Tuesday, 31 May 2011

ராகுல் என்ற சீரியல் மாமியார்...!


  ந்திய அரசியல் வானம் என்பது பல விசித்திரமான நிலவுகளை கொண்ட வினோத வானம்

 இங்கே கருப்பாகவும் சந்திரன் உதிப்பான் அவன் கால் முளைத்து சூரியனையும் மிதிப்பான்

 அதாவது உண்மைக்காகவே வாழ்ந்த காந்தியும் அதற்கு நேர் விரோதமான பல காந்திகளும் வாழ்வதை இங்கே மட்டுமே காண முடியும்

 நான் எந்த காந்திகளை பேசுகிறேன் என்பது யாரும் அறியாத ரகசியம் அல்ல

கடந்த சில காலமாக நமது நாட்டை பொம்மைகளை வைத்து அரசாளும் சோனியா மற்றும் ராகுல் காந்திகள் அடிக்கும் கூத்துக்கள் பல நேரம் மனதிற்கு வேதனையாக இருக்கிறது சில நேரம் சிரிப்பு வருகிறது


  நாம் அரசியலில் புதியதாக ஜோக்கர்களை சந்திக்க வில்லை

 இந்திராகாந்தி காலத்தில் ராஜ் நாராயணன்,சரண் சிங் போன்ற ஜோக்கர்களையும் வி.பி. சிங் காலத்தில் தேவிலால் சௌதாலா போன்ற ஜோக்கர்களையும் சந்தித்து இருக்கிறோம்

 அப்போது எல்லாம்  கூட இந்த ஜோக்கர்கள் நகைச்சுவையாக நடந்து கொண்டாலும் சிந்தனையில் கொடூரம் தெரியாது

ஆனால் இன்று இந்திய அரசியல் வானில் ஜோக்கராக பவனி வரும் ராகுல் காந்தியின் செயல்களை பார்க்கும் போது சிரிப்பாகவும் இருக்கிறது கூடவே பயமாகவும் இருக்கிறது

உத்திரபிரதேச அரசு விவசாய நிலங்களை கையக படுத்தியதை எதிர்த்து விவசாயிகள் நடத்திய எதிர்ப்பு கூட்டத்தில் பேசிய ராகுல்


  விவசாயிகளின் துன்பத்தை பார்க்கும் போது நான் இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப் படுகிறேன் என வீரா வேசமாக வசனங்களை அள்ளி வீசி இருக்கிறார்

 ஆடு நனைவதை பார்த்து ஓநாய் அழுத போது ஆடுகளே இறக்கப்பட்டு ஓநாய்க்கு ஆறுதல் சொன்னதாம்

 அதே போலவே ராகுலின் போலியான கரிசன பேச்சை கேட்டு பல விவசாயிகள் ஐயோ பாவம் எவ்வளவு பெரிய வீட்டு பிள்ளை இப்படி நம்மக்காக வந்து குரல் கொடுக்கிறதே என அங்கலாயித்து போகிறார்கள்

 விவசாயிகளின் நலனுக்காக இவ்வளவு வருத்தப்படும் ராகுல் காந்தி ஆந்திராவிலும் மராட்டியத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்யும் போது எங்கே போனார்?

ஒரு வேளை அப்போது அவர் இந்தியாவில் இல்லையா? அல்லது இந்தியராக இல்லையா? நமக்கு ஒன்றும் விளங்க மாட்டேன் என்கிறது

நாடு முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளை அடிக்க படுகிறது

 ரியல் எஸ்டேட் தொழிலால் மொட்டை அடிக்கப் படுகிறது

 கிராம புறங்களில் உள்ள ஏரி குளங்கள் தூர் வாரப்படாமல் கரைகள் உறுதிப்படுத்தப் படாமல் வேலி காத்தான் முளைத்து அப்படியே கிடைக்கிறது

 சில சிறிய பெரிய நகரங்களில் உள்ள நீர்ஆதார பகுதிகள் அரசியல்வாதிகளால் கபளீகரம் செய்யப்பட்டு இல்லாமல் காணமல் மறைந்தே போய்விட்டது

 இதனால் விவசாயமும் அதற்கு தேவையான தண்ணீரும் நாட்டை விட்டு வெகு தொலைவிற்கு போய் கொண்டே இருக்கிறது

 ரசாயன உரங்களால் இந்திய மண் வகை 90 பகுதி விஷமாகி விட்டது

  நவீன வேளாண்மை என்ற பெயரில் மரபு சார்ந்த வேளாண் தொழில் நுட்பம் எல்லாமே மயானத்தில் சிதையேறி விட்டன

இதனால் ஒரு மாட்டை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் பல லட்ச்சம் விவசாயிகளின் வாழ்க்கை இன்று முடியுமோ நாளை முடியுமோ என்று ஊசலாடி கொண்டு இருக்கிறது


இறந்து போக போகிறவனின் உடல் உறுப்புகள் துடிப்பதை பார்த்து கிண்டல் செய்யும் கதையாக தான் ராகுல் காந்தியின் இந்த கரிசன பேச்சை இன்றைய சூழலில் நம்மால் எடுத்து கொள்ள முடிகிறது

 ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் தான் இருக்கிறது சுண்டு விரல் அசைந்தால் போதும் மக்களின் தலை எழுத்தையே ஒரே நொடியில் மாற்றி விடலாம்

அப்படி பட்ட நிலையில் இருக்கும் ஒரு மனிதன் தனது சொந்த கட்சியின் நலனுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பது அப்பட்டமான குரூர நகைச்சுவை ஆகும்

 திடிரென இவருக்கு உத்திர பிரதேச விவசாயிகளின் மீது அக்கறை ஏற்பட்டிருப்பது இப்படிதான் நினைக்க வைக்கிறது

 இது மட்டும் அல்ல அந்த கூட்டத்தில் உத்திர பிரேதேச கிராம ஒன்றில் 70  விவசாயிகளின் இறந்த உடல்கள் அடிக்கி வைக்கப்பட்டுள்ளது என இல்லாத நடக்காத ஒரு விஷயத்தை சீரியல் மாமியார் போல மற்றவர்களை அழ வைக்க பேசி இருக்கிறார்

  இது என்ன அபாண்டமான பொய்யாக இருக்கிறது என்று மற்ற அரசியல் கட்சிகளும் பதிலுக்கு ஆற்பறிக்க ஆரம்பித்து விட்டன

 இதில் நிஜமான வேதனை என்ன வென்றால் உத்திர பிரேதேசத்தில் மாயாவதி அரசு விவசாயிகளுக்கு பல வித இடைஞ்சல்களையும் ஏமாற்று வேலைகளையும் செய்து வருகிறது

 மாயவதியின் மாயா ஜால அரசியல் சித்து விளையாட்டுகளால் விவசாயிகளில் பலர் பலவற்றை அநியாயமாக இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள்

 ராகுல் காந்தியின் பக்குவமற்ற பேச்சால் விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகள் தேசிய அளவில் பேச முடியாமலே போய் விட்டது

 உத்திர பிரேதேச விவசாயிகளின் கண்ணீர் ராகுல் என்ற குழந்தை நிழலால் முற்றிலுமாக மறைக்கப்பட்டு விட்டது

உண்மையில் விவசாயிகளின் வேதனை ராகுலின் இதயத்தை தொட்டால் ஓட்டுக்காக செயல் படுவதை விட்டு விட்டு அப்பாவி உழவர்களின் வீட்டு அடுப்பு எரிய எதையாவது செய்யலாம்

முடிய வில்லை என்றால் மவுன விரதம் எடுக்கலாம்

 இது அவருக்கும் நல்லது விவசாயிகளுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது

இதை அவர் செய்ய மறுத்தால் நிச்சயம் மக்கள் வாய் பூட்டு போடுவார்கள் 

Saturday, 28 May 2011

ஜெயலலிதா மாறவில்லையா?




  கால்காசு என்றாலும் கவர்மெண்ட் காசு வேண்டும் என்று கிராமத்தில் சொல்வார்கள்

 அந்த அளவிற்கு அரசு உத்தியோகத்தின் மேல் மக்களுக்கு அபிமானம் இன்னும் இருக்கிறது

 சாதாரண மக்களை பற்றி சொல்வானேன் படித்து பட்டம் பெற்றவர்களும் இளையத்தலைமுறையினரும் கூட அரசாங்க வேலையை காதலிக்கிறார்கள்

 எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் தனது மகளை தனியார் துறையில் நல்ல வேலையிலிருந்த நல்ல நல்ல மாப்பிள்ளைக்கெல்லாம் கொடுக்காமல் வெகு நாள் காத்திருந்து சற்று வயசான கவர்மெண்ட் மாப்பிள்ளைக்கு கொடுத்தார் 


 இப்போதெல்லாம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளம் கொடுக்கிறார்களே என்று நான் கேட்டபோது சம்பளம் முக்கியமல்ல உத்தியோகப் பாதுகாப்புத்தான் முக்கியமானதனப் பதில் சொன்னார்

இது சரியான நம்பிக்கையா? அவநம்பிக்கயா என்று நமக்குத் தெரியாது

ஆனால் நம்ம தமிழ்நாட்டு ஜனங்க இப்படி நம்புகிறார்கள்

 இந்த நம்பிக்கையை சாதகமாகப்பயன் படுத்திக் கொண்டு அரசியல் கட்சிகளை சேர்ந்த வட்டம் மாவட்டம் எனத் துவங்கி அமைச்சர்கள் வரையில் தனி மகசூலே நடக்கிறது 


 சென்ற ஆட்சி துவங்கியவுடன் அமைச்சரான ஒருவரிடம் தனது மகனுக்கு பேருந்து நடத்துனர் வேலைக்காக இரண்டு லச்ச ரூபாய் கொடுத்து விட்டுஆட்சி முடியும் வரை காத்திருந்தார் எனக்குத் தெரிந்த பெரியவர்

 இப்படி ஏராளமானவர்களை தமிழ்நாடு முழுவதும் பார்க்கலாம்

 அரசாங்க வேலை பெருவதற்கு ஆள் சிபாரிசு வேண்டும் பெட்டி நிறைய லஞ்சம் கொடுக்க வேண்டும் சிறிதளவு திறமை இருந்தால் கூட போதுமானது எப்படியும் வேலை வாங்கிவிடலாம் என பலர் நம்பிக்கொண்டிருந்தனர்

ஆனால் இப்போது அந்த நம்பிக்கையிலும் இடிவிழுந்திருக்கிறது


 அரசு வேலைக்கு சிபாரிசு லஞ்சம் திறமையெல்லாம் போதாது நாக்கையும் வெட்டிக் கொள்ள வேண்டும் என்று புதிய பார்மூலாவை ஒரு பெண்மணி தமிழ்நாட்டிற்கு வழங்கியிருக்கிறார்

 நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ஒருவேளை தமிழ்நாட்டில் இனி எல்லா புதிய அரசு ஊழியர்களும் நாக்கறுத்தவர்களாய் காது வெட்டியவர்களாய் தலையில்லாதவர்களாய் தான் காண நேறிடுமா என நடுக்கமாகவும் இருக்கிறது

 ஒரு ஏழைப் பெண்ணுக்கு உதவி செய்ததை எப்படி தப்பென்று சொல்ல முடியும்? என சிலர் கேட்கலாம்

 உதவி செய்ததை யாரும் விமர்சிக்க வில்லை ஆனால் நாக்கை அறுத்து கொண்டதை மட்டுமே காரணமாக வைத்து அரசு வேலை கொடுப்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும்?


  அந்த பெண்மணி தமிழ்நாட்டுக்காக எதாவது சாகசங்கள் புரிந்து உடல் உறுப்பை பறி கொடுத்தார் என்றால் அவருக்கு அரசு உதவி செய்வதில் நியாயம் இருக்கிறது

 தமிழ் மக்களுக்காக எதாவது செய்திருந்தால் கூட பாராட்டலாம்

 ஆனால் அவர் செய்திருப்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றிக்காக

இதை பாராட்டுவதோ பரிசு அளிப்பதோ தவறுதலான முன்னுதாரனமாகும்

பொதுவாக திமுக ஆட்சி என்றால் தலைவர்களை காக்கா பிடிக்க தோரணங்கள் வைப்பது ஆடம்பர கட் அவுட்டுகள் வைப்பது என்பது வழக்கம்


  அதிமுக ஆட்சி என்றால் தலைவிக்காக பால் குடம் சுமப்பது அலகு குத்துவது நெருப்பு மிதிப்பது என்று நடப்பது வழக்கம்

 ஆனால் இப்போதைய இந்த பழக்கம் மிகவும் விபரிதமானது ஒரு வேளை முதல்வர் ஜெயலலிதா இப்படி பட்ட மூட தனத்தை விரும்புகிறாரோ என்னவோ?

 ஒரு வேளை அது தான் நிஜம் என்றால் ஜெயலலிதா இன்னும் மாற வில்லை ஆப்படியே தான் இருக்கிறார் என்று நாம் எடுத்துக்கொள்ள வகை ஏற்படும்

தலைமை செயலகத்தை மாற்றுவது அச்சிட்ட புத்தகங்களை குப்பையில் போடுவது நாக்கை அறுத்தவருக்கு அரசாங்க வேலை கொடுப்பது என்ற தொடர்ச்சியான நிகழ்வுகளை காணும் போது தமிழக மக்களுக்கு கிலி ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை


 கருணாநிதி அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் தண்டனை கொடுத்து சூடு இன்னும் தனிய வில்லை

அதற்குள் அதே தவறுகளை இவரும் ஆரம்பித்தால் மக்கள் கையில் உள்ள சாட்டை திரும்பி விடும்

செய்ய வேண்டிய ஆக்க பூர்வ பணிகள் எத்தனையோ உண்டு அதை விட்டு விட்டு இத்தகைய காரியங்களில் ஈடு படுவது யானை தலையில் மண்ணை வாரி போட்டது போல் ஆகி விடும்

அதனால் பழைய ஆசைகளை கழற்றி வைத்து விட்டு புதிய செயல்களை முதல்வர் செய்வது அவசியம்

இதை மறந்தால் நாட்டுக்கும் நல்லது நடக்காது அவருக்கும் நல்லது கிடைக்காது 

Monday, 23 May 2011

நாளந்தா பல்கலை கழகம்




  நாளந்தா பல்கலை கழகத்தை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம் ஆனால் மிக புகழ் பெற்ற அந்த நாளந்தா பல்கலை கழகம் எப்போது எங்கே இருந்தது?  அதன் சிறப்புகள் என்ன? என்பது பலருக்கு தெரியாது



தற்போதைய பீகார் மாநில தலைநகரமான பாட்னாவின் ஆதிகால பெயரே பாடலிபுத்திர நகரம்.இங்கு இருந்த நாளந்தா  பல்கலை கழகம் எல்லோர் நினைவிலும் எளிதாக வரும்.



  இன்று கேம்பிரிட்ஸ் பல்கலை கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு எத்தகைய மதிப்பும் மரியாதையும் உலகளவில் தரப்படுகிறதோ அதை விட பத்து மடங்கு மரியாதை நாளந்தா பல்கலை கழக மாணவர்களுக்கு அக்காலத்தில் இருந்தது. 


 ஆரம்பத்தில் நாளந்தா இருந்த இடம் பிரம்மாண்டமான மாந்தோப்பாக இருந்தது.  அதை பத்து கோடி தங்க நாணயங்கள் கொடுத்து ஐநூறு வணிகர்கள் வாங்கி கௌதம புத்தருக்கு தானமாக கொடுத்தனர்.



  புத்தரின் காலத்திற்கு பிறகு மகதநாட்டு அரசன் சக்கராதித்தனும் அவனது வழித்தோன்றல்களான புத்த குப்த, தகாத குப்த, பால நித்யா, வஞ்சரா ஆகியோர்கள் நாளந்தாவை பிரம்மாண்ட வடிவில் கட்டி முடித்தனர்.



  கி.பி. நானூறு ஆண்டளவில் சீனாவிலிருந்து வந்த பாகியான் நாளந்தா சென்றுள்ளார்.  அவர் அதை சீன மொழியில் நாளோ என்று அழைக்கிறார்



 நாளந்தா பல்கலை கழகத்தின் மைய மைதானத்தில் புத்தரின் நேரடி சீடரான சாரி புத்தன் சமாதி இருந்ததை தான் பார்த்ததாக எழுதி வைத்துள்ளார்.


   இந்த பல்கலைக் கழகத்தின் ஆசியர்களாக ஆயிரம் பௌத்த துறவிகள் இருந்தார்கள்.



 கல்வி போதிப்பதற்கு பகல் பொழுது மட்டும் போதாமல் இரவு வேளையிலும் வகுப்புகள் நடத்தப்பட்டதாக யுவாங்-சுவாங் கூறுகிறார்.



  பல வெளிநாட்டு மாணவர்களும் அங்கு இருந்திருக்கிறார்கள்.  தர்ம பாலர், சந்திர பாலர், பிராக மித்திரர், ஜீன மித்திரர், ஞான சங்கீரர், சீலா கார் போன்ற புகழ் பெற்ற பேராசிரியர்கள் பணி புரிந்ததாகவும் யுவான்-சுவாங் கூறுகிறார்.



  கி.பி. அறுநூற்று எழுபத்தி ஐந்தில் இந்தியாவிற்கு வந்த ட்சிங் என்ற சீன யாத்திரிகர் நாளந்தாவில் பத்து வருடம் தங்கியிருந்திருக்கிறார்.



  அவர் நாளந்தா கட்டிட அமைப்பு எட்டு மண்டபங்களும் முன்னூறு தங்குமிடங்களும் பல நூறு வகுப்பறைகளும் இருந்ததாகவும் 200 கிராமங்களிலிருந்து கிடைக்கிற வருவாய், நிர்வாக செலவிற்கு பயன்பட்டதாகவும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்ததாகவும் எழுதுகிறார்.


 நாளந்தாவில் எல்லா விதமான கல்வியும் துறை வாரியாக போதிக்கப்பட்டது.



 மிக குறிப்பாக பௌத்த மெய் பொருளியிலும், பௌத்த தந்ர யோகமும் போதிக்கப்பட்டது.



  சீனா, கொரியா, திபெத், ரஷ்யாவின் சிலப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வருகை தந்தார்கள்.



 வந்தவர்கள் அனைவருமே நாளந்தாவில் சேர்க்கப்படுவதில்லை.  பல தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு நூற்றுக்கு இருபது பேர் மட்டுமே கல்வி பயில சேர்க்கப்பட்டனர்.



  தற்போது நாளந்தா இருந்த இடத்தில் புதை பொருள் ஆய்வு நடத்தும் போது பல தெய்வ திருவுறு சிலைகள் கிடைக்கப்பட்டிருப்பதை வைத்து அங்கு சடங்கு முறை பயிற்சியும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.



  ஒவ்வொரு மாணவனும் குறைந்தது ஏழு வருடமாவது நாளந்தாவில் படித்தனர்.



  படிக்கும் காலத்தில் மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.



 மாறாக அவர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை, வைத்திய செலவு எல்லாமே இலவசமாக கொடுக்கப்பட்டது.



 ஆதிகால இந்தியர்கள் கல்வியை அறிவு வளர்ச்சிக்கான கருவியாக கருதினார்களே தவிர வயிறு வளர்ச்சிக்கான பொருளாக கருதவில்லை.



 எப்போது கல்வி திறமையுள்ளவனுக்கு இல்லாமல் வரியவன் என்பதற்காக கிடைக்காமல் போய்விட்டதோ அப்போதே நாடு கெடத் துவங்கி விட்டது.



  நாளந்தாவின் பெருமையை பேசுவதினால் எந்த பயனும் இல்லை.



  அது காட்டிய வழியில் அறிவு கரூவூலத்தை யார் மக்களுக்காக தானமாக கொடுக்கிறார்களோ அவர்களே நமது கண் எதிரே தெரியும் கடவுள்கள் ஆவார்கள்.


சேலை


ம்மா உன் சேலையை
தொட்டுப் பார்க்கிறேன்
அதனால்
நான் பெற்றப்பேரை
எண்ணிப் பார்க்கிறேன்
தொலைந்த இன்பத்தை
கண்ணில் பார்க்கிறேன்
அடுத்தப்
பிறவியிலும்  
நீ வேண்டுமென்று
கடவுளைக் கேட்கிறேன்


நான் பிறந்து விழுந்தபோது
உன் சேலை ஈரம் துடைத்தது
நான் உறங்கி மகிழ்வதற்கு
உன்சேலை தூளி ஆனது
பாலறுந்தும் போதெனக்கு
உன்சேலை திரையானது
என்கடைவாயில் ஒழுகும் எச்சிலை 
உன்சேலைத்தான் துடைத்தது
தத்தி நானும் நடக்கும் போது
உன் சேலை கைப்பிடியாய் வந்தது
எனக்கு பல்முளைத்த குறுகுறுப்பை
உன்சேலைத்தான் தீர்த்தது
என் சின்னமேனி மழையில்
நனையாமல் உன் சேலை குடைபிடித்தது

மாமரத்துக் கிளையில்
ஊஞ்சலில் என்னை ஆட்டியதும்
உன்சேலைத்தான்
மார்கழி குளிரில் போர்வையாய்
இளஞ்சுடு தந்ததும்
உன்சேலைத்தான்
மத்தியான வெயிலில்
தலையில் முக்காடிட்டதும்
உன்சேலைத்தான்
நான் பனம்பழம் தின்று
கைத்துடைத்ததும்
உன்சேலைத்தான்

நீச்சல் பழக
இடுப்பில் கட்டியதும்
உன்சேலைத்தான்
ஆற்றில் மீன் பிடிக்க
வலையாய் ஆனதும்
உன்சேலைத்தான்
ஈரத்தில்
ஊறிய  
என்தலையை துவட்டியதும்
உன்சேலைத்தான்

அப்பா அடிக்க
வரும்போது
ஒளித்து என்னை வைத்ததும்
உன்சேலைத்தான்
பள்ளிக்கூட வாத்தியாரின்
முரட்டு மீசைக்கண்டு
பதுக்கி வைத்ததும்
உன்சேலைத்தான்

தலைவலிக்கு
ஒத்தடம் கொடுத்ததும்
உன்சேலைத்தான்
கல்பட்டு
வடிந்த ரத்தத்தை
கட்டி நிறுத்தியதும்
உன்சேலைத்தான்
மிட்டாய்
மறைத்துவைத்துக் கொடுத்ததும்
உன்சேலைத்தான்
காசு திருடியதால்
கட்டி வைத்து அடித்ததும்
உன்சேலைத்தான்

உன் கிழிந்த சேலைத்தான்
அக்காவுக்கு தாவணி
நீ கிழித்து கொடுத்ததுதான்
பாப்பாவுக்கு பூந்துணி
உன் சேலைக்கிழிசல்தான்
தம்பிக்கு கோவணம்
உன் சேலைத் தலைப்புத்தான்
அப்பாவுக்கு மோகனம்
உன்சேலை பொத்தல்தான்
நம்குடும்ப சீதனம்
உன்சேலை அழுக்குத்தான்
எனை உயர்த்திய வாகனம்

ஒரு சேலை உறவு வந்தாலும்
இன்னொறு
சேலை வந்து பிறந்தாலும்
உன்சேலை
உறவு போகாது
அதுபோனால்
என்னுடலும் வேகாது

என்நோய்க்கு
பத்தியம் காத்தது
இந்தச்சேலை தானம்மா
என் உயிரையும் உடலையும்
வளர்த்தது
இந்தச்சேலை தானம்மா
என்கனவை
நிஜமாய் சமைத்தது
இந்தச் சேலை உழைப்பம்மா
என் உயிர் மடிந்தால்
போர்த்த வேண்டும்
இந்தச்சேலையை  தானம்மா!

பைத்தியம் ஆன கதை

ந்தைக்கு போன
அண்ணன்
சாயங்காலம் வரும்போது
சகதியோடு
வந்து நின்றான்
ஏனிந்த கோலமென்று
இடைமறித்து கேட்கையில்
இதுதான்
கட்சி கொள்கை என்றான்

அறுவடைக்கு
போன அப்பா
அரைநாளில்
திரும்பி வந்து
திருவோட்டை கையில் தந்தார்
சோறு போட்ட
நிலமெல்லாம்
கூறுபட்டு மனையாச்சி
ஓடுதான்
மீதமென்றார்

அம்மாவின்
வளையலை
அடகு வைத்த காசில்
கல்லூரி போன தம்பி
கண்ணிரண்டும்
குருடாகி
வாசலில் வந்து
விழுந்தான்
கவர்ந்த நடிகருக்கு
கற்பூரம் காட்டும்போது
கண்களை
சுட்டதென்றான்

ஆசைக் கனவுகளை
அள்ளி சுமந்தப்படி
பள்ளிக் கூடம்
போன தங்கை
கூடாததை
படித்து விட்டு
கருகலைக்க காசு கேட்டாள்

அப்பாவின்
முதுகில்
ஆயிரம் சுமையேற
கணவன்
வீடு
போன அக்கா
குடிகார புருஷனிடம்
விடுதலை
வாங்கித் தாவென்றாள்

மலையேறி படியேறி 
மண்ணில்
உருண்டு புரண்டு
கடுந்தவம்
இருந்து பெற்ற பிள்ளை
பாலுக்கு
அழும்போது
பரிதவிக்க
விட்டுவிட்டு
பத்தினியோ "தொடரை' பார்த்தாள்

இத்தனையும்
நடக்கும் போது
என்னினிய அம்மாவோ
அம்மனுக்கு 
கூழ் வார்த்தாள் 

நெருப்பு பொறி
வந்து
கண்களை ஒருபுரம்
குத்த
கால் கையில்
ஆயிரம் விலங்கு விழ
எப்படி நான்
வாழ்வெதென்று
எதுவுமே புரியாமல்
மனநல
வைத்தியரிடம்
மருந்துக்கு நானும் வந்தேன்

சொந்த ஊருக்கு.......



அம்மாவைப்போல்
என்னை
வளர்த்த ஜென்மபூமியே
உன்மணல்
புழுதியில்
உருண்டு விளையாடிய
சின்னமகன் எழுதும் அன்புக் கடிதம்

நீ நலமா ?
உன் கருவேலம் முட்களும்
கள்ளிச் செடிகளும் நலமா?

என்னை
நீ நலமாவென திருப்பிக்கேட்டால்
சொல்லுவதற்கு
என்னடம்
நல்ல பதிலே இல்லை
உன்னை விட்டு
வெகுதூரம் சென்ற நான்
எப்போதாவது வரும்
உன்னினைவால் பெருகின்ற
சந்தோஷத்தை தவிற
பெரிதாக எதையும் பெற்றிடவில்லை

ஒட்டைவிழுந்த
கால்சட்டையும்
ஒருபிடி சோறும்தான்
உன்னிடம் இருக்கும்போது இருந்தது
ஆனாலும்
நெஞ்சம் எல்லாம் நிறைந்துக் கிடந்தது


உன்னோடு
உள்ளபோது பெற்ற சாந்தியை
இங்கே வந்து
விற்று வசதிகளை வாங்கினேன்
இன்று
வசதிகளை விற்றாலும்
அமைதி கொள்ள வழியில்லை

நாசியை விற்று
பூக்களை வாங்கியவன்போல்
கண்களை விற்று
கண்ணாடி வாங்கியவன்போல்
மழலையை விற்று
வீணை வாங்கியவன்போல்
மனைவியை விற்று
இல்லறம் வாங்கியவன்போல்
உன்னை விற்று
ஆடம்பரம் வாங்கிய நான்
ஒரு முட்டாள் வியாபாரி!

கல்யாணம் செய்த
பிறகுதான்
பிரமச்சரியத்தின் பெருமை தெரியும்
விடிந்த பிறகுதான்
இரவின் இனிமை புரியும்


கொத்தியப்
பிறகுதான் நாகத்தின் அழகு தெரியும்
கொட்டியப் பிறகுதான்
பாதரசத்தின் வலிமை புரியும்
இழந்தப் பிறகுதான்
எளிமையின் வளமை தெரியும்
ஆம்!
உன்னை இழந்தப் பிறகுதான்
உன் சௌந்தர்யம் தெரிகிறது
உன் சௌகர்யமும் புரிகிறது
பானையை உடைத்து விட்டு
பதபதைத்து ஆவதென்ன
உன்னை
பிரிந்து  விட்டு உருகி
அழுவதால் என்ன பயன்


என் கதை கிடக்கட்டும்
எப்போதும் அது திருப்பதி குப்பைதான்
கிளற கிளற  சிக்கல்களே வரும்
என்னைப்போல்
உனக்கு
ஏராளமான பிள்ளைகள் உண்டு
அவர்களெல்லாம் நலமா ?
அவர்களின் வாரிசுகளும் நலமா ?

காலையும் மாலையும்
உன்னை
அலங்கரிக்க நீண்ட துடப்பத்துடன்
கம்பீரமாய் நடப்பானே பகடை!
அவனும்
அவன் சாராயபுட்டியும்
அவனின் ஒவ்வொரு அடிக்கும்
புதுப்புது கெட்ட வார்த்தைகளை உதிர்ப்பாளே
அவன் மனைவி
அவளும் நலமா ?
சலவைக்குப் போட்ட
கால் சட்டையை
தொலைத்து விட்டதனால்
கல்லால் அடிப்பதாக
கந்தனை திட்டினேன்
அந்தக் கந்தன் நலமா ?
அவனுக்கு அழகான
ஒருபெண் உண்டே
அவள்
பெயர் கூட மறந்து விட்டது
அவளும் நலமா?

உன் வடபுரத்தில்
வரிசையாக
நிற்குமே தென்னை மரங்கள்
அதில் அசைந்தாடியப்படி
தொங்குமே
தூக்கணாங் குருவிக் கூடுகள்
அவைகள் நலமா ?


வாசகச்சாலை
மதில்சுவர் மீது வரிசையாய்
உட்கார்ந்து
கிசுகிசு பேசுமே சிட்டுக் குருவிகள்
அந்தக் குருவிகளை பிடிக்க
பதுங்கி நிற்பார்களே
கால்சட்டை போடாத பொடிசுகள்
பொடிசுகளை
சின்னக்கல் வீசி துறத்துமே
பல்போன பெருசுகள்
அவர்கள் எல்லோரும் நலமா?

நாராயண ஸ்வாமி கோயில்
கிணற்றிலிருந்து
தண்ணீர் எடுத்துவரும்
மங்கையரின் நடையழகை
கண்களால் தின்பதற்கு
வீட்டுத் தின்ணைகளில்
வரிசையாய்
காத்திருக்குமே வாலிபக் கொக்குகள்.....


கொக்குகளை துரத்துவதாய்
பாசாங்கு செய்து
தானும் மேயுமே கிழட்டு நாரைகள்.....
கொக்குகளையும்
நாரைகளையும் கண்மறைத்து
படகுகளுக்கு தூண்டில்
போடுமே மான்விழி மீன்கள்.....
அந்தக்
காட்சிகளை இப்போதும்
காண முடியுமா
உன் வீதி முனையில்  ....?

பைப்படியில்
சத்தமிடும் பெண்கள்
அந்த சந்தத்திற்கு
தலையாட்டும் ஆண்கள்
கைப்பிடியில்
அடங்காத பிள்ளைகள்
பம்பரம் கோலி
பந்தாட்டம்
கில்லி என்று
குதியாட்டம் போடும்
அரைக்கால் சட்டைகள்



பிரண்டையில் ராட்டிணம்
பப்பாளி கிளையில் ஊதுகுழல்
ஆட்டாம் புழுக்கை குத்திய ஓலைக்காற்றாடி
குருவி முட்டை அவியல்
தலை உடைந்தப் பானையில்
கூட்டாஞ்சோறு
ஓணானுக்கு துண்டுபீடி
பிஞ்சுபோன சைக்கிள் டையரில் ரேஸ்
என்று எவ்வளவோ கும்மாளம்
இந்தக் கும்மலில்
காலத்தை
மறந்த சில நரைமுடிகள்

நெஞ்சை நிமிர்த்தி
கைகளை பின்னால் கட்டி
ஆண்பிள்ளைப் போல் நடப்பாளே
நவலடியாள்!
அவள்
முதுகுக்குப்பின்
பதுங்கி நடப்பாரே பூனை புருஷன்?
அவர்
முதுகு இப்போதாவது நிமிர்ந்திருக்கிறதா?


ஆவணிமாதத்து
அம்மன் கொடைவிழாவில்
தாவணிப்போட்ட
பட்டாம்பூச்சிக்களை வலைவீசி பிடிக்க
தலைசீவி
நடைபழகும் விடலைமீசைகள்
முளைப்பாரி பின்னால்
கையில் பக்தியும் கண்ணில் தூண்டிலுமாய்
திரிவார்களே
அவர்கள்
இப்பவும் அப்படியே இருக்கிறார்களா?

ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்
கோரோசனை வாங்கலையோ கோரோசனை!
குடை ரிப்பேர்
அம்மி கொத்தனுமா அம்மி
என்ற குரல்கள்


வளையல்காரனிடமும்
பூக்கார முனியனிடமும்
வம்பளக்கும் பெண்களின் வெடிச்சிரிப்பு

வண்டியிழுக்கும்
மாடுகளின் மணியோசை
அவ்வப்போது ஏழும்பும்
குடிகாரர்களின் ஓலம்
இப்படி எல்லா ஓசைகளும்
இப்போதும் உன் வீதிகளில் கேட்கிறதா?


சங்குடு பாட்டி
இன்றைய மாலை
நேரத்திலும்
வைகுண்டஸ்வாமி கோயிலுக்கு போகிறார்களா?
மதியக் குழம்புக்கு
மீன் வாங்க
மீன்கார துரைராஜ் வீட்டுக்கு முன்னால்
காலையிலிருந்தே காத்திருக்கிறார்களா கிழவிகள்?

காதலனுடன்
ஓடிப்போகும் போது மாட்டிக் கொண்ட
சிவராஜக்கனி அக்காவிற்கு
அர்த்தராத்தியில்
கல்யாணம் நடந்த அரசமர மேடை
இன்னும் அப்படித்தான் இடிந்து கிடக்கிறதா?
அந்த மேடையில்தான்
பிடிபட்ட
சில்லரைத் திருடர்களை
இன்னும் கட்டி வைக்கிறார்களா?


 மாதாக் கோயில் மணியோசையும்
அம்மன் கோயில் மேளமும்
ஒரே நேரத்தில்தான் ஒலிக்கிறதா?

சுருட்டுப் புகைத்தப்படி
நகைச்சுவை நறுக்குகளை
வாரி இரைப்பாரே
லிங்கத்துரை அண்ணன்
அவர் அதே இளமையோடுதான்
வாழைக்கு நீர் பாய்க்க செல்கிறாரா?

தினம்தினம்
இரவு நேரம்
விளக்கு கம்பத்தின் கீழ்
குழந்தைகளை
வட்டமாய் உட்கார வைத்து
நல்லத்தங்காள் அல்லி அரசானி
கதைகளை
ஒப்பாரி பாடலுடன் சொல்வார்களே
தங்கபுஷ்பம் பெரியம்மா
அவர்கள் இன்னும்
அதே வித்தைக் கர்வத்துடன்தான் நடக்கிறார்களா?


 எல்லாமே அப்படித்தான்
உள்ளதென்றால்
ஒரு சின்ன அஞ்சல் அட்டையில்
""ஆம்''
என்று மட்டும் எழுதிப்போடு
அடுத்த நொடியே
அங்குவருகிறேன்
இல்லையென்றால்
மௌனமாய் இங்கு முடங்கிக்
கொள்கிறேன்
மொட்டை மரத்தைப்
பார்க்கும் தைரியம் எனக்கில்லை

Sunday, 8 May 2011

போதை மருந்தாகும் சினிமா

   ரு காலத்தில் சினிமாவுக்கு போவது என்பது கிராமங்களில் திருவிழா போலவே நடந்தேறும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழா மிகவும் சுவாரசியமானது, அனுபவித்தவர்களுக்குத் தான் அதன் சுகம் தெரியும்.  இப்போது மாதிரி அப்போது எல்லாம் நகரங்களை தவிர கிராமங்களில் சினிமா  வெளி வந்தவுடனயே பார்த்து விட முடியாது.  வெளிவந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு கூட சில கொட்டகைகளில் பிரம்ம பிரயத்தனத்துடன்  தான் படம் வரும்.


நகரத்திலிருந்து கிராமத்திற்கு வருபவரோ அல்லது கிராமத்திலிருந்து நகரத்திற்க்கு சென்று படம் பார்த்தவரோ ஊருக்கு வந்த உடனே கதையை சொல்லி விடுவார்.  அதில் நடிகர், நடிகைகளின் நடிப்பு உடை அலங்காரம், சண்டை, அழகை எல்லாமே படம் பார்த்தவர் விவரிக்க கேட்பவர்கள் வாய்பிளந்து கொண்டிருப்பார்கள்,  பக்கத்து ஊரில் அந்த படம் வந்தவுடன் இதுவரை மனதிற்குள் கற்பனையாக முடங்கி கிடந்ததை திரையில் காண்பதற்கு இளைய மனதுகள் துடியாய் துடிக்கும்.   வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் அனுமதி பெறாமல் சினிமா பக்கம் தலை வைக்க முடியாது.   தயங்கி தயங்கி ஆவலை அவர்களிடம் சொன்னால் நெல்லு கதிர் சாயும் பருவத்தில் இருக்கிறது.   வாழை குலைத் தள்ள போகிறது, உரம் வாங்கி போட்டால் தான் விளைச்சலை நல்லபடியாக பார்க்கலாம்.  நாலு பேர் சினிமாவுக்கு போனால் பத்து, முப்பது ரூபாய் செலவாகி விடும்.  அடுத்தமாதம் பார்த்து கொள்ளலாம்.  இப்போது சும்மாயிரு என்று கடுப்பாக பேசி விடுவார்கள்.


   நெல் கதிர் சாயும் வரை, வாழை குலை தள்ளும் வரை, தியேட்டரில் அதே படம் ஒடிக்கொண்டிருக்குமா?  சிவாஜி கனேசனின் நடையழகை சரோஜா தேவியின் அபிநயத்தை.  எம்.ஜி.ஆர்-ன் சண்டை போடும்; திறமையை விரும்பிய போது பார்க்க முடியாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என விம்மி வெடித்தவர்கள் எத்தனை பேர், கோபத்தில் குதித்தவர்கள் எத்தனை பேர், கெஞ்சி கூத்தாடி அப்பா, அம்மாவை தாஜா  செய்து காரியம் கைகூடாமல் கண்ணீர் விட்டு அழதவர்கள் எத்தனை பேர்,  அந்த கதைகளை எடுத்தாலே ஆயிரம் சினிமாவை இன்னும் புதிதாக எடுக்கலாம்.


    நான் பிறந்த ஊரில் புதிய படமென்பதை நினைத்து பார்க்கவே முடியாது.   ஊர், உலகமெல்லாம் ஒடி தேய்ந்து சாயம் போன பிலிம் சுருள்தான் வந்து சேரும், ஆனால் அதை பார்ப்பதில் எவ்வளவு சந்தோஷம்.  எங்கள் தெருவில் சினிமா பார்க்கும் திருவிழா எப்போதாவது ஒரு முறைதான் நடக்கும்.  பத்து பதினைந்து குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்து கொள்வார்கள்.   இடுக்கி, இடுக்கி உட்கார்ந்தால் கூட பத்து பேருக்கு மேல் அமர முடியாது ஜீப்பில் குஞ்சும் குறுமானுமாய் முப்பது பேருக்கு மேல் திணிக்கப்படுவோம்.  பிள்ளைகளூக்கு பால் பாட்டில், மாற்றுதுணி, கொறிக்க முறுக்கு என்று ஏகப்பட்ட அயிட்டகளுடன் பெண்கள் வளையல் ஒடிய இறுக்கைகளில் நெருக்கி தங்களை அடுக்கி கொள்வார்கள்.  ஆண்கள் ஜீப்பின் மேல் கூரையிலும் அதன் நீண்ட முகத்திலும் பின்புறத்திலும் சர்க்கஸ் சாகசம் செய்து கொண்டு தொங்குவார்கள் அங்கங்கே இருக்கும் சின்ன இடைவெளிகளில் சின்ன பிள்ளைகளான நாங்கள் சொருகப்பட்டிருபோம் கூட்டமும் இறுக்கமும்,  வியர்வை நாற்றமும் எங்களுக்கு ஒன்றும் பெரிதாக தெரியாது, மனமெல்லாம் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயசங்கர்  என கற்பனையில் பறந்து கொண்டிருக்கும்


   இப்போது ஒருவர் சினிமா பார்ப்பதற்கே நூறு ரூபாய்க்கு மேல் செலவாகி விடுகிறது.  அப்போது ஜீப் வாடகை, சினிமா கட்டணம், வாங்கி சாப்பிடும் செலவு உட்பட முப்பது பேருக்கு நூறு ரூபாய் தாண்டாது,  ஆனால் அந்த செலவுக்கு கூட பெருவாரியான மக்களிடம் பணம் இருக்காது.  பனைமரம் ஏறி பணைவெல்லம் காய்ச்சி, பீடி சுத்தி, கூடை பின்னி சிறிது சிறிதாக சேர்க்கும் பணம் இரண்டரை மணி நேர சந்தோஷத்திற்காக செலவு செய்வது  அவர்களால் எப்படி முடியும்.  மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு தான் தியேட்டருக்கு வருகிறார்கள் அவர்களிடமிருந்து வாங்கும் பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டுமென அப்போதைய தயாரிப்பாளர்கள் இயங்குநர்கள், கலைஞர்கள் எல்லோரும் நினைத்தனர்,  அதனால் தான் அவர்களால் தரமான திரைப்படங்களை தர முடிந்தது.


     இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது பணத்தை கொட்டி தர வேண்டியது மக்களின் கடமை கதையும் வேண்டாம், கத்திக்காயும் வேண்டாம் கதாநாயகனுக்கு எட்டு வசனத்தையும், நான்கு பாடலையும் கொடுப்போம், தேவையிருக்கிறதோ, இல்லையோ  நரம்புகளை முறுக்கேற்றும் சண்டை காட்சிகளை திணிப்போம்,  துவக்கத்திலிருந்து முடியும் வரை கதாநாயகியை அரை குறை ஆடையில் நடமாட விடுவோம்,  நம் கல்லா பெட்டி நிரம்பினால் சரி என்ற எண்ணம் சினிமாகாரர்களுக்கு தலைக்கு மேல் ஏறிவிட்டது,  திரைத்துறையினர் என்றாலே சமுதாய அக்கறையில்லாதவர்கள், அரசியல்வாதிகளுக்கும்  போதை மருந்து வியாபாகளுக்கும், இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது  என்று நினைக்க வேண்டிய காலம் வந்து கொண்டே இருக்கிறது.

   பிரம்மாண்டம் என்றே போர்வையில் எடுக்கப்படும் திரைபடங்கள் எல்லாம் கவர்ச்சியையும், வன்முறையை மட்டுமே பிரதானபடுத்துவதாகயிருக்கிறது,  திரையில் வரும் காட்சியில் உண்மை எது, பொய் எது என்று தெரியாமல் நடுத்தர தமிழனும், இளைய தமிழனும் தடுமாறி போய் தெருவில் நிற்கிறார்கள்.

கொள்ளையடிப்பதில் எத்தனை வகையிருக்கிறது தமிழ் சினிமாவை பார், நவீன முறையில் எப்படி எல்லாம் மக்களை சுரண்டலாம் தமிழ் சினிமாவை பார்.  சுரண்டிய பணத்திற்கு வரிகட்டாமல் தப்பிக்க என்னென்ன வழிகள் உள்ளன  தமிழ்சினிமாவை பார்.   குறுக்கு வழியில் பதவியை பிடிக்க வேண்டுமா?தமிழ் சினிமாவை பார். 


.   பருவம் அரும்பும் முன்னே காதல் கடிதம் எழுத வேண்டுமா?  தமிழ் சினிமாவை பார்.  காதலனை அல்லது காதலியை அடிக்கடி மாற்றி கொள்ள வழி தெரியவில்லையா?  தமிழ்சினிமாவை பார்.  பான்பார்க், ஜர்தா, இன்னும் என்னென்ன புகையிலை அயிட்டங்கள் உண்டோ அத்தனையும் தெரிந்து கொள்ள வேண்டுமா?  தமிழ் சினிமாவை பார்.  குடித்துவிட்டு நடுரோட்டில் கலாட்டா செய்யும் ரகசியம் தெரியவில்லையா?  தமிழ்சினிமாவை பார்.  வெடிகுண்டுகள் தயாக்கும் தொழில்நுட்பம் தெரிய வேண்டுமா?  தமிழ் சினிமாவை பார்.  எங்கெங்கு குண்டு வைத்தால் கொத்தாக மக்கள் சாவார்கள் என்று தெரியாமல் விழிக்கிறாயா?  தமிழ்சினிமாவை பார்.  ஆதரமே இல்லாமல் கொலை செய்ய வேண்டுமா?  செய்த கொலையை அடையாளமே இல்லாமல் மறைக்க வேண்டுமா?  கொலை செய்வதற்கு வெட்டு, குத்து தவிற நவீன முறைகள் எதாவது  வேண்டுமா?  கவலையே வேண்டாம் தமிழ்சினிமா ஆயிரம் வழிகளை கற்பிக்க தயாராக இருக்கிறது.  ஆடைகளை குறைத்தால் மட்டும்; போதுமா?  அங்கங்களின் கவர்ச்சியை கடைதெருவுக்கு கொண்டு வர வழி தெரியவில்லையா?  என்னென்ன ரீதியில் பாலியல் பலத்காரம் செய்யலாம் என்று நினைத்து குழம்பி போய் கிடக்கிறாயா?  ஒரு படம், ஒரே ஒரு படம் தமிழ் படம் போதும்,  உலகத்திலுள்ள அனைத்து வக்கிரங்களையும் தெள்ளத்தெளிவாக கற்று கொள்ளலாம்.


  சினிமா ஊடகம் என்பது மிக சக்திவாய்ந்த கருவியாகும்.  ஆயிரம் புத்தகங்களில் எழுத வேண்டிய விஷயத்தை, ஆயிரம் மேடை போட்டு பேச வேண்டிய விஷயத்தை இரண்டே காட்சிகளில் மக்கள் மனதிற்குள் ஆழ பதிய வைத்து விடலாம் சுகந்திர தாகத்தை வளர்க்க விரும்பியது சினிமா.  சமுதாயத்தில் உள்ள வறுமை கொடுமையை ஏழ்மை நாற்றத்தை மக்களுக்கு சொல்லி விழிப்படைய     செய்தது சினிமா.  ஜாதியின் பிடிக்குள் அகப்பட்டு அடிமைப்பட்டு, பலமற்று கிடந்த அப்பாவி மனிதர்களை கூட்டணியாக சேர்த்து உரிமைக்கு ஒங்கி குரல் கொடுக்க செய்தது சினிமா,  அத்தகைய அற்புதமான சாதனம் இன்று அற்பர்களின் கைக்குள் அகப்பட்டு விஷ விதைகளை நாடெங்கும் தூவி கொண்டிருக்கிறது.  தான் உண்ணுவது விஷ மென்பது தெரியாமலே இந்த விஷம் தன்னையும் தனது தலைமுறையும் சுவடு கூட இல்லாமல் அழித்து விட போகிறது என்பது அறியாமல் மக்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள். 


     ஆன்மிகம், மதம் என்பவையெல்லாம் மக்களின் அறிவை மழுங்கடித்து, கற்பனையான மாயா உலகில் சஞ்சரிக்க செய்கிறது.  எனவே மதம் என்னும் அபினை ஒழித்து கட்ட வேண்டும் என்று காரல்மார்க்ஸ் சொன்னார்.  அவர் வாழ்ந்த காலத்தில் மதம் என்னும் கொடிய அரக்கன் தான்மக்களின் உழைப்பையும், உயர்வையும் உண்டு கொளுத்துக் கொண்டிருந்தான்.  உலகம் முழவதும் மதமும் மதவாதிகளும் அன்று செய்த நாசகார வேலையை இன்று சினிமாவும், சினிமாகாறார்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்,  ஆன்மிக போர்வையை போர்த்திய மதவாதிகள்  போல் கலைப்போர்வையை இவர்கள் போர்த்தி இருக்கிறார்கள்.  அவ்வளவு தான் வித்தியாசம்

.
    நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி வேலை வெட்டி எதுக்கும் போகாமல், ஊர் சுற்றி கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் அனைவருமே தற்கால திரைப்பட நடிகர்களின் ரசிகர் கூட்டம் தான்.  வீதியில் நின்று வம்பளப்பது குடித்து விட்டு கலாட்டா செய்வது, பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வது இன்னும் பிற முக்கிய பணிகளே இவர்களின் அன்றாட வாழ்க்கை ஆகும்.  தங்களது  தலைவர்களின் படம் ரீலிஸ் ஆகுமென்று சுவற்றில் எழதுவது, கட் அவுட் கட்டுவது பாலாபிஷேகம் செய்வது,  வெள்ளி திரைக்கு தீபாராதனை காட்டுவது என புதிய அவதாரம் எடுப்பார்கள். பொது சொத்துக்களை அதிகமாக  பாதிப்படைய செய்வது யாரோ அவர்களே மிகச் சிறந்த ரசிகர்கள் என்று பாராட்டி சம்பந்தப்பட்ட நடிகர்கள் பட்டயம் கொடுப்பார்கள்.

  இவ்வளவு பெரிய வெட்டி கும்பல் தனக்கு பின்னால் இருப்பதை அறிந்து கொள்ளும் நடிகர்கள் கோடம்பாக்கத்தை விட்டுவிட்டு கோட்டையை பிடிக்க களமிறங்கி விடுவார்கள். சினிமாவில் எழுதி தரும் வசனத்தை பேசி மக்களை மயக்குவது போல் மேடையில் பேசி நாற்காலியில் உட்கார்ந்து விடலாம் என்ற கனா  காண்கிறார்கள்.

1967-முதல் இன்று வரை தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே எதாவது ஒரு வகையில் சினிமாவை தொழிலாக கொண்டவர்கள் தான்.   சினிமாகாரர்களால் மட்டும் தான் சின்ன விஷயத்தையும் மாபெரும் தியாகமாக சித்தத்து மக்களை மூளைச்சலவை செய்து விட முடிகிறது.  இதனால் உண்மையான நிர்வாகிகள், திறமைசாலிகள் கவர்ச்சி புயலில் கரைந்து போய் ஒட்டு மொத்த தமிழ் நாடே சினிமா கொட்டகையாக மாறிக் கிடக்கிறது. 


   இப்படி நான் மொத்தமாக குற்றம் சாட்டுவதினால் நல்ல, சினிமா எதுவும் என் கண்ணில் படவில்லையா?  நல்ல சினிமா காரர்கள் யாரையும் நான் பார்த்ததில்லையா?  என்று கேட்க தோன்றும் இன்று கூட பல நல்ல சினிமாக்கள் திரைக்கு வருகின்றது.  உதாரணத்திற்கு அப்படிப்பட்ட படம் ஒன்றை சொல்வதுயென்றால் மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தை சொல்லாம்.  ஒரு குடும்பத்தில் இயல்பாக உருவாகும் பிரச்சனைகளை எந்த ஆயுதத்தை கொண்டு தகர்த்து எறியலாம் என்பதை மிக யதார்த்தமாக சொல்லி இருப்பார் இயங்குநர் ஆனால் அப்படிப்பட்ட சிறந்த படம் எத்தனை பேரால் பார்க்கப்பட்டது.  அது அடைந்த வெற்றி என்ன?  ஒன்றும் பிரம்மாதமாக சொல்வதற்கில்லை.

   இப்படி நான் சொன்னவுடன் பார்த்தீர்களா நல்ல படம் எடுத்தால் பார்ப்பதற்கு நாட்டில் ஆள் இல்லை.  படத்தை ஒட்டும் தியேட்டர் முதலாளி தலையில் மட்டுமல்ல வயிற்றிலும் துண்டை போட்டு கொள்ள வேண்டியது தான்.   சினிமாகாரரும் மனிதன் தானே, அவனுக்கம் குடும்பம் இருக்கிறது.  பசியெடுக்க வயிறு இருக்கிறது.  மக்கள் விரும்புவதை எடுத்து நாலு காசு சம்பாதித்தால் என்ன தவறு என்று கேட்க தோன்றும்.


இந்த கேள்வியில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஆனால் உண்மையென்பது இந்த கேள்வியையும் தாண்டி உள்ளே மறைந்திருக்கிறது அந்தகால சினிமாவிலும் கவர்ச்சியிருந்தது, உண்மையை பட்டவர்த்தனமாக சொல்வதாயிருந்தால் எம்.ஜி.ஆர் படங்களில் அந்த கவர்ச்சி சற்று தூக்கலாகவே இருக்கும்.  ஆனால் அது முகம் சுளிக்கும் அளவிற்கு அசிங்கமாக இருக்காது.  அழகுணர்ச்சியை தூண்டுவதாகவே அந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.  உண்மையான கிரோயிசம் என்பது கதாநாயகியை துரத்துவதிலோ சண்டை போடுவதிலோ இல்லை.  ஒழக்கமாக நடந்து கொள்வது, சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் அர்ப்பணிப்போடு உழைப்பதில் இருக்கிறது என சிவாஜி, எம்.ஜ.ஆர், கால படங்கள் மக்களுக்கு பாடம் நடத்தியது.


  ஒருவனை வலிய குடிக்க வைத்து விட்டு அவனுக்கு குடிகாரன் என பட்டம் சூட்டுவது போல கீழ்த்தரமான படங்களை தொடர்ச்சியாக எடுத்து விட்டு மக்களின் ரசனை உணர்வை ஆபாசமாக்கி விட்டு  நாங்கள் என்ன செய்வது நிலைமை அப்படியிருக்கிறது என பம்மாத்து காட்டுவது சுத்த அயோக்கியத்தனம்.  நான் வேண்டுவது ஒன்றே ஒன்று தான்.  மக்களிடம் இருந்து வாங்கும் பணத்திற்க்க மயக்கமருந்துகளை கொடுக்காதீர்கள்.  மயக்கம் தீர்க்கும் மருந்துகளை கொடுங்கள் என்பது தான்.