Sunday, 23 February 2014

சமூகத்தில் தொண்டு நிறுவனங்கள் மோசடிக்காரர்களாக பார்க்கப்படுவதற்கான காரணங்கள் என்ன?

“பாதிக்கப்பட்டவர்கள் உங்களை நோக்கி ஓடிவர வேண்டும். பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் உங்களை கண்டு ஓடிப்போக வேண்டும்”

என்கிற கூற்றின் அடையாளமாகத்தான் தொண்டு நிறுவனங்கள் இருக்க வேண்டும். நம்முடைய தேசம் சாதி, மதம், இனம், மொழி, தொழில், பிறப்பு போன்ற பல்வேறு பாகுபாடுகளால் அல்லல்பட்டு வருகிறது. இந்தியாவில் 200 மில்லியன் மக்கள் தீண்டாமை கொடுமைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களுக்கான சமஉரிமை, அரசியல் பங்கேற்பு என்பதெல்லாம் வெறும் கனவாகவே இருந்து வருகிறது. வறுமை, குழந்தை தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிப்பு, காவல்துறை அத்துமீறல், சில்லரை வணிகத்தில் கூட அந்நிய முதலீடு, இயற்கை வளங்கள் பன்னாட்டு கம்பெனிக்கு விற்கப்படுதல், ஆதிவாசிகள் மீதான கொடூர தாக்குதல்கள் போன்ற பல்வேறு அத்துமீறல்களால் அடித்தட்டு மக்கள் நொறுக்கப்பட்டு வருகின்றனர். கல்வி, உணவு, வீடு, வேலை, மின்சாரம், நீர், மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதி கூட கிடைக்காத மக்களின் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டும்.

இப்படி நொறுக்கப்படுகிற மக்கள் மட்டுமல்லாமல் அடிப்படை தேவைகள் கூட மறுக்கப்படுகிற மக்களுக்கான உரிமைகளும், அதிகாரங்களும், வளங்களும் கிடைக்கப்பட வேண்டும். இதற்காகத்தான் அரசு உள்ளது. ஒரு ஜனநாயக அரசு என்று சொன்னால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க வேண்டும். எந்தவொரு செயல்பாட்டினையும் திறந்தமனதோடு மக்களிற்கு தெரியப்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்போடு செயல்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் நம்முடைய அரசாங்கம் பல்வேறு மீறல்களை கடைபிடித்து வருகிறது. அரசியல்வாதிகள் ஊழல் செய்வது மட்டுமல்லாமல் நம் தேசத்தையும் அந்நிய சந்தைகளுக்கு விற்று வருகின்றனர்.
அதிகார சக்திகளாலும் ஆட்சியாளர்களாலும் பாதிக்கப்படுகிற மக்களின் தோழனாக தொண்டு நிறுவனங்கள் இருக்க வேண்டும். சமூக ஈடுபாடு, நேர்மை, வெளிப்படைத் தன்மை, பதில் சொல்கிற கடமை, நிதி தணிக்கை, இறையாண்மையை மதித்தல், அடித்தட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுதல், திட்டமிடல், மாற்றங்களை ஏற்படுத்துகிற நடவடிக்கைகள் போன்ற பல பண்புகளையும் நடவடிக்கைகளையும் தொண்டு நிறுவனங்களின் அடிப்படை தகுதிகளாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு தொண்டு நிறுவனங்கள் என்றாலே வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுபவர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள், அபரிமிதமான சொத்துக்கள் உடையவர்கள், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் என்றெல்லாம் பொது சமூகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற மோசடியில் ஈடுபடுகிற பல தொண்டு நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன. மறுப்பதற்கில்லை.
அதே நேரத்தில் தொண்டு நிறுவனங்களின் அபரிமிதமான பணிகளையும் எவரும் இங்கே குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தகவல் பெறும் உரிமைச் சட்டம், சாதிய கொடுமைகளை சர்வதேசிய அளவிற்கு கொண்டு சென்றது, வாழ்வாதாரம், கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்பு, பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு, ராஜீவ்காந்தி வேலை உத்தரவாத திட்டம், இயற்கை வேளாண்மை, மாற்று ஊடகம், சுற்றுச்சூழல், காவல் அத்துமீறலுக்கான எதிர்ப்பு, ராணுவ அத்துமீறலுக்கான போராட்டம், ஆதிவாசி, மீனவர் உரிமைகள், கடல் வளங்கள் பாதுகாப்பு போன்ற பல்வேறு ஆக்கப்பணிகளையும் தொண்டு நிறுவனங்கள் செய்துள்ளன. கையால் மலம் அள்ளும் முறையை ஒழிப்பதற்கும், கௌரவக் கொலைகள் தடுப்பு சம்பந்தமான சட்ட வரையறைகள் உருவாக்கப்படுவதற்கும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த தொண்டு நிறுவனங்களும் பல உள்ளன.

சமூக மாற்றத்திற்கான பணிகளை தொண்டு நிறுவனங்கள் செய்திருந்தும் பொது சமூகத்தில் தொண்டு நிறுவனங்கள் என்றாலே மோசடிக்காரர்களாக பார்க்கப்படுவதற்கான காரணங்கள் என்ன? அந்நிய நாட்டு சக்தி, மாற்று அரசாங்கத்தை நடத்துபவர்கள், மதத்தை பரப்புபவர்கள், தீவரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்றெல்லாம் அரசியல் ரீதியாகவும் தொண்டு நிறுவனங்கள் மீது பலமான தாக்குதல்கள் நடத்துவதற்கு காரணங்கள் என்ன? இவற்றில் எது உண்மை?

சர்வதேசிய சிவில் சமூகத்திடமும், அய்.நா. சபை போன்ற உலக அரங்குகளிலும் நம்முடைய அரசாங்கம் இந்தியாவில் சமத்துவம் உள்ளன. எவ்வித மீறலும் நடைபெறவில்லை என்று பொய்யான அறிக்கைகள் மூலமாக குரல் எழுப்பி வருகின்றன. இதற்கு மாற்றாக தொண்டு நிறுவனங்கள் இந்தியா அரசாங்கம் பொய் சொல்கின்றன, இந்தியாவில் பல்வேறு கொடுமைகளும் அத்துமீறல்களும் நடக்கின்றன. அரசாங்கதினுடைய இயந்திரங்கள் பாகுபாடோடு செயல்படுகின்றன என்றெல்லாம் மாற்று அறிக்கைகளும் எதிர்ப்பு குரல்களையும் எழுப்புகின்றனர். இதனால் அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளான தொண்டு நிறுவனங்களும் இங்கு உள்ளன. இதன் உண்மைகள் பலருக்கு தெரியுமா?
அடிப்படையான உண்மை என்னவென்றால், மிகத் துணிச்சலுடன் நேர்மையுடனும் அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்துக் கொண்டும் பணி செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை சொற்ப அளவே உள்ளன. இதுமட்டுமல்லாமல் மறுவாழ்வு, அடித்தட்டு மக்களின் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி திட்டங்கள் போன்ற சமூக மேம்பாடுகளுக்காக பணி செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்களும் இங்கு உள்ளன. இவர்களையெல்லாம் கடந்து மோசடியில் ஈடுபடுகிற தொண்டு நிறுவனங்கள் தான் அதிகளவு உள்ளன. ஆகவே தான் தொண்டு நிறுவனங்கள் என்றாலோ எல்லோரையும் ஒரே தராசில் வைத்து பார்க்கப்படுகிற அவலம் ஏற்பட்டு விடுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, தொண்டு நிறுவனங்கள் அந்நிய நாட்டின் சக்திகள். மோசடியில் ஈடுபடுபவர்கள், மதமாற்றம் செய்பவர்கள் என்றெல்லாம் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் பரப்புரை செய்து வருகிறார்கள். இங்குள்ள கொடுமைகளை சர்வதேசிய சமூகத்திற்கு தெரியப்படுத்துவதன் மூலம் உலக சந்தைகள் இந்தியாவின் உள்ளே வர தயக்கம் காட்டுகிறார்கள். இதற்கு தொண்டு நிறுவனங்கள் தான் காரணம். ஆகவே மோசடி தொண்டு நிறுவனங்களோடு மக்கள் பணி செய்கிற தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் மிகத் தந்திரமாக இணைத்து வெற்றி கண்டுள்ளது.

போபர்ஸ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், கிரானைட் ஊழல் போன்ற பல ஊழல்களை அரசாங்கம் செய்வது போன்று காப்பக மோசடி, மறுவாழ்வு பணிகளில் மோசடி, கடன் கொடுப்பதில் மோசடி, வீடு கட்டிக் கொடுப்பதில் முறைகேடு, மருத்துவமனை, கல்விக்கூடங்கள் கட்டுவதில் முறைகேடு போன்ற பல மோசடிகளிலும் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்ற சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பல தேசிய கட்சிகள் தங்களுடைய கட்சிகளை வளர்ப்பதற்காக பல தொண்டு நிறுவனங்களை நடத்துகின்றன. பண முதலைகளும் தொண்டு நிறுவனம் என்கிற பெயரில் கருப்பு பணத்தை மறைக்கின்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். பல தொண்டு நிறுவனங்கள் யோகா கலைக் கூடாரங்களாக உருவாக்கப்பட்டு மத பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் இங்கு நடப்பது என்ன? ஊழல் தொண்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா? கட்சிகள், மத நிறுவனங்கள் நடத்துகின்ற தொண்டு நிறுவனங்கள் மீது சட்டம் தன் கடமையை திறம்பட செய்கின்றனவா? இதெல்லாம் இங்கே கடைபிடிக்கப்படுவது இல்லை.
இறுதியாக ஊழல் தொண்டு நிறுவனங்களைப் போன்று ஊழல் அரசாங்கமும் விரட்டப்பட வேண்டும். அதே நேரத்தில் சமூக ஈடுபாடுடன் பணி செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்களை புறக்கணிப்பது ஏற்புடையதல்ல.

Thanks to Tholar Kadir