Monday, 23 April 2012

கோடை வெயிலை எப்படிச் சமாளிக்கலாம்?


கொளுத்தும் கோடை ஒருபக்கம்; புழுங்கவைக்கும் மின்தடை ஒருபக்கம் . எங்கேயாவது ஓடிபோகலாமா? என்ற கேள்வி வராவிட்டால் தான் உடம்பில் ஏதோ பிரச்னை என்று பொருள். கடைசி முழு ஆண்டுத் தேர்வு புவியியல் பரிட்சையில் கடைசி கேள்வியை எழுதி, காவிரி டெல்டா பகுதிய மொட்டை பென்சிலில் பட்டையாக தீட்டி, அப்பாடா! என கொடுத்த நூலில் பேப்பரை கட்டி முடிக்கும் போது வருமே ஒரு பயங்கர சந்தோஷம், இப்போது பரபரப்பாய் டி.வியில் ஒரு கோடி தாரேன்னு சொல்லி, மொக்கையாக வரும் முதல் பத்து கேள்வி தரும் சந்தாசத்தை விட மிக மிக அதிகம்.


அப்போதெல்லாம் மணிமுத்தாறு போலாமா? பானதீர்த்தம் போகலாமா? விவேகான்ந்தர் பாறைக்கு மோட்டார் படகில் போகலாமா? என்பது தான் அதிகபட்ச விடுமுறைத் தலங்கள். அதற்கும் கூட, சமீபத்தில் வேலை கிடைத்து, கல்யாணம் ஆகாதத் தாய்மாமா, சமீபமாய் கல்யாணம் ஆன ஜோரில், எப்போதும் சிரிப்போடு சிலகாலம் மட்டும் இருக்கும் அக்காவும் அவங்க வீட்டுமாமாவும் வீட்டுக்கு விடுமுறைக்கு வரணும். அப்போது தான் டூர் போக முடியும். இப்போது நிலைமை மாறிவிட்டது. 3 நாள் கோலாலம்பூர், 4 நாள் சிம்லா என கடனட்டையை தேய்த்தாவது, விடுமுறையை அளவளாவிக் கொண்டாட கிளம்புகிறோம். குதூகலமாய் விடுமுறை கழிய வேண்டுமென்றால், குதூகலமாய் மனமும், ஆரோக்கியமாய் உடலும் இருக்க வேண்டும். டூர் போற இடத்தில், போற கார்-பஸ் எல்லாம், உவ்வே! என்று வாந்தி எடுத்துக் கொண்டு,  “சார் சார்! வண்டிய கொஞ்சம் ஒரம் கட்டுங்க..போண்டா ஒத்துக்கலைன்னு நினைக்கிரேன்னு, மினரல் வாட்டரை தூக்கிக் கொண்டு மறைவிடம் நோக்கி மறைவது டூரை மொத்தமாய் நாற்றமடிக்கச் செய்யும்.

முதலில் தண்ணீர். எங்கு போனாலும் சுத்தமான தண்ணீர் கையில் வைத்திருப்பது மிக அவசியம். தண்ணீரில் தான் பல தொற்றுக் கிருமிகள் பரவும் அபாயம் உண்டு.காய்ச்சி ஆறிய தண்ணீர்தான் உத்தமம். பிளாஸ்டிக் புட்டியில் வரும் பல பாட்டில்தண்ணீர் ஓடையில் பிடித்து விற்பதாக  ‘யூ டியூபில்கூட உண்மைக்காட்சியை காண்பிக்கிறார்கள். கோடையில் உடலின் நீர்த்துவம் 2% குறைந்தால் கூட, “ இதுக்கு முன்னாடி உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே”-ன்னு வீட்டுக்காரரை கலவரப்படுத்தும் குழப்ப வசனம் வரக் கூடும்.குழந்தைகட்கும் முதியோருக்கும் தாக உணர்வு அதிகம் இராது. நாம் தாம் அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும். புட்டியில் விற்கும் கரியமில வாயுகலந்த சோப்புத் தண்ணீரை விட மோர், இளநீர், பழசாறு, பதனீர் கோடையில் நலம் காக்கும் ஆரோக்கிய பானங்கள். நிலத்தடி நீரை நம்மிடையே உறிஞ்சி, பெயர் தெரியாத வேதிக்கலவையை வெளி நாட்டிலிருந்து கொணர்ந்து வந்து கலக்கி, நம்ம ஊர் பிரபலங்களை விலை பேசி நடிக்க வைத்து, விற்கும் அந்த பானங்கள், அதிக விலையில் ஆஸ்டியோபோரோஸிசில் இருந்து இன்னும் பெயர் வைக்காத பல நோயைத் தரும். இனி இந்த கோடையில் உங்கள் உள்ளம் கேட்கட்டும்  “மோர்!”(இங்கிலீஷ் மோர் இல்லைங்க! தமிழ் மோர்..எதுக்கும் தெளிவாய் சொல்லிடலாம்).

அடுத்து கோடை விடுமுறையில் பயணப்படும் இடத்தில் எல்லாம், போற வார வழியில் மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் போண்டா என வாயை மென்று கொண்டே போவது நல்லதல்ல. சில நேரங்களில் அதைத் தயாரிக்கும் கடைக்காரர் எண்ணெய் விற்கின்ற விலையில் ரிபைண்ட் ஆயில் எல்லாம் வாங்காமல், எஞ்சின் ஆயில், பழைய மீந்து போன மூட்டுவலி தைலம் எல்லாம் போட்டு பஜ்ஜி சுட்டுத் தருவதாக கேள்வி. டூர்-னா கொறிக்க இல்லாமலா? என சண்டை கட்டுவோருக்கு, தயவு செய்து கொறீக்க சுவைக்க நல்ல தின்பண்டங்களை வீட்டில் தயாரித்தோ, சுத்தமாய்த் தயாரிக்கும் லாலா கடையிலோ வாங்கி வாருங்கள். ஆனால் வழியெங்கும் தின்று கொண்டே போய், தாஜ்மகால் முன் நின்று, மசாலாகடலை நல்லா மொறு மொறுன்னு இருக்குல்லே-ன்னு பேசாதீங்க! ஷாஜஹானுக்கே வலிக்கும்.

கோடையில் வயிற்றுப்போக்கு அதிகம் வரக் கூடும். மோர் லாக்டோபாஸிலஸ் எனும் புரோபயாடிக்ஸ் நிறைந்துள்ள மருத்துவ பானம். கழிச்சலை வராது தடுக்கும் மருந்தும் கூட. அசீரணத்தில் வரும் வயிற்றுப் போக்கிற்கு ஓமம் வறுத்து செய்யும் கஷாயமோ அல்லது ஓம வாட்ட்ரோ நல்லது. நீர்த்துவமாக போகும் வயிற்றுப் போக்கை நிறுத்த, மாதுளை ஓடை பொடி செய்து கொடுங்கள். குழந்தைகளாக இருப்பின் கூடுதல் கவனம் தேவை. நீர்த்துவம் குறைய விடக் கூடாது. தண்ணீரில் உப்பு இனிப்பு கரைந்த கரைசல் அடிக்கடி கொடுக்க வேண்டும்.

கோடையில் வரும் வெயில் கொப்புளங்கள் எனும் வேனல் கட்டி, வேர்க்குருக்கள், வியர்வையில் வரும் பூஞ்சை காளான்கள் தோலை காயப்படுத்தும். தினசரி இரு முறை குழந்தைகளும் பெரியவரும் குளிப்பது நல்லது. நலுங்குமாவு தேய்த்து குளிப்பது, தோலை வனப்பாகவும் ஆக்கும். சித்தமருத்துவரிடம் கிடைக்கும் குங்கிலிய வெண்ணெய், வேனல் கட்டிக்கும், சீமை அகத்தி களிம்பு தோல் பூஞ்சைக்கும் நல்லது. வெயிலில் தோல் நிறம் மங்கி நிற்பதற்கு இயற்கை தந்த சன் ஸ்கிரீனர் சோற்றுக் கற்றாழை. அதனை நேரடியாகவோ அது கலந்த கிரீமையோ தடவுவது நல்லதுதான். கிரீம்கள் எனில் spf  அளவு குறைவாக உள்ள கிரீமை தேர்ந்தெடுங்கள். அதிகம் சன் ஸ்கிரீனர் தேய்ப்பது விட்டமின் டி சத்து சூரிய ஒளியில் இருந்து உள்போகாது ஆஸ்டியோபோரோஸிஸ் முதல் கான்சர் வரை வர வைக்கும் என்கிறனர் சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள்.

கோடையில் அடிக்கடி கோழிக்கறி சாப்பிடுவது; கொள்ளு ரசம் சாப்பிடுவது நல்லதல்ல. சூட்டைத் தரும். வாய்ப்புண் வரவைக்கும். மாதவிடாயை நடுவில் ஒருமுறை தலைகாட்ட வைத்துவிடும். வெயில் காலத்தில் நீர்க்காய்கறிகளை பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு போல் செய்யவும். உடலைக் குளிர்ப்பித்து, கோடையில் நாம் இழக்கும் உப்புக்களையும் தருபவை பீர்க்கு, சுரை, புடலை, வெள்ளைப்பூசணீ போன்ற  நீர்க்காய்கறிகள்.

விடுமுறைக்கு போகும் போது கூலிங்கிளாஸ், தொப்பி, டைட் ஜீன்ஸ் இதெல்லாம் எடுத்து,  “நிச்சயம் அழகாய் தெரிவோம்!என்ற அசாத்திய துணிச்சலில் தயாராய் நாம் போவோம். அப்புறம் அதை போட்டோவில் குளோஸ் அப்பில் பார்க்கும் போது தான், ஒரே நகைச்சுவையாய் இருக்கும். ஆதலால் அந்த தேவையில்லாத அந்த மேக்கப் சாதனங்களுடன் தேவையான காய்ச்சல், வாந்தி-பேதிக்கு மருந்தும், மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டெனும் ஆபத்பாந்தவன் அட்டையையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

இந்த கோடை விடுமுறையில் மனசை லேசாக்குங்கள். கொன்றைப் பூவின் மஞ்சளை ரசியுங்கள்; எங்கோ சத்தமிடும் தூக்கனாங் குருவியின் இசையைக் கேளுங்கள். எத்தனைப் புண்படுத்தினாலும், இன்னும் இனிக்கும் மலையை பார்த்து மலையுங்கள். வலித்து, இரும்புச் சக்கரத்தை சுற்றி இனிப்பை பிழிந்து தரும் கரும்புச் சர்க்கரைக்காரனின் வறுமையை யோசியுங்கள். விசாலமாய்ப் பரவியுள்ள கடலை வாய்பிளந்து பார்த்து நிற்கையில் குளிர்ந்து முத்தமிட்டுச் செல்லும் கடலலை, இன்னும் சில கோடி ஆண்டுகள் என்னை விட்டுச் சொல்வாயோ எனும் மன்றாட்டை புரிந்து கொள்ளுங்கள். விடுமுறை நிச்சயம் உங்களுள் மாற்றம் தரும்; மகிழச்சியுடன்!

No comments:

Post a Comment