Friday, 13 January 2012

யாருக்கு ஊட்டம்?





இந்தியாவில் உள்ள 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 42 விழுக்காட்டினர், ஊட்டச் சத்துக் குறைபாடுகளுடன் எடை குறைவாக இருப்பதாகவும், இவர்களில் 59 விழுக்காட்டினர் உடல்வளர்ச்சிக் குன்றியவர்களாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்ட பிரதமர் மன்மோகன் சிங் இதை ""தேசிய அவமானம்'' என்றே வர்ணித்துள்ளார்.

குழந்தைகளின் சத்துக் குறைபாடுகள் 2004-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பைக் காட்டிலும் தற்போது குறைந்துள்ளது என்று கூறிக்கொள்ள முடியும் என்றாலும், இந்த சமாளிப்புகள் எதையும் செய்யாமல், தேசிய அவமானம் என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருப்பதுடன், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் குழந்தைகளுக்குப் போய்ச் சேரும்படியாகத் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

1975-ல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தை (ஐ.சி.டி.எஸ்) திருத்தியமைக்கவும், குறிப்பிட்ட இலக்கை மையப்படுத்தி கவனமாகச் செயல்படவும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று உடனடியாகக் கோரிக்கை வைத்திருக்கிறார் மகளிர் மற்றும் குழந்தைகள் துறை அமைச்சர் கிருஷ்ண தீரத்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் இந்தியாவில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் முதலாக 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் வரை அவர்களது உடல் நலனில் கவனம் செலுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 3.40 கோடி. கர்ப்பிணித் தாய்மார்கள் 70 லட்சம் பேர். இவர்களை மட்டுமே இலக்காகக் கொண்டு, இந்தத் திட்டத்தின் கீழ் சத்துணவு, சத்துமாவு, சத்து மாத்திரை, பால் பவுடர், தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டுசேர்க்க முடியுமானால், இந்தியாவில் அனைத்து குழந்தைகளையும் அவர்களது வயதுக்கேற்ற எடையும் வளர்ச்சியும் உள்ளவர்களாக மாற்றிவிடமுடியும்.

இத்திட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடு மிக மிக சிறப்பாக இருக்கிறது என்பதற்காக நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இந்தப் பெருமை மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரைத்தான் சேரும்.

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் அறிமுகம் செய்தார். இதனால் பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்தது. ஜாதீய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமூக நல்லிணக்கம் தமிழகத்தில் ஏற்பட்டதற்கு அதிகரித்த கல்விப் பயனும், மதிய உணவுத் திட்டமும்தான் காரணமே தவிர எந்தவொரு அரசியல் இயக்கமும் காரணமல்ல என்பதுதான் உண்மை.

5 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பால்வாடி அன்றைய நாளில் இருந்த போதிலும், அவற்றின் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் பால் வழங்க முடியவில்லை. குறிப்பாக மலைப்பகுதிகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிரமம் இருந்து வந்தது. எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்தபோது, அனைத்துக் குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து, சத்துணவு மையங்களை எல்லா இடங்களுக்கும் விரிவுபடுத்தினார். தமிழகத்தில் ஊட்டச்சத்துக் குறைவு கணிசமாகக் குறைந்ததற்கு சத்துணவுத் திட்டம்தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பே பாராட்டுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் சத்துணவு, மழலையர் கல்வி, சுகாதாரம் குறித்து தாய் மற்றும் குழந்தைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய மூன்றையும் குடும்ப நலத் துறையும், நோய்த்தடுப்பூசி, உடல் பரிசோதனை, மருத்துவமனைக்குப் பரிந்துரைத்தல் ஆகியவற்றை பொதுச்சுகாதாரத் துறையும் கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சத்துணவு மையம், அங்கன்வாடி ஆகியவற்றின் மூலமாக 66.41 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முறையாகச் செய்யப்பட்டால், தமிழகத்தில் குழந்தைகள் நலன் மேலும் சிறப்படையும் என்பது நிச்சயம்.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குச் சத்துணவு கிடைக்காமல் இருந்தால் அது பெற்றோரின் அலட்சியமாக இருக்குமே தவிர, அரசின் அலட்சியம் அல்ல. இதற்காக தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கி, அதனை இன்றுவரை முன்னெடுத்துச் சென்ற முதல்வர்கள் மு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கும் இந்தப் பெருமையில் பங்கு உண்டு.

பிகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய வடஇந்திய மாநிலங்கள்தான் இத்திட்டத்தில் மோசமாக செயல்பட்டுள்ளன என்பது அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் தெரியவருகிறது. இந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கவோ அல்லது வேறு திட்டங்களுக்குத் திசை திருப்பப்பட்டு இருக்கவோ வாய்ப்புகள் உள்ளன. 2005-06 நிதியாண்டுக்குப் பிறகுதான், இத்திட்டத்துக்கு மாநில அரசின் பங்கேற்புத் தொகை 50 விழுக்காடு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரையிலும் முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்றுக்கொண்டது. நிதியை முறையாகப் பயன்படுத்தினார்களா என்பதை இத்தனை காலமாக கண்காணிக்காமல் தணிக்கை செய்யாமல் இருந்தது யாருடைய தவறு?

இந்தியாவில் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம், வறுமை என்பதைக் காட்டிலும், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் பலன் கிராமங்கள் வரை சென்று சேரவில்லை என்பதைத்தான் இவை வெளிப்படுத்துகின்றன. இத்திட்டத்தைத் திருத்தியமைக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனாலும், நிதி செலவிடப்படும் விதம் குறித்து மத்திய அரசு தணிக்கை செய்து, அதிகாரிகள் தவறு செய்திருந்தால் தண்டிக்க வேண்டும். அரசியல்வாதிகள் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தாதவரை, குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவுடன் இருப்பார்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊட்டத்துடன் இருப்பார்கள்.

No comments:

Post a Comment