காவல் மாவட்டங்களின் போலீஸ் துணை கமிஷனர்களுக்கு 'நிர்வாக நடுவர்’ அதிகாரத்தை அளித்து உத்தரவிட்டுள்ளார். போலீஸ் கையிலேயே இப்போது நீதிபதியின் அதிகாரமும் வந்துவிட்டது. நம் அனைவரின் தலைக்கு மேலும் ஒரு போலீஸ் லத்தி எந்த நேரமும் சுழன்றுகொண்டிருக்கிறது!''
Thanks AV
Sunday, 23 February 2014
சமூகத்தில் தொண்டு நிறுவனங்கள் மோசடிக்காரர்களாக பார்க்கப்படுவதற்கான காரணங்கள் என்ன?
“பாதிக்கப்பட்டவர்கள் உங்களை நோக்கி ஓடிவர வேண்டும். பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் உங்களை கண்டு ஓடிப்போக வேண்டும்”
என்கிற கூற்றின் அடையாளமாகத்தான் தொண்டு நிறுவனங்கள் இருக்க வேண்டும். நம்முடைய தேசம் சாதி, மதம், இனம், மொழி, தொழில், பிறப்பு போன்ற பல்வேறு பாகுபாடுகளால் அல்லல்பட்டு வருகிறது. இந்தியாவில் 200 மில்லியன் மக்கள் தீண்டாமை கொடுமைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களுக்கான சமஉரிமை, அரசியல் பங்கேற்பு என்பதெல்லாம் வெறும் கனவாகவே இருந்து வருகிறது. வறுமை, குழந்தை தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிப்பு, காவல்துறை அத்துமீறல், சில்லரை வணிகத்தில் கூட அந்நிய முதலீடு, இயற்கை வளங்கள் பன்னாட்டு கம்பெனிக்கு விற்கப்படுதல், ஆதிவாசிகள் மீதான கொடூர தாக்குதல்கள் போன்ற பல்வேறு அத்துமீறல்களால் அடித்தட்டு மக்கள் நொறுக்கப்பட்டு வருகின்றனர். கல்வி, உணவு, வீடு, வேலை, மின்சாரம், நீர், மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதி கூட கிடைக்காத மக்களின் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டும்.
இப்படி நொறுக்கப்படுகிற மக்கள் மட்டுமல்லாமல் அடிப்படை தேவைகள் கூட மறுக்கப்படுகிற மக்களுக்கான உரிமைகளும், அதிகாரங்களும், வளங்களும் கிடைக்கப்பட வேண்டும். இதற்காகத்தான் அரசு உள்ளது. ஒரு ஜனநாயக அரசு என்று சொன்னால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க வேண்டும். எந்தவொரு செயல்பாட்டினையும் திறந்தமனதோடு மக்களிற்கு தெரியப்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்போடு செயல்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் நம்முடைய அரசாங்கம் பல்வேறு மீறல்களை கடைபிடித்து வருகிறது. அரசியல்வாதிகள் ஊழல் செய்வது மட்டுமல்லாமல் நம் தேசத்தையும் அந்நிய சந்தைகளுக்கு விற்று வருகின்றனர்.
அதிகார சக்திகளாலும் ஆட்சியாளர்களாலும் பாதிக்கப்படுகிற மக்களின் தோழனாக தொண்டு நிறுவனங்கள் இருக்க வேண்டும். சமூக ஈடுபாடு, நேர்மை, வெளிப்படைத் தன்மை, பதில் சொல்கிற கடமை, நிதி தணிக்கை, இறையாண்மையை மதித்தல், அடித்தட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுதல், திட்டமிடல், மாற்றங்களை ஏற்படுத்துகிற நடவடிக்கைகள் போன்ற பல பண்புகளையும் நடவடிக்கைகளையும் தொண்டு நிறுவனங்களின் அடிப்படை தகுதிகளாக இருக்க வேண்டும்.
இன்றைக்கு தொண்டு நிறுவனங்கள் என்றாலே வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுபவர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள், அபரிமிதமான சொத்துக்கள் உடையவர்கள், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் என்றெல்லாம் பொது சமூகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற மோசடியில் ஈடுபடுகிற பல தொண்டு நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன. மறுப்பதற்கில்லை.
அதே நேரத்தில் தொண்டு நிறுவனங்களின் அபரிமிதமான பணிகளையும் எவரும் இங்கே குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தகவல் பெறும் உரிமைச் சட்டம், சாதிய கொடுமைகளை சர்வதேசிய அளவிற்கு கொண்டு சென்றது, வாழ்வாதாரம், கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்பு, பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு, ராஜீவ்காந்தி வேலை உத்தரவாத திட்டம், இயற்கை வேளாண்மை, மாற்று ஊடகம், சுற்றுச்சூழல், காவல் அத்துமீறலுக்கான எதிர்ப்பு, ராணுவ அத்துமீறலுக்கான போராட்டம், ஆதிவாசி, மீனவர் உரிமைகள், கடல் வளங்கள் பாதுகாப்பு போன்ற பல்வேறு ஆக்கப்பணிகளையும் தொண்டு நிறுவனங்கள் செய்துள்ளன. கையால் மலம் அள்ளும் முறையை ஒழிப்பதற்கும், கௌரவக் கொலைகள் தடுப்பு சம்பந்தமான சட்ட வரையறைகள் உருவாக்கப்படுவதற்கும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த தொண்டு நிறுவனங்களும் பல உள்ளன.
சமூக மாற்றத்திற்கான பணிகளை தொண்டு நிறுவனங்கள் செய்திருந்தும் பொது சமூகத்தில் தொண்டு நிறுவனங்கள் என்றாலே மோசடிக்காரர்களாக பார்க்கப்படுவதற்கான காரணங்கள் என்ன? அந்நிய நாட்டு சக்தி, மாற்று அரசாங்கத்தை நடத்துபவர்கள், மதத்தை பரப்புபவர்கள், தீவரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்றெல்லாம் அரசியல் ரீதியாகவும் தொண்டு நிறுவனங்கள் மீது பலமான தாக்குதல்கள் நடத்துவதற்கு காரணங்கள் என்ன? இவற்றில் எது உண்மை?
சர்வதேசிய சிவில் சமூகத்திடமும், அய்.நா. சபை போன்ற உலக அரங்குகளிலும் நம்முடைய அரசாங்கம் இந்தியாவில் சமத்துவம் உள்ளன. எவ்வித மீறலும் நடைபெறவில்லை என்று பொய்யான அறிக்கைகள் மூலமாக குரல் எழுப்பி வருகின்றன. இதற்கு மாற்றாக தொண்டு நிறுவனங்கள் இந்தியா அரசாங்கம் பொய் சொல்கின்றன, இந்தியாவில் பல்வேறு கொடுமைகளும் அத்துமீறல்களும் நடக்கின்றன. அரசாங்கதினுடைய இயந்திரங்கள் பாகுபாடோடு செயல்படுகின்றன என்றெல்லாம் மாற்று அறிக்கைகளும் எதிர்ப்பு குரல்களையும் எழுப்புகின்றனர். இதனால் அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளான தொண்டு நிறுவனங்களும் இங்கு உள்ளன. இதன் உண்மைகள் பலருக்கு தெரியுமா?
அடிப்படையான உண்மை என்னவென்றால், மிகத் துணிச்சலுடன் நேர்மையுடனும் அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்துக் கொண்டும் பணி செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை சொற்ப அளவே உள்ளன. இதுமட்டுமல்லாமல் மறுவாழ்வு, அடித்தட்டு மக்களின் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி திட்டங்கள் போன்ற சமூக மேம்பாடுகளுக்காக பணி செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்களும் இங்கு உள்ளன. இவர்களையெல்லாம் கடந்து மோசடியில் ஈடுபடுகிற தொண்டு நிறுவனங்கள் தான் அதிகளவு உள்ளன. ஆகவே தான் தொண்டு நிறுவனங்கள் என்றாலோ எல்லோரையும் ஒரே தராசில் வைத்து பார்க்கப்படுகிற அவலம் ஏற்பட்டு விடுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, தொண்டு நிறுவனங்கள் அந்நிய நாட்டின் சக்திகள். மோசடியில் ஈடுபடுபவர்கள், மதமாற்றம் செய்பவர்கள் என்றெல்லாம் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் பரப்புரை செய்து வருகிறார்கள். இங்குள்ள கொடுமைகளை சர்வதேசிய சமூகத்திற்கு தெரியப்படுத்துவதன் மூலம் உலக சந்தைகள் இந்தியாவின் உள்ளே வர தயக்கம் காட்டுகிறார்கள். இதற்கு தொண்டு நிறுவனங்கள் தான் காரணம். ஆகவே மோசடி தொண்டு நிறுவனங்களோடு மக்கள் பணி செய்கிற தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் மிகத் தந்திரமாக இணைத்து வெற்றி கண்டுள்ளது.
போபர்ஸ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், கிரானைட் ஊழல் போன்ற பல ஊழல்களை அரசாங்கம் செய்வது போன்று காப்பக மோசடி, மறுவாழ்வு பணிகளில் மோசடி, கடன் கொடுப்பதில் மோசடி, வீடு கட்டிக் கொடுப்பதில் முறைகேடு, மருத்துவமனை, கல்விக்கூடங்கள் கட்டுவதில் முறைகேடு போன்ற பல மோசடிகளிலும் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்ற சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பல தேசிய கட்சிகள் தங்களுடைய கட்சிகளை வளர்ப்பதற்காக பல தொண்டு நிறுவனங்களை நடத்துகின்றன. பண முதலைகளும் தொண்டு நிறுவனம் என்கிற பெயரில் கருப்பு பணத்தை மறைக்கின்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். பல தொண்டு நிறுவனங்கள் யோகா கலைக் கூடாரங்களாக உருவாக்கப்பட்டு மத பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆனால் இங்கு நடப்பது என்ன? ஊழல் தொண்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா? கட்சிகள், மத நிறுவனங்கள் நடத்துகின்ற தொண்டு நிறுவனங்கள் மீது சட்டம் தன் கடமையை திறம்பட செய்கின்றனவா? இதெல்லாம் இங்கே கடைபிடிக்கப்படுவது இல்லை.
இறுதியாக ஊழல் தொண்டு நிறுவனங்களைப் போன்று ஊழல் அரசாங்கமும் விரட்டப்பட வேண்டும். அதே நேரத்தில் சமூக ஈடுபாடுடன் பணி செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்களை புறக்கணிப்பது ஏற்புடையதல்ல.
Thanks to Tholar Kadir
Tuesday, 14 January 2014
நன்றி கூறும் பெருவிழா தைப்பொங்கல்
தமிழ் மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகச் சிறந்து விளங்குவது தைப்பொங்கற்பண்டிகையாகும். பண்டிகைகள் ஒரு இனத்தின் கலாச்சார மேம்பாட்டைப்புலப்படுத்துவன.அவற்றைப் பேணிக் காப்பன என்றும் கூறலாம். அவற்றில் ஒரு சமுக நோக்குஇருப்பதையும் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
பொங்கற் பண்டிகை உழவர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது. அறுவடைத் திருநாள் என்றும்இதனைக் கூறுவர். உழைப்பின் உயர்வை எடுத்துக் bதிருநாளாகவும் இது விளங்குகிறது. தைமாதம்முதலாந்தேதி பொங்கற் பண்டிகை நாளாகும்.
அறிவு மாத்திரம் மனித வாழ்வை நிறைவு செய்து விடாது. தேவைகள்
யாவும் நிறைவு பெறவேண்டும். தேவைகளை நிறைவேற்ற உழைப்புத் தேவை. அவ்வுழைப்பின் உயர்வைஎடுத்துக்காட்டும் பண்டிகையாகவும் பொங்கற் பண்டிகை அமைகிறது. தேவைகளுள் அடிப்படையான
தேவைகள் – உணவு உடை உறைவிடம் என்பர். அவற்றில் எல்லாம் தலையாயதும் அதிஅத்தியாவசியமுமானதும் உணவுத் தேவையேயாகும்.
அவ்வுணவை உற்பத்தி செய்யும் உழவர்திருநாளாக –உழைப்பின் திருநாளாக – இப்பண்டிகை போற்றப்படுவது மிகப் பொருத்தமேயாகும்.
நிலமும் விதையும் மாடும் மட்டும் இருந்துவிட்டால் விவசாயம் செய்து விட முடியுமா? நீரும்வெயிலும் இன்றியமையாதன பயிர்வளர்சிக்கு. அந்த நீரைத் தருவது மழை. ஆனால் அந்த மழையைத்தருவது யார்? ஆறு குளம் கடல் போன்ற நீர் நிலைகளிலுள்ள நீரை ஆவியாக்கி மேலேளச் செய்துஅங்கிருந்து மழையாகப் பெய்யச் செய்து வளம் தருபவன் சூரியனே. இதனை உணர்ந்த மக்கள் அச்சூரியதேவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நாளாகப் பொங்கலிட்டு வழிபாடு செய்யும் நாளாகஇப்பொங்கற் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள்.
நான்குநாள்திருவிழா
பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.
1.போகி
போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பழையவற்றையும் உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் ‘போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது.
அன்றைய தினம் வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்கள் யாவும் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.
2.தைப்பொங்கல்
தைப்பொங்கல் தை மாதம் தமிழ் முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
நல்ல மழை பெய்யவும் நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை மாதம் தமிழ் முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி சூரியன் உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.
பொங்கல் விழா மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.
3.மாட்டுப்பொங்கல்
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல் ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர் பச்சைகளை வைத்தும் தேங்காய் பூ பழம் நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு காளை எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல் பழம் கொடுப்பார்கள்.
‘நன்றிமறப்பதுநன்றன்று’ என்றும்இ
‘எந்நன்றிகொன்றார்க்கு…உய்வுண்டாம்உய்வில்லைச்
செய்ந்நன்றிகொன்றமகற்கு’
என்றும் கூறும் வள்ளுவர் வாக்கைத் தம்முடைய வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித் தொழுகும் தமிழ் மக்கள் தமது உழவுத் தொழிலுக்கு உதவிபுரிவதோடு உரமும் உதவும் மாடுகளுக்கும் தைப்பொங்கலுக்கு மறுநாள் பொங்கலிட்டு வழிபட்டு மகிழ்வதைக் காண்கின்றோம். சூரியதேவனுக்கு முதலிடமும் மாடுகளுக்கு இரண்டாம் இடமும் கொடுத்து அடுத்துவரும் இருநாட்களில் தைப்பொங்கலும் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்படுவது இப்பண்டிகைகள் நன்றிக்கடனாகவே கொண்டாடப்படுவதை மேலும் வலியுறுத்துகின்றன
4.காணும்பொங்கல்
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார் உறவினர் நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பட்டி மன்றம் வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்.பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்’ என்கிறது மணிமேகலை. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ எனவருமடியும் இங்கு நோக்கத்தக்கது. ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்’ என்கிறார் பாரதியார். இதனாலேயே ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி ஃ அச்சாணி’ என்கிறார் வள்ளுவர்.
வள்ளுவருக்கும் காலத்தால் முந்திய புற நானுற்றுப் புலவர் ஒருவர் அரசனுக்கு அறிவுரைகூறும்போது
‘பகடுபுறந்தருநர்பாரம்ஓம்பிக்
குடிபுறந்தருகுவைஆயின்நின்
அடிபுறந்தருவர்அடங்காதோரே’ என்கின்றார்.
பகடு – எருது. உழுகின்ற பகடுகளைக் கொண்ட உழவர் நலனில் கருத்தூன்று அவர்களது வசதிகளைப் பெருக்கு. நாட்டின் உணவு தன்னிறைவு கண்டால் உனது பகைவர்களும் உனக்கு மண்டியிடுவர் என்கின்றார். உழவுத் தொழிலின் உயர்வை இக் கூற்றுக்கள் எடுத்துரைக்கின்றன.
ஆடிப்பிறப்பு விதைப்புக்கால தொடக்க காலமாகவும் தைப்பொங்கல் அறுவடையின் இறுதிக்காலமாகவும் அமைவதை நாம் அவதானிக்கலாம். அதனால் அறுவடைசெய்து தாமடைந்த பயனை அப்பயனை அடைய உதவிய சூரியனுக்கும் மாடுகளுக்கும் முதலில் நன்றியாகச் செலுத்தி தாம் அனுபவிக்கத் தொடங்கும் பண்பையும் நாம் கண்டு களிக்கலாம்.
சூரியன் கடகக்கோட்டிலிருந்து மகரக் கோட்டுக்குச் செல்ல ஆறு மாதகாலம் எடுக்கின்றதுஇ இதனைத் தெற்கு நோக்கிச் செல்லும் காலமாதலின் தட்சண்ய புண்ணிய காலம் என்பர். பின்னர் மகரக்கோட்டிலி ருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதகாலத்தை உத்தராயண காலம் என்பர். இந்நிகழ்வு பூமி தனது அச்சில் இருந்து இருபத்துமூன்றரைப் பாகை சரிவாகச் சுற்றுவதால் ஏற்படுவதாகும் இவ்விரு காலங்களையும் அதாவது எமது ஒருவருட காலத்தை தேவர்க்குரிய ஒரு நாளாகக் கணிப்பர். அவ்வாறு கணிப்பின் இரவின் இறுதிச் சமமாகிய வைகறைக் காலம் மார்கழி மாதமாகும். அடுத்து வரும் தைமாதம் உத்தராயணப்பகலின் உதய காலமாகும். அதனாலேயே தைமாதப்பிறப்பு வழிபாட்டுற் குரியதென்பது சமயம் கூறும் கருத்தாகும்.
விளைந்த புது நெல்லைக் குத்தியெடுத்த புத்தரிசியைக் கொண்டே பொங்கலிடவேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் இன்று நகரங்களில் வசிப்போர்க்கு இது சாத்தியமான தொன்றல்ல. எனினும் யாவரும் பொங்கற் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். கரும்பு மஞ்சள் இஞ்சி போன்று தாம் பயிரிட்டவற்றையும் பிடுங்கி மண் கழுவித் தூய்மை செய்து கொத்தாக வைத்துப் படையலுடன் வழிபடுவதும் நடைமுறையில் இருந்து வந்தது. இவ்வழக்கம் சிறிது சிறிதாகக் குறைந்து வருவதை நாம் இப்பொழுது அவதானிக்கலாம். எனினும் பழவகைகளையும் கரும்புஇ இஞ்சி போன்றவற்றையும் தேடி வாங்கிப் படைக்கும் வழக்கம் தொடர்ந்து வருகின்றது.
பழவகைகளுடன் நின்றுவிடாது பல்வேறுவகையான பலகாரவகைகளையும் செய்து படைப்பதும் உண்டுமகிழ்வதும் உறவினர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பதும் வருவோருக்கு வழங்கி மகிழ்வதும் இப்பண்டிகையைச் சமூக உணர்வோடு கூடிய ஒரு பண்டிகையாக இனம் காண வழிவகுக்கின்றது.
சமையக் கிரிகைகளிலும் பண்டிகைகளிலும் சுகாதாரம் முக்கிய இடத்தைப்பெறுவதையும் நாம் மறந்துவிடலாகாது. வீடுகளுக்கு வெள்ளையடித்தல் நிலங்களுக்குக் கழுவிப் பூச்சுக்களிடுதல் வளவினைக் கூட்டித் துப்பரவு செய்தல் கூட்டிய குப்பையை எரித்தோ புதைத்தோ விடுதல் தெரு ஒழுங்கை யாகியவற்றையும் கூட்டித் துப்பரவு செய்தல் வளவு வேலிகளைப் புதிதாக அடைத்தல் போன்றன யாவும் வெறும் அழகிற்காக ஆற்றும் பணிகள் அன்று. புறத் தூய்மையின் அவசியத்தைப் பண்டிகையுடன் இணைந்த முன்னோரின் ஆழ்ந்த அறிவுக்கு அவை எடுத்துக் காட்டுக்களெனலாம்.
இப்பண்டிகைகள் பல்வேறு கலைகளையும் பயின்று கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றன. மெழுகுதல் கோலம் போடுதல் தோரணங்கள் செய்தல் நாற்றுதல் போன்றனவும் பலகாரவகைகளைக் கலை நுணுக்கங்களுடன் செய்யும் பயிற்சிகள் போன்றனவும் குறிப்பிடத்தக்கனவாகும்.
பெரியோரைப் போற்றி வாழும் நற்பண்பும் இப் பண்டிகை மூலம் மக்கள் பெறும் சிறந்த பண்பாகும். சூரிய வழிபாட்டுடன் நின்று விடாது அயலிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடாற்றுவர். அதன்பின்னர் தனது மதிப்பிற்குரிய பெரியார்களுடைய இல்லங்களுக்குச் செல்வதும்இ செல்லும்போது சுவையான தின்பண்டங்கள் கொண்டு செல்வதும்இ வணக்கத்துக்குரிய பெரியோர்களை வழிபடுவதும் வழக்கம். தாய் தந்தையர்இ மாமன் மாமியர்இ அண்ணன் அக்கா போன்ற உறவுமுறையினர். தத்தா பாட்டி போன்ற முதியோர் பலராலும் போற்றப்படும் பெரியோர்கள் தமது ஆசிரியர்கள் போன்றோரை வழிபாடுவதும் ஆசிபெறுவதும் இப்பண்டிகை மூலம் நாம் பெறும் நற்பழக்கங்களாகும். இதனாற் பணிவுடையவர்களாக வாழும் பண்பை எம்மையறியாமலே நாம் பெற்றுக் கொள்ளுகின்றோம். எமது பிற்கால சந்ததியாருக்கும் நாம் கொடுக்கும் ஒரு நல்ல பழக்கவழக்கப் பயிற்சியாகவும் இது அமைந்து விடுகிறது.
Subscribe to:
Posts (Atom)