Sunday 12 February 2012

மிளகு-ஆஸ்துமா முதல் அர்டிகேரியா அலர்ஜி புழுவெட்டு வரை!


 
"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”- என்று சித்தமருத்துவ வழக்குமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழி சொல்லவருவது மிளகு உணவின் நச்சுத்தன்மையை போக்கும் குணமுடையது என்பதுதான்.

இன்று காரமான சுவைக்கு நாம் பயன்படுத்தும் மிளகாய், நமக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் பரிச்சயமில்லாதது. காரமான சுவை வேண்டிய போது நம் பாட்டியும் முப்பாட்டனும் சமைத்தது
மிளகை வைத்துத்தான். சிலி நாட்டிலிருந்து சில நூறு வருடங்கட்கு முன் மிளகாய் நமக்கு அறிமுகமானபோது மிளகைப் போல் காரமாக இருந்ததால் தான் அதற்கு மிளகாய்(மிளகு+ஆய்) என்று பெயரிட்டனர். மிளகு பல ஆயிரம் ஆண்டுகளாய் நமக்கு பழக்கமான ஒன்று. ’திரிகடுகம்’ எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி கூட்டணியில் உள்ள மிளகு, உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் நறுமணப் பொருள்.

இப்போது தாளித்து எடுக்கும் முறைக்கும் அப்போதைய தாளிசத்திற்கும் நிறையவே மாறுதல் உண்டு. இது குறித்து முன்பே நாம் பேசியுள்ளோம். இப்போது உள்ள கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை அக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக ’திரிதோட சமப் பொருட்கள்’ எனப்படும் மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் பயன்படுத்தபட்டன. இந்த திரிதோட சமப் பொருட்கள், உணவு சமைக்கப்பட்ட பின்பு சேர்க்கப்படும் போது, சுவையினைப் பெருக்குவதுடன், சீரணத்தயும் சீராக்கி, உணவால் எவ்வித கேடும் விளையாமல் உடலைப் பேணும். அந்த திரிதாட சமப்பொருளின் ’டீம் லீடர்’ மிளகுதான். அதனால் ஒவ்வொரு உணவிலும் மிளகு இருப்பது ஹெல்த் இன்ஷியூரன்ஸுக்கு கட்டும் பிரீமியத்தைக் காட்டிலும் பாதுகாப்பு தரும்

மிளகை அதன் உலர்ந்த பழமாகவே(கருப்பு குறு மிளகு) நாம் பெரும்பாலும் பயன்படுத்தினாலும், சில இடங்களில் தொலி நீக்கிய வெண்மிளகாகவும் பயன்படுத்துவர். வெண் மிளகில் காரம் குறைவு. சத்தும் சற்று குறைவுதான். சூப்பில் போட்டு கொஞ்சம் மணமோடு அலங்கரிக்க உதவுமே தவிர வேறு விசேஷமில்லை. அதனால் கருப்புதான் சிறப்பு!

மிளகு சற்று வெப்ப குணமுடையது. சீதளத்தை போக்குவதில் மிளகு முதல் மருந்து. நமக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவிலும் பழங்களிலும் மிளகைத்தூவி சாப்பிடுவது அந்த உணவால் சளி பிடிக்காமல் இருக்கத்தான். வெள்ளரிக்காயில் மிளகைத் தூவி சாப்பிட உடலும் குளிரும். சளியும் பிடிக்காது. மிளகுக்குப் பதிலாக ரோட்டோரங்களில் கடற்கரையில் மிளகாய்வற்றல் பொடியைத் தூவிக் கொடுக்கப்படும் வெள்ளரியில் பயனில்லை. அது வெள்ளரியையும் கெடுக்கும்.வயிறையும் கெடுக்கும்!

வெள்ளரி, வெள்ளைப்பூசணி, சுரைக்காய், தர்ப்பூசணி, பாசிப்பருப்பு போட்டு செய்யப்படும் வெண்பொங்கல் முதலான உணவுவகைகளில் மிளகு சேர்ப்பது அவசியம்.பால் அனைவருக்கும் அவசியமில்லாத பொருள் என்றாலும், சில நேரங்களில் மருந்தாக/ ஊட்ட உணவாக சில நோயாளிகளுக்குத் தேவைப்படும். அச்சமயம் பாலில் மிளகு சேர்த்து தருவது அவசியம். சளி இருமல் இருப்பவர் பால் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயமிருப்பின், சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது மிக அவசியம்.

பல நேரங்களில் ஆட்சியைப்பிடிக்கும் வரை ஒன்றாய் ஊர்வலம் வந்து விட்டு பதவி கிடைத்ததும் கூட்டணிகட்சிகளை ஓரமாய் ஒதுக்குவதுபோல, சமைத்தபின் மிளகை ஒதுக்கி ஓரமாக கழிப்பது பல நேரங்களில் நடக்கும். அது மிகத் தவறு. மிளகு மணமூட்டிமட்டுமல்ல. அதன் பிறசத்துக்கள் முழுமையாகச் சாப்பிட்டால்தான் உடலில் சேரும்.

மிளகு, ஆஸ்துமா நோயாளிகள் அன்றாடம் சாப்பிட வேண்டிய ஒரு கற்ப உணவு. மிளகில் உள்ள olioresin மற்றும் piperine, piperidine சத்துக்கள் மருத்துவ குணமுடைய முலக்கூறுகள். piperine, piperidine இரண்டும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை சீர் செய்யவும், அவையே சில வேளையில் அதிகபிரசங்கித்தனம் செய்யும் போது அதனை immune-modulation செய்கை மூலம்சரி செய்யவும் பயன்படுவதை பல நவீன ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆஸ்துமா நோயாளிகள் மிளகை ஒவ்வொரு உணவிலும் தூவிச் சாப்பிட வேண்டும். இருமல் இரவில் வந்து கஷ்டப்படும் குழந்தைகளுக்கு, தேனும் மிளகும் சேர்த்து மிளகுக்கஷாயம் வைத்து கொடுத்தால் உடனடியாக இருமல் நின்று குழந்தை சங்கடமின்றி உறங்கும். அசீரணமுடன் சங்கடப்படும் ஆஸ்துமாக்காரர்கள் நிறைய பேர் உண்டு. மதிய உணவிற்குப்பின் 2-3 வெற்றிலையில் மிளகு சேர்த்து சவைத்து சாப்பிட இரைப்பும் குறையும். அசீரணமும் சீராகும்.

மிளகை மோரில் 2 நாட்கள், வெற்றிலைச்சாறில் 2 நாள் ஊறவைத்து மோர் மிளகாய் காயவைப்பது போல் வற்றலாக காயவைத்துப் பின் பொடி செய்து வைத்துக் கொண்டு 2 சிட்டிகை அளவு தேனில் காலை மாலை உணவிற்கு முன் சாப்பிட சளி இருமல் தீரும். ஆஸ்துமா தொல்லை நன்கு கட்டுப்படும்.

Urticaria எனப்படும் திடீர் திடீர் என ஆங்காங்கே உடலில் சிவந்து தடிக்கும் தோல் அலர்ஜியில் மிளகு நல்ல பலனளிக்கும். மிளகுத்தூளை காய்கறிகளில் தூவி சாப்பிடுவதுடன், தினசரி காலையில் அருகம்புல்(ஒரு கைப்பிடி), வெற்றிலை(4) மிளகு(4)- எடுத்து கஷாயமாக்கிச் சாப்பிட தடிப்பு வருவது படிப்படியாக மறையும். எந்த ஒரு சாதாரண தோல் அலர்ஜி ஏற்படும் போது முதல் கை வைத்தியமாக மிளகை கஷாயமாக்கி சாப்பிடுவது நல்லது. அதே நேரத்தில் அலர்ஜியை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவும் கூடாது. முகம் கைகால் வீக்கத்துடன் மூச்சிரைப்பு உண்டாகி, சிறுநீர் தடை ஏற்படும் அலர்ஜிக்கு மிளகை தேடிக் கொண்டிருக்க்க் கூடாது

வயிற்றுப்புண்கள் அதிகமிருந்தால் மிளகை குறைவாகச் சேர்க்கவேண்டும். மிளகு அசீரணத்தை சரிப்படுத்தக்கூடியதென்றாலும், குடற்புண்கள் இருப்பவருக்கு அதன் வெப்பத் தன்மையால் வயிற்றெரிச்சலைத் தோற்றுவிக்கும். புலால் உணவு சாப்பிடும் போது கண்டிப்பாக மிளகு சேர்க்கப்பட வேண்டும். மிளகு புலால் உணவின் சீரணத்தைத் துரிதப்படுத்துவதுடன், அதில் ஏதேனும் உடலுக்கு ஒவ்வாத புரதப்பொருட்கள் இருப்பின் அதனால் ஏதும் தீங்கு விளையாமல் இருக்கவும் மிளகு பயன்படும்.

மிளகு ஒரு வெளிமருந்தாகவும் பயன்படும் பொருள். புழுவெட்டு எனும் aloepecia areata –விற்கு பல நேரங்களில் எந்த மருந்தும் பலனலளிப்பதில்லை. மிளகு தூள், வெங்காயச் சாறு, உப்பு கலந்து புழுவெட்டுள்ள பகுதியில் மெலிதாகத் தேய்க்க முடி வளரும்.

மிளகில் கால்சிய சத்து உள்ளது சிறிதளவு விட்டமின் A சத்துள்ளது. மிளகின் புரதமும், னார்ப்பொருலும், அதிலுள்ள நைட்ரஜன் சத்தும் கூட மிளகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் அளவில் குறைவாக இருந்தாலும், அதன் நிறைவிற்குக் குறைவில்லாதவை.

குழந்தைப்பருவம் முதலே மிளகின் மகத்துவத்தை புரியும் படி மிரட்டாமல் சொல்லிக் கொடுத்து, மிளகை ரசித்து உண்ண குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில் வரும் முன் காப்பதில் மிளகிற்கு இணை ஏதுமில்லை.

No comments:

Post a Comment