Wednesday 5 December 2012

சாதிக்காய்



ஒரு சொட்டு கூட ஒழுகாமல், உச்சிப்பாறையில் 200கிலோ தேனை, தன்னுள் கொண்டுள்ள தேனைடையைப் பார்க்கும் போதும், சைபீரிய நாரை, 10,000 கிமீட்டர் பறந்துவந்து தன் வேடந்தாங்கல் வீட்டைத் தேடிவந்து முட்டையிடும் போதும், ஒரிசா கடற்கரையில் விட்டுச் சென்ற ஆமையின் முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள், மியான்மார் அந்தமான் வழியே கடலோடு சென்று தாய்லாந்தில் தன் குடும்பத்தோடு சேரும் செய்தியையும் படிக்கும் போதும் பார்க்கும் போதும், இயற்கையின் அறிவும் ஆற்றலும் திகைக்க வைக்கிறது. தேனீயும், நாரையும், ஆமையும் எந்த பல்கலைக்கழகமும் சென்று இதனை கற்று வரவில்லை. அதே போல்தாம் இயற்கை தரும் மணங்களும். மல்லிப்பூவோ செண்பகப்பூவோ, மஞ்சளோ, கிராம்போ எப்படி இந்த நறுமணத்தை சேற்றிலிருந்தும் செம்மண்ணிலிருந்தும் தயாரித்துத் தருகிறது என்பதை எண்ணும் போதும் வியக்க வைக்கிறது.

அப்படி ஒரு ஆச்சரியமூட்டும் மணத்தைத் தன்னுள் கொண்டு, உலகையே நேசிக்க வைத்த ஒரு தாவரப்பொருள்தாம் சாதிக்காய். வரலாற்றைப் புரட்டினால், அரபு சாதிக்காயின் ஏகோபத்திய வணிக வரவேற்பால், வணிகரும், மாலுமிகளும் சில பல நூறு ஆண்டுகளுக்கு, அதை எங்கிருந்து எடுத்து வருகிறோம் என்பதையே பெரும் ரகசியமாக வைத்திருந்தனர் என்பது தெரியும். இந்தோனேஷிய மலூக்கா தீவுகளில் இருந்து அவை முதலில் பெறப்பட்டாலும், இலங்கை, இந்திய மேற்குதொடர்ச்சி மலைகளிலும் பின்னர், ஐரோப்பா, மேற்கிந்தியத் தீவுகளிலும் சாதிக்காய் கோலோச்சியது. சாதிக்காயின் கனி ஊறுகாயாக பயன்படும். அதன் உள்லிருக்கும் விதை தான் சாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்து இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் சாதிபத்திரி என்பது. இதில் சாதிக்காய் எனும் விதைக்கும், சாதிபத்திரி இதழுக்கும்தான் மணமும், மருத்துவ குணமும், மார்க்கெட் மவுசும் கூட கூடுதலாய் உண்டு

சாதாரணமாய் சாதிக்காய் அதிகம் பயன்படுவது, ஆண்களுக்கு காமம்பெருக்கிச் செய்கைக்காகவும், குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான். சித்த ஆயுர்வேத மருந்துகளில், குழந்தைப்பேறில்லாமல் வரும் தம்பதிக்குக் கொடுக்கும் மருந்துகளில் 100க்கு 90 சதவீதம் சாதிக்காயும் சாதிபத்திரியும் அங்கம் வகிக்கும். காம்ம் தூண்டும் மணத்தைக் கொண்டது இது என்று மட்டுமே நெடுங்காலம் இதனை நம்பிவந்த ஐரோப்பியருக்கு, இது உள்ளே வெளீயே இரண்டுபக்கமும் வேலை செய்யும் அற்புதமான மருந்து என்பது சமீபத்தில்தான் தெரிய வந்தது.BMC -Complementary and Alternative Medicine என்ற மருத்துவ ஆய்வுப்பத்திரிக்கை விலங்குகளிலும் இதில் ஆய்வு செய்து, யுனானி, ஆயுர்வேதம், சித்தா சொன்ன இதன் ஆண்மைப்பெருக்கி விஷயம் வேடிக்கையானது அல்ல. உடலுறவில் வேட்கையை (increasing the libido by aphrodiasic activity)அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டென உறுதிப்படுத்தினர். சத்தியமாய் அவர்கள் வாரமொரு லாட்ஜில், ஒதுக்குப்புறமான அறையெடுத்து ஸ்பெஷல் லேகியம் விற்பனை செய்யும் வியாபாரிகளல்ல.. நம்பலாம்!

வெறும் உடலுறவில் நாட்டம் மட்டுமல்ல, விந்தணுக்களின் எண்ணிக்கை பெருக இந்த சாதிக்காய் உதவிடும். சாதிக்காய் சேர்ந்த மூலிகை மருந்துகள் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவினால்(Oligospermia) வரும் குழந்தைப்பேறின்மைக்கு சரியான மருந்து.

ஒருவித இனிப்புசுவையுடன் கூடிய தனித்துவ மனம் சாதிக்காயில் இருப்பதற்கு அதன் Myristicin சத்தே காரணம். இந்த சத்து சாதிக்காய் தவிர கேரட்டிலும் உண்டு. இருந்தாலும் சாதிக்காயில்தான் அதிகம்.சாதிக்காய் இரத்தக் கொழுப்பை குறைப்பதிலும் வெள்ளணுக்களில் ஏற்படும் இரத்தப் புற்று நோயைத் தடுப்பதிலும் கூட பணிபுரிகிறது என்கிறது, தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள்.

முதுமையின் அடையாளம் தோல் சுருக்கம். தோலின் நீட்சித்தன்மைக்குறிய சத்து கொஞ்சம் கொஞ்சமாக குறையத்துவங்குவதால் இந்த தோல் சுருக்கம் நிகழ்கிறது. சாதிக்காயின் Myristicin சத்து அந்த சுருக்கத்தை ஏற்படுத்த விடாமல் தடுப்பதை அறிந்த அழகுக் கம்பெனியார்கள் சாதிக்கயை anti-ageing களிம்புகளில் அதிகம் சேர்க்கின்றனராம்.

சாதிக்காய் ஒரு அடிமைப்படுத்தும் போதைப்பொருளோ என்ற சந்தேகம் கூட இடையில் அறிவியலாளருக்கு வந்ததுண்டு. ஆனால் பல ஆய்வுகள் செய்து அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும்  “அது போதையூட்டும் வஸ்து அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். நரம்பு மண்டலத்தில் அது நற்பணி ஆற்றுவதால், மன அழுத்த நோய்க்கு, மனதை உற்சாகப்படுத்தவும்,  நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும் சாதிக்காயைப் பயன்படுத்தலாம் என்கிறது இன்றைய அறிவியல்.

இன்றைய காலம் துரித வாழ்வியலில் நாம் தொலைந்துபோன காலம். கை நிறைய சம்பாதித்து, பை நிறைய கடன் கட்டும் மகிழ்வில்லா வாழ்வில்தாம் நம்மில் பலர். எங்கும் எவரும் யாரையும் அரவணைக்கவோ, பாராட்டிடவோ, ஆற்றுப்படுத்தவோ, அறிவுருத்தவோ, நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த வாழ்வில் மன அழுத்த நோய் பெருவாரியாகப் பெருகி வருகிறது. அதன் விளைவாய், குடும்பங்கள் பிரிதல், விவாகரத்து பெருகி வருகிறது. சாதிக்காய் தூள் ஒரு சிட்டிகை பசும்பாலில் இரவில் படுக்கும் போது சாப்பிடுவது இந்த மனஅழுத்தம் போக்கி, நிறைந்த நரம்புவன்மையும், சீரான தூக்கமும் தந்துவிடும்.

அடிக்கடி நிகழும் வயிற்றுப்போக்கிற்கு, சில நேரங்களில் சில வைரஸ் காரணமாக இருக்கும். பாக்டிரீயாக்களால் வரும் வயிற்றுப்போக்கிற்கு எதிர்நுண்ணுயிரி மருந்து கொடுத்து உடனே வயிற்றுப்போக்கை நிறுத்திட இயலும். வைரஸுக்கு அந்த பாச்சா பலிக்காது. ஆனால் சாதிக்காய்த்தூள் வைரஸினால் வரும் வயிற்றுப்போக்கையும் நிரூத்தி நம்மைக் காக்கும்.

ஒரு மணமூட்டிக்கு இப்படி ஒராயிரம் மருத்துவ குணம் உண்டு. இதனை முழுமையாய்ப் புரிவது கடினம். புரிந்ததை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல், அதனை எவ்வித்திலும் சிதைத்திடாமல் காத்திடுவதும் கூட நம் கடமை.

No comments:

Post a Comment