ஒரு காலத்தில் சினிமாவுக்கு போவது என்பது கிராமங்களில் திருவிழா போலவே நடந்தேறும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழா மிகவும் சுவாரசியமானது, அனுபவித்தவர்களுக்குத் தான் அதன் சுகம் தெரியும். இப்போது மாதிரி அப்போது எல்லாம் நகரங்களை தவிர கிராமங்களில் சினிமா வெளி வந்தவுடனயே பார்த்து விட முடியாது. வெளிவந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு கூட சில கொட்டகைகளில் பிரம்ம பிரயத்தனத்துடன் தான் படம் வரும்.
.
நகரத்திலிருந்து கிராமத்திற்கு வருபவரோ அல்லது கிராமத்திலிருந்து நகரத்திற்க்கு சென்று படம் பார்த்தவரோ ஊருக்கு வந்த உடனே கதையை சொல்லி விடுவார். அதில் நடிகர், நடிகைகளின் நடிப்பு உடை அலங்காரம், சண்டை, அழகை எல்லாமே படம் பார்த்தவர் விவரிக்க கேட்பவர்கள் வாய்பிளந்து கொண்டிருப்பார்கள், பக்கத்து ஊரில் அந்த படம் வந்தவுடன் இதுவரை மனதிற்குள் கற்பனையாக முடங்கி கிடந்ததை திரையில் காண்பதற்கு இளைய மனதுகள் துடியாய் துடிக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் அனுமதி பெறாமல் சினிமா பக்கம் தலை வைக்க முடியாது. தயங்கி தயங்கி ஆவலை அவர்களிடம் சொன்னால் நெல்லு கதிர் சாயும் பருவத்தில் இருக்கிறது. வாழை குலைத் தள்ள போகிறது, உரம் வாங்கி போட்டால் தான் விளைச்சலை நல்லபடியாக பார்க்கலாம். நாலு பேர் சினிமாவுக்கு போனால் பத்து, முப்பது ரூபாய் செலவாகி விடும். அடுத்தமாதம் பார்த்து கொள்ளலாம். இப்போது சும்மாயிரு என்று கடுப்பாக பேசி விடுவார்கள்.
நெல் கதிர் சாயும் வரை, வாழை குலை தள்ளும் வரை, தியேட்டரில் அதே படம் ஒடிக்கொண்டிருக்குமா? சிவாஜி கனேசனின் நடையழகை சரோஜா தேவியின் அபிநயத்தை. எம்.ஜி.ஆர்-ன் சண்டை போடும்; திறமையை விரும்பிய போது பார்க்க முடியாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என விம்மி வெடித்தவர்கள் எத்தனை பேர், கோபத்தில் குதித்தவர்கள் எத்தனை பேர், கெஞ்சி கூத்தாடி அப்பா, அம்மாவை தாஜா செய்து காரியம் கைகூடாமல் கண்ணீர் விட்டு அழதவர்கள் எத்தனை பேர், அந்த கதைகளை எடுத்தாலே ஆயிரம் சினிமாவை இன்னும் புதிதாக எடுக்கலாம்.
நான் பிறந்த ஊரில் புதிய படமென்பதை நினைத்து பார்க்கவே முடியாது. ஊர், உலகமெல்லாம் ஒடி தேய்ந்து சாயம் போன பிலிம் சுருள்தான் வந்து சேரும், ஆனால் அதை பார்ப்பதில் எவ்வளவு சந்தோஷம். எங்கள் தெருவில் சினிமா பார்க்கும் திருவிழா எப்போதாவது ஒரு முறைதான் நடக்கும். பத்து பதினைந்து குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்து கொள்வார்கள். இடுக்கி, இடுக்கி உட்கார்ந்தால் கூட பத்து பேருக்கு மேல் அமர முடியாது ஜீப்பில் குஞ்சும் குறுமானுமாய் முப்பது பேருக்கு மேல் திணிக்கப்படுவோம். பிள்ளைகளூக்கு பால் பாட்டில், மாற்றுதுணி, கொறிக்க முறுக்கு என்று ஏகப்பட்ட அயிட்டகளுடன் பெண்கள் வளையல் ஒடிய இறுக்கைகளில் நெருக்கி தங்களை அடுக்கி கொள்வார்கள். ஆண்கள் ஜீப்பின் மேல் கூரையிலும் அதன் நீண்ட முகத்திலும் பின்புறத்திலும் சர்க்கஸ் சாகசம் செய்து கொண்டு தொங்குவார்கள் அங்கங்கே இருக்கும் சின்ன இடைவெளிகளில் சின்ன பிள்ளைகளான நாங்கள் சொருகப்பட்டிருபோம் கூட்டமும் இறுக்கமும், வியர்வை நாற்றமும் எங்களுக்கு ஒன்றும் பெரிதாக தெரியாது, மனமெல்லாம் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயசங்கர் என கற்பனையில் பறந்து கொண்டிருக்கும்
இப்போது ஒருவர் சினிமா பார்ப்பதற்கே நூறு ரூபாய்க்கு மேல் செலவாகி விடுகிறது. அப்போது ஜீப் வாடகை, சினிமா கட்டணம், வாங்கி சாப்பிடும் செலவு உட்பட முப்பது பேருக்கு நூறு ரூபாய் தாண்டாது, ஆனால் அந்த செலவுக்கு கூட பெருவாரியான மக்களிடம் பணம் இருக்காது. பனைமரம் ஏறி பணைவெல்லம் காய்ச்சி, பீடி சுத்தி, கூடை பின்னி சிறிது சிறிதாக சேர்க்கும் பணம் இரண்டரை மணி நேர சந்தோஷத்திற்காக செலவு செய்வது அவர்களால் எப்படி முடியும். மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு தான் தியேட்டருக்கு வருகிறார்கள் அவர்களிடமிருந்து வாங்கும் பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டுமென அப்போதைய தயாரிப்பாளர்கள் இயங்குநர்கள், கலைஞர்கள் எல்லோரும் நினைத்தனர், அதனால் தான் அவர்களால் தரமான திரைப்படங்களை தர முடிந்தது.
இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது பணத்தை கொட்டி தர வேண்டியது மக்களின் கடமை கதையும் வேண்டாம், கத்திக்காயும் வேண்டாம் கதாநாயகனுக்கு எட்டு வசனத்தையும், நான்கு பாடலையும் கொடுப்போம், தேவையிருக்கிறதோ, இல்லையோ நரம்புகளை முறுக்கேற்றும் சண்டை காட்சிகளை திணிப்போம், துவக்கத்திலிருந்து முடியும் வரை கதாநாயகியை அரை குறை ஆடையில் நடமாட விடுவோம், நம் கல்லா பெட்டி நிரம்பினால் சரி என்ற எண்ணம் சினிமாகாரர்களுக்கு தலைக்கு மேல் ஏறிவிட்டது, திரைத்துறையினர் என்றாலே சமுதாய அக்கறையில்லாதவர்கள், அரசியல்வாதிகளுக்கும் போதை மருந்து வியாபாகளுக்கும், இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என்று நினைக்க வேண்டிய காலம் வந்து கொண்டே இருக்கிறது.
பிரம்மாண்டம் என்றே போர்வையில் எடுக்கப்படும் திரைபடங்கள் எல்லாம் கவர்ச்சியையும், வன்முறையை மட்டுமே பிரதானபடுத்துவதாகயிருக்கிறது, திரையில் வரும் காட்சியில் உண்மை எது, பொய் எது என்று தெரியாமல் நடுத்தர தமிழனும், இளைய தமிழனும் தடுமாறி போய் தெருவில் நிற்கிறார்கள்.
கொள்ளையடிப்பதில் எத்தனை வகையிருக்கிறது தமிழ் சினிமாவை பார், நவீன முறையில் எப்படி எல்லாம் மக்களை சுரண்டலாம் தமிழ் சினிமாவை பார். சுரண்டிய பணத்திற்கு வரிகட்டாமல் தப்பிக்க என்னென்ன வழிகள் உள்ளன தமிழ்சினிமாவை பார். குறுக்கு வழியில் பதவியை பிடிக்க வேண்டுமா?தமிழ் சினிமாவை பார்.
. பருவம் அரும்பும் முன்னே காதல் கடிதம் எழுத வேண்டுமா? தமிழ் சினிமாவை பார். காதலனை அல்லது காதலியை அடிக்கடி மாற்றி கொள்ள வழி தெரியவில்லையா? தமிழ்சினிமாவை பார். பான்பார்க், ஜர்தா, இன்னும் என்னென்ன புகையிலை அயிட்டங்கள் உண்டோ அத்தனையும் தெரிந்து கொள்ள வேண்டுமா? தமிழ் சினிமாவை பார். குடித்துவிட்டு நடுரோட்டில் கலாட்டா செய்யும் ரகசியம் தெரியவில்லையா? தமிழ்சினிமாவை பார். வெடிகுண்டுகள் தயாக்கும் தொழில்நுட்பம் தெரிய வேண்டுமா? தமிழ் சினிமாவை பார். எங்கெங்கு குண்டு வைத்தால் கொத்தாக மக்கள் சாவார்கள் என்று தெரியாமல் விழிக்கிறாயா? தமிழ்சினிமாவை பார். ஆதரமே இல்லாமல் கொலை செய்ய வேண்டுமா? செய்த கொலையை அடையாளமே இல்லாமல் மறைக்க வேண்டுமா? கொலை செய்வதற்கு வெட்டு, குத்து தவிற நவீன முறைகள் எதாவது வேண்டுமா? கவலையே வேண்டாம் தமிழ்சினிமா ஆயிரம் வழிகளை கற்பிக்க தயாராக இருக்கிறது. ஆடைகளை குறைத்தால் மட்டும்; போதுமா? அங்கங்களின் கவர்ச்சியை கடைதெருவுக்கு கொண்டு வர வழி தெரியவில்லையா? என்னென்ன ரீதியில் பாலியல் பலத்காரம் செய்யலாம் என்று நினைத்து குழம்பி போய் கிடக்கிறாயா? ஒரு படம், ஒரே ஒரு படம் தமிழ் படம் போதும், உலகத்திலுள்ள அனைத்து வக்கிரங்களையும் தெள்ளத்தெளிவாக கற்று கொள்ளலாம்.
சினிமா ஊடகம் என்பது மிக சக்திவாய்ந்த கருவியாகும். ஆயிரம் புத்தகங்களில் எழுத வேண்டிய விஷயத்தை, ஆயிரம் மேடை போட்டு பேச வேண்டிய விஷயத்தை இரண்டே காட்சிகளில் மக்கள் மனதிற்குள் ஆழ பதிய வைத்து விடலாம் சுகந்திர தாகத்தை வளர்க்க விரும்பியது சினிமா. சமுதாயத்தில் உள்ள வறுமை கொடுமையை ஏழ்மை நாற்றத்தை மக்களுக்கு சொல்லி விழிப்படைய செய்தது சினிமா. ஜாதியின் பிடிக்குள் அகப்பட்டு அடிமைப்பட்டு, பலமற்று கிடந்த அப்பாவி மனிதர்களை கூட்டணியாக சேர்த்து உரிமைக்கு ஒங்கி குரல் கொடுக்க செய்தது சினிமா, அத்தகைய அற்புதமான சாதனம் இன்று அற்பர்களின் கைக்குள் அகப்பட்டு விஷ விதைகளை நாடெங்கும் தூவி கொண்டிருக்கிறது. தான் உண்ணுவது விஷ மென்பது தெரியாமலே இந்த விஷம் தன்னையும் தனது தலைமுறையும் சுவடு கூட இல்லாமல் அழித்து விட போகிறது என்பது அறியாமல் மக்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள்.
ஆன்மிகம், மதம் என்பவையெல்லாம் மக்களின் அறிவை மழுங்கடித்து, கற்பனையான மாயா உலகில் சஞ்சரிக்க செய்கிறது. எனவே மதம் என்னும் அபினை ஒழித்து கட்ட வேண்டும் என்று காரல்மார்க்ஸ் சொன்னார். அவர் வாழ்ந்த காலத்தில் மதம் என்னும் கொடிய அரக்கன் தான்மக்களின் உழைப்பையும், உயர்வையும் உண்டு கொளுத்துக் கொண்டிருந்தான். உலகம் முழவதும் மதமும் மதவாதிகளும் அன்று செய்த நாசகார வேலையை இன்று சினிமாவும், சினிமாகாறார்களும் செய்து கொண்டிருக்கிறார்கள், ஆன்மிக போர்வையை போர்த்திய மதவாதிகள் போல் கலைப்போர்வையை இவர்கள் போர்த்தி இருக்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்
நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி வேலை வெட்டி எதுக்கும் போகாமல், ஊர் சுற்றி கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் அனைவருமே தற்கால திரைப்பட நடிகர்களின் ரசிகர் கூட்டம் தான். வீதியில் நின்று வம்பளப்பது குடித்து விட்டு கலாட்டா செய்வது, பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வது இன்னும் பிற முக்கிய பணிகளே இவர்களின் அன்றாட வாழ்க்கை ஆகும். தங்களது தலைவர்களின் படம் ரீலிஸ் ஆகுமென்று சுவற்றில் எழதுவது, கட் அவுட் கட்டுவது பாலாபிஷேகம் செய்வது, வெள்ளி திரைக்கு தீபாராதனை காட்டுவது என புதிய அவதாரம் எடுப்பார்கள். பொது சொத்துக்களை அதிகமாக பாதிப்படைய செய்வது யாரோ அவர்களே மிகச் சிறந்த ரசிகர்கள் என்று பாராட்டி சம்பந்தப்பட்ட நடிகர்கள் பட்டயம் கொடுப்பார்கள்.
இவ்வளவு பெரிய வெட்டி கும்பல் தனக்கு பின்னால் இருப்பதை அறிந்து கொள்ளும் நடிகர்கள் கோடம்பாக்கத்தை விட்டுவிட்டு கோட்டையை பிடிக்க களமிறங்கி விடுவார்கள். சினிமாவில் எழுதி தரும் வசனத்தை பேசி மக்களை மயக்குவது போல் மேடையில் பேசி நாற்காலியில் உட்கார்ந்து விடலாம் என்ற கனா காண்கிறார்கள்.
1967-முதல் இன்று வரை தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே எதாவது ஒரு வகையில் சினிமாவை தொழிலாக கொண்டவர்கள் தான். சினிமாகாரர்களால் மட்டும் தான் சின்ன விஷயத்தையும் மாபெரும் தியாகமாக சித்தத்து மக்களை மூளைச்சலவை செய்து விட முடிகிறது. இதனால் உண்மையான நிர்வாகிகள், திறமைசாலிகள் கவர்ச்சி புயலில் கரைந்து போய் ஒட்டு மொத்த தமிழ் நாடே சினிமா கொட்டகையாக மாறிக் கிடக்கிறது.
இப்படி நான் மொத்தமாக குற்றம் சாட்டுவதினால் நல்ல, சினிமா எதுவும் என் கண்ணில் படவில்லையா? நல்ல சினிமா காரர்கள் யாரையும் நான் பார்த்ததில்லையா? என்று கேட்க தோன்றும் இன்று கூட பல நல்ல சினிமாக்கள் திரைக்கு வருகின்றது. உதாரணத்திற்கு அப்படிப்பட்ட படம் ஒன்றை சொல்வதுயென்றால் மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தை சொல்லாம். ஒரு குடும்பத்தில் இயல்பாக உருவாகும் பிரச்சனைகளை எந்த ஆயுதத்தை கொண்டு தகர்த்து எறியலாம் என்பதை மிக யதார்த்தமாக சொல்லி இருப்பார் இயங்குநர் ஆனால் அப்படிப்பட்ட சிறந்த படம் எத்தனை பேரால் பார்க்கப்பட்டது. அது அடைந்த வெற்றி என்ன? ஒன்றும் பிரம்மாதமாக சொல்வதற்கில்லை.
இப்படி நான் சொன்னவுடன் பார்த்தீர்களா நல்ல படம் எடுத்தால் பார்ப்பதற்கு நாட்டில் ஆள் இல்லை. படத்தை ஒட்டும் தியேட்டர் முதலாளி தலையில் மட்டுமல்ல வயிற்றிலும் துண்டை போட்டு கொள்ள வேண்டியது தான். சினிமாகாரரும் மனிதன் தானே, அவனுக்கம் குடும்பம் இருக்கிறது. பசியெடுக்க வயிறு இருக்கிறது. மக்கள் விரும்புவதை எடுத்து நாலு காசு சம்பாதித்தால் என்ன தவறு என்று கேட்க தோன்றும்.
இந்த கேள்வியில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் உண்மையென்பது இந்த கேள்வியையும் தாண்டி உள்ளே மறைந்திருக்கிறது அந்தகால சினிமாவிலும் கவர்ச்சியிருந்தது, உண்மையை பட்டவர்த்தனமாக சொல்வதாயிருந்தால் எம்.ஜி.ஆர் படங்களில் அந்த கவர்ச்சி சற்று தூக்கலாகவே இருக்கும். ஆனால் அது முகம் சுளிக்கும் அளவிற்கு அசிங்கமாக இருக்காது. அழகுணர்ச்சியை தூண்டுவதாகவே அந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். உண்மையான கிரோயிசம் என்பது கதாநாயகியை துரத்துவதிலோ சண்டை போடுவதிலோ இல்லை. ஒழக்கமாக நடந்து கொள்வது, சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் அர்ப்பணிப்போடு உழைப்பதில் இருக்கிறது என சிவாஜி, எம்.ஜ.ஆர், கால படங்கள் மக்களுக்கு பாடம் நடத்தியது.
ஒருவனை வலிய குடிக்க வைத்து விட்டு அவனுக்கு குடிகாரன் என பட்டம் சூட்டுவது போல கீழ்த்தரமான படங்களை தொடர்ச்சியாக எடுத்து விட்டு மக்களின் ரசனை உணர்வை ஆபாசமாக்கி விட்டு நாங்கள் என்ன செய்வது நிலைமை அப்படியிருக்கிறது என பம்மாத்து காட்டுவது சுத்த அயோக்கியத்தனம். நான் வேண்டுவது ஒன்றே ஒன்று தான். மக்களிடம் இருந்து வாங்கும் பணத்திற்க்க மயக்கமருந்துகளை கொடுக்காதீர்கள். மயக்கம் தீர்க்கும் மருந்துகளை கொடுங்கள் என்பது தான்.
No comments:
Post a Comment