வண்ணங்களில் சில மனதை லேசாக்கும். சில வலிமையாக்கும். சில களிப்பூட்டும். சில காயப்படுத்தும். சில மருந்தாகும்! மருந்தாகும் ஒரு நிறம் மஞ்சள். மஞ்சள் நிறமும் அதைத் தந்த மஞ்சள் கிழங்கும் நெடுங்காலமாகவே, ஏறத்தாழ 4000 ஆண்டுகளாக நம்மை காத்து வரும் ஒரு அற்புத மருந்து. நம் பண்பாடோ அதை ஒரு துளி உணவாக்கி, அன்றாடம் சாப்பிட வைத்தது; கரைத்துத் தெளிக்க திருவிழா தந்தது; பூசி வணங்க தெய்வ வழிபாட்டை தந்தது. மொத்ததில், மஞ்சள் உணவாய், உணர்வாய், மருந்தாய் நம் வாழ்வியலில் அங்கம் வகிக்கும் நம் மண் தந்த மகத்துவம்.
தினசரி உணவில் எந்த அளவு அக்கறைப்படுகிறோமோ அந்த அளவிற்கு நோய் குறித்த கவலையில் இருந்து விலகி நிற்கலாம் என்பது நம் முன்னோரின் தெளிவு. சிற்றுண்டியோ பேருண்டியோ, சிக்கனமான அன்றாட உணவோ ஆடம்பரமான பெரு விருந்தோ அத்தனையிலும் அக்கறையுடன் இருப்பது அவசியம். அப்படியான அக்கறாயில் தான் மஞ்சள் நம் அன்றாட உணவில் பெரும்பாலும் இடம்பெறுகிறது.
மஞ்சள்கிழங்கின் தூள் விரலிமஞ்சள் (ஆலப்புழா வகை), குண்டுமஞ்சள் (ஈரோடு வகை) எனும் இரண்டு வகையில் இருந்தும்தான் பெரும்பாலும் பெறப்படுகிறது. மகராஷ்ட்ராவின் ’சங்லி’ வகை ’ராஜபோரி’ வகை, ஆந்திராவின் ’நிஸாமபாத்’ வகை என இந்தியாவில் பல மஞ்சள் வகைகள் உண்டு. இருந்தாலும், ஈரோடு மஞ்சளுக்கும் ஆலப்புழா மஞ்சளுக்கும் தான் உலக பிரசத்தி எப்போதும் உண்டு! விரலி மஞ்சளில் அதிகம் ’குர்குமின்’ சத்து இருப்பதாக அறியப்படுகிறது.
மஞ்சளுக்கு பல மருத்துவ குணங்களுண்டு. அதில் மிகச் சிறப்பானது கிருமி நாசினி. வயிற்றுள் உள்ள கிருமி புழுக்களுக்கு மஞ்சள் தூள் சிறந்த மருந்து. சிறு குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை வேப்பங்கொழுந்துடன் வாரம் ஒரு முறை அரைத்து கொடுத்தால் ’எல்லை தண்டிய வன்முறை’யில் ஈடுபடும், குடலினுள் ஓண்ட வந்த பாரசைட்டுக்குள் பல சத்தமில்லாமல் இடத்தை காலி பண்ணும்.சிறு குழந்தைகட்கு வரும் சளி இருமலுக்கு மஞ்சள் தூள் கலந்த சுடுபால் ஒரு கைகண்ட கை மருந்து!
மஞ்சள் அந்தகாலத்து ’டி.டி. இஞ்சக்ஷன்’ போன்றது என்பது பலருக்கும் தெரியாது. காயம் பட்டவுடன் முதலில் புண்ணை நன்கு கழுவி அந்த புண் மீது மஞ்சள் தூள் கலவையை போட புண் ஆறும். சுற்றியுள்ள வீக்கம் தணியும். வலி குறையும். சாதாரணமாக, காயம் நீங்க, வலி குறைய, வீக்கம் வடிய என்ற மூன்று மருந்துகள் தேவைப்படும் இடத்தில் மஞ்சள் ஒன்றே முன்ற்தன் பணியையும் செய்யும்! கூடுதலாய் டெடனஸ் கிருமி தாக்காதிருக்கவும் மஞ்சள் காப்பு பயன்படுகிறதாம்.
மஞ்சள் சீரணத்திற்கு உதவும் ஒரு மருந்தும் கூட. தினசரி உணவில் துளித் துளியாய் சேர்ப்பதன் மூலம் எண்ணெயில் பொரித்த, உணவுகளைச் சீரணிப்பதற்கு பேருதவி செய்யும். மஞ்சள் மீதான இன்றைய ஆராய்ச்சிகளில், குடலை வாட்டும் ”அல்சரேட்டிவ் கோலைட்டிஸ்” எனும் பெருங்குடலைப் பற்றிய நோயில் மஞ்சளின் மருத்துவ மகிமை உணரப்பட்டுள்ளது.
நாம் அன்றாடம் மசாலவில் சேர்க்கும் மிளகாய் வற்றல் அத்தனை நல்லதல்ல. அதிலுள்ள சில பொருடகள் அதிக அளவில் சேர்க்கப்படும் போது குடலில் புற்று வரும் வாய்ப்புண்டு. ஆனால் மிளகாய் வற்றல் சேரும் இடத்திலெல்லாம் மஞ்சளும் பெரும்பாலும் சேருவதால் நமக்கு அந்த அச்சம் தேவையில்லை. மஞ்சளின் புற்று நோய் தடுக்கும் ஆற்றல் மிளகாய் வற்றலை சேட்டை செய்யாமல் பார்த்துக் கொள்ளும்!
இன்றைக்கு நம்மை வாட்டும் நோய்களில் அதிகம் வளர்ந்து வரும் நோய்க் கூட்டம் புற்று நோய் கூட்டம். இன்றளவில் பல புற்று நோய்க்கு சற்று அதிகமாகிவிட்ட பின் கண்டுபிடித்தால், பெரிய அளவில் பயன் தரும் சிகிச்சை இல்லாத சூழலில் மஞ்சளின் பயன் மிக மிக முக்கியமானது. இந்தியாவில் பல புற்று வகைகள் அதிகமானாலும், தோல், பெருங்குடல் புற்று கொஞ்சம் குறைவாக இருப்பது மஞ்சளின் அன்றாடப் பயன்பாட்டினால் தான் என்கிறது மருத்துவ அறிவியல்!
மஞ்சளில் உள்ள ’குர்குமின்’ சத்தில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றின் வளர்ச்சியைக் குறைப்பதிலும், அது வராது தடுப்பதிலும் பங்களிக்கின்றன என்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. வழக்கமாக பாரம்பரிய மருந்து என்றாலே ,அது குத்தம் இது குத்தம், என்று உள்குத்து வைக்கும் உலகின் “பெரிய அண்ணன்” ஆன, அமெரிக்காவின் FDA கூட மஞ்சள்-ஐ பயமின்றிப் பயன்படுத்தலாம் என்கிறது. அதே சமயத்தில் வேகவேகமாக ”மஞ்சளின் நல் குணங்களை எல்லாம் நான் தான் கண்டுபிடித்தேன் எனக்குத்தான் காப்புரிமை..இனி யாராவது மஞ்சளரைத்து பாத்ரூமில் குளித்தாலோ, மாங்காடு கோயிலில் தெளித்தாலோ எங்க அக்கவுண்டில் கப்பம்(காப்புரிமை) கட்ட வேண்டும்,” எனச் சொல்ல, கொஞ்சம் மெதுவாக பொங்கி எழுந்தது இந்திய அரசாங்கம். ”டேய்! இது எங்க பாட்டன் சொத்து” என நம்மாழ்வார், வந்தனா சிவா போன்ற சூழலியலாளர்களும் சேர்ந்து சண்டையிட்டதில் மஞ்சள் களவாடப்படாமல் காப்பாற்றப்பட்டது.
மஞ்சள் வயோதிகத்தில் வரும் நினைவுத் தடுமாற்ற நோய்(alzeimers disease), கீமோதெரபி தரும் போது ஏற்படும் பக்க விளைவுகள், புராஸ்டேட் கோள வீக்கம் புற்றாக மாறுவது-என்ற நிலைகளில் எல்லாம், நோயைக் குறைக்க அல்லது தடுக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் பித்தப்பை கல் (Gall bladder stone) நோயாளிகள், மஞ்சள் அதிகம் எடுக்க வேண்டாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
அழகு கூட்டும் பணியில் மஞ்சளின் பங்கு அன்றே அதிகம். மார்கோபோலோ முதல், அக்பர் வரை மஞ்சள் இந்தியாவில் ஆரோக்கியமான அழகைத்தரும் பொருளாக இருந்ததை வரலாற்றில் பதிவு செய்துள்ளனர். சிறுவயது முதலே பெண் குழந்தைகள் அடிக்கடி மஞ்சள் தேய்த்து குளிப்பது தாடைமுடி, மீசை வளராமல் தடுக்கும்.
ஒரு தடுப்பு மருந்தாய் ஒரு வாசனையூட்டியாய், ஒரு வலி மருந்தாய், ஒரு இணை மருந்தாய் என மஞ்சளின் அவதாரம் பல. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அன்றாடம் உணவில் மறவாமல் சேர்த்து மகிழ வேண்டியது மட்டுமே!
No comments:
Post a Comment