Monday, 9 January 2012

மணமூட்டும் உணவே மருந்து!

யுந்தே.கேமரூன் நாட்டின் தலைநகரம்.மத்திய ஆப்பிரிக்கவின் மேற்கு ஓரத்தில் உள்ள இயற்கை வளம் மிக்க நாடு.உலக பாரம்பரிய மருத்துவ மாநாட்டிற்காக்க் கடந்த வாரத்தில் அங்கு செல்ல நேர்ந்தது. நம் ஊர் ஏலகிரி மலை அளவில் உள்ள மலை நகரம். ஆனால், அது அந்நாட்டின் தலைநகரம். ஒரு பிரபல பிரஞ்சு ஓட்டலில் தங்கி இருந்த எங்களில் இரண்டே பேர் மட்டுமே சைவ உணவுப் பிரியர்கள். நீந்திச் செல்வதில் கப்பலும், பறப்பதில் விமானம் தவிர அனைத்து ஜீவராசிகளும் விருந்தாய்ப் படைக்கப்பட்டிருந்தன. சரி பரவாயில்லை..பசிக்குக் கொஞ்சம் கோழி,மீனாவது சாப்பிடலாம் என்றால்,அத்தனையும் உப்பு புளி காரம் மசாலா இல்லாமல் பத்தியமாய் வேகவைத்து இருந்தது. அசைவம் சாப்பிடும் ஆசையில் இருந்த இன்னும் இரு இந்தியர்கள் தட்டை ஏந்திக் கொண்டு பரிதாபமாய் ”வாயில் வைக்க விளங்கலையே, டாக்டர்,”என்றனர்.
நமக்குப் பரிச்சயமானது எது அங்கில்லை என்று யோசித்த போது, ” அறு சுவை இல்லை;மசாலா எனும் மணப்பொருள் உணவில் இரண்டறக் கலக்கவில்லை” என்பது புரிந்தது. உலகில் மசாலாக்களை உணவாய்ச் சேர்க்கும் பழக்கம் இந்தியாவிலும் சீனாவிலும் தான் அதிகம் உண்டு.மற்றவர் மணமூட்டியாக,தேனீர் கலவையாக மட்டுமே இந்த மசாலாக்களை அறிந்திருந்தனர். தினசரி உணவில் நாம் எத்தனை நறுமணப் பொருட்களை,மசாலாப் பொருட்களை சேர்க்கிறோம் தெரியுமா? பள்ளிக் காலத்தில் முனங்கிக் கொண்டே நான்கைந்து அலுமினிய தூக்கு வாளியை சைக்கிளில் போட்டுக் கொண்டு சாம்பார் பொடி,ரசப்பொடி,புளிக்குழம்பு பொடி திரித்து வர தூரத்து ரைஸ்மில்லுக்கு போய் தும்மிக்கொண்டே திரும்பி வருவது இன்னும் மறக்கமுடியவில்லை.”வாரம் வாரம் திரிக்கப் போகணுமா?ஒரு வருசத்துக்கு மொத்தமா திரிக்க வேண்டியது தானே என தகராறு பண்ணியதும்,” அதற்கு அம்மா,”மொத்தமா திரிச்சா மணம் மட்டுமல்ல,கூடவே நல்ல பலனும் போய்விடும் என்று volatile ஆக உள்ள phytomolicules ஐப் பற்றி அழகாய்ச் சொன்னதும் நினைவில் உள்ளது.
மஞ்சள்,மிளகு,மிளகாய் வற்றல், கொத்துமல்லி,இலவங்கம்,இலவங்கபட்டை,
ஏலம்,அன்னாசிப்பூ,கிராம்பு,வெந்தயம்,சீரகம், சோம்பு,பூண்டு,பெருங்காயம்,என நாம் அன்றாடம் சேர்க்கும் பட்டியலில் உள்ள அனைத்துமே மணமூட்டிகள் மட்டுமல்ல.மூலிகைகளும் கூட. கொஞ்சம் அதன் மணத்தையும் மகத்துவத்தையும் முகரலாமா?
ஒவ்வொரு முறை உணவு தயாரித்து முடித்த பின்பு உணவைத் தாளித்து எடுக்கின்றோம். இந்த தாளிசம் செய்யும் முறைக்குப் பின்னால் ஒரு மருத்துவ பிண்ண்னியே உள்ளதென்பது உங்களுக்கு தெரியுமா? வெளினாட்டு உணவுக் கலாச்சாரத்தில் தாளிசம் கிடையாது. டிரெஸ்ஸிங் எனும் அலங்காரம் மட்டும் தான் உண்டு.
ஏன் உணவை தாளிக்கின்றோம்?.உணவு தயாரிக்கும் சமயம், சுவை ஒன்றோடு ஒன்று கலக்கும் போது, அதன் மூலப்பொருட்களும் கலக்கும்.அப்போது ஏற்படும் மாறுதல்களில்,நம் உடலைப் பாதிக்கும் எந்த ஒரு சிறு நிகழ்வும் ஏற்படாது இருக்க, திரிதோட சமப் பொருட்கள் (வாதம், பித்தம், கபம் எனும் திரிதோடத்தையும் சமமாய் நன்னிலையில் வைத்திருக்கும் பொருள் ) எனும் எட்டு வகை கார நறுமணப்பொருட்களை கடைசியில் சேர்க்கும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து இருந்தனர். இப்போது தாளித்து எடுக்கும் முறைக்கும் அப்போதைய தாளிசத்திற்கும் நிறையவே மாறுதல் உண்டு. இப்போது உள்ள கடுகு, உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை அக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. மாறாக,மிளகு,ஏலம்,மஞ்சள்,பெருங்காயம்,பூண்டு,சீரகம்,சுக்கு,வெந்தயம் பயன்படுத்தபட்டன. இந்த திரிதோட சமப் பொருட்கள், உணவு சமைக்கப் பட்ட பின்பு சேர்க்கப்படும் போது, சுவையினைப் பெருக்குவதுடன்,சீரணத்தயும் சீராக்கி, உணவால் எவ்வித கேடும் விளையாமல் உடலைப் பேணும். அது எப்படி என்று இனி பார்ப்போமா?
இனிப்பு உணவு எதைச்செய்தாலும் கொஞ்சம் ஏலம் சேர்க்க வேண்டும்.இனிப்பால் அசீரணம் வராதிருக்கவும்,அதன் மூலம் சளி சேராதிருக்கவும் ஏலம் உதவும். இனிப்பு உடலில் வேகமாக சேராது இருக்கவும் ஏலத்தின் அரிசி உதவிடும்.

புலால் உணவு எது சமைத்தாலும் பூண்டு, மிளகு, சுக்கு அவசியம் அதில் இடம்பெற வேண்டும். மிளகு ஒரு நச்சு நீக்கி. உடலில் அலர்ஜி ஏற்படாது இருக்கவும்,மூக்கு சைனஸ் பகுதியில் சளி சேராமல் இருக்கவும் மிளகு பாதுகாக்கும். ஆஸ்துமா நோயினருக்கு, மிளகு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.மிளகில் உள்ள piperine எனும் alkaloid, ஒரு மிகச் சிறந்த immune modulator என்று இன்றைய அறிவியல் உணர்ந்து உள்ளது. உங்கள் வீட்டில் இனி யாராவது உணவில் மிளகைத் தட்டில் பொறுக்கி ஓரம் வைத்தால், ‘ணங்’ என்று செல்லமாய் ஒரு கொட்டு கொட்டி,மிளகின் மகத்துவத்தை புரிய வையுங்கள்.
பூண்டு,இதயம் காக்கும் இனிய நண்பன். நெடுங்காலமாக, இதனை நாம் பயன்படுத்தி வந்தாலும், வெள்ளைமுடிக்காரன் விசாரித்துச் சொன்ன பின்பு தான் இதனை கொஞ்சம் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். மடி, ஆசாரம் என பூண்டு, வெங்காயத்தினை ஒதுக்குவோருக்கு ஒரு வேண்டுகோள்! உங்கள் இரத்தக்கொழுப்பை சீராக வைத்து, இதயம் என்றும் பழுதின்றி இயங்க இவ்விரண்டும் கண்டிப்பாய் உணவில் இடம்பெற வேண்டும். அதிலும் குறிப்பாய் சிறு பூண்டு,சிறு வெங்காயம் தான் உங்கள் முதல் தேர்வாக இருக்க வேண்டும்.பல்லாரி வெங்காயத்தை விட சிறு வெங்காயம் 2600 மடங்கு அதிகம் நற்கூறுகள் கொண்டது என இன்றைய விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர். மலைப்பூண்டைக் காட்டிலும் சிறு பூண்டும் அதன் சத்துக்களில் சிறந்தது. Allicin எனும் அதன் சத்து மாரடைப்பைத் தடுப்பதுடன் ஒரு சிறந்த எதிர் நுண்ணியிரியும் கூட. என்ன கொஞ்சம் மெனக்கிட வேண்டும். காப்பாற்றப்படுவது உங்கள் இதயம் அல்லவா?
’சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுள் இல்லை’, என்று ஒரு வட்டார வழக்கு மொழி ஒன்று உண்டு. அந்த அளவிற்கு சுக்கு ஒரு தலையாய் மருந்து. புலால் உணவு எளிதில் சீரணிக்க சுக்கு உதவிடுவதுடன், உடலில் பித்தம் சேர்ந்து, மைக்ரேன் தலைவலி வராதிருக்க சுக்கு உதவும்.மைக்ரேன் தலைவலியில் அவதிப்படுவோர் தங்கள் ஒவ்வொரு உணவிலும் சுக்கை சிறு அளிவில் சேர்ப்பது சிறப்பு.
வாழைக்காய்ப் பொரியல், உருளை பிரட்டல், சுண்டல் வகையராக்கள் செய்யப் போகிறீர்களா? முடிவில் பெருங்காயப் பொடி சேர்க்க மறக்க வேண்டாம். பெருங்காயம் வெறும் மணமூட்டி மட்டுமல்ல. வாய்வு உடலில் சேராதிருக்கவும், அசீரணம் ஆகிவிடாமல் இருக்கவும் உதவுவதுடன் குடற்புண்களையும் அகற்றிட உதவும்.
சீரகம் அகத்தைச்(இரைப்பையை) சீர் செய்வதால் அதற்குக் கிடைத்த பெயர். எந்த மந்தம் தரும் எண்ணெய்ப் பதார்த்தங்களையும் செய்து முடிக்கையில் பொன்வறுவலாய் வறுத்த சீரகத்தைச் சேர்க்க மறக்க்க் கூடாது. சீரகமும் இலவங்கப்பட்டையும் குடற்புண்களைத் தரும் ’ஹெலிகோபேக்டர் பைலோரை’ எனும் நுண்ணியிரியினைக் குடலில் வளர விடாமல் செய்யவும் உதவிடும். அசீரணம் உள்ளவர்கள், நம் அண்டை மாநிலத்து நண்பர்களைப்போல் சீரகத்தண்ணீரை அவ்வப்போது சேர்க்க வேண்டும். சீரகம் இரத்தக் கொதிப்பு நோயாளிகளுக்கும் நல்லது.
அடுத்து வெந்தயம். சைவ உணவினருக்கு நல்ல காய்கறிகள், கனிகள் சாப்பிடத் தவறினால், உடலுக்கு தேவையான நார்சத்து கிடைப்பதில்லை.ஒரு நாளைக்கு கிட்ட்தட்ட 22கிராம் நார்பொருள் நமக்கு தேவை. வெந்தயம் சைவ உணவுகளில் அதிக நார்சத்து கொண்ட பொருள். குறிப்பாக, கரையும் நார்ப் பொருள் தான் இதயத்தில் கொழுப்பு படியாத தன்மையைத் தரும். கரையாத நார்ப்பொருள் மலச்சிக்கலை நீக்குவதுடன், இரத்தசர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். வெந்தயம் இந்த இரண்டு வகை நார்ப்பொருளையும் அதிக அளவில் கொண்டது. சாம்பார், இட்லி, சப்பாத்தி, என அத்தனை உணவிலும் வெந்தயம் சேர்ப்பது புத்திசாலித்தனம். நீரிழிவு, இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு ஆகிய முக்கிய மூன்று எதிரிகளுக்கும் வெந்தயம் ஒரு மருந்தாகும் உணவான functional food.
நறுமணமூட்டும் உணவுகளிலேயே தலையானது மஞ்சள். நம் உணவுகளில் அன்றாடம் இதை ஏதோ ஒருவிதத்தில் சேர்ப்பதினால் தான்,இன்னும் சுகாதாரச் சூழல் அதிகம் இல்லை என்றாலும், பல நோய்கள் வராது இருக்கின்றது. மஞ்சள் ஒரு புழுக்கொல்லி.எதிர் நுண்ணியிரி. Natural antibiotic! அதைக்காட்டிலும் புற்று நோய்க்கான மருந்து. கார ருசிக்காக அதிகம் சேர்க்கப்படும் மிளகாய் வற்றல் சேரும் உணவில் எல்லாம், மஞ்சள் சேர்க்கப்படுவதினைப் பார்த்திருப்பீர்கள். மிளகாய் வற்றலின் carcinogenic இயல்பை,மஞ்சள் மாற்றிவிடும். ஆதலால் தான் அந்தக் காம்பினேஷன் எங்கும் உள்ளது. ஒவ்வொரு காய்கறிகளிலும்,கூட்டிலும் சமைத்தபின் கொஞ்சம் மிளகுத் தூள், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு சேர்க்க சேர்க்க உங்கள் மருத்துவச் செலவு கண்டிப்பாய்க் குறையும்.
நறுமணம் ஊட்டும் இந்த காரப் பொருட்கள், நம் பாரம்பரியத்தின் அடையாளங்கள். நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற நலவாழ்வுச் சூத்திரங்கள். தாளிப்பதற்கும் டிரெஸ்ஸிங் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் தாளிப்பதில் கூடுதலாய்க் கிடைக்கும் அதன் நலப் பண்புகள் தான். அதற்காக, உணவை அலங்கரிப்பது தவறல்ல. கூடுதலாய் அக்கரையுடன் இந்த spices –ற்கு இடம் அளிக்க மறந்து விடல் வேண்டாம்.வீட்டில் ஆராக்கிய மணம் நிலைக்க இந்த மணமூட்டிகள் அஞ்சரைப் பெட்டியில் அவசியம் வேண்டும்.

No comments:

Post a Comment