Tuesday, 15 May 2012

அம்மாவுக்கான உணவு“அம்மா!” எனும் மொழி தரும் அங்கீகாரமும் அன்பும் உலகின் எந்த சொல்லுக்கும் இல்லை. அன்னை காட்டும் அன்பும், கூடுதல் அக்கறையும் தர உலகில் வேறு எந்த உறவும் கிடையாது. இணையான உள்ளமும் கிடையாது.  “பிறந்த குழந்தையை பிரசவித்த மறுகணம் தாயின் வயிற்றில் வைத்தால், அது தாயின் மார்பைப் பற்றி தன் முதல் சீம்பாலினை உறிஞ்சத் துவங்கும். யாரும் அதனை வழிகாட்ட வேண்டியதில்லை என்ற செய்தி தரும் கவித்துவமும், வியப்பும் ஏராளம். அந்த கணம் முதல், “ நீ சாப்பிடியாப்பா? சாகப்போற போற வயசில் எனக்கெதுக்குப்பா இதெல்லாம்?.. நீ முதல்ல சாப்பிடு”-என்று வயோதிகத்தில் கேட்கும் கரிசனமும் தான் அன்னை. கடைசி மூச்சு வரை உணவூட்டும் அந்த அன்னைக்கு என்ன உணவூட்டலாம்?

தாய் எனும் சொல்லுக்கு தயாரான அந்த பிரசவித்த கணம் முதல் கூடுதல் ஊட்ட உணவு முக்கியம். தாய்ப்பாலின் மகத்துவம் பரவலாக ஓரளவு தெரிந்ததில்,  “தாய்ப்பால் கொடு கொடு! என ஊக்குவிக்கும் கணவன் அதைச் சீராக சுரக்கும் தாய்க்கு கொடுக்கும் அக்கறை சில நேரத்தில் கொஞ்சம் குறைவு தான். ஊட்டமான உணவும் உள்ளமும் மட்டும்தான், பாலை சுரப்பித்திட, அந்த அன்னை ஊக்கமாய் சோர்வின்றி இருந்திட உதவும். “பச்சை உடம்புக்காரிஎன நம் பாரம்பரியம் அந்த புது அன்னையை பராமரித்த விதம் அலாதியானது; அறிவியல் மெச்சக்கூடியது. முதல் ஓரிரு மாதங்கள் பத்தியமாய்ச் சாப்பிடச் சொன்னது, தாய்ப்பாலின் குணத்தைக் கூட்ட மட்டுமல்ல, அதை சுரக்கும் அன்னை ஊட்டமாய் இருந்திடவும் தான். அதிக எண்ணெய் ப்லகாரம், முந்தைய நாள் சமைத்த உணவு, சீரணிக்க சிரமப்படும் பலகாரங்களைத் தவிர்ப்பது முக்கியம்.
0-6 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 550 க்லோரியும்; 6-12 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 400க்லோரியும் கூடுதலாக தேவை என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.  ‘அட! ஏற்கனவே, மகவை சுமக்கும் போது 10கிலோ வெயிட் போட்டாச்சு..இன்னும் சாப்பிடவா?.. நான் வெயிட் குறைக்க டயட் செய்யலாமா? என கேட்கும் புது அம்மாக்கள் இன்று அதிகம். புது அன்னை டயட்டிங்கில் போகவே கூடாது. தாய்ப்பால் கொடுக்கும் பருவத்தில், பல மகளிர் இயல்பாக எடை குறைவது நடக்கும். பிரசவித்த வயிறு தொளதொளவென தொப்பையாகத் தொங்கி தங்கிவிடாமலிருக்க, நல்ல யோகாசனப்பயிற்சி, பட்டி கட்டுதல் எனும் பழக்கம் நிச்சயம் உதவிடும். அருகாமை சித்தமருத்துவரை அணுகி அதற்கென ஆலோசியுங்கள். 6-7 மாசம் விட்டுவிட்டு, அப்புறமாய்ச் சிற்றிடை கனவில் சிலாகிக்க முடியாது..(எப்போதுமே சிசேரியன் செய்யாத ஆண்களின் தொப்பை வேறு விஷயம்!)
கால்சியமும், விட்டமின் சத்தும், இரும்புச் சத்தும், புரதமும் கொஞ்சம் கொழுப்புச் சத்தும் தாயப்பால் கொடுக்கும் காலத்தில் கூடுதலாய் அன்னைக்கு அவசியம் தேவை. காலையும் மாலையும் பால், காலைஉணவுடன் அத்திப்பழம்-2; கொஞ்சம் சத்துமாவு கஞ்சி சாப்பிடுவது அவசியம். பஜ்ரா(கம்பு) ரொட்டியுடன் முருங்கைக்கீரை பொறியல் இரும்ப்ச்சத்து குறைவான அம்மாவுக்கு அத்தியும், கம்பும் அவசியம் வேண்டும்.  “ஸ்கூல் பிள்ளைங்களையே கம்பை காட்டக் கூடாது. அடிக்க கூடாதுங்கிறோம்..பிள்ளை தாச்சிக்கு போய் கம்பு அது இதுன்னு மிரட்றீங்களே!னு அடிக்க வர வேண்டாம். இது தானிய வகை கம்புங்க..அதிக இரும்புச் சத்துள்ள இந்த கம்பை வாரம் ஒரிரு நாள் சோறாகவோ அடையாகவோ செய்து சாப்பிட மலசிக்கல் மூலம் தராமல் இரும்புச்சத்து ஏறும். பல அன்னைக்கு பிரசவம் போது மூலனோய் வந்து இரத்தக் கசிவு இருப்பது உண்டு. அத்தியும், முருங்கையும் மலத்தினை இளக்கி மூலத்தையும் போக்கும். இன்னும் பால்சுரப்பைக் கூட்டும் சுறாமீன் புட்டு, பாலளவைக் கூட்டும் சம்பா கோதுமை, கால்சியம் சத்து நிறைந்த ராகி, விட்டமின் சத்து நிறந்த பழங்களும், காய்கறிகளும் நிரைவாக சாப்பிடுவது மிக மிக அவசியம். சதாவரி கிழங்கில் செய்த லேகியம் அன்னைக்கு சித்த மருத்துவம் தந்த வரப்பிரசாதம். உலகளவில் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த மூலிகைgalactogogue- இன் முக்கியத்துவம் புரிந்து புது அன்னை ஒவ்வொருவரும் முதல் 8 மாதம் சாப்பிடுவது அவர்களையும், அவரது செல்ல மகவையும் போற்றிப் பாதுக்கும். தாய்ப்பால் தரும் அன்னைக்கு தண்ணீர் ரொம்ப முக்கியமான உணவு. நீர் கூடுதலாக 1½ லிட்டர் குடிக்க வேண்டும்.
பிரசவித்த அன்னைக்கு, மகிழ்வின் உச்சத்திலுள்ள கணவனும், மாமியாரும், அன்னையும் இயல்பாய் கூடுதல் அக்கறை காட்டுவது இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் இயல்பு. அவள்தம் மகப்பேற்றில் அங்கீகரிக்கப்படுபவர் அவர்களுமல்லவா? அதனால் இயல்பாகவே கரிசனம் கூடுதலாய்த்தான் இருக்கும். ஆனால் அதன்பின் என்னைப்பொறுத்த மட்டில், மெனோபாஸ் சமயத்தில் நிற்கும் அம்மாதான்   அநேகமாக அதிகம் நிராகரிக்கப்படும் அம்மா. கொஞ்சம்  ‘பிடித்தம் குறைந்து போன கணவன், தனக்குள் நிகழும் எரிந்து விழ வைக்கும் ஹார்மோன் மாற்றம், டீன் துள்ளலில் எதற்கெடுத்தாலும் ‘நண்பேண்டா! என வீட்டை மறந்து திரியும் பிள்ளைகள், இவற்றுடன், பஸ் ரயிலேறி அலுவலகத்திற்கு வந்தால் புன்னகைக்க கூட மறுக்கும் சக ஊழியர்கள் என மெனோபாஸ் அன்னைக்கு சவால்களும்  சங்கடங்களும் அதிகம்
40க்கு மேல் வரும் இந்த நாட்களில் அந்த அன்னைக்கு ஈஸ்ட்ரோஜன் சத்து நிறைந்த உளுந்து, சோயா, ஓட்ஸ் உணவும் கூடுதல் கால்சியம் உள்ள ராகி, முருங்கை, முட்டை, பால், பச்சைப்பட்டாணி, அவரை, மீன், விட்டமின் ப் நிறைந்த அவரை, விட்டமின் சி நிறைந்த பெரிய நெல்லி அவசியம் வேண்டும். இப்போது அதிக அவசியம் என அறியப்படும் ஒமேகா 3 சத்து நிறைந்த ஃப்லேக்ஸ் விதைகள், மீன் எண்ணெய் மிக அவசியம். ஃப்ளேக்ஸ் விதைகளை பொடி செய்து 1ஸ்பூன் அளவு மோரில் தினசரி சாப்பிடலாம்.மாதவிடாய் முடியும் சமயத்தில் மருத்துவ பரிசோதனை செய்து , குறிப்பாய் ஆஸ்டியோபோரோசிஸ், மார்பு புற்று, கருப்பை கழத்து புற்று இருக்கிறதா எனத் தெரிந்து கொள்வது இப்போது மிக மிக அவசியம். சமீபத்திய புள்ளி விவரங்கள் எல்லாம் மிரட்டுவது பெண்ணில் இவ்வயதில் கிடுகிடுவென பெருகி வரும் புற்றைப்பற்றித்தான்.
அடுத்து முதுமையான அன்னைக்கு; அவள் உங்கள் குழந்தை. சில நேரங்களில் அந்த முதுமையான அன்னை காட்டும் பிடிவாதம், உங்களுக்கு எரிச்சல் தரக் கூடாது. மலம் சிறுநீர் கழிக்க உங்கள் உதவி தேவைப்படும் போது சிரமமாய் நினைக்க்க் கூடாது. விட்ல பிள்ளைங்களுக்கு வாங்கி வச்ச நொறுவல வயசு காலத்துல சாப்பிட்டுடு இப்ப சங்கடப்படறாது யாரு?ன்னு, சொல்லிக் 

காட்டக் கூடாது. டயப்பர் இல்லாத காலத்தில் உங்களை பஸ்சில் தூக்கிக் கொண்டு போகும் போது இடுப்போடு நீங்கள் இருந்த மலத்தை அவள் அசிங்கமாக நினைக்காமல், அணைத்து தூக்கிவந்து பார்த்ததை மறந்துவிடக் கூடாது. முதுமையான அன்னைக்கு, உணவுத் தேவை அளவில் குறையும். அளவில் குறைந்த அந்த உணவு கால்சியம், விட்டமின் சத்து நிறைந்ததாக லோ கிளைசிமிக் தன்மையுடன் இருக்க வேண்டும். நெய் போடாத பொங்கல், கீரை கூட்டுடன் சப்பாத்தி, புதினா, மல்லி சட்னியுடன் இட்லி, நீர்க் காய்கறிகளின் கூட்டு, கூழாக பிசைந்த புழுங்கலரிசி சாதம், மாலையில்  நன்கு ஊற வைத்த சிகப்பரிசி அவல், இரவில் எளிதில் செரிக்க வைக்கும் இட்லி அல்லது அரிசிக்கஞ்சி, சிறு வாழைப்பழம் அவர்களுக்கான உணவு. மோர் குடிப்பது பாலைக் காட்டிலும் அவர்களுக்கு நல்லது.
அன்னை உணவூட்டுவது மரபு. அன்னையின் நலம் கருத்தில் கொண்டு, சான்றோன் என உலகம் நம்மைச் சொல்ல, அவள்  நமக்குச் செய்த தியாகங்களை கொஞ்சம் நினைவில் கொண்டு, சின்னதாய் ஒரு கவளம் அவள்தம் முதுமையில் ஊட்டிவிடுங்கள். அவள் தன் வாழ்வில் பெறும் உச்சகட்ட வசந்தம் அது!

No comments:

Post a Comment