Friday 4 January 2013

ஆறாத புண்ணை ஆற்ற...!



  • புகைப்படங்கள்
தசைநார்க் கசிவு, சிரைகள் எனும் ரத்தக் குழாய்கள் வெட்டுப்படுதல், புண் ஆழமாக இருத்தல், கிருமிகளால் உண்ணப்படுதல், எலும்பு முறிதல், அதிகமான அளவில் நெய் மற்றும் எண்ணெய்ப் பொருட்களைச் சாப்பிடுதல், புண் ஏற்பட்டுள்ள பகுதியில் உரோமம், ஆடை முதலியவை உராய்தல், குலுக்கலுடன் கூடிய பயணம், குடல் பகுதியை மலம் அதிகம் சேரும் அளவில் வளரவிட்டு, சுத்தம் செய்து கொள்ளாமல் மலச்சேர்க்கையை வளர்த்துக் கொள்ளுதல், அதிக அளவில் உணவைச் சாப்பிடுதல், அல்லது அதிகப் பட்டினியிலிருந்து உடலை இளைக்கச் செய்யும் முயற்சி, பகலில் தூங்குதல், இரவு கண் விழித்தல் ஆகியவை காரணமாக, ஆறக்கூடிய புண்ணாக இருந்தாலும், ஆறுவதில்லை என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.
பழைய அரிசியினால் தயாரிக்கப்பட்ட கஞ்சியை காலை உணவாக, இந்துப்புடன் வெதுவெதுப்பாகச் சாப்பிடுவது நலம். அதுபோல, பச்சைப் பயறு கஞ்சியைக் காலை உணவாகச் சாப்பிட்டால் புண் விரைவில் ஆறுவதற்கு உதவியாக இருக்கும். புது அரிசி, உளுந்து, எள்ளு, கடலை, கொள்ளு, வெல்லம், மாவுப் பண்டங்கள், பாயசம், தயிர், பால், புளிப்பு, உப்பு, காரம் போன்றவற்றைக் குறைக்கவும். தலையைக் கிழக்கு நோக்கி வைத்து, இரவில் உறங்கினால், விரைவில் ஆறுவதற்கான ஒருவழியாகும் என்ற ஒரு விநோதக் குறிப்பை ஸூஸ்ருதர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.
திரிபலை, கருங்காலிக் கட்டை, அதிமதுரம், வேப்பிலை, மரமஞ்சள், மயில்துத்தம் போன்றவை புண்களை ஆற்றுவதில் சிறந்தவை.
திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மற்றும் கருங்காலிக் கட்டையை வகைக்கு 5 கிராம் வீதம் சேர்த்து, அரைலிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி, புண் ஏற்பட்டுள்ள பகுதியை காலை, இரவு உணவுக்கு முன் அலம்பி
விடுவதால், அங்குள்ள கிருமித் தொற்று நீங்குவதுடன், புண் விரைவில் ஆறுவதற்கும் ஏற்ற சிகிச்சையாகும். அதன்பிறகு, அதிமதுரத் தூளை அந்த இடத்தில் தெளிப்பதும் நல்லதே.
துத்தம், வேப்பிலை, மஞ்சளைப்  புகைத்து புண் ஏற்பட்டுள்ள பகுதியில் இரவில் படுக்கும் முன் புகையைக் காண்பித்துவர, புண் விரைவில் ஆறும்.
இரண்டு திரிபலாகுக்குலு எனும் மாத்திரைகளைக் காலை, இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன்பாகச் சாப்பிடவும்.
சுமார் 28-48 நாட்கள் வரை சாப்பிடலாம். மஞ்சிஷ்டாதி கஷாயத்தை 15 மி.லி. அளவில் எடுத்து, 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து,  காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் நல்லதே. சுமார் 3 -4 வாரங்கள் வரை சாப்பிடலாம். 

No comments:

Post a Comment