Thanks to Keetru
கூடங்குளத்தில் அணு உலைகளை அகற்ற வலியுறுத்தி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடி மாவட்ட மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டம் ஏதோ கடந்த சில மாதங்களாக நடந்து வரும் போராட்டம் அல்ல. இந்திய அரசு எப்பொழுது கூடங்குளத்தில் அணுமின் உலைகளை கட்டுவதற்கு முடிவு செய்ததோ, அன்றிலிருந்தே மக்கள் போராட்டம் தொடங்கிவிட்டது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 10 இலட்சம் கையெழுத்துகளை மாணவர்களும், பொதுமக்களும் திரட்டினார்கள். இதை 1989 ஆம் அண்டு இந்தியா வர இருந்த அன்றைய சோவியத் கூட்டமைப்பின் அதிபரான மிக்கைல் கோர்பசேவிடம் கையளிக்க முடிவு செய்து இருந்தனர். ஆனால் அவரை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை. 1989 மே 1ஆம் நாள் மீனவர்களும், பொதுமக்களும் கன்னியாகுமரியில் அணு உலைக்கு எதிராக அமைதியான முறையில் நடத்திய பேரணியில் காவல்துறை கண்முடித்தனமாகச் சுட்டதில் இக்னாதிசு என்பவர் உயிரிழந்தார். கூடங்குளம் அணு உலையின் ஒப்பந்ததாரரான சோவியத் கூட்டமைப்பு 1991 ஆம் ஆண்டு சிதறுண்டு பல நாடுகளாகப் பிரிந்ததால், 1991 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரை மக்கள் போரட்டம் ஓய்ந்து போனது. 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு அணு உலைக் காட்டுமானப் பணி மெல்லத் தொடங்கியது போலவே, மக்கள் போராட்டமும் மெல்லத் தொடங்கி இன்று மூன்று மாவட்ட மக்களில் பெரும்பான்மையானோர் போராட்ட களத்தில் உள்ளார்கள்.
சாதி, மதத்தின் பெயரால் இப்போரட்டத்தைச் சீர்குலைக்க இந்திய அரசு முயன்று பயனளிக்காமல் போனதால், வெளிநாட்டில் இருந்து இவர்களுக்குப் பணம் வருகின்றது என்ற பொய்யைப் பரப்பி, போராடும் மக்களை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தவும், தமிழக மக்களிடையே குழப்பத்தை உருவாக்கவும் தொடர்ந்து முயல்கின்றது. அரசின் கூற்றின்படி அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதென்றால், அந்நாடுகளின் பெயர்களை வெளியிட்டு, அந்நாட்டு தூதரக அதிகாரியை அழைத்து “இந்திய நாட்டு வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவித்ததற்காகக் கடும் கண்டனம் தெரிவிக்க முடியுமா? பின்னர் அந்நாடுகள் அளிக்கும் பதில் திருப்திகரமானதாக இல்லாதபட்சத்தில் அந்நாடுகளுடனான (அது வல்லரசாக இருந்தாலும்) தூதரக உறவுகளையும், பொருளாதார ஒப்பந்தங்களையும் துண்டிக்க இந்தியா ஆயத்தமா?"
ஏனெனில் அரசின் கூற்றின்படி அணு ஆற்றல் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுகின்றது. அப்படியிருக்க இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் நாடுகள் பற்றி இந்திய அரசு ஏன் இன்னும் கள்ள அமைதி காக்கின்றது? எதற்காக இந்தியா தயங்குகின்றது? மற்றுமொரு ஆயுதமாகத் தான் "தமிழகத்தின் வளர்ச்சிக்கு கூடங்குளம் அணு உலை தேவை", "கூடங்குளம் வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும்" என்பது போன்ற பரப்புரைகளைச் செய்து வருகின்றது இந்திய அரசு. அரசு கூறும் "தமிழக வளர்ச்சி", "எல்லா வீடுகளுக்கும் தடையற்ற மின்சாரம்" என்கிற பரப்புரைகளின் உண்மைத் தன்மையைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.
தமிழகத்தின் வளர்ச்சிக்குக் கூடங்குளம் அணு உலை தேவை என்பது முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயலும் செயல். நெய்வேலி அனல் மின் நிலைய உற்பத்தியில் வெறும் 30 விழுக்காடு மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகின்றது. மீதமுள்ள 70 விழுக்காடு மின்சாரம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றது. நெய்வேலியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பதை நிறுத்தினாலே தமிழகம் மின் உற்பத்தியில் உபரி மாநிலமாகத் திகழும். இதுமட்டுமன்றி மின்சாரத்தைக் கொண்டு செல்லுதல், வழங்கலில் உள்ள (T&D Loss) தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக மின்சார இழப்பு ஏற்படுகின்றது. தமிழகத்தில் இவ்விழப்பு 18%. 2010 ஆம் ஆண்டு தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி 10,214 மெகா வாட், இதில் 1,830 மெகா வாட் வீணாகியது. இந்த இழப்பீட்டை 10 விழுக்காட்டிற்கும் கீழாகக் குறைப்பதன் மூலம் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தில் தமிழகத்திற்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்படும் 405 மெகா வாட் மின்சாரத்தை விட இரு மடங்கு மின்சாரம் நமக்குக் கிடைக்கும். அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மின்சாரத்தைத் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்தது 1,000 மெகாவாட் மின்சாரத்தை நாம் சேமிக்க முடியும்.
தமிழகத்தின் மின் தேவை ஆண்டிற்கு 9% என்ற அளவில் அதிகரிக்கின்றது. இந்த மின்சாரத்தை இந்திய அரசு காற்றாலை, உயிர்ம எரிபொருள், கதிரவன் ஒளி போன்ற மரபுசாரா மின் ஆற்றலில் பெற்றுக்கொள்ளலாம். சரி, தமிழகம் தன்னிறைவடைந்த மாநிலமாக மாறிவிட்டது, இந்தியாவின் மின் பற்றாக்குறையை யார் தீர்ப்பது என்ற கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும். இந்தியாவின் மின் பற்றாக்குறை 10 விழுக்காடு. ஆனால் மின்சாரத்தைக் கொண்டு செல்லுதல், வழங்கலில் ஏற்படும் மின் இழப்பீட்டு 40%. அதாவது 1,80,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்தால் 72,000 மெகா வாட் மின்சாரம் தொழிற்நுட்பக் குறைபாட்டினால் வீணாகின்றது (இந்தியாவிற்கு அணு தொழில்நுட்பத்தை வழங்கும் நாடுகளில் இது 10 விழுக்காட்டிற்கும் கீழ்). இது தமிழகம், மகாராசுட்டிரா, குசராத், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவில் உற்பத்தியாகும் ஒட்டு மொத்த மின்சாரத்திற்குச் சமம். இந்த இழப்பீட்டை 10 விழுக்காட்டிற்குக் கீழாகக் குறைத்தல் மூலம் எந்தவித புதிய மின்திட்டமும் தொடங்காமல் இன்னும் ஐந்து ஆண்டுகள் இந்தியா மின் உற்பத்தியில் தன்னிறைவான நாடாகத் திகழும் (இந்தியாவின் ஆண்டு மின்தேவை அதிகரிப்பு 3.6 விழுக்காடு). இந்த இழப்பீட்டை சரி செய்யாமல் புதிய மின் திட்டங்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது "ஓட்டை வாளியில் நீரைச் சேமிப்பது" போன்றது. எவ்வளவு முயன்றாலும் இந்தியாவினால் மின்பற்றாக்குறையை சரிபடுத்தவே முடியாது.
இந்தியாவின் வளர்ச்சிக்கும், மரபுசாரா எரி ஆற்றல்களான காற்றாலையும், கதிரவன் ஒளியும், உயிர்ம எரிபொருளுமே சரியான வழியாகும். ஆண்டின் 365 நாட்களும் கதிரொளி கிடைக்கும் வெப்ப மண்டல நாடான இந்தியா கதிரொளியிலிருந்து எடுக்கும் மின்சாரத்தின் அளவு 1 விழுக்காட்டிற்கும் குறைவு. அதுமட்டுமின்றி சதுர மீட்டரில் ஒரு மணிநேரத்திற்கு 6.6 கிலோ வாட் மின்சாரத்தை கதிரவன் ஒளியிலிருந்து பெறும் திறன் கொண்ட தார்ப் பாலைவனத்தையும், குசராத்தின் வடக்குப் பகுதியையும் (வரைபடம் 1) கொண்ட இந்தியா, தார்ப் பாலைவனத்தில் 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கதிரவன் ஒளி மின் பண்ணையை வைப்பதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 3,00,000 மெகாவாட். தார்ப் பாலைவனத்தையும், குசராத்தின் வடக்குப் பகுதியில் கிடைக்கும் கதிரவன் ஒளியையும் முழுமையாகப் பயன்படுத்தி மின்சாரம் எடுத்தால், இந்தியா மின்சாரத் தன்னிறைவு அடைவது மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கு மின்சாரத்தை விற்கவும் இயலும்.
இந்திய அரசின் காற்றாலை மின்னுற்பத்திக் கூட்டமைப்பின் கணிப்பீட்டின்படி இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 65,000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யமுடியும் (வரைபடம் 2) – இந்தியாவில் காற்றாலை மின்னுற்பத்திகான வாய்ப்புகளை காட்டுகின்றது ( http://www.inwea.org ). ஆனால் இந்தியா 14,500 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கின்றது (இதில் 35 விழுக்காடு தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது), இதுமட்டுமின்றி உயிர்ம எரிபொருளில் இருந்து 21,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும், மேலும் மின்சாரத்தைத் திறமையாகப் பயன்படுத்துதன் மூலம் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.
இதை எல்லாம் விடுத்து பேரழிவு அணு உலைகளை இந்தியா நிறுவத் துடிப்பது மக்களுக்காகவா? அல்லது இந்திய, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்காகவா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் இந்த அணு மின் உலைகளுக்கான யுரேனிய இறக்குமதிக்கான 1,2,3 சட்டத்திற்கு இடதுசாரிகள் ஆதரவளிக்க மறுத்தபொழுது பல இலட்சங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கைமாறி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிலைநாட்டப்பட்டு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது கண்கூடு. இந்தியாவில் கட்டப்படும் புதிய அணு உலைகளுக்கான ஒப்பந்தத் தொகையாக 1,40,000 கோடி ரூபாயை பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசு கொடுக்கின்றது. மேலும் அணு ஆற்றல் துறைக்கு இந்திய அரசு ஆண்டிற்கு பல இலட்சம் கோடிகளை மானியமாகக் கொடுத்து வருகின்றது. எடுத்துக்காட்டாக கூடங்குளம் அணு உலையைக் கட்டுவதற்கு 7,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என திட்டமிடப்பட்டு 12,000 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக முதலில் கூறப்பட்டது, இதுவே பின்னர் 13,000, 14,000 கோடி ரூபாய் என அதிகரித்துக் கொண்டே உள்ளது. இறுதியாக 20,000 கோடி ரூபாய் வரை இது செல்லக்கூடும். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அணு உலையை மூடுவதற்கு சற்றேறக்குறைய 40,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கொண்டால், இந்த அணுவுலைக்கு மட்டுமே 60,000 கோடி ரூபாய் செலவாகின்றது. இது மட்டுமின்றி அணு உலை செயற்படுவதற்காக ஆகும் செலவு, யுரேனிய எரிபொருளுக்காகும் செலவு, அணு உலைக் கழிவுகளைப் பராமரிக்க ஆகும் செலவு என எல்லாம் இருக்கின்றன. இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் அணு மின்சாரம் மலிவானதுதானா?
மேலும் கூடங்குளத்தில் அணு உலை கட்டக்கூடாது என்று முதலில் இரசியா கூறியுள்ளது. இதற்கான காரணம் அந்த நிலத்தின் கீழே வெற்றுக் குழிகள் உள்ளன, இந்த நிலத்தின் பாறை உறுதியானது அல்ல, நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. கடற்கரையை ஒட்டிக் கட்டப்பட்டுள்ளதால் சுனாமியால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இதை எல்லாம் விட இது போன்ற இயற்கைப் பேரழிவுகளால் மட்டுமல்ல போபாலில் ஏற்பட்டது போல மனிதத் தவறுகளினாலும் அணு உலையில் நேர்ச்சி (விபத்து) ஏற்படக்கூடும். எல்லாவற்றிலும் தான் ஆபத்து உள்ளது எனச் சிலர் கூறுகின்றார்கள், அவர்களுக்கு அணு உலையினால் ஏற்படும் பேரழிவுகள் பற்றித் தெரியவில்லை. அண்மையில் ஏற்பட்ட புகுசிமா விபத்தின் காரணமாக ஏற்பட்டக் கதிர்வீச்சு உலகம் முழுவதும் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.(1) மேலும் அணு உலை விபத்து ஏற்படும்பொழுது பல்லாயிரக்கணக்கில் மக்கள் இறப்பது மட்டுமல்லாமல், இந்தத் தாக்கம் தலைமுறை தலைமுறையாக மக்களை இலட்சக்கணக்கில் கொல்லும். இதுமட்டுமின்றி அணு உலைகள் செயற்படும் பொழுது தொடர்ச்சியாக உமிழும் கதிர்வீச்சினால் அணு உலையைச் சுற்றி வாழும் மக்களுக்குப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும், இதனால் அவர்கள் இறக்கக்கூடும், அண்மையில் கல்பாக்கம் அணு உலைக்கு அருகில் குடியிருக்கும் சிலர் இறந்ததற்கு அணு உலையினால் வெளியிடப்பட்ட கதிர்வீச்சே காரணம் என அணு ஆற்றல் துறை ஒப்புக்கொண்டுள்ளது (2). அதுமட்டுமின்றி அணுக் கழிவுகள் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளியிடும்.
இறுதியாக வளர்ச்சி பற்றிய ஒரு புள்ளிவிவரம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 5 இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் காணாமல் போயுள்ளது, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10 விழுக்காடு விவசாய நிலம் காணாமல் போயுள்ளது(3). விவசாயத்திகு மின்சாரம் சரியாக வழங்கப்படாததும் இதற்கு ஒரு காரணமாகும். சிறு, குறு தொழிலகங்களுக்கு பகல் வேலை நேரத்தில் வெறும் மூன்றுமணி நேரமே மின்சாரம் கிடைக்கின்றது. இதனால் பல தொழிலகங்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால் இதே நேரத்தில் தமிழகத்தில் ஆண்டிற்கு 9.21% அன்னிய மூலதனம் உள்ளே வந்து கொண்டிருக்கின்றது(4), அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அவர்களுக்கு 24 மணிநேரத் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகின்றது. கூடங்குளம் போன்ற திட்டங்களினால் கிடைக்கும் 405 மெகாவாட் மின்சாரம் கூட அவர்களுக்குத் தானே தவிர, தமிழக விவசாயிகளுக்கோ, சிறு தொழிலகங்களுக்கோ, வீடுகளுக்கோ அல்ல.
கூடங்குளம் மக்கள் இந்திய அரசுக்கு எதிராக மட்டுமல்ல பன்னாட்டு நிறுவனங்கள், உலக ஏகாதிபத்தியங்கள் என பல மறைமுக எதிரிகளை எதிர்கொண்டு நம்முடைய இயற்கை வளங்களையும், உரிமைகளையும் பாதுகாக்கப் போராடி வருகின்றார்கள். இந்த நிலையில் முதன்மையாக நாம் செய்ய வேண்டியது, அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களின் கைகளை வலுப்படுத்துவதும், அவர்களுக்கு ஆதரவான குரல்களைத் தொடர்ந்து வெளிபடுத்துவதும் தான்; அத்தோடு மின்னுற்பத்திக்கான ஒரே வழி பேரழிவை ஏற்படுத்தும் அணு உலை தான் என்ற மாயையலிருந்து இந்தியாவையும், தமிழ்நாட்டையும் மீட்டு காற்றாலை, கதிரவன் ஒளி போன்ற அளவில்லாத மரபு சாரா எரிஆற்றல்களின் மூலம் மின்னுற்பத்தி செய்ய நெருக்குதலுக்கு உள்ளாக்குவதும் தான்.
மக்கள் போராட்டம் ஓங்குக !!!
No comments:
Post a Comment