பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் மிகுந்த ஆதிக்கத்தைச் 
செலுத்தக்கூடிய காலகட்டம் இது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இங்கு உள்ள 
மக்களுடைய அடிப்படையான  வாழ்வியல் முறைகளை முழுமையாக மாற்றக்கூடிய அளவில் 
இவர்கள் பல்வெறு விடயங்களை இங்கு வந்து திணிக்கக்கூடிய ஒரு சூழல் இங்கு 
நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் நாம் பார்க்கும்போது மக்களிடையே பல 
ஆரோக்கியக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
நம்நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. பல உணவுகளை உற்பத்தி செய்து 
உணவுப் பொருள்களில் தன்னிறைவாய் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான நாடே இந்தியா.
 அதில் தமிழர்களின் விவசாய முறைகள் என்பது தன்னிறைவாய் இருந்த சூழல்கள் 
உண்டு. ஆனால் இன்று விவசாயம் செய்வதற்கே பயப்படக்கூடிய அளவிற்கு தமிழர்கள் 
பின்வாங்கக்கூடிய ஒரு சூழலை, ஒரு காலகட்டத்தை இந்தப்பன்னாட்டு நிறுவனங்கள் 
நம்மீது திணிக்க ஆரம்பித்து விட்டன.
அரசு உதவியுடன் தொழில்துறையை 
மேம்படுத்துகிறேன் மேம்படுத்துகிறேன் எனக்கூறி இங்கு உள்ள விளைநிலங்கள் 
எல்லாவற்றையும் ரியல் எஸ்டேட்டுக்களாக மாற்றுவதற்கு மிகப்பெரிய ஒரு காரணி 
யார் என்றால் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் தான். கார் தொழிற்சாலை 
வருகிறது, காய்கறிக்கடை வருகிறது, அது வருகிறது, இது வருகிறது என்று விவசாய
 நிலங்கள் எல்லாமே கட்டிடம் கட்டுவதற்கான நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு பெரும் பணத்தொகை கொடுத்து இவர்கள் மீண்டும் விவசாயம்
 பண்ணமுடியாத மனோநிலைக்குத் தள்ளி, விவசாய நிலங்களைப் பறிக்கக்கூடிய 
நிகழ்வுகள் இங்கு நிறைய நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு பறிக்கும் 
செயல்பாடுகள் பல இங்கு நடக்கும் இந்தக் காலகட்டத்தில் விவசாயம் சார்ந்த, 
உணவுப் பொருள் சார்ந்த உற்பத்தியை முழுவதுமாக இழந்து நிற்கிறோம். 
இச்சூழலில் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத சூழலை உருவாக்குவதில் 
இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் பல விடயங்களை நம்மீது திணித்துக் 
கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் அந்தந்த நாடுகளில் உற்பத்தி 
செய்யக்கூடிய உணவுப் பொருட்களை நாகரீக மோகத்தை நம்மிடையே வளர்த்து அதன் 
அடிப்படையில் நம்மையும் அந்த உணவைச் சாப்பிடக்கூடிய கலாச்சாரத்தை இந்தப் 
பன்னாட்டு நிறுவனங்கள் செய்துகொண்டிருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்றால்
 நம்முடைய பொருளாதார வளத்தை நமக்குத் தெரியாமலேயே உணவு என்ற போர்வையில் 
போர்த்திக் கொண்டு அவர்கள் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் 
பயன்படுத்தக்கூடிய பீட்சா, பர்க்கர் போன்று மேற்கத்திய கலாச்சார உணவுக் 
கலாச்சாரத்தை நம்மிடையே சில நிகழ்வுகளில் திணித்து, இதன் ருசியை 
நமக்குக்காட்டி அதையே பேக்கிங் உணவாகக் கொண்டுவரக்கூடிய சூழல் 
வந்துவிட்டது. அதனால் நாம் பாரம்பரியமாக எடுக்கக்கூடிய உணவுப் 
பொருட்களிலிருந்து நாம் விலகி ருசி அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்கள் 
தயார் செய்யக்கூடிய பேக்கிங் உணவு, டின் பேக்கிங் உணவு, நூடுல்ஸ் போன்ற 
உணவுகள் போன்ற இது மாதிரியான உணவுகளுக்கு நாம் அடிமையாகக்கூடிய காலகட்டத்தை
 அவர்கள் உருவாக்கி விட்டனர். இதன் மூலம் அவர்கள் பெருத்த கொள்ளை லாபத்தை 
ஈட்டி வருகின்றனர். லாபம் என்பது சுரண்டப்பட்டு, சுரண்டப்பட்டு அவர்கள் 
நாட்டிற்கு நம் செல்வங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதனால் உணவு 
உற்பத்தியில் நாம் கவனம் செலுத்தவிடாமல் செய்கிறது. இவர்கள் தயாரித்த இந்த 
உணவுப் பொருட்கள் தமிழகத்தில் பெரும்பாலானோர்க்கு ஒத்துக்கொள்வதே இல்லை.
இந்த மேற்கத்திய உணவுகளை உண்பதன் மூலம் பல்வேறு நோய்கள் வர இவ்வுணவு 
வழிவகுக்கிறது. புதிது புதிதான நோய்கள் இதன் மூலம் பரவி வருகின்றது. நம் 
தமிழ்நாட்டில் 60 வயது முதல் 80 வயது உள்ள நம் முன்னோர்கள் சிலர் கூறுவதை 
நாம் கிராமங்களில் இன்றும் கேட்டிருப்போம். “எனக்கு 60 வயது ஆகிறது இதுவரை 
நான் காய்ச்சல் வந்து மருத்துவமனை சென்று மாத்திரை, ஊசி 
எடுத்துக்கொண்டதில்லை” என்று பெருமிதமாக நம்மிடையே கூறுவார்கள். இவ்வாறு 
கூறிய தமிழர்கள், இன்று சிறு குழந்தைக்குக்கூட விதவிதமான நோய்கள் வருவதால்,
 விதவிதமான மருந்துகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சூழலில் இன்று 
தமிழகம் உள்ளது.
இதற்கு என்ன காரணம் என்றால் பன்னாட்டு 
நிறுவனங்களின் விளம்பரங்களே இதற்குக் காரணம். தொலைக்காட்சி என்ற எமனை 
வீட்டிற்குள்ளேயே உட்கார வைத்துக்கொண்டு, இதில் காட்டக்கூடிய விளம்பரங்கள் 
அனைத்தையுமே நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் 
தயார் செய்த உணவுப் பொருட்கள், இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யக்கூடிய 
மருந்துப் பொருள்கள் இதெல்லாம் விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த 
விளம்பரத்தைப் பார்த்து வளர்கின்ற குழந்தைகளிடம் கூட இவைகளை வாங்கி 
உபயோகிக்கக்கூடிய மனோநிலையை உருவாக்கி விடப்பட்டுள்ளனர். பசியுள்ள 
குழந்தைக்கு ஒரு உணவைத் தரவேண்டும் என்றால் கூட, அந்தக் குழந்தை 
அடம்பிடித்துக் கேட்கக்கூடிய உணவைத் தருகின்ற காலகட்டத்தை மறைமுகமாக இந்த 
நிறுவனங்கள் நம்மீது சுமத்தி வருகிறது.
அதுபோல் பல உணவுகளிலேயே உடல்
 நலம் அடைந்த பண்டைய தமிழர்கள் சமுதாயம் இன்று கொஞ்சம் கொஞ்சமாகச் 
சிதைக்கப்படுகிறது. அன்றைய காலகட்டத்தைப் பார்த்தோம் என்றால், ஏதாவது சளி 
இருக்கிறது என்றால் கூட இதற்குத் தகுந்தாற்போல் கஞ்சி வழங்குவர்.
பண்டைய சித்தர்கள் “பஞ்சமுண்டிக் கஞ்சி” எனக்கூறுவார்கள். உடல் நிலை 
சரியில்லை, கபம் அதிகம் இருக்கிறது, சளி, இருமல் தொடர்ச்சியாக இருக்கிறது 
என்றால் இதற்கு மருந்தாக பச்சரிசி மற்றும் இப்பச்சரிசியில் நொய்யரிசி, 
கடலப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, சிறு பருப்பு இந்த ஐந்து 
பருப்பையும் போட்டு கஞ்சி போல் செய்து திரவ நிலையில் இருக்கும் போது 
உண்ணவேண்டும்.
இதை உண்பதால் ஏற்படும் பயன்கள்:
கை,கால் வலி, 
அசதி, சோர்வு, வாந்தி, பித்தம், தலைசுற்றல், மயக்கம், காய்ச்சல் இவை 
எல்லாமே முழுமையாகக் குணமாகும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
இதை 
உண்டவர்களும் நல்ல பலன்களை அடைந்தார்கள். ஆனால் இன்று வரும் பல 
நோய்களுக்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தோம் என்றால் தற்போது 
உண்ணும் உணவுப் பொருட்கள் இதற்குக் காரணமாகும்.
இந்த உணவால் வரக்கூடிய மந்தம், இந்த மந்தத்தால் வரக்கூடிய (Food Poison) உணவு நச்சு ஆகிய பல நோய்கள் வர வழி வகுக்கிறது.
அன்று வாழ்ந்த தமிழர்கள் வீட்டிற்கொரு திண்ணையைக் கட்டி அதில் விதவிதமான 
நாட்டுக்கோழிகளை வளர்த்து, தனக்கு வேணும் எனும் போதெல்லாம கோழியடித்துக் 
குழம்பு வைத்துச் சாப்பிட்ட தமிழர் சமுதாயம் இன்று காணாமல் போய்விட்டது. 
இதற்குப் பதிலாக இன்று (பிராய்லர்) கறிக்கோழிகளை நம்பக்கூடிய தன்மை உருவாகி
 விட்டது. இந்தக் கறிக்கோழியை நாம் பெரும்பாலும் சமைத்துச் 
சாப்பிடுவதில்லை. அவ்வாறே சமைத்தாலும் போதிய ருசி இதில் கிடைப்பதில்லை. 
அதனால் இதே கோழியை கே.எப்.சி க்குச் சென்று வாங்கி உண்டால் அது 
வேறுமாதிரியான ருசியாக இருக்கிறது. இந்தக் கடையில் தமிழர்கள் கூட்டம் 
கூட்டமாய் சென்று விழுவதால் தமிழர்களின் பெரும்பாலான பணம் பறிபோவதோடு, 
இதனால் வரக்கூடிய நோய்களையும் பெற்று வருகின்றனர். புதுவிதமான ருசி 
தேடித்திரியும் தமிழர்களுக்கு இறுதியில் புதுவிதமான நோய்களே பல்கிப் 
பெருகிவிட்டன.
இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள் Food Subliment- என்ற
 போர்வையில் மல்டி லெவல் மார்கெட்டிங் (MLM) என்ற விசயத்தை நம்மீது தூவி, 
இதன் அடிப்படையில் நம் நாட்டுப் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் 
சீரழிக்கப்பட்டு வருகிறது.
நம் தமிழர் பாரம்பரிய உணவான வெறும் 
ராகிக் கஞ்சியை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நம் உடல் எடை 
குறைந்துவிடும். வரகரிசி சோற்றை தொடர்ந்து 2 மாதம் சாப்பிட்டால் உடல் எடை 
குறைந்துவிடும். ஆனால் பன்னாட்டுக் கம்பெனிகளில் ஒன்றாக “ஹெர்பாலைஃப்”, 
Food Subliment என்ற போர்வையில் ஒரு 7500 ரூபாய்க்கு ஒரு உணவுப் பொருளை நம்
 நாட்டில் விற்பனை செய்கின்றனர். இந்த பெரும் தொகையில் பல கோடி தமிழர்களின்
 பணம் பன்னாட்டு கம்பெனிகளின் கல்லாவிற்குச் செல்கிறது.
இதுபோல 
தமிழ்நாட்டில் உலவி வருகின்ற பன்னாட்டு நிறுவனங்களான பியர்லஸ், குவாண்டம், 
ஆம்வே, ஹெர்பாலைஃப் போன்ற நிறுவனங்கள் எல்லாமுமே, உணவுப் பொருட்களின் மூலம்
 சுயவேலை வாய்ப்பு என்ற காரணத்தைக் காட்டி ஒருவர் பின் ஒருவராகத் 
தொடர்சங்கிலி போல் உறுப்பினர்களைச் சேர்த்து பலபேரை ஏமாற்றக்கூடிய சூழல் 
நிலவுகிறது. இந்த வியாபாரத்தில் பலரை ஏமாற்றி ஒருவன் பணக்காரன் ஆகிறான். 
எல்லாரையும் ஏமாற்றி பன்னாட்டுக் கம்பெனிகள் பல கோடிகளைப் பெறுகிறது. 
இதனால் பல ஆயிரம் கோடி தமிழர்களின் பணமானது பிற நாட்டினர் உணவுச் 
சுரண்டலின் பெயரில் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் இங்கு விழிப்புணர்வு 
இல்லாத, சோம்பல் தன்மை கொடுக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி நம்மிடையே உள்ள 
பெரும் பொருளாதார வளத்தை கொள்ளையடிப்பதிலேயே இப்பன்னாட்டு நிறுவனங்கள் 
உள்ளன. அதனால் தமிழர்கள் இதன் மூலம் விழிப்புணர்வான பாதையை நோக்கிப் 
பயணப்பட வேண்டியது அவசியமாகும்.
இந்த மேற்கத்திய மோக அடிப்படையில், 
நாகரீக மோகம் என்ற அடிப்படையில் விதவிதமான பார்ட்டிகளையும், 
டிஸ்கோத்தேகளையும் சமூகத்தைச் கேவலப்படுத்தக்கூடிய, சீரழிக்கக்கூடிய 
விடயங்களையே செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
இன்று 
தமிழ்நாட்டில், ஒருவர் பிறந்த நாளிற்காக பல ஆயிரம் ரூபாயைச் செலவிடக்கூடிய 
தமிழ்ச்சமூகத்தைக் கூட பன்னாட்டு மோக அடிப்படையில் நமக்கு நாமே இதை 
வளர்த்துக் கொண்டோம். பிறந்த நாளில் நர் மனப்பூர்வமாக வாழ்த்துக்கள் 
சொன்னால் கூட போதும். அவ்வளவு ஏன் சிறு இனிப்பு வழங்கினால் கூட போதும். இதை
 விடுத்து இன்று நம் பணபலத்தையும், நம் கௌரவத்தையும் வெளிக்காட்டக்கூடிய 
நிகழ்வாகக் கருதிக்கொண்டு பணத்தை வீணடிக்கின்றனர். இதுபோல் வீண் 
கௌரவத்திற்காக கொண்டாட்டங்களைக் கூட்டிக் கொண்டு அடிப்படை ஆரோக்கியத்தை 
நாம் தவறவிட்டுவிட்டோம். அதனால் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய உணவுகளை 
பின் நோக்கி நாம் சென்றால் போதும். நமக்கான ஆரோக்கியம் நம் முன்னோக்கி 
வரும்.
பன்னாட்டு நிறுவன குளிர்பானங்கள்:
பன்னாட்டு நிறுவன 
குளிர்பானங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது அல்ல. இது நமக்கு நாமே விசம் 
வைத்துக் கொண்டதற்குச் சமமானதாகும். இந்த மாதிரி பல குளிர் பானங்களை 
மாதக்கணக்கில் ஒருவர் குடித்துக் கொண்டே வந்தால் அவர் முழு நோயாளி ஆகிறார் 
என அர்த்தம்.
தினசரி காலை வேலை உணவாக ஒருவர் இந்த பன்னாட்டு 
குளிர்பானத்தைக் குடித்தும் அதோடு பிரட்டையும் சேர்த்து ஒரு மாதம் உண்டு 
வந்தார் என்றால் நிச்சயம் அவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு 
உள்ளது. இதுபோல் பல மனிதர்களை நான் சந்தித்திருக்கின்றேன்.
குளிர்பானம் என்ற போர்வையில் இனிப்பான விசத்தை பன்னாட்டு நிறுவனங்கள் 
வழங்கி வருகின்றன. வரி கிடைக்கிறது என்பதற்காக இவர்களுக்கு பல்வேறு 
சலுகைகளைக் கொடுப்பதற்கு நம் அரசுகளும் தயாராக இருக்கிறது. இறுதியில் நம் 
ஆரோக்கியம் தான் தீ வைத்துக் கொழுத்தப்படுகிறது. சில நேரங்களில் நம் 
வீட்டுக் கழிப்பறைக்கு பீனாயில் இல்லை என்றால் இந்த பன்னாட்டு 
குளிர்பானத்தை ஊற்றிக் கழுவிப் பாருங்கள் கழிவறையில் ஒரு கிருமி கூட 
இருக்காது.
அதனால் இந்த கழிவறையில் ஊற்றக் கூடிய விசத்தை இனிப்பாகக்
 கொடுப்பதால் நாம் குடித்து விடுவதா? யோசிக்க வேண்டும். இதற்கு மாற்றாக 
ஆப்பிள், மாதுளை, திராட்சை, சப்போட்டா, சீத்தாப்பழம், பப்பாளி, 
அத்திப்பழம், பேரீச்சம்பழம் இது போல் பழங்களைப் பழச்சாறுகளாக 
அருந்துகிறபொழுது உடல் வழுப்பெறும். நற்சிந்தனை உண்டாகும்.
மாறாக 
பன்னாட்டுக் குளிர்பானம் குடிப்பதால் நம் குடல்தான் அழிந்துபோகும், குடல் 
சுருங்கி விடும். இதனால் வரும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏராளம். ஆதனால் 
தமிழ்ச் சமூக இளைஞர்கள் பாட்டிலும் கையுமாய் அலைவதைத் தவிர்த்து நம் 
பாரம்பரிய குளிர்பானத்தோடு வரவேண்டும்.
தமிழருக்கு இனி பிறநாட்டு 
உணவு சார்ந்த அடிமைத்தனம் இருக்கவே கூடாது. இந்த அடிமைத்தனம் இருந்தது 
என்றால் நாம் சுதந்திரம் அமைந்திருந்தால் கூட பணம், பலம் படைத்தவன் நம்மை 
மறைமுகமாக ஆள்வான். நாம் தொடர்ச்சியாக வீழ்ந்துகொண்டே போவோம். அதனால் 
குழந்தைகள் முதல் பெரியவர் வரை உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வை நாம் 
ஏற்படுத்த வேண்டும்.
நம் நாட்டில் விளையக்கூடிய தாவரங்கள், 
காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்புகள், கிழங்குகள் எல்லாவற்றையும் சம 
விகிதத்தில் இந்த உணவுகளை எடுக்க வேண்டும். கால்சியம், புரதம், விட்டமின், 
கார்போஹைட்ரேட் போன்ற சத்துப் பொருட்களை முழுமையாக எடுக்கும்போது தான் 
அற்புதமான பலன் கிடைக்கும். மேற்கத்திய மோகத்தில் ஆங்கில மருத்துவத்தையே 
கதியாக நம்பி கிடப்பது கூட மிகத் தவறான விடயமாகும். சில நேரங்களில் 
நோய்க்கு மருந்து எடுப்பதை விட, மருந்து எடுக்காமல் இருப்பதே நல்ல உடல் 
நலத்தை தரக்கூடிய நிலையும் உண்டு. ஆகவே மருந்து மருந்து என்று போகாமல் 
உணவையே மருந்தாக்கி நல்ல முறையில் சமூகத்தை வளர்க்கக்கூடிய தன்மையை 
தமிழர்களாகி நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதில் நாம் தான் 
எல்லோருக்கும் முன்னோடியாக இருக்க வேண்டும்.
உலகெங்கும் இருக்கும் 
எந்தத் தமிழர்களாக இருந்தாலும் மேற்கத்திய உணவு முறைகளையும் மேற்கத்திய 
வாழ்க்கை முறைகளையும், விடுத்து, குடி, கூத்து, கும்மாளம் என்று இருக்காமல்
 நல்ல தமிழ் குடிமகனாய் நாம் தரணி எங்கும் வலம் வரவேண்டும் என்பதே எனது 
விருப்பமாகவும் வேண்டுகோளாகவும் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
மருத்துவர் அருண் சின்னயா.
நன்றி.
மருத்துவர் அருண் சின்னயா.
 
 
No comments:
Post a Comment