Tuesday, 25 March 2014
Wednesday, 12 March 2014
“எங்கேயும் எப்போதும் நாம் கண்காணிக்கப்படுகிறோம்!”
எந்த நேரமும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது கண்காணிப்பு! நம் கண்ணுக்குத் தெரிபவை சி.சி. டி.வி. கேமராக்கள் மட்டும்தான். ஆனால், நமது அலைபேசி பேச்சுகள் முதல், மின்னஞ்சல் உரையாடல் வரை சகலமும் இடைவிடாமல் கண்காணிக்கப்படுகின்றன. எதுவும் இங்கே அந்தரங்கம் இல்லை; எதுவும் ரகசியம் இல்லை. இந்தக் கண்காணிப்பின் அபாயத்தை, அதற்குப் பின்னுள்ள அரசியலை உரக்கப் பேசுகிறார் எழுத்தாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் மற்றும் வழக்குரைஞருமான ச.பாலமுருகன்.
''கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு, 'கம்யூனிகேஷன் மானிட்டரிங் சிஸ்டம்’ (Communication Monitoring System-CMS) என்ற திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. 400 கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டம், குடிமக்களின் அனைத்துவிதமான தகவல் தொடர்புகளையும் கண்காணிக்கிறது. செல்போன் பேச்சு, எஸ்.எம்.எஸ்., ஃபேக்ஸ், இ-மெயில்... ஆகிய அனைத்தையும் கண்காணித்து, தேவைப்படுவதை எடுத்துக்கொள்ளலாம். வழக்கமாக காவல் துறையினர், ஒரு குறிப்பிட்ட செல்போன் பேச்சை அல்லது இ-மெயிலைக் கண்காணிக்க வேண்டும் என்றால், அந்தச் சேவை வழங்குநரின் உதவியுடன் இடைமறிப்பார்கள். ஆனால், இந்தப் புதிய திட்டத்தின்படி எந்தவித இடையூறும் செய்யாமல் நேரடியாக எடுத்துக்கொள்ளலாம். இது அமலுக்கு வந்து இப்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நொடிகூட, நம் அனைவரின் செல்போன் பேச்சுகளும், இ-மெயில் உரையாடல்களும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. யாருடையது, எப்போது தேவை என்று நினைக்கிறார்களோ, அப்போது எடுத்துக்கொள்வார்கள்.
ஓர் அரசு, தன் சொந்த நாட்டின் குடிமக்களை ஏன் வேவு பார்க்க வேண்டும்? அதிகரித்துவரும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும் இத்தகையக் கண்காணிப்பு அவசியம் என்று அரசு சொல்கிறது. 'தீவிரவாதிகள்தான் எங்கள் இலக்கு’ என்று அரசு வெளித்தோற்றத்தில் சொன்னாலும், அதன் உண்மையான இலக்கு வேறு. அரசியல்-மனித உரிமை இயக்கங்களும் செயற்பாட்டாளர்களும்தான் அவர்களின் உண்மையான இலக்கு. அரசின் கொள்கைகளை எதிர்த்து, மக்கள் விரோதத் திட்டங்களை அம்பலப்படுத்தி, கார்ப்பரேட் பயங்கரவாதத்தைக் கண்டித்து என்னவிதமான போராட்டங்களை நடத்தப்போகிறார்கள் என்று அரசு உளவு பார்க்கிறது. அதை முளையிலேயே கிள்ளி எறிய நினைக்கிறது. இதற்காக பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்காணிக்கிறார்கள். தனி மனித உரிமைகளில் வரம்பு மீறித் தலையிடும் அரசின் இந்தத் திட்டத்தை, எந்தப் பிரதான அரசியல் கட்சியும் பெயரளவுக்குக்கூட கண்டிக்கவில்லை. இந்த மௌனம் மிக மிக ஆபத்தானது.''
''எனில், இத்தகைய கண்காணிப்பால் சாதாரணக் குடிமக்களுக்கு எதுவும் பிரச்னை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?''
''அப்படிச் சொல்ல முடியாது. அரசு தன் சொந்தக் குடிமக்களை வேவு பார்க்கிறது என்றால், மக்கள் அனைவரையும் குற்றம் செய்ய சாத்தியம் உள்ள கிரிமினல்களாகக் கருதுகிறது என்று பொருள். அதனால்தான் வீட்டு உரிமையாளர்கள் அனைவரும், தங்கள் வீட்டில் வசிக்கும் வாடகைதாரர்கள் குறித்த விவரங்களை காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்கிறார்கள். வட இந்தியர்கள், தங்கள் சொந்த ஊரின் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை காவல் நிலையத்தில் பதிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். 'இதில் என்ன தவறு? நாளையே ஒரு குற்றம் நடந்தால், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருக்குமே’ என்று தோன்றலாம். நடைமுறையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கும் தலித்களுக்கும் வாடகைக்கு வீடு கிடைப்பது இன்றும் கடும் சிக்கலானதே. அவர்கள் தங்கள் சொந்த அடையாளங்களை மறைத்துக்கொண்டுதான் குடியிருக்க வேண்டியிருக்கிறது. 'அடையாள அட்டையைக் கொடு’ என்றால், இனி இவர்களுக்கு வீடு கிடைப்பது இன்னும் சிக்கலாகும்.
ஏற்கெனவே ஏழைகளை கிரிமினல்களாகப் பார்க்கும் போக்கு அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் வட இந்தியத் தொழிலாளர்கள், மூன்றாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். சம்பளம் முதல் சிவில் உரிமைகள் வரை சகலத்திலும் அவர்களை 'தனக்கும் கீழானவர்களாகவே’ மனம் கருதுகிறது. இத்தகையக் கண்காணிப்புகளின் மூலமாக, இதுபோன்று விளிம்பில் இருக்கும் மக்கள் மேலும், மேலும் விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள். தங்கள் சொந்த விஷயங்கள் கண்காணிக்கப்படுகின்றன என்பது தெரிந்தால், சாதாரண மக்கள் சிந்தனை அளவிலேயே சுயதணிக்கை செய்துகொள்வார்கள். அதைத்தான் அரசும் விரும்புகிறது. அரசுக்கு எதிராகச் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டு வெறுமனே கேளிக்கைகளில் திளைத்திருப்பது அரசுக்கு ஆதாயம்தானே?''
''ஆதார் அட்டையையும் இந்தப் பட்டியலில் சேர்க்க முடியுமா?''
''நிச்சயம்... ஆதார் அட்டையும் ஒரு கண்காணிப்புக் கருவிதான். ஆதார் அட்டைக்குச் சேகரிக்கப்படும் தகவல்கள் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அரசின் எந்த ஒரு சேவையையும் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசோ, மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதார் அட்டையை இடைவிடாமல் சந்தைப்படுத்துகிறது. காரணம், மற்றவற்றைக் காட்டிலும் ஆதார் என்பது உளவு வேலையை எளிமையாக்குகிறது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவெனில், 'ஆதார்’ அட்டைக்கான மென்பொருள் சேவையை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை, அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ-விடம் நிதியுதவி பெறும் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள். 'மேங்கோ டிபி’ (Mongo DB) என்பது அந்த நிறுவனத்தின் பெயர். இந்தியாவின் பல கோடி மக்களின் தரவுகள் அடங்கிய முக்கியத்துவம் வாய்ந்த பணியை, இத்தகையப் பின்னணி கொண்ட நிறுவனத்திடம் வழங்குவது எவ்வளவு மோசமான செயல்! இதைவிடப் பொறுப்பற்ற ஓர் அரசின் ஆளுகையின் கீழ் நாம் முன் எப்போதும் வாழ்ந்தது இல்லை!''
''ஒருவேளை, பலரும் சொல்வதைப் போல, மோடி பிரதமரானால் இந்தக் கண்காணிப்பு குறையுமா?''
''ராகுல் வருவாரா, மோடி வருவாரா எனும் இந்த மனநிலை, மூன்றாவது கருத்து ஒன்று இருப்பதையே நிராகரிக்கிறது. இதுதான் மெய்யான ஆபத்து. மற்றபடி மோடி பிரதமர் ஆவதால் எல்லாம் மாறிவிடும் என்பது, ஒரு மாயத்தோற்றம். கண்காணிப்பு என்ற அம்சத்தையே எடுத்துக்கொண்டாலும் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. பல வகைகளிலும் மக்களை, அரசியல் செயற்பாட்டாளர்களை வேவு பார்க்கிறது. ஆனால், மோடியின் செல்வாக்குக் குறித்து ஊதிப் பெருக்கப்பட்ட பொய்களும் அரை உண்மைகளும் இணையத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. அதை ஏன் இந்தக் காங்கிரஸ் அரசு தீர்மானகரமான வகையில் தடுத்து நிறுத்தவோ, அம்பலப்படுத்தவோ முயலவில்லை? மாட்டார்கள். ஏனெனில், இவர்களுக்கு இடையில் கட்சிக் கொடிகளின் வண்ணங்களில் மாற்றம் இருக்கலாம்; ஆனால், அவர்களின் எண்ணங்கள் ஒன்றுதான்!''
''இத்தகையக் கண்காணிப்பு தொடர்ந்தால் என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?''
''இது போலீஸ் ஸ்டேட் ஆக மாறும். ஏற்கெனவே அப்படித்தான் மாறிக்கொண்டு இருக்கிறது. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் படிப்படியாக மறுக்கப்பட்டு வருகின்றன. ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தவும், அரங்கக் கூட்டம் நடத்தவுமே நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க வேண்டியுள்ளது. குடிநீர்ப் பிரச்னைக்குப் போராடினாலும், கல்வி உரிமைக்காக மறியல் செய்தாலும் போலீஸ்தான் வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் ஒன்பது காவல் மாவட்டங்களின் போலீஸ் துணை கமிஷனர்களுக்கு 'நிர்வாக நடுவர்’ அதிகாரத்தை அளித்து உத்தரவிட்டுள்ளார். போலீஸ் கையிலேயே இப்போது நீதிபதியின் அதிகாரமும் வந்துவிட்டது. நம் அனைவரின் தலைக்கு மேலும் ஒரு போலீஸ் லத்தி எந்த நேரமும் சுழன்றுகொண்டிருக்கிறது!''
Thanks AV
Subscribe to:
Posts (Atom)