Monday 26 March 2012

அழகாய் பொலிவாய் இருக்க மூலிகையும், சில முனைப்பும்!




..அரி
வை கூந்தலின் நறியவும் உளவோ, நீ அறியும் பூவே-என்று இறையனார், குறுந்தொகையில் தன் காதலி கூந்தல் மணத்திற்கும் மேலான மணம் உள்ள மலரும் உண்டோ? என்று பாடும் போது லா ஒரல் ஷாம்புவோ, பியூட்டி பார்லரோ சத்தியமாய் இல்லை. அழகைப் பராமரித்ததும், அழகால் மெருகூட்டிக் கொண்டதற்கும் இயேசு பிறப்பதற்கு 3500 ஆண்டு முன்னதாகவே வரலாற்றுச் சான்றுகள் இருந்துள்ளன. ‘அரிதாரம் பூசிக் கொள்ள ஆசைகதகளியின் “சுட்டிஅலங்காரத்தில் மட்டுமல்ல; எகிப்து ரோமாபுரி ராணிகளுக்கும்  நம்மூர் கொற்றவை மகன் முருகனுக்கும் உண்டு என்கிறது இலக்கியங்கள். அரிதாரத்தில் ஆரம்பித்த அந்த அழகுசாதனம் இன்று 
நானோதுகள்கள்(NANO PARTICLES) வைத்து மிக நுட்பமாய் செய்யப்படும் அழகு சாதனங்களால் இன்றைய அழகு வியாபாரத்தின் அளவு தெரியுமா? கிட்டத்தட்ட 170 பில்லியன் டாலராம்! (1 பில்லியன் என்பது 4500 கோடி..).

பாத்ரூமிலும் கண்ணாடி முன்னும் நின்று செலவழிக்கும் காசு, நம்ம ஊர் அரசியல்வாதிகள், செல்போனில் சுட்டது  அணு வியாபரத்தில் அழிப்பதை விட அதிகம்.
அன்றாட வாழ்வின் மன அழுத்தம், விரட்டும் பணப்பிரச்சினைகள், எதிலும் பாராட்டின்றி இயந்திரமாய்ச் செய்யும் வேலையில் வரும் களைப்பு என, இயல்பான நம் அழகைக் குலைக்கும் அழுத்தங்கள் இன்றைய துரித வாழ்வில் அதிகம். “யாயும் ஞாயும் யார் ஆகியரோ..செம்புலப் பெய நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”- என்ற காதல் வரிகள்,  நிஜத்தில் வசப்பட காற்றில் அலையும் கார் கூந்தல், வறளாமல் மின்னும் தோல் வனப்பு, பாலிஷ் போட்ட மார்பிள் கன்னம், பரவசமூட்டி, பார்த்த வேலையை பாதியில் போட்டுவிட்டு ஓடி வர வைக்கும் ‘டியான்நறுமணம், இவை எல்லாம் பலருக்கும் இப்போது ரொம்ப அவசியம்.

பலரும் நினைப்பது போல அழகு அலங்கரிக்கப்பட அதிகம் தேவை பணமும், பந்தாவும் நிறைய நேரமும் அல்ல. அழகாய் பொலிவாய் இருக்க வேண்டும் என்ற மனமும், நிறைய அக்கறையும் மட்டுமே! வசீகரம் வசப்பட மனம் மகிழ்வாய் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும். மலச்சிக்கலும், பணச்சிக்கலுமிருப்பின் அழகின் சிரிப்பு அவ்வளவாய் நன்றாயிருக்காது. உடலும் மனமும் ஆரோக்கியமாய் வைத்துக் கொண்டு அழகை மெருகூட்ட ஆரம்பிக்கலாம்.
இயல்பில் வரண்ட தோல் உடையோர் அடிக்கடி சோப்புகளை வைத்து முகம் கழுவக் கூடாது. உடம்புக்கு அதிகம் ஆகாத பால் வறண்ட தோல் உடையோர் முக சருமத்தின் உலர்ந்த, இறந்த சருமத்தை நீக்கி பொலிவாக்கப் பயன்படும்.வசதியுள்ளோர் தினம் இரண்டுமுறை இதனைச் செய்யலாம்( நல்லெண்ணெய் வைத்து வாய் கொப்பளிக்கச் செய்து வியாபாரம் பெருக்கியதைப் போல் பால் கம்பெனிக்கார்ர்கள் அமலாபாலை முன்னிருத்தி முகம் கழுவ சிறப்பு பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்தலாம்!)எண்ணெய் பிசுக்கு அதிகமுள்ளோர் தினசரி 3-4 முறை முகம் கழுவுவது; அதற்கு மெல்லிய காரத்தன்மையுள்ள சோப்பை மட்டும் பயன்படுத்துவது நல்லது.

கழுவிய முகத்தை அலங்கரிக்க face pack, concealer, foundation, toner, sunscreener, skin nourisher, fairness cream என, பிளாட் வாங்கி வீடு கட்டுவது போல், வாங்க வேண்டிய பல அழகு சாதனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் தேவையில்லை. முடிந்தவரை வாசமாய் வரும் அந்த வேதிப்பூச்சுக்களை, விளம்பரம் பார்த்து, மயங்கி பூசி உங்களையும் உங்களை அருகில் நெருங்கும் உங்களவரையும் நோயாளியாக்கிவிடாதீர்கள்.(காணாக் குறைக்கு பல காஸ்மெடிக்ஸுக்கு அனிமல் டெஸ்டிங் கிடையாது-வீட்டில் அதை ஆரம்பிக்க வேண்டாம்!). உங்கள் தோலின் அடிப்படை குணம், உடலமைப்பு, அலர்ஜி விஷயங்களை முறையாகப் படித்த, அழகியல் நிபுணர்களையோ/மருத்துவரையோ அணுகி ஆலோசித்து, காஸ்மெடிக் ஷாப்பிங் போகவும்.

No comments:

Post a Comment