Wednesday, 25 January 2012

முல்லைப் பெரியாறு - உண்மையில் தீர்க்கப்பட வேண்டியது எல்லைப் பிரச்சினையே!


Thanks Keetru (http://www.keetru.com)
மாநிலங்கள் சீரமைப்புச்சட்டம், 1956-ன் பிரிவு 108-ன்படி மாநில அரசு ஒன்று, அதற்கு முந்தைய அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்கள் படியான கடப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கிறது. அப்பிரிவுதான், 1986-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சென்னை மாகாண அரசுக்கும், திருவிதாங்கூர் அரசுக்கும் இடையிலான முல்லைப்பெரியாறு நீரினை தமிழகத்திற்கு வழங்குவதற்கு வகை செய்யும் ஒப்பந்தம் தொடர்ந்து அமுலில் இருந்து வருகிறது என்பதை சட்ட அடிப்படையில் உறுதி செய்கிறது. எனவேதான், அப்பிரிவு கேரள அரசுக்கும் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கும் மிகவும் எரிச்சல் ஊட்டும் ஒன்றாக உள்ளது. எனவே அப்பிரிவு செல்லத்தக்கதல்ல என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் 2006-ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பில், அந்த வாதத்தினை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு ஆயத்தின் முன்பு அப்பிரிவின் சட்ட செல்லுபடி குறித்த கேரளத்தரப்பின் கேள்வி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. கேரளத்தரப்பிற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசு என்ன நிலைபாடு எடுத்துள்ளது என்பது நமக்குத் தெரியவில்லை.
இந்நிலையில், முல்லைப்பெரியாறு நீரினை பெறும் தமிழகத்தின் உரிமை ஆங்கிலேயர் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தினை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளதா? என்பது இப்பொழுது எழுந்துள்ள ஒரு முக்கியமான கேள்வியாகும். அதற்கான பதிலை நாம் வரலாற்றிலிருந்தே தேட வேண்டியுள்ளது.
தேவிகுளம் - பீர்மேடு வரலாறு
12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய அரசு வீழ்ச்சியுற்றது. சோழ அரசு பாண்டிய நாட்டை கைப்பற்றியுள்ளது. பாண்டிய அரசன் மாணவிக்ரமா தனது குடும்பத்தினர் மற்றும் பலருடன் தப்பித்துள்ளான். அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் கடுமையான காட்டுப்பகுதியான அகமலையை அடைந்துள்ளனர். அவர்கள், தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க கற்கள் கொண்ட பெட்டிகளை செல்வங்களாக கொண்டிருந்தாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான இடமின்றி காடுகளின் வழியே அலைந்துதிரிந்துள்ளனர். பிறகு வன்னேரி என்ற ஊருக்குச்சென்று அங்கு வசிக்க தொடங்கியுள்ளனர். அப்போது, பாண்டிய அரசுக்கு கட்டுப்பட்ட தேனி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளின் குறுநில அரசர்கள் தங்களது மன்னர் தப்பித்து வன்னேரியில் இருப்பதை அறிந்து அவரை சந்தித்து, பாண்டிய நாட்டிற்கு திரும்ப வருமாறு வேண்டியுள்ளனர். ஆனால், மன்னன் மாணவிக்ரமா அவ்வாறு திரும்பி செல்லவில்லை. அப்பொழுது, இளங்காலூர் நாட்டு மன்னன் பாண்டிய மன்னனை வரவேற்றுள்ளான். அங்கு சென்று வசித்த போது, மன்னன் மாணவிக்ரமா இறந்துவிட்டான்.
அதன்பிறகு அவனது மூத்த மகனான குலசேகரன் என்ற இளவரசன் கூடலூர் சென்று வசிக்கவும் அதன் அருகாமையில் உள்ள குறுநில அரசர் களை ஒருங்கிணைக்கவும் விரும்பியுள்ளான். அப்பொழுது, கூடலூருக்கு எதிரே உள்ள பூஞ்சார் என்ற பகுதியின் சேரர் வழி குறுநில அரசன் ஒருவன் இறந்துவிட்டதாகவும் அவ்விடம் விற்பனைக்கு இருப்பதாகவும் அவனுக்கு தெரிய வருகிறது. தன்னிடமிருந்த பொன் மற்றும் மதிப்புமிக்க கற்களை விலையாக கொடுத்து பூஞ்சார் பகுதியை வாங்கியுள்ளான். அது, கூடலூருக்கு எதிர் திசையில் உள்ள ஒரு நிலப்பரப்பு ஆகும். முன்னொரு காலத்தில், கூடலூருக்கு அருகில் உள்ள குமுளி சேரர்களின் தலைநகரமாக இருந்துள்ளது என்பதும் அது குழுமூர் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு மற்ற மன்னர்கள் சேர்ந்து, குலசேகர பாண்டியனை பூஞ்சார் (பூனையார் தம்பிரான் அரசு) மன்னனாக அறிவித்து விழா நடத்தியுள்ளனர். அதன்பிறகு, அவன் அங்குள்ள மீனாட்சி ஆற்றின் கரையில் மதுரையை விட்டு வெளியேறும் போது அவனது குடும்பத்தினர் எடுத்துச் சென்ற மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவர் சிலைகளை கொண்டு, அவர்களது குல தெய்வம் மீனாட்சி பெயரில் ஒரு கோவிலை கட்டியுள்ளான். (உயரமான மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள அக்கோவிலை குறித்து நேசனல் ஜியாகிரபி அலைவரிசை ஒரு நிகழ்ச்சியினை ஒளிபரப்பியுள்ளது). அதன்பிறகு அரண்மனை மற்றும் கோட்டைகளை கட்டி உள்ளான். இவ்வாறு பூஞ்சார் அரசு நிறுவப் பட்டுள்ளது. அந்த அரசின் நிலப்பரப்பாக தற்போது கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதியான தேவிகுளம், பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை வட்டங்களை உள்ளடக்கியும் கூடலூர், கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட தமிழக பகுதிகள் வரை நீட்டித்தும் இருந்துள்ளது. 16-ஆம் நூற்றாண்டு காலத்தில் தற்போதைய இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி பூஞ்சார் அரசின் ஆளுகையில் இருந்ததை, கேரள அரசின் இணையதளமே தெரிவிக்கிறது. இவ்வாறு பூஞ்சார் அரசு பல நூற்றாண்டுகள் தொடர்ந்துள்ளது.
அதன்பிறகு 1756-ம் ஆண்டுதான் வேனாடு அரசன் என்பவன் பல சிறு அரசுகளை ஒன்று சேர்த்து திருவிதாங்கூர் அரசினை உருவாக்குகிறான். அதாவது, திருவிதாங்கூர் அரசு பூஞ்சார் அரசுக்கு 6 நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பிறகு திருவிதாங்கூர் அரசுக்கும், பூஞ்சார் அரசுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டுள்ளது. திருவிதாங்கூர் அரசும் பூஞ்சார் அரசினை அங்கீகரித்துள்ளது.
அதன்பிறகு 1866ம் ஆண்டு பூஞ்சார் அரசு அதன் ஆளுகைக்குட் பட்டிருந்த ஏலமலைகள் என்று அறியப்பட்ட பகுதியை திருவிதாங்கூர் அரசிற்கு கொடுத்துள்ளது. திருவிதாங்கூர் அரசு 2000 மூட்டைகள் நெல்லினை தொடர்ந்து நிரந்தரமாக ஆண்டுதோறும் பூஞ்சார் அரசுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி அப்பகுதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலப்பகுதி தற்போதைய பீர்மேடு வட்டத்தின் பெரும் பகுதிகளை உள்ளடக்கியதாகும். அதற்குள்தான் முல்லைப்பெரியாறு நீர் பிடிப்புப்பகுதியும் வருகிறது. இவ்வாறு 1866 -ஆம் ஆண்டு முதல்தான் திருவிதாங்கூர் அரசின் ஆளுகைக்கு மேற்குறிப்பிட்ட நிலப்பகுதி வந்துள்ளது என்பது அறிய வேண்டிய முக்கியச் செய்தியாகும்.
இக்காலத்தில்தான், திருவிதாங்கூர் அரசில் வழக்குரைஞராக பணியாற்றிய ஜான் டேனியல் மன்றோ என்பவன் பூஞ்சார் நிலப்பரப்பினை பார்வையிட்டு, அவை தோட்டங்கள் அமைக்க வாய்ப்பான இடம் என்று தெரிந்து கொள்கிறான். அதன்பிறகு, அவன் பூஞ்சார் அரசுடன் 11. 7. 1877ல்
ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறான். அதன்படி அந்த ஆங்கிலஅதிகாரி ரூ. 5000ஃ- மறுபயனாக கொடுத்தும் ஆண்டு குத்தகைத் தொகை ரூ. 3000 கொடுக்க சம்மதித்தும் அஞ்சுநாடு என்று அறியப்பட்ட பகுதியை (தற்போது தேவிகுளம் வட்டத்தை உள்ளடக்கிய பகுதி) குத்தகைக்குப் பெறுகிறான்.
இதன்பிறகுதான், சென்னை மாகாணமும் திருவிதாங்கூர் அரசும் 1886-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, தற்போதைய பீர்மேடு வட்டத்தின் ஒரு பகுதியான முல்லைப்பெரியாறு பாயும் நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அணையினை அமைத்து சென்னை மாகாணத்திற்கு தண்ணீரை கொண்டுவரும் திட்டத்திற்காக தேவைப்பட்ட 8000 ஏக்கர் அளவு நிலத்தினை 999 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தம் மூலம் சென்னை மாகாணம் பெற்றது. அப்பகுதியினை ரூ. 6,000,00-த்திற்கு விலைக்கு பெற்றக்கொள்ளுமாறு திருவிதாங்கூர் அரசு சென்னை மாகாணத்தினை கேட்டுக் கொண்டது என்பதும் ஆனால் அதற்கு அப்போதைய ஆங்கிலேய அரசு அனுமதி அளிக்கவில்லையென்பதும் அரசு ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. பூஞ்சார் அரசின் ஒரு பகுதியாக இருந்து திருவிதாங்கூர் அரசிற்கு வழங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட பகுதியில், அதாவது 1886ம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் அரசு பூஞ்சார் அரசிடமிருந்து ஆண்டிற்கு 2000 மூட்டை நெல் வழங்குவது என்ற ஒப்பந்த அடிப்படையில் பெற்ற நிலப்பரப்பின் ஒரு பகுதியில்தான், நீரைத் தேக்கவும் அணை நிறுவவும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் சென்னை மாகாண அரசு திருவிதாங்கூர் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இல்லாவிடில், ஆங்கிலேய அதிகாரி தேவிகுளம் பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் அமைக்க பூஞ்சார் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது போல், சென்னை மாகாண அரசம் பூஞ்சார் அரசுடன்தான் ஒப்பந்தம் செய்திருக்கும்.
ஆங்கிலேய அதிகாரி குத்தகைக்கு பெற்ற நிலத்தில் தோட்டங்களை அமைப்பதற்கு பூஞ்சார் அரசுக்கு கட்டுப்பட்ட அஞ்சுநாட்டின் பழங்குடி தமிழ் குறுநில மன்னன் கண்ணன்தேவர் என்பவன் உதவியுள்ளான். பிறகு மேற்சொன்ன நிலத்தினை ஜேம்ஸ் பின்லே ரூ கம்பெனி லிட் என்ற நிறுவனம் விலைக்கு வாங்குகிறது. அதன்பிறகு பின்லே நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் சேர்ந்து 1897-ல் கண்ணன் தேவன் மலைகள் உற்பத்தி நிறுவனம் (வுhந முயயெn னுநஎயn ர்டைடள Pசழனரஉந ஊழஅpயலெ) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளன. தங்களுக்கு தோட்டங்கள் அமைக்க உதவிய அந்த குறுநில மன்னனை நினைவு கூர்ந்து அவனது பெயரினை தங்களது நிறுவனத்திற்கு சூட்டியுள்ளனர். அந்நிறுவனத்தின் மூலம், புதிய புதிய தேயிலைத் தோட்டங்கள் அங்கு உருவாக்கப்பட்டுள்ளன. மேற்படி நிறுவனம் பிறகு 1963-ம் ஆண்டு டாடா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. பிறகு 1983 முதல் டாடா நிறுவனம் பின்லே நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக வாங்கி டாடா தேயிலை நிறுவனம் (வுயவய வுநய டுiஅவைநன) என்ற பெயரில் அத்தேயிலைத் தோட்டங்களை நடத்தி வருகிறது. பிறகு, டாடா தேயிலை நிறுவனம்2005-முதல் மீண்டும் கண்ணன்தேவன் மலைகள் தோட்ட நிறுவனம் என்ற பெயரில் தொடர்ந்து தற்போதும் அத்தேயிலைத் தோட்டங்களை நடத்தி வருகிறது. இவ்வாறு 11. 7. 1877ல் பூஞ்சார் அரசினர் ஆங்கிலேய அதிகாரிக்கு குத்தகை ஒப்பந்தத்தின் மூலம் வழங்கிய தேவிகுளம் தேயிலைத் தோட்டங்களை தங்களுக்கு மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று, அந்த அரச குடும்பத்திpன் தற்போதைய வாரிசுகள் டாடா குழுமத்திற்கு எதிராக அங்கு சமீபத்தில்தான் வழக்கிட்டுள்ளனர்.
 இறுதியில், பூஞ்சார் அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த ஒரு நிலப்பரப்பினை குறித்து அந்த அரசுக்கும் திருவிதாங்கூர் அரசுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. அதனால் பூஞ்சார் ஆணையம் என்ற ஒரு ஆணையம் 1897-ல் அமைக்கப்பட்டது. அவ்வாணையம் அந்நிலப்பரப்பின் மீதான பூஞ்சார் அரசின் இறையாண்மையை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான், பூஞ்சார் அரசின் மொத்தநிலப்பரப்பின் மீதும் திருவிதாங்கூர் அரசு தனது இறையாண்மை அதிகாரத்தை அறிவிக்குமாறும் அவ்வாறு செய்யுமாயின் பூஞ்சார் அரசுக்கு தக்க இழப்பீடு வழங்கலாம் என்றும் அப்போதைய சென்னை மாகாண ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்தான் ஆலோசனை கூறியுள்ளார். அதனடிப்படையில்தான், திருவிதாங்கூர் அரசு 19. 9. 1899-ல் பூஞ்சார் பரப்பின் மீது இறையாண்மை அதிகாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. பூஞ்சார் அரச குடும்பத்திற்கு, பூஞ்சார் பகுதியிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வழங்குவதாக 19. 9. 1899ல் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு பூஞ்சார் அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த அந்நிலப்பரப்பு கி. பி. 1000 வரை சேர அரசின் பகுதியாக இருந்து வந்துள்ளது. பூஞ்சார் அரசு பாண்டிய அரச வம்சாவழியினரால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட அரசாகும். அந்த அரசு இறுதி வரை தங்களை பாண்டிய அரசு என்றே அழைத்துக்கொண்டுள்ளது. முடியாட்சி காலத்தில் ஒவ்வொரு அரசம் தங்கள் அரசின் இறையாண்மை அதிகாரத்தை கடவுளிடமிருந்து பெற்றதாகவே அறிவித்தன. பூஞ்சார் அரசம் தங்கள் இறையாண்மை அதிகாரத்திற்கு மதுரை மீனாட்சியம்மனையே காட்டியுள்ளது. அதன்படிதான், அவர்களால் வெளியிடப்பட்டுள்ள வரி ரசீது சீட்டுகளில் கூட, மீனாட்சியம்மன் துணை என்று எழுதி வெளியிட்டுள்ளது. அவற்றில் தமிழிலேயே கையொப்பம் இட்டுள்ளனர். இவ்வாறு, அந்த அரசு தமிழ் அரசாகவே இருந்துள்ளது. இவ்வாறு, 19-ம் நூற்றாண்டின் இறுதிவரை பூஞ்சார் அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த நிலப்பரப்புதான் தற்போதைய இடுக்கி மாவட்டத்தின் வட்டங்களான தேவிகுளம், பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை நிலப்பரப்பாகும். இது முடியாட்சி வரலாறு.
அடுத்து மக்கள் வரலாறு என்று பார்ப்போமாயின், அங்கு பளியர், புலையர், மன்னன், முத்துவான், ஊராளி, மலை அரையன், உள்ளாடன் என்ற பழங்குடி மக்கள் தொன்மை காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர். பளியர் என்ற பழங்குடியினர், பழனி, கொடைக்கானல், சிறுமலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மலைகளில் இன்றும் வசித்து வரும் பழங்குடியினராவர். புலையரும் அதே போன்றேரே. தாங்கள் பாண்டியர் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மன்னர் என்ற பழங்குடியினர், இன்றும் தங்களுக்குள் ஒரு மன்னரை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர். முத்துவான் என்ற பழங்குடியினர், பூஞ்சார் மன்னருடன் மதுரையை விட்டு வெளியேறும் போது மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் சிலைகளை தூக்கிக்கொண்டு சுமந்தவர்கள் என்று அறியப்படுகின்றனர். இவ்வாறு அங்குள்ள பழங்குடியினர் அனைவரும் தமிழ் பழங்குடியினர்தான்.
அடுத்து, கம்பம், உத்தமபாளையம் மற்றும் போடி வட்டங்கள் மற்றும் அவற்றைச்சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சென்று அப்பகுதியில் குடியேற்றங்கள் அமைத்து வாழ்ந்து வரும் தமிழர்கள் மற்றொரு பிரிவினர் ஆவர். அவர்கள்தான் அங்கு ஏலம், மிளகு போன்ற பயிர்களை சாகுபடி செய்வதற்கான தோட்டங்களை உருவாக்கியவர்கள்.
அடுத்த பிரிவினர்தான் தேயிலைத் தோட்டத் தமிழர்கள். மேற்சொன்ன ஆங்கிலேய தேயிலை நிறுவனங்கள் தேயிலைத் தோட்டங்களை அமைப்பதற்கும், அதன்பிறகு அத்தோட்ட பணிகளைச் செய்வதற்கும் முழு அளவில் தமிழ் தொழிலாளர்களையே உழைப்பில் ஈடுபடுத்தியுள்ளனர். அவர்களின் கடின உழைப்பு இல்லாவிடில் அங்குள்ள தோட்டங்கள் சாத்தியமாயிருக்க முடியாது. அத்தொழிலாளர்களில் பெரும்பாலோர் திருநெல்வேலி, செங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட ஒடுக்கப்பட்டத்தமிழ் சமூக தொழிலாளர்களே ஆவர்.
திருவிதாங்கூர் தமிழர் போராட்டம்
திருவிதாங்கூர் அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழர் பெரும்பான்மையினராக வாழ்ந்த 9 வட்டங்களில் தோவாலை, அகஸ்திஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை தென்பகுதி, நெடுவங்காடு கீழ்பகுதி, செங்கோட்டை, உள்ளிட்ட வட்டங்களுடன் பூஞ்சார் அரசின் பகுதியாக இருந்த தேவிகுளம், பீர்மேடு ஆகிய இரு வட்டங்களும் அடங்கும்.
திருவிதாங்கூர் அரசின் ஆளுகைக்குள் இருந்த மேற்சொன்ன தமிழர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்புதான் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் என்ற அமைப்பாகும். திருவாளர்கள். நத்தானியல், பி. எஸ். மணி, காந்திராமன், வேலாயுதபெருமாள் பிள்ளை, ஆர். கே. ராம், கே. நாகலிங்கம், ஸ்ரீவி. தாஸ், தோவாலை சிவதானு, அ. அப்துல்ராசாக் உள்ளிட்டோர் அந்த அமைப்பினை தொடங்கி பெரும் போராட்டத்தினை நடத்தினர். பின்னர், அந்த அமைப்பிற்கு திரு. மார்சல் நேசமணி அவர்கள் தலைமை தாங்கினார்.
அப்போராட்டம், ஒரு தேசிய இனத்தினை சார்ந்த மக்கள் தங்களது கூட்டு நலனை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில், தங்களது இனத்திற்கான அரசுடன் தங்களது நிலப்பகுதியை இணைக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட தெளிவான கண்ணோட்டம் கொண்ட ஒரு சீரிய போராட்டமாகும். சாதி, மதம் கடந்து தமிழர் என்ற இன அடிப்படையில் ஒன்று சேர்ந்து நீண்ட போராட்டத்தினை நடத்தினர். ஆனால், தாய் தமிழகத்து இயக்கங்கள், கட்சிகள் அவர்களுக்கு உரிய ஆதரவு அளிக்கவில்லை என்பதுதான் துயரமான செய்தியாகும். அதன் விளைவுதான் இன்று மலையாளிகளால் தமிழருக்கு முல்லைப்பெரியாறு ஆற்று நீர் உரிமையே மறுக்கப்படும் பெரும் துயரத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது!
இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தை நடத்திய காங்கிரஸ்கட்சி, தனது போராட்டத்திற்கு வெகுமக்களின் ஆதரவை பெறுவதற்கு, ஒவ்வொரு மக்கள் கூட்டத்தினரும் தங்களது மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைத்து ஆட்சி அமைத்துக்கொள்வதற்கு தாங்கள் வழிவகை செய்வோம் என்று உறுதி கூறினர். அதனடிப்படையில்தான், காங்கிரஸ் கட்சியே மொழிவாரி அடிப்படையில் தனது மாகாண கிளைகளை அமைத்து மக்களிடம் சென்று ஆதரவு திரட்டியது. ஆனால் ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரத்தினை பெற்ற காங்கிரஸ் கட்சி, தனது வாக்குறுதிபடி செயல்பட விரும்பவில்லை. ஆனால், மக்கள் போராட்டங்கள் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்ற நிலைமையை உருவாக்கின. அதன் காரணமாகத்தான் மொழி வாரி மாநிலங்கள் அமைப்பதற்கான ஆணையத்தினை அமைத்தது. அதில், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த பசல்அலி, குன்சுரு மற்றும் கேரளாவைச் சேர்ந்த கே. எம். பணிக்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
அந்தக்குழு, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளிகள் பெரும்பான்மையினராக இருந்த மலபார் பகுதியுடன் பிரச்சனைக்குட்பட்ட தமிழர் பெரும்பான்மையாக இருந்த ஊர்களை கொண்டிருந்த சித்தூர் மற்றும் பாலக்காடு பகுதிகளும் கேரளாவிற்கு கிடைப்பதற்கு பரிந்துரை செய்தது.
ஆனால், திருவிதாங்கூர் - கொச்சி என்று அறியப்பட்ட மாகாணத்திலிருந்த தமிழர் பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படுவதில் மட்டும் நடுநிலையற்று செயல்பட்டுள்ளது. அதன்காரணமாகத்தான், திருவிதாங்கூர் அரசிற்கு உட்பட்டிருந்த மேற்குறிப்பிட்ட 9 வட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த நெய்யாற்றின் கரை தென்பகுதி, நெடுமங்காடு கீழ்ப்பகுதி, தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. அவற்றை தமிழ்நாட்டுடன் இணைக்க மறுப்பதற்கு ஆணையம் தெரிவித்த காரணங்கள் அறவே நியாயமற்றவை.
தமிழ்நாட்டில் அப்பொழுது, இந்திய தேசியக் கட்சிகளும் திராவிட தேசியம் பேசிய கட்சிகளும் மேற்குறிப்பிட்ட பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படுவதற்கு எந்த குறிப்பிடத்தக்க போராட்டங்களையும் நடத்தவில்லை. அதற்காக போராடிய திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சி மற்றும் ம. பொ. சி. ஆகியோரின் போராட்டத்திற்கு கூட, இக்கட்சிகள் தமிழ்நாட்டு தமிழரை திரட்டி ஆதரவளிக்க மறுத்துவிட்டன.
ஆனால், அதே சமயத்தில், மலையாள காங்கிரஸ் தலைவர்களும் மற்ற கட்சித்தலைவர்களும் ஐக்கிய கேரளம் அமைப்பதில் ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமையை நிர்பந்தம் செய்து தங்களது திட்டத்திற்கு ஆதரவு திரட்டினர். மலையாளிகள் பெரும்பான்மையினராக இல்லாத பகுதிகளை கேட்டுப்பெறுவதிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளை தக்க வைத்துக்கொள்வதிலும் அவர்கள் அனைத்து அரசியல் சூழ்ச்சிகளையும் செய்துள்ளனர். அவர்களுக்கு, மாநில சீரமைப்பு ஆணையத்தின் உறுப்பினரான மலையாளி கே. எம். பணிக்கரே ஆதரவாக இருந்துள்ளார். அந்த ஆணையத்தின் தலைவரான நீதிபதி பசல்அலி, உத்தரபிரதேசம் - பீகார் எல்லைப்பிரிப்பின் விடயத்தில் தான் அப்பகுதியினைச் சேர்ந்தவன் என்று கூறி ஆணையத்தின் பணியில் பங்கெடுக்காமல் ஒதுங்கியுள்ளார். ஆனால், கே. எம். பணிக்கர் அவ்வாறு செய்யவில்லை. தனது மலையாள சார்பினையும் அவர் மறைத்துக்கொள்ளவில்லை. அவர், அந்த ஆணையத்தில் உறுப்பினராக இருக்க சிறிதும் தகுதியற்றவர் என்று சட்டம் படிக்காத ம. பொ. சி. ஒருவரால் மட்டுமே கேள்வி கேட்க முடிந்ததுள்ளது.
திருவிதாங்கூர் - கொச்சி சட்டமன்றத்தில் தேவிகுளம் - பீர்மேடு என்ற இரண்டு வட்டங்களும் சேர்ந்து ஒரே சட்டமன்ற தொகுதியாக இருந்துள்ளது. இந்திய விடுதலைக்குப்பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தலில் திருவிதாங்கூர் தமிழர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்ற முழக்கத்துடன் போட்டியிட்ட திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சி, அத்தொகுதியில் திரு. சர்மா என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. அங்குள்ள தமிழர்கள் திரு. சர்மாவை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குமுன் அறியப்படாத அக்கட்சிக்கு வாக்களித்து தமிழர்கள், அப்பகுதியினை தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தினை தெளிவாக தெரிவித்தனர்.
 தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளில் தமிழர்தான் பெரும்பான்மையினர் என்பதை ஆணையம் மறுக்கவில்லை. மொழி அடிப்படையில் மாநில எல்லைகளை பிரித்துக்கொடுக்க அமைக்கப்பட்ட அந்த ஆணையம் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களைப் பொருத்தவரை ஒரு மொழியினரின் பெரும்பான்மையினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு நிலப்பரப்பு எந்த மாநிலத்துடன் சேர்ப்பது என்பதை தீர்மானித்துவிட முடியாது என்று தனக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பினையே மறுத்து கருத்து தெரிவித்தது. அங்கு வசித்த தேயிலைத் தோட்ட தமிழர் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினர்களையும் வந்துசெல்லும் மக்கள் என்று கூறி அவர்களது வாழ்விட உரிமைக்கு எதிரான முறையில் கருத்து தெரிவித்தது. அப்பகுதியினை பொருளாதார வளமுள்ள பகுதியாக மாற்றியதில் தமிழர்களின் கடின உழைப்பின் பங்கினையும் மறுத்தது. தோட்டத் தொழிலாளர் அல்லாத மக்களில் கூட மலையாள மக்கள் பெரும்பான்மையினர் என்று ஆணையத்தால் கூறிட முடியவில்லை. ஏனெனில், அது உண்மையில், தமிழ் அரசான பூஞ்சார் அரசுதான் பல நூற்றாண்டுகள் அங்கு ஆட்சி செலுத்தியுள்ளது. பூர்வீக குடிகளாகவும், தொல் குடியினராகவும் தமிழர்தான் இருந்து வந்துள்ளனர். அப்பகுதியில் மலையாளிகள் தொழிலாளிகளாகவோ அல்லது பூர்வீக குடியினராகவோ அல்லது நீண்ட காலம் வசித்து வந்தவர்களாகவோ, எந்த வகையிலும் பெரும்பான்மையினராக அறவே இருந்திருக்கவில்லை. ஆயினும், ஆணையம் அப்பகுதியினை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு பரிந்துரைக்க மறுத்துவிட்டது.
அமைக்கப்படவிருந்த கேரள மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெற்ற பகுதிகள் எதுவும் இருக்கவில்லை என்பதால் அந்த அரசின் வருமானத்திற்கு பெருமளவில் தேயிலை உற்பத்தி செய்யும் தேயிலைத் தோட்டங்கள் நிரம்பிய பகுதிகளாக தேவிகுளம்-பீர்மேடு பகுதி இருந்ததால், அவை கேரள அரசிற்கு வருமானம் அளிப்பதற்கு தேவைப்படுவதாக மாநில சீரமைப்பு ஆணையமும் இந்திய அரசும் கருத்துக்கொண்டிருந்துள்ளன. அந்த கருத்தினை வலுப்படுத்தி, இந்திய அரசிலும் காங்கிரஸ் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்திய மலையாளிகள் தங்களது சூழ்ச்சிகள் மூலம் அப்பகுதிகள் கேரளாவிற்கு கிடைக்கப்பெற்றனர். இந்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் மலையாளிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சாகதமாக இருந்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆணையமே செங்கோட்டை வட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று பரிந்துரைத்த போதிலும், இந்திய அரசு அந்த வட்டத்தின் பாதிக்கு மேற்பட்ட பகுதியை கேரளாவுடன் இணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில், இப்பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்த காங்கிரஸ் கட்சியினர், பிறகு மக்கள் போராட்டங்கள் காரணமாக அப்பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளனர். அதே சமயத்தில் திருவிதாங்கூர் - கொச்சி சட்டமன்றத்தில் தேவிகுளம் - பீர்மேடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. சர்மர் அப்பகுதியினை தமிழர்கள்தான் உழைத்து வளப்படுத்தினர் என்றும் அப்பகுதி தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட வேண்டுமென்றும் வலுவான முறையில் குரல் எழுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 ஆனால் பிறகு, காங்கிரஸ்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களான காமராசர், பக்தவச்சலம், சி. சுப்பிரமணியம் போன்றோர் அக்கட்சியின் டெல்லி தலைமைக்கு கட்டுப்பட்டு அக்கோரிக்கையை வலியுறுத்தாமல் அமைதிகாத்துவிட்டனர். இதற்கு அப்போது சட்டமன்றத்தில் நடந்த விவாதங்களே சாட்சியமாக உள்ளது. அப்போது சட்டமன்றத்தில் பேசிய திரு. கே. விநாயகம் என்ற உறுப்பினர், தேவிகுளம் - பீர்மேடு பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்புவரை பேசிய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம், பிறகு கருத்தை மாற்றிக்கொண்டும் மத்திய அரசு சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முரண்பட்டு பேசுவதைக் சுட்டிக்காட்டிய அவர், அதன்மூலம் தமிழர்களின் கோரிக்கை மீது காங்கிரஸ் கட்சி பொறுப்பற்று நடந்துள்ளது என்று குற்றம் சாட்டியதுடன், தேவிகுளம் - பீர்மேட்டில் தமிழ் தொழிலாளர்கள் பல்லாண்டு காலம் வசித்து வருவதையும் அவர்களை வந்துசெல்பவர்கள் என்று ஆணையம் கூறுவது எந்தளவு நியாயமற்றது என்பதையும் குறிப்பிட்டதுடன், அம்மக்கள் அப்பகுதியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டி பேசிய அவர், ஆனால் அவ்வாறு இணைக்காமல் இந்திய அரசு தமிழருக்கு பெரும் கொடுமை செய்துவிட்டது என்றும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் பேசியுள்ளார். இவ்வாறு, இந்திய அரசும் அதன் ஆணையமும் நியாயமற்ற முறையில் பாகுபாட்டுடன் செயல்பட்டு, தமிழ்நாட்டுடன் இணைக்கப்படாமல் போய்விட்ட பகுதிகள்தான் பீர்மேடு -தேவிகுளம் வட்டங்களாகும்.
இந்த தேவிகுளம் - பீர்மேடு பகுதியின் வரலாறும் அங்கு இன்றும் பெரும்பான்மையினராக வசித்துவருபவர்கள் தமிழர்கள்தான் என்ற உண்மையும் அங்குள்ள ஊர்களின் பெயர்களும் அப்பகுதி மீது தமிழர்களுக்குரிய உரிமைகளை நிலைநாட்ட உள்ள மறுக்க முடியாத சான்றுகளாகும். நாம், முல்லைப்பெரியாறு ஆற்று நீருக்கான நமது உரிமையை 1886-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் மட்டும் கோருவது என்பது, தேவிகுளம்-பீர்மேடு பகுதியின் மீது தமிழர்கள் சட்டப்படி கோரிப்பெற வேண்டிய உரிமையை முழுமையாக அறிந்து கொள்ளாத அறியாமையின் பாற்பட்டதாகும். அது, ஒருவகையில் கேரள அரசிற்கு துணை செய்யும் வாதமாகும்.
இந்த நமது வரலாற்று அறியாமையை பயன்படுத்திக்கொண்டுதான், இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் அதில் இப்பிரச்சனை குறித்து எழுதிவரும் இராமசாமி ஆர். ஐயர் போன்றவர்கள், துணிந்து தமிழ்நாட்டிற்கு எதிராகவும் தமிழர் நலனுக்கு எதிராகவும் பரப்புரை செய்ய முடிகிறது. அவர்கள், 1886-ஆம் ஆண்டு ஒப்பந்தம்படியான நிலப்பரப்பில் திருவிதாங்கூர் அரசு ஏதோ பல நூற்றாண்டு காலம் தொடர்ந்து இறையாண்மை செலுத்தி ஆட்சி செய்து வந்தது போன்றும், ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே திருவிதாங்கூர் அரசு அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்து விட்டது என்பது போன்றும், இதன் மூலம் கேரளமக்களுக்கு ஆங்கில ஏகாதிபத்திய அரசினால் பெரிய அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்றும் பொய்யுரைக்கின்றனர். அதனடிப்படையிலேயே, கேரள மாநிலம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்ககடமைப்பட்டிருக்கவில்லையென்றும் அந்த ஒப்பந்தம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்றும் அந்த ஒப்பந்தம் காரணமாக மலையாளிகளுக்கு மிகப் பெரிய மனக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் அது நீக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுமானால் தமிழகம் கேரளாவிடம் விலை கொடுத்து தண்ணீர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் துணிந்து நச்சுக் கருத்துக்களை பரப்புகின்றனர்.
அதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் கூட்டாட்சி நாட்டின் அடிப்படைக் கடமையைக் கூட உச்சநீதிமன்றம் நிறைவேற்றக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அணையின் பாதுகாப்பு குறித்து முடிவு தெரிவிக்க முடியாது என்றும் கூறுகின்றனர். தாங்கள் நதிநீர் நிபுணர் என்று கூறிக்கொண்டு அடிப்படை அரசியல் நெறிகளையே மறுக்கின்ற வன்மமான, அநீதியான அரசியல் கருத்துக்களை நடுநிலைமை என்ற பெயரில் அவர்களால் எழுதிப் பரப்ப முடிகிறது. அதனை அவர்களால் தமிழ்நாட்டில் துணிச்சலாக செய்ய முடிகிறது என்பதுதான் இங்கு ஆச்சரியம் கொள்ளத்தக்க ஒரு உண்மையாகும். இப்பிரச்சாரத்தின் உள்நோக்கமும் தமிழர் பகை நோக்கும் நமக்கு எளிதில் தெரியக்கூடிய ஒன்றுதான். ஆயினும், இக்கருத்துக்கள் மூலம் கேரள மாநிலம் ஏதோ தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது போன்றும் ஏகாதிபத்தியம் உருவாக்கிய ஓர் ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றது என்பது போன்றும் இந்தியாவின் பிற பகுதி மக்களிடம் ஒரு பொய்மையை உண்மை போன்று பரப்பி வருகின்றனர்.
எனவே இப்பிரச்சினை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய எல்லைப் பிரச்சினையாகும். அதனை ஆற்று நீரில் உரிமை கோரும் பிரச்சனையாக சுருக்குவது நமது உரிமைக்கு எதிரானதாகும். மலையாளிகளும் அவர்களது கேரள அரசம் இதனை தெளிவாக அறிந்து வைத்துள்ளனர். இடுக்கி மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கேரள அரசிற்கு 17.11.06 அன்று அனுப்பியுள்ள அறிக்கையில், தேவிகுளம் - பீர்மேடு வட்டங்களில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கு ஓட்டுரிமை மற்றும் குடும்ப அட்டை வழங்குவதை கடினமாக்க வேண்டும் என்றும் இல்லாவிடில் அவ்விருவட்டங்களும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனை 26. 01. 2008 அன்று வெளிவந்துள்ள டெகல்கா பருவஏட்டின் கட்டுரை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சமீப ஆண்டுகளில் முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரள அரசம் அங்குள்ள கட்சிகளும் ஊடகங்களும் தமிழ் நாட்டிற்கு எதிரான இத்தகைய கடும் போக்கினை மேற்கொண்டிருப்பதற்கான பின்புலம் என்ன என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு முல்லைப்பெரியாறு ஆற்றில் நீர் பெறும் தமிழ்நாட்டின் உரிமையை மறுப்பதன் மூலம், எழக்கூடிய எல்லைப்பிரச்சினையை தவிர்த்துவிடலாம் என்பது கேரள தரப்பினால் மேற்கொள்ளப்படும் நுட்பமான தந்திர செயலாகும். அதனை புரிந்து கொண்டு உண்மையான எல்லைப்பிரச்சினையை தீர்க்க நாம் போராட வேண்டும். எல்லைப்பிரச்சினை தீர்வுதான் ஆற்று நீர் உரிமை பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தரும். வேறு வகையில் தமிழகத்திற்கு பயனிளக்கத்தக்க வேறு எந்த தற்காலிக தீர்வோ அல்லது நிரந்தரதீர்வோ இல்லையென்பதை தெளிவாக அறிதல் வேண்டும்.
இவ்வாறு உண்மையில் தேவிகுளம் - பீர்மேடு வட்டங்கள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படாமல் போனமையால் வஞ்சிக்கப்பட்டவர்களும் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களும் தமிழர்கள்தான் என்பதை இனியேனும் நாம் தெளிவாக உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அகில இந்திய கட்சிகள் அனைத்துமே இதில் தமிழர்களுக்கு எதிரான கட்சிகளாகும். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. ஒப்பந்தப்படி பெற உரிமையுள்ள 152 அடிநீர்த் தேக்கும் உரிமையை கூட வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற முதுகெலும்பற்ற கட்சி என்பதை தெளிவாக காட்டியுள்ளது. அக்கட்சியின் நிறுவனத்தலைவரான எம்.ஜி.ஆர். ஆட்சிப் பொறுப்பில் இருந்த 1979ம் ஆண்டுதான் அணை நீர்த்தேக்கப் பகுதியின் சுற்றுலா உரிமை, மீன் பிடித்தல் உரிமை, அணைப்பாதுகாப்புரிமை உள்ளிட்ட உரிமைகளை கேரள அரசிற்கு தமிழக அரசு தாரை வார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தி. மு. க. வின் தலைமை குடும்பத்தினரால் நடத்தப்படும் சன் தொலைக்காட்சி, கேரளாவில் 5-ற்கும் மேற்பட்ட மலையாள அலைவரிசைகள் நடத்தி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறது. எனவே, அக்கட்சி இப்பிரச்சினையில் சடங்கிற்காக அறிக்கைகளை விடுவதுடன் நின்றுவிடுவது கவனிக்கத்தக்கது.
தேர்தல்கட்சிகள் அனைத்தும் இப்பிரச்சினை அடிப்படையில் எல்லைப்பிரச்சினை என்று அறிவித்து அதனை முதன்மைப்படுத்தத் தவறிவருகின்றன. ஆனால், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதனை புரிந்து கொண்டு, இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, இப்பிரச்சினை குறித்து பேசும் கட்சிகளிடம் அவற்றின் நிலைபாட்டை தெரிந்து கொள்வதற்கு எல்லைப்பிரச்சினை குறித்து உங்கள் கட்சியின் நிலைபாடு என்ன? என்று கேட்டுப்பாருங்கள். அவை தமிழர் நலன்களை உண்மையில் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள்தானா என்பது இக்கேள்விக்கு அக்கட்சிகள் அளிக்கும் பதிலில் வெளிப்படும்!
தேவிகுளம், பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை தமிழர் பகுதி என்றும் அதனை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்றும் உரிமைப் போராட்டம் மீண்டும் நடத்த வேண்டும். மறுக்க முடியாத சான்றுகள் மூலம் அவ்வுரிமை போராட்ட வழக்கின் ஒரு பகுதியினை திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சியினரும் அதன் தலைவர் திரு. மார்சல் நேசமணியும் நடத்திவிட்டுச்சென்றுள்ளனர். அவ்வழக்கின் அடுத்த பகுதியை இன்று தமிழர்கள் தொடர்ந்து நடத்த வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அவ்வழக்கை நாம் நீதிமன்றத்தில் நடத்த முடியாது. தமிழர்களைத் திரட்டி நடத்த வேண்டிய உரிமைப் போராட்டத்தின் மூலம்தான் அவ்வழக்கினை நடத்தி வெற்றி பெற வேண்டியுள்ளது. அதற்கு, தமிழர்கள் அனைவரும் கடினமாக நீண்ட காலம் போராட வேண்டும் என்ற கசப்பான உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- அருளப்பா ( arunalawmadurai@gmail.com)

No comments:

Post a Comment