Saturday, 29 December 2012

அம்மாவுக்கான உணவு



“அம்மா!” எனும் மொழி தரும் அங்கீகாரமும் அன்பும் உலகின் எந்த சொல்லுக்கும் இல்லை. அன்னை காட்டும் அன்பும், கூடுதல் அக்கறையும் தர உலகில் வேறு எந்த உறவும் கிடையாது. இணையான உள்ளமும் கிடையாது.  “பிறந்த குழந்தையை பிரசவித்த மறுகணம் தாயின் வயிற்றில் வைத்தால், அது தாயின் மார்பைப் பற்றி தன் முதல் சீம்பாலினை உறிஞ்சத் துவங்கும். யாரும் அதனை வழிகாட்ட வேண்டியதில்லை என்ற செய்தி தரும் கவித்துவமும், வியப்பும் ஏராளம். அந்த கணம் முதல், “ நீ சாப்பிடியாப்பா? சாகப்போற போற வயசில் எனக்கெதுக்குப்பா இதெல்லாம்?.. நீ முதல்ல சாப்பிடு”-என்று வயோதிகத்தில் கேட்கும் கரிசனமும் தான் அன்னை. கடைசி மூச்சு வரை உணவூட்டும் அந்த அன்னைக்கு என்ன உணவூட்டலாம்?

தாய் எனும் சொல்லுக்கு தயாரான அந்த பிரசவித்த கணம் முதல் கூடுதல் ஊட்ட உணவு முக்கியம். தாய்ப்பாலின் மகத்துவம் பரவலாக ஓரளவு தெரிந்ததில்,  “தாய்ப்பால் கொடு கொடு! என ஊக்குவிக்கும் கணவன் அதைச் சீராக சுரக்கும் தாய்க்கு கொடுக்கும் அக்கறை சில நேரத்தில் கொஞ்சம் குறைவு தான். ஊட்டமான உணவும் உள்ளமும் மட்டும்தான், பாலை சுரப்பித்திட, அந்த அன்னை ஊக்கமாய் சோர்வின்றி இருந்திட உதவும். “பச்சை உடம்புக்காரிஎன நம் பாரம்பரியம் அந்த புது அன்னையை பராமரித்த விதம் அலாதியானது; அறிவியல் மெச்சக்கூடியது. முதல் ஓரிரு மாதங்கள் பத்தியமாய்ச் சாப்பிடச் சொன்னது, தாய்ப்பாலின் குணத்தைக் கூட்ட மட்டுமல்ல, அதை சுரக்கும் அன்னை ஊட்டமாய் இருந்திடவும் தான். அதிக எண்ணெய் ப்லகாரம், முந்தைய நாள் சமைத்த உணவு, சீரணிக்க சிரமப்படும் பலகாரங்களைத் தவிர்ப்பது முக்கியம்.
0-6 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 550 க்லோரியும்; 6-12 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 400க்லோரியும் கூடுதலாக தேவை என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.  ‘அட! ஏற்கனவே, மகவை சுமக்கும் போது 10கிலோ வெயிட் போட்டாச்சு..இன்னும் சாப்பிடவா?.. நான் வெயிட் குறைக்க டயட் செய்யலாமா? என கேட்கும் புது அம்மாக்கள் இன்று அதிகம். புது அன்னை டயட்டிங்கில் போகவே கூடாது. தாய்ப்பால் கொடுக்கும் பருவத்தில், பல மகளிர் இயல்பாக எடை குறைவது நடக்கும். பிரசவித்த வயிறு தொளதொளவென தொப்பையாகத் தொங்கி தங்கிவிடாமலிருக்க, நல்ல யோகாசனப்பயிற்சி, பட்டி கட்டுதல் எனும் பழக்கம் நிச்சயம் உதவிடும். அருகாமை சித்தமருத்துவரை அணுகி அதற்கென ஆலோசியுங்கள். 6-7 மாசம் விட்டுவிட்டு, அப்புறமாய்ச் சிற்றிடை கனவில் சிலாகிக்க முடியாது..(எப்போதுமே சிசேரியன் செய்யாத ஆண்களின் தொப்பை வேறு விஷயம்!)
கால்சியமும், விட்டமின் சத்தும், இரும்புச் சத்தும், புரதமும் கொஞ்சம் கொழுப்புச் சத்தும் தாயப்பால் கொடுக்கும் காலத்தில் கூடுதலாய் அன்னைக்கு அவசியம் தேவை. காலையும் மாலையும் பால், காலைஉணவுடன் அத்திப்பழம்-2; கொஞ்சம் சத்துமாவு கஞ்சி சாப்பிடுவது அவசியம். பஜ்ரா(கம்பு) ரொட்டியுடன் முருங்கைக்கீரை பொறியல் இரும்ப்ச்சத்து குறைவான அம்மாவுக்கு அத்தியும், கம்பும் அவசியம் வேண்டும்.  “ஸ்கூல் பிள்ளைங்களையே கம்பை காட்டக் கூடாது. அடிக்க கூடாதுங்கிறோம்..பிள்ளை தாச்சிக்கு போய் கம்பு அது இதுன்னு மிரட்றீங்களே!னு அடிக்க வர வேண்டாம். இது தானிய வகை கம்புங்க..அதிக இரும்புச் சத்துள்ள இந்த கம்பை வாரம் ஒரிரு நாள் சோறாகவோ அடையாகவோ செய்து சாப்பிட மலசிக்கல் மூலம் தராமல் இரும்புச்சத்து ஏறும். பல அன்னைக்கு பிரசவம் போது மூலனோய் வந்து இரத்தக் கசிவு இருப்பது உண்டு. அத்தியும், முருங்கையும் மலத்தினை இளக்கி மூலத்தையும் போக்கும். இன்னும் பால்சுரப்பைக் கூட்டும் சுறாமீன் புட்டு, பாலளவைக் கூட்டும் சம்பா கோதுமை, கால்சியம் சத்து நிறைந்த ராகி, விட்டமின் சத்து நிறந்த பழங்களும், காய்கறிகளும் நிரைவாக சாப்பிடுவது மிக மிக அவசியம். சதாவரி கிழங்கில் செய்த லேகியம் அன்னைக்கு சித்த மருத்துவம் தந்த வரப்பிரசாதம். உலகளவில் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த மூலிகை galactogogue- இன் முக்கியத்துவம் புரிந்து புது அன்னை ஒவ்வொருவரும் முதல் 8 மாதம் சாப்பிடுவது அவர்களையும், அவரது செல்ல மகவையும் போற்றிப் பாதுக்கும். தாய்ப்பால் தரும் அன்னைக்கு தண்ணீர் ரொம்ப முக்கியமான உணவு. நீர் கூடுதலாக 1½ லிட்டர் குடிக்க வேண்டும்.
பிரசவித்த அன்னைக்கு, மகிழ்வின் உச்சத்திலுள்ள கணவனும், மாமியாரும், அன்னையும் இயல்பாய் கூடுதல் அக்கறை காட்டுவது இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் இயல்பு. அவள்தம் மகப்பேற்றில் அங்கீகரிக்கப்படுபவர் அவர்களுமல்லவா? அதனால் இயல்பாகவே கரிசனம் கூடுதலாய்த்தான் இருக்கும். ஆனால் அதன்பின் என்னைப்பொறுத்த மட்டில், மெனோபாஸ் சமயத்தில் நிற்கும் அம்மாதான்   அநேகமாக அதிகம் நிராகரிக்கப்படும் அம்மா. கொஞ்சம்  ‘பிடித்தம் குறைந்து போன கணவன், தனக்குள் நிகழும் எரிந்து விழ வைக்கும் ஹார்மோன் மாற்றம், டீன் துள்ளலில் எதற்கெடுத்தாலும் ‘நண்பேண்டா! என வீட்டை மறந்து திரியும் பிள்ளைகள், இவற்றுடன், பஸ் ரயிலேறி அலுவலகத்திற்கு வந்தால் புன்னகைக்க கூட மறுக்கும் சக ஊழியர்கள் என மெனோபாஸ் அன்னைக்கு சவால்களும்  சங்கடங்களும் அதிகம்
40க்கு மேல் வரும் இந்த நாட்களில் அந்த அன்னைக்கு ஈஸ்ட்ரோஜன் சத்து நிறைந்த உளுந்து, சோயா, ஓட்ஸ் உணவும் கூடுதல் கால்சியம் உள்ள ராகி, முருங்கை, முட்டை, பால், பச்சைப்பட்டாணி, அவரை, மீன், விட்டமின் ப் நிறைந்த அவரை, விட்டமின் சி நிறைந்த பெரிய நெல்லி அவசியம் வேண்டும். இப்போது அதிக அவசியம் என அறியப்படும் ஒமேகா 3 சத்து நிறைந்த ஃப்லேக்ஸ் விதைகள், மீன் எண்ணெய் மிக அவசியம். ஃப்ளேக்ஸ் விதைகளை பொடி செய்து 1ஸ்பூன் அளவு மோரில் தினசரி சாப்பிடலாம்.மாதவிடாய் முடியும் சமயத்தில் மருத்துவ பரிசோதனை செய்து , குறிப்பாய் ஆஸ்டியோபோரோசிஸ், மார்பு புற்று, கருப்பை கழத்து புற்று இருக்கிறதா எனத் தெரிந்து கொள்வது இப்போது மிக மிக அவசியம். சமீபத்திய புள்ளி விவரங்கள் எல்லாம் மிரட்டுவது பெண்ணில் இவ்வயதில் கிடுகிடுவென பெருகி வரும் புற்றைப்பற்றித்தான்.
அடுத்து முதுமையான அன்னைக்கு; அவள் உங்கள் குழந்தை. சில நேரங்களில் அந்த முதுமையான அன்னை காட்டும் பிடிவாதம், உங்களுக்கு எரிச்சல் தரக் கூடாது. மலம் சிறுநீர் கழிக்க உங்கள் உதவி தேவைப்படும் போது சிரமமாய் நினைக்க்க் கூடாது. விட்ல பிள்ளைங்களுக்கு வாங்கி வச்ச நொறுவல வயசு காலத்துல சாப்பிட்டுடு இப்ப சங்கடப்படறாது யாரு?ன்னு, சொல்லிக்காட்டக் கூடாது. டயப்பர் இல்லாத காலத்தில் உங்களை பஸ்சில் தூக்கிக் கொண்டு போகும் போது இடுப்போடு நீங்கள் இருந்த மலத்தை அவள் அசிங்கமாக நினைக்காமல், அணைத்து தூக்கிவந்து பார்த்ததை மறந்துவிடக் கூடாது. முதுமையான அன்னைக்கு, உணவுத் தேவை அளவில் குறையும். அளவில் குறைந்த அந்த உணவு கால்சியம், விட்டமின் சத்து நிறைந்ததாக லோ கிளைசிமிக் தன்மையுடன் இருக்க வேண்டும். நெய் போடாத பொங்கல், கீரை கூட்டுடன் சப்பாத்தி, புதினா, மல்லி சட்னியுடன் இட்லி, நீர்க் காய்கறிகளின் கூட்டு, கூழாக பிசைந்த புழுங்கலரிசி சாதம், மாலையில்  நன்கு ஊற வைத்த சிகப்பரிசி அவல், இரவில் எளிதில் செரிக்க வைக்கும் இட்லி அல்லது அரிசிக்கஞ்சி, சிறு வாழைப்பழம் அவர்களுக்கான உணவு. மோர் குடிப்பது பாலைக் காட்டிலும் அவர்களுக்கு நல்லது.
அன்னை உணவூட்டுவது மரபு. அன்னையின் நலம் கருத்தில் கொண்டு, சான்றோன் என உலகம் நம்மைச் சொல்ல, அவள்  நமக்குச் செய்த தியாகங்களை கொஞ்சம் நினைவில் கொண்டு, சின்னதாய் ஒரு கவளம் அவள்தம் முதுமையில் ஊட்டிவிடுங்கள். அவள் தன் வாழ்வில் பெறும் உச்சகட்ட வசந்தம் அது!

Tuesday, 25 December 2012

Tamil Nadu: Dalit priest driven to suicide


Where the Tamil Nadu is going? Friends as you know most of the dalits has converted to christian because to escape from the traditional caste system in the bledy varnashrama system. But in the Christianity the same varnashrama system has been adopted among the christian priests. It is quite shame in the the Christianity particularly in Roman Catholic(RC). There are lot of bitter experience and evidence are available as a case study among christian. So this system must be destroyed and  now peoples are seeking alternatives to end this discrimination.  The below incident is highly condemnable! we don't know, what the particular christian authority is doing? But this culprits are speaking about the great activist Jesus Christ! What a shame in the system?.The caste system in every where in India is the threat to justice everywhere in India.
G. MOORTHY 

Residents block the road at T. Kallipatti in Theni district demanding the arrest of persons responsible for the suicide of the Dalit priest.
A PALL of gloom has descended on T. Kallipatti, a predominantly Dalit village in Tamil Nadu’s Theni district, where a 22-year-old Dalit priest committed suicide on December 7 after he was allegedly subjected to a witch-hunt by caste Hindus.
The Dalits of T. Kallipatti and several other villages in the district are agitated over the suicide of S. Nagamuthu, who played a major role in the renovation and maintenance of a local temple.
Demonstrations and road roko agitations were held in the area, seeking police intervention to bring all those behind the tragedy to book. Posters have appeared in some villages flaying the “casteists” who drove the youth to death.
Nagamuthu was the son of a farmhand. A suicide note purportedly written by him blamed seven persons, including three caste Hindus, for his death. Among them are some politically influential persons. Accusing the police of not providing security to him and his family, the youth said that he was ending his life to ensure the safety of his family.
Local residents felt Nagamuthu must have taken this extreme step as he was systematically sidelined by casteist elements, who debarred him from entering the Kailasanathar temple, built several years ago on a hillock near the village. It was Nagamuthu who took the initiative seven years ago to renovate the temple, which was in a bad shape. Apart from assisting a priest in conducting pujas, he himself shouldered the responsibility in the absence of the former.
However, shortly after the hill shrine was renovated a couple of years ago and devotees started visiting it, the temple administration members dropped Nagamuthu like a hot potato. They even advised him to keep off, particularly on auspicious occasions, as caste Hindus would be reluctant to visit the temple when a Dalit was present during ceremonies, the victim’s father, N. Subburaj, alleged.
Nagamuthu ignored the advice, and he was assaulted by some persons on May 5. The local police did not register a first information report though he lodged a complaint with them. Some caste Hindus, in “connivance” with the police, brought pressure on Nagamuthu and his family to withdraw the complaint.
However, Nagamuthu, with the help of the Madurai-based NGO Evidence, moved the Madurai Bench of the Madras High Court. Following a court directive on August 31, the Thenkarai police registered a case on September 2 under Sections 294(b), 323, 506(1) of the Indian Penal Code and Section 3(1)(x) of the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989. But the threats and intimidation continued. There was even a bid on his life, Subburaj alleged.
According to M. Andiappan, Oor Thalaivar (community leader), the village has a sizeable number of educated persons belonging to the oppressed caste. Several of them are traders, contractors or government employees, though farm workers form the major chunk of the population. As awareness among the Dalits has been rising steadily, they are no longer prepared to put up with the discrimination and insults.
As a mark of protest, Nagamuthu’s parents and relatives did not receive his body for five days. He was buried in T. Kallipatti village on December 12. The police have registered a case of abetment to suicide and arrested one person. Another accused has surrendered before a Madurai court.
S. Dorairaj Thanks to 
Frontline


Wednesday, 5 December 2012

கடைசியில் வந்தாலும்..கலக்கும் பெருங்காயம்!




மனதை உணவின் பால் வசீகரீக்கச் செய்யும் மணமூட்டிகள், உடலில் பல விந்தைகளையும் செய்து நம்மை நோயின்றி காப்பது ஒரு ஆச்சரியமான விஷயம் என்றால், அதன் பயன் தெரிந்து அன்றாட உணவில் அதை அளவாய் சேர்க்கச் செய்த நம் முன்னோர்களின் அறிவாற்றலை, நுண்ணறிவை என்ன சொல்வது?  “ நீர் கருக்கி, மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்போர் தம் பேர் உரைக்கிற் போமே பிணி,”-என்று நீரையும், மோரையும், நெய்யையும் எப்படிச் சாப்பிட்டால் நோய் வராது என்று சொன்ன நம் சித்தர்கள், மணமூட்டிகளை பயன்படுத்திய விதமும், அளவும் இன்று பல மேற்கத்திய மருத்துவ ஆய்வகங்களின் மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறது. சர்க்கரையை நோயை வெல்ல இலவங்கப்பட்டை; புற்றை வெல்ல மஞ்சள்; இதய நோயை வெல்ல வெந்தயம்; இரத்தக் கொதிப்பை வெல்ல வெள்ளைப்பூண்டும் என நீளூம் இந்த பட்டியலில் இன்று நாம் பார்க்கப் போவது பெருங்காயத்தைப் பற்றி.

மிக நுண்ணிய அளவில், பல நேரங்களில், “அடடா! போட மறந்துட்டோமே! என்று நினைக்க வைக்கும் இந்த மூக்கைத்துளைக்கும் மணம் கொண்ட பெருங்காயம், காயத்திற்கு(உடலுக்கு) செய்யும் மருத்துவ நன்மை பெரிதினும் பெரிது. இதன் மூக்கைத் துளைக்கும் தீவிர மணத்தின் அருமை தெரியாத மேற்கத்தியர் ஆரம்பத்தில் இதற்கு வைத்த பெயர் “ நாற்றம்பிடித்த பிசின்/பிசாசின் மலம்”(devil’s dung /stinking gum).கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது 1918-இல் பெருங்காய விஷயத்தில் ஊர்ஜிதமானது. கிட்டத்தட்ட வாரம் ஒன்றுக்கு 10,000 அமெரிக்கர்களை பலிவாங்கிய ஸ்பானிஷ் விஷ ஜுரத்தின் (SPANISH FLU) போது, மற்ற மருந்துகள் எல்லாம் பொய்த்துப் போன போது பெருங்காயம் தான் கடைசியில் ஒட்டுமொத்த அமெரிக்கரையும் காப்பாற்றியது. இன்று உலகின் அத்தனை மருந்துகளையும் தர கட்டுப்பாடு செய்து உலகெங்கும் மருத்துவ விற்பனையை ஒழுங்குபடுத்தும்(?) அமெரிக்காவின் FDA  அமைப்பு பெருங்காயம் Spanish flu-ற்கு பயனளிக்கும் என்று அங்கீகரித்து பயன்படுத்த அறிவுறுத்தியது. ’பிசாசு மலம்-ஐய்யயே!’- என்று ஏளனம் செய்தவரெல்லாம்- உருத்திராட்சம் போடுவது போல், பெருங்காயக் கட்டியை கழுத்தில் போட்டு தம்மைக் காப்பாற்றிக் கொண்டதை வரலாறு வர்ணிக்கிறது. அதன்பின் 2009-இல் பறவைக்காய்ச்சல் உலகெங்கும் பயமுறுத்திய போது, அதே அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் பெருங்காயம் HINI VIRUS-க்கு எதிராக ஆய்வகத்தில் செயல் புரிவதை மீண்டும் நிரூபித்தனர்.

பறவைக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல், கன்னுக்குட்டி காய்ச்சல்... என  இனி வருஷத்துக்கு நான்கு காய்ச்சல் வரக்கூடும். இயற்கையில் அவை வருகிறதா? அல்லது ஏதும் மருந்து கம்பெனி உருவாக்கி உலக சந்தையில் ஓட்டி விடுகிறதா என்பது தெரியவில்லை. இருந்தாலும் எந்த விஷ சுரத்திற்கும், நம்மைக்க் காத்துக் கொள்ள ஒரு சிட்டிகை பெருங்காயம், மோரிலோ/சாம்பாரிலோ/ரசத்திலோ தினம் சேர்ப்பதே பலனளிக்கக் கூடும்..  (எனக்குத் தெரிந்து இந்த மாதிரி நல்ல விஷயங்கள் பர்கர்/பிட்சா போன்ற வெளி நாட்டு குப்பை உணவுகளில் சேர்ப்பது கிடையாது..)

அருந்தியது அற்றது போற்றி உணின்..என்ற வள்ளுவர் வரிகள் மிக மிக ஆழமான அர்த்தம் பொருந்தியவை..சாப்பிட்ட உணவு முழுமையாய் சீரணித்து, உட்கிரகிக்கப்பட்டு, பின் உணவை சாப்பிடுவோருக்கு மருந்தென வேண்டாவாம் - என்ற பொருள் தரும் அந்த குறள். அத்தகைய முழுமையான சீரணம் தர உதவுவது பெருங்காயம். நெஞ்சக் கரித்து, வயிறு உப்பி, எதுக்களித்து சிரமப்படும், GERD/PEPTIC ULCERS நோயாளிகளுக்கு பெருங்காயம் கை கண்ட மருந்து. குறிப்பாய் எந்த வாயு தரும் உணவை சமைக்கும் போதும் (வாழைக்காய்/கொண்டைக்கடலை/முட்டைகோஸ்). கடைசியில் துளி பெருங்காயம் போடுவது சீரணித்தை துரிதப்படுத்தி, வாயுவை விலக்கும். வாயுவால் மூட்டுவலி வருவதைத் தடுக்கும். குடல் தசைகளை இலகுவாக்கி, வாயு தங்காமல் இருப்பதை நிரூபித்த ஐரோப்பிய ஆய்வாளர்கள் IRRITABLE BOWEL SYNDROME  எனும் குடல் அழற்சியுடன் அடிக்கடி சாப்பிட்டவுடன் மலம் கழிக்க தூண்டும் நோயிலும் இதன் பயனை அறிந்தனர்.

சீரணம் மட்டுமல்ல. புற்று நோயிலும் கூட இந்த தாவர ரெசின் பயனளிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல் புற்று நோய் செல் வளர்ச்சியை 50% க்கும் மேலாக கட்டுப்படுத்துவதை ஆரம்ப கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதற்காக நுரையீரல் புற்றுக்கு மருந்து வேண்டாம்; ஒரு கிளாஸ் மோரில் பெருங்காயம் போட்டு சாப்பிடுங்க என சொல்ல வரவில்லை.. தொடர்ச்சியாக உணவில் அதை சேர்க்கும் போது இப்புற்று வகைகள் கட்டுப்படுத்தப்படும்; தவிர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது திண்ணம்..

பசி உண்டாக்குவதில் பெருங்காயம் செய்யும் பணி மகத்தானது. உங்கள் வீட்டுக் குழந்தைகள் சாப்பிட மறுக்கிறதா?.அவர்கள் பிடிக்கும் அடத்தில் உங்களுக்கு டென்ஷன் தலைக்கு ஏறுகிறதா? சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஒவ்வொன்றும் 30 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். 15 கிராம் பெருங்காயத் தூள் (வறுத்தது) எடுத்து, ஒன்றாக வருத்து, இடித்து மையாக பொடித்து சலித்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை உணவு சாப்பிடுகையிலும்  ஒரு கவளம் முதல் உருண்டையை இந்த பொடி போட்டு உருட்டி சப்பிட செய்யுங்கள். பசி, சீரணம் நிச்சயம் கிடைக்கும். அதனால் தான் மலம் எளிதில் கழிய வைக்க, வயிற்றுப்புண் போக்க, செய்யும் பல சித்த மருந்துகளில் காயம் கட்டாயம்!

மகளிருக்கு காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால் கர்ப்பிணிப்பெண்கள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராதவர், அதிக இரத்தப்போக்கு இல்லாமல் லேசாக வந்து செல்லும் மகளிக்கு காயம் அதனை சீர்படுத்தும். உடலில் வெப்பத்தை தூண்டி, நரம்பை தூண்டும் இந்த மூலிகை, ஆண்களின் காம இச்சையையும் அதிகரிக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம்.

பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். கருத்திருந்தால் வாங்க வேண்டாம். அதே போல் அதன் மணம் எளிதில் போய் விடுமாதலால், நல்ல காற்றுப்புகாத கண்ணாடி குவளையில் போட்டு வைத்திருப்பது அதன் மணத்தையும் மருத்துவ குணத்தையும் பாதுகாக்கும்.

வயதானாலும் அழகாய், பொலிவாய் இருக்கணுமா? இத கொஞ்சம் படிங்க...


அழகாய் இருத்தலுக்கும் பொலிவாய் தெரிதலுக்கும் ஆசைப்படாதோர் இவ்வுலகில் இப்போது இல்லை. வயது ஏறும் போது ஏற்படும் வயோதிக உடல் மாற்றத்தை ஒத்துக் கொள்ள முடியாத மனமும் வாழ்வும் ஒட்டிக் கொண்ட உலகம் இது. நரை, திரை மூப்பில் நம்பிக்கையில்லாமல் அழகு சாதனங்களை அள்ளிக் குவித்தாவது, இளமையை இன்ஸ்டன்டாக பெற முயற்சிக்கும் நம்மில் பலருக்கு உணவு ஒரு மார்க்கண்டேய மந்திரம் என்பது தெரியாது. ஒரு பவுண்டேஷன் கிரீம், அதன் மேல் சிகப்பழகு கிரீம், அதன் மேல் ஒரு சன் ஸ்கிரீனர், கொஞ்சமாய்  ‘ஆன்ட்டி ஏஜிங் ஃபார்முலா, என தேய்த்து பிட்சா கார்னருக்கு கிளம்பும் பல ஆன்ட்டிகளுக்கு , FINGER FRIES WITH PIZZA சாப்பிட்டால் சீக்கிரம் வயசாகும் என்பது தெரியவில்லை..  ‘ஸ்கின் ட்ரை ஆகுதுப்பா.. நீ என்ன கிரீம் யூஸ் பண்ற? என குளிர்பானத்தை உறிஞ்சுக் கொண்டே கேட்கும் யுவதிக்கு, தான் உறிஞ்சும் குளிர்பானமே தன் வயதை உறிஞ்சும் என்பது தெரியவில்லை.

காலையில் சாப்பாட்டுக்கு முன்னாடி - 1 மாலையில் சாப்பாட்டுக்கு அப்புறம் - 1 என யாராவது உங்கள் வயதைக் குறைக்கிறேன் –னு சொன்னால் நம்ப வேண்டாம். அக்மார்க் டுபாக்கூர் மாத்திரை வியாபாரம் மட்டுமே அது. மருந்து மாத்திரையால் வயதை குறைக்க முடியாது; வாலிபத்தை மீட்ட முடியாது. ஆனால் உணவால் முடியும். உணவால் இளமையை இழக்காமல் வைத்திருக்க முடியும். எப்படி?

முதலில் ஒரு சூப்பர் ரகசியம்..பத்து மலை தாண்டி பத்து கடல் தாண்டி கிடைக்கும் குலேபகாவலி மூலிகைக்கெல்லாம் போக வேண்டாம்..குழாய் தண்ணீர் சுடவைத்து ஆறவைத்து தினசை 4-5 லிட்டர் குடித்தாலே போதும். தோலின் ஈரத் தன்மை போகாது இருக்க அது உதவும். செல்லின் வளர்சிதை மாற்றத்தில், ஒவ்வொரு செல்லும் ஆரோக்கியத்துடன் உத்வேகத்துடன் திகழ போதுமான நீர்த்துவம் முதலில் அவசியம். ஆதலால் இளமையாய் இருக்க போதுமான தண்ணீர் குடியுங்கள்;

இளமையாய் இருக்க வேண்டும் என்றால்  நம் மனதின் ஒவ்வொரு சிந்தனை மட்டுமல்ல. நம் உடலின் ஒவ்வொரு செல்லும் ஆற்றலும், குதூகலமும் நிறைந்து இருக்க வேண்டும். அதிக கார்போகைட்ரேட் உணவானது எப்போதும், செல்லை சோர்வடையச் செய்யும். அதனால் தான் நேரடி இனிப்பு வேண்டாம் என்கிறோம். அதே சமயத்தில் போதிய அளவில் புத்திசாலி கார்போஹைட்ரேட்(smart carbohydrates) என்று நவீன உணவியலாளரால் அழைக்கப்படும் லோகிளைசிமிக் நிறைந்த கீரை நார்கள் மூலம் கிடைக்கும் இனிப்புச்சத்து அவசியம். ட்ரான்ஸ் ஃபாட் நிறைந்த எண்ணெய் பலகாரங்கள் அடிக்கடி சாப்பிடக் கூடாது. பாலும் தேவையில்லாதது.

அடுத்து தினசரி உணவு. பட்டை தீட்டாத பிரவுன் அரிசி(தவிட்டுடன் கூடியது) அதன் லோ கிளைசிமிக் தன்மையால் சர்க்கரையை இரத்த்தில் தடாலடியாக சேர்க்காது. எந்த ஒரு பொருள் இரத்த்திதில் சர்க்கரையை சீக்கிரமாக சேர்க்கிறதோ அது வயதை சீக்கிரமாக கொண்டு வரும். சாயந்திரம்  ‘மைசூர்பகோ அல்லது சந்திரகலாவோ இல்லாமல் காபி எப்படி சாப்பிடுவது?’, என்று சங்கடப்பட்டீர்கள் என்றால் வாழ்த்துக்கள்.. “பாவம்..வயசு காலத்தில.. நீங்க உட்காருங்க மேடம்! என பேருந்தில் எழுந்து இடம் கொடுத்து, உங்களுக்கு, சினியர் சிட்டிசன் உரிமைகள் நீங்கள் கேட்காமலே கிடைக்கும். தேவையா?

காலையில் நவதானியக் கஞ்சி, (ஓட்ஸ் இல்லாமல் எப்படி..எல்லாரும் சொல்ராளே!, என்றால் ஓட்ஸ்-உம் சேர்த்துக் கொள்ளலாம். தப்பில்லை), வரகரிசி பொங்கல், ராகி இட்லி என சிறுதானியம் நிறைந்த உணவு சாப்பிடுங்கள். மதியம் பிரவுன் ரைசில் சாம்பாரோ ரசமோ ஊற்றி சாப்பிடுங்கள். தயிர் வேண்டாம். மோர் கண்டிப்பாய் வேண்டும். இரவில் ஓசி டின்னர் என்றாலும், மனசுக்கு பிடித்தவ்ருடன் பெரிய ஓட்டலில் ஓரமாய் இருந்து சாப்பிடாலும், ஒரு கட்டு கட்டாமல் அளவாய் எண்ணெயின்றி சாப்பிடுங்கள். ஓவ்வொரு வேளை உணவிலும் சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெந்தயம் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த சமாச்சாரமெல்லாம் வாசனை தருவது மட்டுமல்ல..வயசும் தரும். Anti oxidants இன்று மிக பிரபலமாகி வரும் மருத்துவ சொல். பருப்பில்லாமல் சாம்பாரா? என்கிற மாதிரி Anti oxidantsஇல்லாமல் பிரிஸ்கிரிப்ஷனா? என்று மருத்துவர்கள் இப்போது பக்கம் பக்கமாய் எழுதுவது இந்த Anti oxidants-ஐத் தான். ஆனால் நம்ம பெருங்காயத்தில் இருந்து, காய்ந்த திராட்சை, மஞ்சள், கிரீன் டீ, தக்காளித்தோல் என பல உணவில் இது நிறைந்திருப்பது பலருக்கும் தெரியாது. இனி தெரிந்து கொண்டு உணவில் அதனை மறக்க வேண்டாம். ஏனென்ரால் அந்த  Anti oxidants வயோதிக மாற்றத்தை தடுக்கும்.

வயதாவதைத் தடுக்கும் உணவில் முதலிடம் பழங்களுக்குத் தான்.அன்றைய உணமையான சாதுக்களில் இருந்து, இன்றைய பிரபல -போலி சாமியார்கள் வரை கொஞ்சம் இளமையாய் அவர்கள் தெரிவதற்கு அவர்களின் பழ உணவு ஒரு முக்கிய காரணம்.ஒவ்வைக்கு அதியமான் தந்த நெல்லிக்கனியை தமிழும் வரலாறும் எப்போதும் மறக்காது. தற்போது அறிவியலும் அதை மறக்காது. ஆம்.. நெல்லிக்கனி மீதான பல ஆய்வுகள் அதன் வயதை குறைக்கும் தன்மையை அறுதியிட்டு நிரூபித்து விட்டன. அதிலுள்ள பாலிஃபீனால்கள், விட்டமின் சி, இன்னும் சில நுண்ணிய துவர்ப்பிகள், வயோதிக மாற்றத்தை நெல்லி தடுப்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

அதே போல், கொட்டையுள்ள திராட்சை(பன்னீர்), மாதுளை, சிகப்பு கொய்யா, அத்தி, அவகோடா, சிகப்பு ஆப்பிள் இவையெல்லாம் இளமைக்கு வித்திடும் உணவுகள். வயசாவதைக் காட்டிக் கொடுக்கும் முகச் சுருக்கம், கண்ணுக்கு கீழான கருவளையம், தோல் சுருக்கமும், வறட்சியும் நீங்க/ வராது தடுக்க..தினம் ஒரு வேளை பழம் மட்டுமே சாப்பிடுங்கள். பொலிவு பொங்கும். பிடித்தவர் காட்டும் அலட்சியம் மாறிப்போகும்.  “அட! வயசானாலும், நீ அழகு தான் போ! எனும் கொஞ்சல் துவங்கும்.

சாதிக்காய்



ஒரு சொட்டு கூட ஒழுகாமல், உச்சிப்பாறையில் 200கிலோ தேனை, தன்னுள் கொண்டுள்ள தேனைடையைப் பார்க்கும் போதும், சைபீரிய நாரை, 10,000 கிமீட்டர் பறந்துவந்து தன் வேடந்தாங்கல் வீட்டைத் தேடிவந்து முட்டையிடும் போதும், ஒரிசா கடற்கரையில் விட்டுச் சென்ற ஆமையின் முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள், மியான்மார் அந்தமான் வழியே கடலோடு சென்று தாய்லாந்தில் தன் குடும்பத்தோடு சேரும் செய்தியையும் படிக்கும் போதும் பார்க்கும் போதும், இயற்கையின் அறிவும் ஆற்றலும் திகைக்க வைக்கிறது. தேனீயும், நாரையும், ஆமையும் எந்த பல்கலைக்கழகமும் சென்று இதனை கற்று வரவில்லை. அதே போல்தாம் இயற்கை தரும் மணங்களும். மல்லிப்பூவோ செண்பகப்பூவோ, மஞ்சளோ, கிராம்போ எப்படி இந்த நறுமணத்தை சேற்றிலிருந்தும் செம்மண்ணிலிருந்தும் தயாரித்துத் தருகிறது என்பதை எண்ணும் போதும் வியக்க வைக்கிறது.

அப்படி ஒரு ஆச்சரியமூட்டும் மணத்தைத் தன்னுள் கொண்டு, உலகையே நேசிக்க வைத்த ஒரு தாவரப்பொருள்தாம் சாதிக்காய். வரலாற்றைப் புரட்டினால், அரபு சாதிக்காயின் ஏகோபத்திய வணிக வரவேற்பால், வணிகரும், மாலுமிகளும் சில பல நூறு ஆண்டுகளுக்கு, அதை எங்கிருந்து எடுத்து வருகிறோம் என்பதையே பெரும் ரகசியமாக வைத்திருந்தனர் என்பது தெரியும். இந்தோனேஷிய மலூக்கா தீவுகளில் இருந்து அவை முதலில் பெறப்பட்டாலும், இலங்கை, இந்திய மேற்குதொடர்ச்சி மலைகளிலும் பின்னர், ஐரோப்பா, மேற்கிந்தியத் தீவுகளிலும் சாதிக்காய் கோலோச்சியது. சாதிக்காயின் கனி ஊறுகாயாக பயன்படும். அதன் உள்லிருக்கும் விதை தான் சாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்து இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் சாதிபத்திரி என்பது. இதில் சாதிக்காய் எனும் விதைக்கும், சாதிபத்திரி இதழுக்கும்தான் மணமும், மருத்துவ குணமும், மார்க்கெட் மவுசும் கூட கூடுதலாய் உண்டு

சாதாரணமாய் சாதிக்காய் அதிகம் பயன்படுவது, ஆண்களுக்கு காமம்பெருக்கிச் செய்கைக்காகவும், குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான். சித்த ஆயுர்வேத மருந்துகளில், குழந்தைப்பேறில்லாமல் வரும் தம்பதிக்குக் கொடுக்கும் மருந்துகளில் 100க்கு 90 சதவீதம் சாதிக்காயும் சாதிபத்திரியும் அங்கம் வகிக்கும். காம்ம் தூண்டும் மணத்தைக் கொண்டது இது என்று மட்டுமே நெடுங்காலம் இதனை நம்பிவந்த ஐரோப்பியருக்கு, இது உள்ளே வெளீயே இரண்டுபக்கமும் வேலை செய்யும் அற்புதமான மருந்து என்பது சமீபத்தில்தான் தெரிய வந்தது.BMC -Complementary and Alternative Medicine என்ற மருத்துவ ஆய்வுப்பத்திரிக்கை விலங்குகளிலும் இதில் ஆய்வு செய்து, யுனானி, ஆயுர்வேதம், சித்தா சொன்ன இதன் ஆண்மைப்பெருக்கி விஷயம் வேடிக்கையானது அல்ல. உடலுறவில் வேட்கையை (increasing the libido by aphrodiasic activity)அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டென உறுதிப்படுத்தினர். சத்தியமாய் அவர்கள் வாரமொரு லாட்ஜில், ஒதுக்குப்புறமான அறையெடுத்து ஸ்பெஷல் லேகியம் விற்பனை செய்யும் வியாபாரிகளல்ல.. நம்பலாம்!

வெறும் உடலுறவில் நாட்டம் மட்டுமல்ல, விந்தணுக்களின் எண்ணிக்கை பெருக இந்த சாதிக்காய் உதவிடும். சாதிக்காய் சேர்ந்த மூலிகை மருந்துகள் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவினால்(Oligospermia) வரும் குழந்தைப்பேறின்மைக்கு சரியான மருந்து.

ஒருவித இனிப்புசுவையுடன் கூடிய தனித்துவ மனம் சாதிக்காயில் இருப்பதற்கு அதன் Myristicin சத்தே காரணம். இந்த சத்து சாதிக்காய் தவிர கேரட்டிலும் உண்டு. இருந்தாலும் சாதிக்காயில்தான் அதிகம்.சாதிக்காய் இரத்தக் கொழுப்பை குறைப்பதிலும் வெள்ளணுக்களில் ஏற்படும் இரத்தப் புற்று நோயைத் தடுப்பதிலும் கூட பணிபுரிகிறது என்கிறது, தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள்.

முதுமையின் அடையாளம் தோல் சுருக்கம். தோலின் நீட்சித்தன்மைக்குறிய சத்து கொஞ்சம் கொஞ்சமாக குறையத்துவங்குவதால் இந்த தோல் சுருக்கம் நிகழ்கிறது. சாதிக்காயின் Myristicin சத்து அந்த சுருக்கத்தை ஏற்படுத்த விடாமல் தடுப்பதை அறிந்த அழகுக் கம்பெனியார்கள் சாதிக்கயை anti-ageing களிம்புகளில் அதிகம் சேர்க்கின்றனராம்.

சாதிக்காய் ஒரு அடிமைப்படுத்தும் போதைப்பொருளோ என்ற சந்தேகம் கூட இடையில் அறிவியலாளருக்கு வந்ததுண்டு. ஆனால் பல ஆய்வுகள் செய்து அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும்  “அது போதையூட்டும் வஸ்து அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். நரம்பு மண்டலத்தில் அது நற்பணி ஆற்றுவதால், மன அழுத்த நோய்க்கு, மனதை உற்சாகப்படுத்தவும்,  நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும் சாதிக்காயைப் பயன்படுத்தலாம் என்கிறது இன்றைய அறிவியல்.

இன்றைய காலம் துரித வாழ்வியலில் நாம் தொலைந்துபோன காலம். கை நிறைய சம்பாதித்து, பை நிறைய கடன் கட்டும் மகிழ்வில்லா வாழ்வில்தாம் நம்மில் பலர். எங்கும் எவரும் யாரையும் அரவணைக்கவோ, பாராட்டிடவோ, ஆற்றுப்படுத்தவோ, அறிவுருத்தவோ, நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த வாழ்வில் மன அழுத்த நோய் பெருவாரியாகப் பெருகி வருகிறது. அதன் விளைவாய், குடும்பங்கள் பிரிதல், விவாகரத்து பெருகி வருகிறது. சாதிக்காய் தூள் ஒரு சிட்டிகை பசும்பாலில் இரவில் படுக்கும் போது சாப்பிடுவது இந்த மனஅழுத்தம் போக்கி, நிறைந்த நரம்புவன்மையும், சீரான தூக்கமும் தந்துவிடும்.

அடிக்கடி நிகழும் வயிற்றுப்போக்கிற்கு, சில நேரங்களில் சில வைரஸ் காரணமாக இருக்கும். பாக்டிரீயாக்களால் வரும் வயிற்றுப்போக்கிற்கு எதிர்நுண்ணுயிரி மருந்து கொடுத்து உடனே வயிற்றுப்போக்கை நிறுத்திட இயலும். வைரஸுக்கு அந்த பாச்சா பலிக்காது. ஆனால் சாதிக்காய்த்தூள் வைரஸினால் வரும் வயிற்றுப்போக்கையும் நிரூத்தி நம்மைக் காக்கும்.

ஒரு மணமூட்டிக்கு இப்படி ஒராயிரம் மருத்துவ குணம் உண்டு. இதனை முழுமையாய்ப் புரிவது கடினம். புரிந்ததை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல், அதனை எவ்வித்திலும் சிதைத்திடாமல் காத்திடுவதும் கூட நம் கடமை.