Monday, 23 May 2011

சேலை


ம்மா உன் சேலையை
தொட்டுப் பார்க்கிறேன்
அதனால்
நான் பெற்றப்பேரை
எண்ணிப் பார்க்கிறேன்
தொலைந்த இன்பத்தை
கண்ணில் பார்க்கிறேன்
அடுத்தப்
பிறவியிலும்  
நீ வேண்டுமென்று
கடவுளைக் கேட்கிறேன்


நான் பிறந்து விழுந்தபோது
உன் சேலை ஈரம் துடைத்தது
நான் உறங்கி மகிழ்வதற்கு
உன்சேலை தூளி ஆனது
பாலறுந்தும் போதெனக்கு
உன்சேலை திரையானது
என்கடைவாயில் ஒழுகும் எச்சிலை 
உன்சேலைத்தான் துடைத்தது
தத்தி நானும் நடக்கும் போது
உன் சேலை கைப்பிடியாய் வந்தது
எனக்கு பல்முளைத்த குறுகுறுப்பை
உன்சேலைத்தான் தீர்த்தது
என் சின்னமேனி மழையில்
நனையாமல் உன் சேலை குடைபிடித்தது

மாமரத்துக் கிளையில்
ஊஞ்சலில் என்னை ஆட்டியதும்
உன்சேலைத்தான்
மார்கழி குளிரில் போர்வையாய்
இளஞ்சுடு தந்ததும்
உன்சேலைத்தான்
மத்தியான வெயிலில்
தலையில் முக்காடிட்டதும்
உன்சேலைத்தான்
நான் பனம்பழம் தின்று
கைத்துடைத்ததும்
உன்சேலைத்தான்

நீச்சல் பழக
இடுப்பில் கட்டியதும்
உன்சேலைத்தான்
ஆற்றில் மீன் பிடிக்க
வலையாய் ஆனதும்
உன்சேலைத்தான்
ஈரத்தில்
ஊறிய  
என்தலையை துவட்டியதும்
உன்சேலைத்தான்

அப்பா அடிக்க
வரும்போது
ஒளித்து என்னை வைத்ததும்
உன்சேலைத்தான்
பள்ளிக்கூட வாத்தியாரின்
முரட்டு மீசைக்கண்டு
பதுக்கி வைத்ததும்
உன்சேலைத்தான்

தலைவலிக்கு
ஒத்தடம் கொடுத்ததும்
உன்சேலைத்தான்
கல்பட்டு
வடிந்த ரத்தத்தை
கட்டி நிறுத்தியதும்
உன்சேலைத்தான்
மிட்டாய்
மறைத்துவைத்துக் கொடுத்ததும்
உன்சேலைத்தான்
காசு திருடியதால்
கட்டி வைத்து அடித்ததும்
உன்சேலைத்தான்

உன் கிழிந்த சேலைத்தான்
அக்காவுக்கு தாவணி
நீ கிழித்து கொடுத்ததுதான்
பாப்பாவுக்கு பூந்துணி
உன் சேலைக்கிழிசல்தான்
தம்பிக்கு கோவணம்
உன் சேலைத் தலைப்புத்தான்
அப்பாவுக்கு மோகனம்
உன்சேலை பொத்தல்தான்
நம்குடும்ப சீதனம்
உன்சேலை அழுக்குத்தான்
எனை உயர்த்திய வாகனம்

ஒரு சேலை உறவு வந்தாலும்
இன்னொறு
சேலை வந்து பிறந்தாலும்
உன்சேலை
உறவு போகாது
அதுபோனால்
என்னுடலும் வேகாது

என்நோய்க்கு
பத்தியம் காத்தது
இந்தச்சேலை தானம்மா
என் உயிரையும் உடலையும்
வளர்த்தது
இந்தச்சேலை தானம்மா
என்கனவை
நிஜமாய் சமைத்தது
இந்தச் சேலை உழைப்பம்மா
என் உயிர் மடிந்தால்
போர்த்த வேண்டும்
இந்தச்சேலையை  தானம்மா!

No comments:

Post a Comment