Monday, 23 April 2012

சீரகம்- உடலை காக்கும் உன்னத உணவு





அகத்தைச் சீர்படுத்துவதால் இதற்குச் சீரகம் எனற காரணப் பெயர் என்பர் தமிழ்ச் சித்தர்கள்..ரோம், லத்தீன், கிரேக்கத்திலிருந்து வந்தது இந்த மணமூட்டி என்று வரலாறு கூறுகிறது. உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் ரொம்ப முக்கியமானது. பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம்.

வறண்டு விரிந்து வெடித்த கரிசல் காட்டு பூமியை பாரதிராஜாவின் படத்தில் பார்க்கும் போது , பின்னணியில் இளையராஜாவின் இசையை சேர்த்ததும் மனதைப் பிழிந்து உலுக்கும் உணர்வு வருமே, அது போல சமையலில் மிளகு மிளகாய்வற்றலுடன் சீரகம் சேர்த்தவுடன் பட்டையைக் கிளப்பும் வாசனையைத் தருவது தான் இதன் சிறப்பம்சம். அந்த மணத்தின் மகோன்மதம் அறிந்ததால், ஒரு சமயம் கிரேக்கத்தில் வரிக்குப் பதிலாக சீரகம் செலுத்தலாம் என்ற அரசாணை அந்த காலத்தில் இருந்ததாம். இன்று சீரகம் உலகை ஆளும் ஒரு உன்னத மணமூட்டி. நம்ம ஊர் ரசம், வடக்கின் மலாய் கோஃப்தா மட்டுமல்ல.. டச்சு நாட்டின் சீஸ் உணவு, மெக்ஸிகோவின் பரிட்டோஸ், மொரோக்கோவின் ரஸ்-எல்-ஹேனோ என உலகின் அத்தனை கண்டங்களின் சிறப்பு உணவிலும் சீரகம் முக்கிய மணமூட்டி!

கிரேக்கத்திலும் மற்ற பிற நாட்டிலும் மனசுக்கும் நாவிற்கும் பிடித்தவையாக மட்டும் பார்க்கப்பட்ட சீரகம் நம்மவருக்கு, உடலுக்கான நோய் தீர்க்கும் மருந்தாகவும் பார்க்கப்பட்டதுதான் தனிச்சிறப்பு. ஆம்.. சீரகம் வெறும் வாசம் தரும் வஸ்து மட்டுமல்ல..வாழ்வை வசந்தமாக வைத்திருக்க, ஆணுக்கும் பெண்ணுக்கும் பல நோய்களிலுருந்தும் காக்கும் அமிர்தமும் கூட. இன்று உலகை உலுக்கும் சர்க்கரை வியாதியில் இருந்து, இன்னும் பல வியாதிக்கு வராது தடுக்கும் நோய்க்காப்பான் சீரகம்.

 “போசனகுடோரியைப் புசிக்கில் நோயெல்லாமருங்
காசமிராதக் காரத்திலுண்டிட“
- என்று தேரன் வெண்பாவில் அன்று நோயெல்லாம் வராது காக்க போசனகுடோரி என்று போற்றப்பட்டது சீரகம். பித்த நோய்களுக்கெல்லாம் முதல் மருந்தாக போற்றப்பட்ட சீரகம், அசீரணம், கண் எரிச்சல், ஸைனஸைடிஸ், வாந்தி, விக்கல், கல்லடைப்பு என பல நோய்களுக்காக சித்தமருத்துவத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும் என விடாதிருக்கும் விக்கலுக்கு, திகில் பயமெல்லாம் காட்ட வேண்டாம்! 8 திப்பிலியும் பத்து சீரகமும் பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் போதும் என்கிறது சித்த மருத்துவம்.

அடிக்கடி சீரணக் கோளாறு இருந்தால் இனி வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அட்ம்பிடித்தால், சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றை சமபங்கு எடுத்து நன்கு மையாகப் பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர் 2 சிட்டிகை அளவு தேனில் குழைத்துக் கொடுக்க பசியை தூண்டும் இந்த பஞ்ச தீபாக்கினி சூரணம்.

“எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு ஆறு மாச கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது, என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் ¼ ஸ்பூன் அளவு சாப்பிட தீரும்.
சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர்  நோய் தீரும். சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து.  “வெந்நீர் காபி போட/ மோர் உறை வைக்கவே நேரமில்லை..எங்க சார் இந்த சாறு எடுத்து, சாங்கியமெல்லாம் பண்றது? என கேட்கும் பிஸி நபர்க்கு, ‘சீரகச் சூரணம் என்றே ரெடிமேடாக சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் சூரணத்தை வாங்கிப் பயன்படுத்துங்கள். விளம்பரமும், விமரிசனமும் பார்த்து ஓடிப்போய் நடுஇரவில் கொடுமையான திரைப்படம் பார்த்து வந்து நடுமண்டை பிளக்கும் மாதிரி வரும் தலைவலிக்கும் இந்த சீரகச்சூரணம் சிறந்த மருந்து.

உள் மருந்தாக மட்டுமல்ல, சீரகம் வெளிமருந்தாகவும் பயன்படும். சீரகத்தை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்துக் கொண்டு வாரம் ஒருமுறை இரத்தக் கொதிப்பு நோயுள்ளோர், பித்த தலைவலி, கிறுகிறுப்பு உள்ளோர் தலைக்குத் தேய்த்துக் குளிக்க நோய் கட்டுக்குள் வரும்.
 “எதை தின்னால் பித்தம் தெளியும்?” என்ற கேள்வி இப்போது அதிகம் இருப்பது நீரிழிவு வியாதியினருக்கு.கவர்மண்ட் ஆபீஸில் கூட அத்தனை ஃபைல்ஸ் இருக்காது. ஒவ்வொரு சர்க்கரை வியாதிக்காரருக்கும் கலர்கலராய் நீரிழிவு நிலையங்கள், அதன் விற்பன்னர்கள் தரும் கோப்புகளைப்பார்த்து கோபத்துடன் இருக்கும் அப்பாவி சர்க்கரையினருக்கு ஒரு செய்தி!  “நீரிழிவு நல்ல மருந்துகளால் மட்டும் கட்டுப்படாது.. வாழ்வியல் மாற்றங்கள், உடற்பயிற்சி, தேர்ந்தெடுத்த சிறப்புணவு(Functional foods) ரொம்ப ரொம்ப அவசியம். சீரகம் அப்ப்டி ஒரு நீரிழிவு நோயினருக்கான தேர்ந்தெடுத்த உணவு”, என்கின்றனர் உணவியல் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள். CUMINALDEHYDE என்ற மணம் தரும் அந்த தாவரகூறு சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் திறனையும் கொண்டிருக்கிறது என்பது அவர்கள் ஆய்வு முடிவு.
இந்திய தேசிய உணவியல் நிறுவனமான NIN-ஆராய்ச்சியின் முடிவில் சீரகம் மிளகு, க்ரீன் டீ ஆகியன இரத்ததின் AGE-ஐ 40-90 விழுக்காடு வரை கட்டுப்படுத்துவதால் சர்க்கரைக்கு பயன்படுத்தலாம் என்று சான்றளிக்கிறது. 

சர்க்கரை நோய் உருவாக்கப்பட்ட எலியில் சீரகம் தொடர்ந்து கொடுக்கையில் சர்க்கரை நோயின் முக்கியப் பின் விளைவான கண்புரை நோய்(கேடரேக்ட்) வருவது தாமதப்படுவது உறுதிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சீரகத்திலுள்ள  ‘விட்டமின் சி மற்றும் ஏ குடல் புற்று வருவதையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

பெண்களுக்கு மாதவிடாய் முடிவில் ஆஸ்டியோபோராஸிஸ் ஒரு முக்கிய பிரச்னை. சீரகம் அதன் எலும்ப் புரையோடாமல் தடுக்கும் ஆற்றலால் (osteoporosis protective) இதனை தடுக்கும்.

இன்னும் காச நோய், வ்லிப்பு நோய் இவற்றிலெல்லாம் கூட சீரகத்தின் பங்கு பயனளிக்கும் என்று நவீன ஆய்வுகள் கருதுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம்  நம் முன்னோர் நமக்காக சொல்லிச் சென்ற சூத்திரங்களான சீரகம் சேர்த்த ரசம் தினசரி சாப்பிட மறக்காமல், சீரகத்தை தண்ணீராக, பொடியாக, தைலமாக தேவைகேற்றாற் போல் செய்து வைத்துக் கொண்டு, நலவாழ்விற்கு நங்கூரம் இட்டுக் கொள்ள வேண்டியது மட்டும் தான்!

No comments:

Post a Comment