Wednesday, 5 December 2012

கடைசியில் வந்தாலும்..கலக்கும் பெருங்காயம்!
மனதை உணவின் பால் வசீகரீக்கச் செய்யும் மணமூட்டிகள், உடலில் பல விந்தைகளையும் செய்து நம்மை நோயின்றி காப்பது ஒரு ஆச்சரியமான விஷயம் என்றால், அதன் பயன் தெரிந்து அன்றாட உணவில் அதை அளவாய் சேர்க்கச் செய்த நம் முன்னோர்களின் அறிவாற்றலை, நுண்ணறிவை என்ன சொல்வது?  “ நீர் கருக்கி, மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்போர் தம் பேர் உரைக்கிற் போமே பிணி,”-என்று நீரையும், மோரையும், நெய்யையும் எப்படிச் சாப்பிட்டால் நோய் வராது என்று சொன்ன நம் சித்தர்கள், மணமூட்டிகளை பயன்படுத்திய விதமும், அளவும் இன்று பல மேற்கத்திய மருத்துவ ஆய்வகங்களின் மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறது. சர்க்கரையை நோயை வெல்ல இலவங்கப்பட்டை; புற்றை வெல்ல மஞ்சள்; இதய நோயை வெல்ல வெந்தயம்; இரத்தக் கொதிப்பை வெல்ல வெள்ளைப்பூண்டும் என நீளூம் இந்த பட்டியலில் இன்று நாம் பார்க்கப் போவது பெருங்காயத்தைப் பற்றி.

மிக நுண்ணிய அளவில், பல நேரங்களில், “அடடா! போட மறந்துட்டோமே! என்று நினைக்க வைக்கும் இந்த மூக்கைத்துளைக்கும் மணம் கொண்ட பெருங்காயம், காயத்திற்கு(உடலுக்கு) செய்யும் மருத்துவ நன்மை பெரிதினும் பெரிது. இதன் மூக்கைத் துளைக்கும் தீவிர மணத்தின் அருமை தெரியாத மேற்கத்தியர் ஆரம்பத்தில் இதற்கு வைத்த பெயர் “ நாற்றம்பிடித்த பிசின்/பிசாசின் மலம்”(devil’s dung /stinking gum).கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது 1918-இல் பெருங்காய விஷயத்தில் ஊர்ஜிதமானது. கிட்டத்தட்ட வாரம் ஒன்றுக்கு 10,000 அமெரிக்கர்களை பலிவாங்கிய ஸ்பானிஷ் விஷ ஜுரத்தின் (SPANISH FLU) போது, மற்ற மருந்துகள் எல்லாம் பொய்த்துப் போன போது பெருங்காயம் தான் கடைசியில் ஒட்டுமொத்த அமெரிக்கரையும் காப்பாற்றியது. இன்று உலகின் அத்தனை மருந்துகளையும் தர கட்டுப்பாடு செய்து உலகெங்கும் மருத்துவ விற்பனையை ஒழுங்குபடுத்தும்(?) அமெரிக்காவின் FDA  அமைப்பு பெருங்காயம் Spanish flu-ற்கு பயனளிக்கும் என்று அங்கீகரித்து பயன்படுத்த அறிவுறுத்தியது. ’பிசாசு மலம்-ஐய்யயே!’- என்று ஏளனம் செய்தவரெல்லாம்- உருத்திராட்சம் போடுவது போல், பெருங்காயக் கட்டியை கழுத்தில் போட்டு தம்மைக் காப்பாற்றிக் கொண்டதை வரலாறு வர்ணிக்கிறது. அதன்பின் 2009-இல் பறவைக்காய்ச்சல் உலகெங்கும் பயமுறுத்திய போது, அதே அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் பெருங்காயம் HINI VIRUS-க்கு எதிராக ஆய்வகத்தில் செயல் புரிவதை மீண்டும் நிரூபித்தனர்.

பறவைக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல், கன்னுக்குட்டி காய்ச்சல்... என  இனி வருஷத்துக்கு நான்கு காய்ச்சல் வரக்கூடும். இயற்கையில் அவை வருகிறதா? அல்லது ஏதும் மருந்து கம்பெனி உருவாக்கி உலக சந்தையில் ஓட்டி விடுகிறதா என்பது தெரியவில்லை. இருந்தாலும் எந்த விஷ சுரத்திற்கும், நம்மைக்க் காத்துக் கொள்ள ஒரு சிட்டிகை பெருங்காயம், மோரிலோ/சாம்பாரிலோ/ரசத்திலோ தினம் சேர்ப்பதே பலனளிக்கக் கூடும்..  (எனக்குத் தெரிந்து இந்த மாதிரி நல்ல விஷயங்கள் பர்கர்/பிட்சா போன்ற வெளி நாட்டு குப்பை உணவுகளில் சேர்ப்பது கிடையாது..)

அருந்தியது அற்றது போற்றி உணின்..என்ற வள்ளுவர் வரிகள் மிக மிக ஆழமான அர்த்தம் பொருந்தியவை..சாப்பிட்ட உணவு முழுமையாய் சீரணித்து, உட்கிரகிக்கப்பட்டு, பின் உணவை சாப்பிடுவோருக்கு மருந்தென வேண்டாவாம் - என்ற பொருள் தரும் அந்த குறள். அத்தகைய முழுமையான சீரணம் தர உதவுவது பெருங்காயம். நெஞ்சக் கரித்து, வயிறு உப்பி, எதுக்களித்து சிரமப்படும், GERD/PEPTIC ULCERS நோயாளிகளுக்கு பெருங்காயம் கை கண்ட மருந்து. குறிப்பாய் எந்த வாயு தரும் உணவை சமைக்கும் போதும் (வாழைக்காய்/கொண்டைக்கடலை/முட்டைகோஸ்). கடைசியில் துளி பெருங்காயம் போடுவது சீரணித்தை துரிதப்படுத்தி, வாயுவை விலக்கும். வாயுவால் மூட்டுவலி வருவதைத் தடுக்கும். குடல் தசைகளை இலகுவாக்கி, வாயு தங்காமல் இருப்பதை நிரூபித்த ஐரோப்பிய ஆய்வாளர்கள் IRRITABLE BOWEL SYNDROME  எனும் குடல் அழற்சியுடன் அடிக்கடி சாப்பிட்டவுடன் மலம் கழிக்க தூண்டும் நோயிலும் இதன் பயனை அறிந்தனர்.

சீரணம் மட்டுமல்ல. புற்று நோயிலும் கூட இந்த தாவர ரெசின் பயனளிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல் புற்று நோய் செல் வளர்ச்சியை 50% க்கும் மேலாக கட்டுப்படுத்துவதை ஆரம்ப கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதற்காக நுரையீரல் புற்றுக்கு மருந்து வேண்டாம்; ஒரு கிளாஸ் மோரில் பெருங்காயம் போட்டு சாப்பிடுங்க என சொல்ல வரவில்லை.. தொடர்ச்சியாக உணவில் அதை சேர்க்கும் போது இப்புற்று வகைகள் கட்டுப்படுத்தப்படும்; தவிர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது திண்ணம்..

பசி உண்டாக்குவதில் பெருங்காயம் செய்யும் பணி மகத்தானது. உங்கள் வீட்டுக் குழந்தைகள் சாப்பிட மறுக்கிறதா?.அவர்கள் பிடிக்கும் அடத்தில் உங்களுக்கு டென்ஷன் தலைக்கு ஏறுகிறதா? சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஒவ்வொன்றும் 30 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். 15 கிராம் பெருங்காயத் தூள் (வறுத்தது) எடுத்து, ஒன்றாக வருத்து, இடித்து மையாக பொடித்து சலித்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை உணவு சாப்பிடுகையிலும்  ஒரு கவளம் முதல் உருண்டையை இந்த பொடி போட்டு உருட்டி சப்பிட செய்யுங்கள். பசி, சீரணம் நிச்சயம் கிடைக்கும். அதனால் தான் மலம் எளிதில் கழிய வைக்க, வயிற்றுப்புண் போக்க, செய்யும் பல சித்த மருந்துகளில் காயம் கட்டாயம்!

மகளிருக்கு காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால் கர்ப்பிணிப்பெண்கள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராதவர், அதிக இரத்தப்போக்கு இல்லாமல் லேசாக வந்து செல்லும் மகளிக்கு காயம் அதனை சீர்படுத்தும். உடலில் வெப்பத்தை தூண்டி, நரம்பை தூண்டும் இந்த மூலிகை, ஆண்களின் காம இச்சையையும் அதிகரிக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம்.

பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். கருத்திருந்தால் வாங்க வேண்டாம். அதே போல் அதன் மணம் எளிதில் போய் விடுமாதலால், நல்ல காற்றுப்புகாத கண்ணாடி குவளையில் போட்டு வைத்திருப்பது அதன் மணத்தையும் மருத்துவ குணத்தையும் பாதுகாக்கும்.

No comments:

Post a Comment