‘மாதங்களில் அவள் மார்கழி’என்று கவிஞர் கொஞ்சும் மாதம் மார்கழி. முன்பனிக்காலம் என்று பழம் இலக்கியங்கள் வகைப்படுத்தியுள்ளது மார்கழியையும் தையையும் தான். “கொண்டல் காற்று வீசும்; ஆந்தை மகிழும்; செந்நெல் விளையும்; செங்கரும்பு முதிரும்;”என்று நம் முன்னோர் முன்பனிக்காலத்தைப் பற்றி பாடியது, சாட்டிலைட் இல்லாமல், அணுமின் அவசியப்படாமல், முழுமையாய்த் தம் நுண்ணறிவின் ஆழமான பார்வையாலும் அலசலாலும் தான்.
சூரியன் கொஞ்சம் தள்ளிச் சுற்றுகிறது..கூடுதல் குளிர் இருக்கும். உடலை வெம்மையாய் வைத்திருப்பதன் மூலம் முன்பனிக்காலத்து நோய்க் கூட்டத்தை வராது தடுக்கலாம் என நம் முன்னோர்கள் சித்த மருத்துவ இலக்கியங்களில் எடுத்துச் சொன்னது, இக்கால நவீன epidemiologists சொல்லும் கருத்துக்கு சளைத்தவை அல்ல. இந்தப் பருவத்தில், இந்த வகையான நிலத்தில் வாழும் மக்கள் இவ்வகையான உணவைச் சப்பிட்டு, இவ்வகையான வாழ்வியலைப் பின்பற்றினால் நோயின்றி வாழலாம் என அவர்கள் சொன்னது 2000 வருடங்களுக்கு முன்பு.
“நோ? மம்மி! - நியூசிலாந்து சீஸ் தடவிய இட்டாலியன் பிட்சாவும், இங்கலீஷ் பிரட்டும் தான் ஹெல்த்தி..ஓட்ஸ் கஞ்சி வேண்டுமானால் சேர்த்துக்கிறேன்,” என மேற்கத்திய ‘நொர்நாட்டியம்’ பிடிக்கும் நம்ம ஊர் மெத்தப் படித்த மேதாவிகள், இதனை ஒதுக்கியதில் மருந்துக் கம்பெனியும் அவர்தம் அடிப்பொடி ஆழ்வார்களாய் மருத்துவர்களும் செழிக்கிறார்கள். கொழிக்கிறார்கள்.
பனிக்கு கம்பளி ஸ்வொட்டர் போடச் சொன்னது முதல், கோதுமை முதலான சூட்டைத் தரும் உணவைச் சாப்பிடச் சொன்னது வரை பனிக்கால பிரிஸ்கிரிப்ஷன் அன்றே உண்டு. மாலை நேரத்தில்தான் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இளங்காலைக் குளிர் தவிர்க்கப்பட வேண்டும். தினசரி உடலில் வியர்வை கசியும்படி உடலுழைப்பாய் ஒரு செயலை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்பதும் நம் முன்னோர் மார்கழியில் செய்யச் சொன்ன நலவாழ்வுச் சூத்திரங்கள்.
முன்பனிக்கால மார்கழியில் இரைப்பு எனும் வீசிங்(ஆஸ்துமா), மூக்கடைப்பு, தும்மல், மூட்டுவலி, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் தலைகாட்டும். தோல்வறட்சியால் அப்பா ஒருவழியா ஒழிஞ்சிடுச்சு என நினைத்திருந்த சோரியாஸிஸ், கரப்பான்(எக்ஸிமா).. மீண்டும் தலைக்காட்டும்.
பலமுறை மிளகைப் பற்றி எழுதியதில் ஒருமுறை, நண்பர் ஒருவர் “சார்! மிளகுத் தோட்டம் வச்சிருக்கார்னு நினைக்கிறேன்: எப்பப் பார்த்தாலும் மிளகைச் சாப்பிடச் சொல்லி அடம்பிடிக்கிறார்”, என்று. உண்மையில் ஆம்லெட், வெண்பொங்கலில் மிளகைப் பார்க்கிறது தவிர மிளகு எஸ்டேட் பக்கம் டூருக்குக் கூட சென்றதில்லை. ஆனால் மிளகு குறித்து படிக்க படிக்க அதன் ஆய்வு முடிவுகள் எல்லாவர்றையும் பார்க்கபார்க்க மிளகு மருந்திலும் சரி, உணவிலும் சரி ‘பாக்ஸ் ஆஃபிஸ் கெட்டி! ‘மிளகுக்கு’ இப்போது இத்தனை பில்ட் அப் கொடுப்பது கூட மார்கழி மாதத்தில் மிளகை நீங்கள் மறக்கவே கூடாது என்பதால்தான். குளிர் காலத்தில் உடலுக்கு அதிக வெம்மை தேவைப்படும். அதைத் தரும் மிளகு பனிகால சளிக்கும் முதல் மருந்து.ஆஸ்துமா நோயாளிகளுக்கு நவீன மருந்தில் முதல் தேர்வாக்க் கொடுக்கப்படுவது தியோஃபிலீன்; டெரிஃபிலீன் மருந்துகள்..அம்மருந்தின் வேகத்தை அதிகப்படுத்தவும் உடலில் அதன் செயல் திறனை ஊக்குவிக்கவும் மிளகு பெரும் பயன் தருகிறது என்கிறது தற்போதைய ஆய்வுகள்.
நிறைய சித்த மருந்துகளில் மிளகு சேர்க்கப்படுவது கூட அதன் தனிப்பயனுடன், உடன் சேர்க்கப்படும், பிற மூலிகைகளின் செயல் திறனைக் கூட்டத்தானோ என்ற எண்ணமும் இப்போது மேலோங்குகிறது. என்வே மார்கழிப் பொங்கல் மட்டுமல்ல, ஆம்லெட், அடை- அவையல் என எதில் வேண்டுமானாலும் மிளகை கூடுதல் போடுங்கள்.
பீர்க்கு, பூசணி, சுரை போன்ற நீர்க்காய்கறி அதிகம் வேண்டாம். உளூந்து குளிர்ச்சிதான் என்றாலும், பனிக்காலத்தில் உடல் உறுதி தரப்பயன்படும் என்கிறது தமிழ் மருத்துவம். மற்ற நேரத்தில் அதிகம் நல்லதில்லாத, இனிப்பு. புளிப்பு, உவர்ப்பு சுவை உள்ள உணவுகள் பனிக்காலத்தில் நல்லது.. மார்கழியில் அதிகாலை பசி கிள்ளும். அதனால் தான் என்னவோ மார்கழிக் காலையில் இறைவழிபாடும் அதிகாலை மிளகுப்பொங்கலும் வாழ்வியலாய்ச் சொல்லப்பட்டது போலும். பனைவெல்லம் பனங்கற்கண்டு சேர்த்த இனிப்பு பண்டங்களும், உப்பேறி (நாகர்கோயில் மக்களைக் கேளுங்கள்..அவர்கள் ஊர் ஸ்பெஷாலிடி இனிப்பு அது), வெல்ல பனியாரம், அதிரசம் போன்றவையும் மார்கழி மாச உடலுறுதிப்படுத்தும் இனிப்புகள்.(அளவோடு சாப்பிட்டால்)
பனிக்காலத்தில் தைலப்பூச்சை ஒரு முக்கிய வழக்கமாக சித்த மருத்துவ நூற்கள் அறிவுறுத்துகின்றன. உடற்சூட்டைத் தக்க வைக்கவும், மூட்டு நரம்புகள் வலுவை தக்க வைக்கவும் இப்பூச்சு உதவிடும். குறிப்பாக எலும்புத் தேய்வினால், அல்லது ருமட்டாய்டு எனும் இரத்தத்தில் ஆர்.ஏ. பொருள் இருப்பதால் வரும் மூட்டுவலிகள், இப்பனிக்காலத்தில் அதிகம் வலி தரும். மூலிகைத் தைல எண்ணெய்களை அருகிலுள்ள சித்தமருத்துவர்களை அணுகிப் பெற்று, அத்தைலத்தை இளஞ்சூடாக்கி(அதிக சூடாகிவிட்டால் எண்ணெய்க் கொப்புளம் ஏற்பட்டு விடும்), நன்கு அழுத்த மூட்டுகளில் தேய்க்க வேண்டும்.முன்பெல்லாம், ‘தைலம் தேய்ப்பதால் என்ன வந்துவிடபோகிறது?’, என சண்டைக்கு வந்த நவீன மருத்துவ நண்பர்கள், தற்போது ஆய்வு செய்து, எண்ணெய் தேய்ப்பு, lymphatic drainage- ஐ விரைவுபடுத்திகிறது. Macropahage பணி வேகமாக நடைபெற்று வீக்க குறைப்பு (REDUCTION OF INFLAMMATION) நிகழ்கிறது, என பன்னாட்டு உயர் மருத்துவ ஏடுகளில் எல்லாம் மாய்ந்து மாய்ந்து எழுதி வருகிறார்கள்.
சோரியாஸிஸ், கரப்பான் போன்ற நோயுள்ளோர் நோய் நீங்கி இருந்தாலும் உடலுக்கு மருத்துவர் சொல்லும் தைலத்தை தோலில் தடவி வருவது மிக அவசியம். அது நோய் மீண்டும் தலைகாட்டாமல் இருக்க உதவிடும். மார்கழியில் குழந்தைகளுக்கு மறக்காமல் இரவில் கற்பூராதி தைலம்( தேங்காய் எண்ணையை சூடாக்கி கற்பூரம் கலந்து வைப்பது-கடைகளிலும் கிடைக்கும்) மார்பில் தேய்ப்பது சளி பிடிக்காமலிருக்க உதவும்.
இரவில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்த பால் சேர்ப்பது, மதியம் தூதுவளை ரசம் சாப்பிடுவது, மாலையில் அவ்வப்போது கொள்ளு சுண்டல் சாப்பிடுவது உடலை சூடாக வைத்திருந்து நோய் விரட்ட உதவும். குளிக்க, குடிக்க வெந்நீர் பயன்படுத்துவது, நொச்சி தழை போட்டு ஆவிபிடிப்பது போன்ற வாழ்வியல் வழக்கங்களையும் வீட்டில் செய்வது மார்கழியில் நல்லது.
பயனுள்ள பதிவு.இப்போ எங்க பகுதியில் ஏகப்பட்ட குளிர்.
ReplyDelete