கண்ணாடி முன்னால் நின்று அலங்கரிக்கும் போது, கொஞ்சம் “வெள்ளை வெளேர்னு”- இருப்பது போல் தெரிகிறீர்களா? ‘உணமையிலேயே அந்த ஐந்து நாளில் சிகப்பழகு தரும் கிரீம் வேலை செய்துடுத்தோ?’, என புருவம் உயர்த்தி ரொம்ப பெருமிதம் அடைய வேண்டாம். இரும்புச் சத்து குறைந்து போய் “அனீமியா”எனும் இரத்த சோகை ஏற்பட்டிருக்கக் கூடும். அனீமியாவிற்கு பல காரணமிருக்கிறது. இரும்புசத்து குறைவு, விட்டமின் பற்றாக்குறை, புரதங்கள் பற்றக்குறை, சிறுநீரகச்செயலிழப்பு என எவ்வளவோ இருந்தாலும், பெரும்பாலான வெளுப்பு நோய்(அனீமியா) வருவது இரும்பு இல்லாமல் தான்.
இரும்பை உணவில் எப்படி பெறலாம்.?
இரயில் தண்டவாளத்தை பொரியல் செய்து சாம்பார்சாத்த்துக்கு தொட்டுச் சாப்பிட முடியாது. நேரடியாக இரும்புச் சத்து மருந்துகள் வயிற்றுப்புண், மலச்சிக்கல், மூலம் முதலிய நோய்களை ஏற்படுத்தி விடும். உணவில் இரும்பை எடுப்பது தான் உத்தமம்.
நிறைய காய்கறி, பழங்களில் இரும்பு சத்து இருந்தாலும், “ திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி”, “ஐதராபாத் தம் பிரியாணி” –க்கு தவம் இருந்து சாப்பிடும் புலால் உணவுப் பிரியர்களுக்கு மகிழ்வான செய்தி.புலால் உணவு இரும்புதாம் சிறந்ததாம். சீக்கிரம் உடலில் சேர்ந்து சோகை சோகத்தை தடுக்கிறதாம். Heme iron மற்றும் non-heme iron என்று இரு பெரும் பிரிவாக இரும்புச்சத்தை பிரிக்கும் உணவியலாளர்கள், உடலுக்கு உடனடியாக இரும்பை பரிமாறும் தன்மை, heam iron உள்ள புலால் உணவுக்கு இருப்பதால் அதற்கே 1ம் ரேங்க் கொடுக்கின்றனர்.ஆனால், இரும்பை கொடுக்கும் புலால் கூடுதலாய் அதிக கலோரியையும் தந்து விடுவதால், கொழுப்பு கூடி விடும் அபாயமும் உண்டு. இரும்புச்சத்து வேண்டும் என சிக்கன் லிவர் பீஸ், சல்மான் ஃபிஷ் ஃப்ரை என புலாலில் பொங்கி எழுந்தால் காலையும் மாலையும் ஓடி கொழுப்பை குறைக்க மறந்து விடக் கூடாது!
காய்கறி சாப்பிட்டு, பழம் சாப்பிட்டு இயற்கையோடு ஒட்டி வாழும் எங்களுக்கு இரும்பு கிடையாதா? என்று கோபப்பட வேணாம். பல கீரையில் இரும்பு நிறையவே உள்ளது. தினம் காலை சப்பாத்திக்கு பாலக் பன்னீர், மதியம் சாம்பாருக்கு முருங்கை கீரை பொரியல் என சாப்பிடுங்கள். இப்போது பிரபலமாகி வரும் ‘டோஃபு‘ எனும் சோயாபால் கட்டியை கொஞ்சம் தக்காளி/ நெல்லிக்காய் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். பாலிஷ் போடாத கைக்குத்தலரிசியில் சாதம் வையுங்கள். மாலை கொண்டைக்கடலை சுண்டலும், இரவில் கம்பு ரொட்டியோ, ராகி தோசையோ சாப்பிடுங்கள். இரும்புச்சத்து சரியான அளவில் கிடைக்கும்.
பீட்ரூட் அவ்வளவாக வயதானோருக்கு நல்லதில்லை என்றாலும், அதன் கீரை இரும்பு சத்து அதிகமுள்ள கீரை. கீரைகளில் சிறு கீரை, முருங்கைக் கீரை, பாலக் கீரை எல்லாம் இரும்பு தரும்.பழங்களில் உலர்ந்த அத்தி, உலர் திராட்சை, இந்த சீசனில் கிடைக்கும் தர்பூசணி, மாம்பழம் இவை எல்லாம் இரும்புச்சத்து நிறைந்தவை. தக்காளி, சிகப்பு கொய்யா, மாதுளையும் இரும்பை கொஞ்சமாய் தரும்.
வெள்ளை அரிசியை விட கைக்குத்தல் புழுங்கலில் இரும்புச்சத்து அதிகம். கம்பு தினை ராகியில், அரிசியை விட இரும்பு சத்து அதிகம். மல்லிப்பூ மாதிரி வெளுப்பாய் பொன்னி அரிசி வாங்கி சமைத்து அதே வெளுப்பில், இரத்த் சோகை வருவதை விட, வீட்டில் சிறுவயது முதல், வரகரிசி பொங்கல், தினையரிசி புளியோதரை, கம்பு ரொட்டியும் -பாலக் பன்னீரும், கேழ்வரகு தோசைக்கு நிலக்கடலை சட்னி என சாப்பிடுங்கள். இரும்பும் குறையாது. மாதச்செலவும் குறையும். நம்ம நாட்டின் ஏழை விவசாயிக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.
இரும்புச்சத்து ஆணை விட பெண்ணுக்கு அதிகம் தேவை. சாதாரண பெண்ணை விட தாய்மை அடைந்த, பிரசவித்த, பாலூட்டும் பெண்ணுக்கு கொஞ்சம் கூடுதலாய்த் தேவை. மாதவிடாயில் அதிக இரத்தப்போக்கு உள்ள இளம் பெண்ணுக்கு இன்னும் அதிகம் தேவை. பல நோய் நிலைகளில் இரும்புச்சத்து குறைந்திருப்பின் அந்த நோய் இன்னும் அதிகம் ஆட்டம் போடும். சர்க்கரை நோயாளிகள், அறுவை சிகிச்சையில் இருந்து வந்தவர்கள், மூல நோயினர், ஃபைப்ராய்டு கட்டியினால், பெரும்பாடு(அதி ரத்தப்போக்கு) உள்ள மகளிர் எல்லோரும் அவ்வப்போது தங்கள் இரும்புச்சத்து அளவை அறிந்து வைத்திருப்பது அவசியம்.
இரும்புச்சத்து உடலில் சரியாக உட்கிரகிக்கப்பட விட்டமின் சி சத்தும் ஃபோலிக் அமைலமும் அவசியம்.ஆதலால், அடிக்கடி நெல்லிக்காய் சாறு, நெல்லிக்காய் என சாப்பிடுவது நீங்கள் சாப்பிடும் இரும்பை உடலில் பத்திரமாய் சேர்க்க உதவிடும்.
வீட்டில் உங்கள் குழந்தை சுவரை பிராண்டி அந்த சுண்ணாம்பு காரையை சாப்பிட்டாலோ, அல்லது உங்க வீட்டு அம்மணி, கோயில் பிர்சாதமாஇ தந்த திரு நீரை அப்படியே ஹார்லிக்ஸ் மாதிரி சாப்பிட்டாலோ, ‘என்னே பக்தி!’ என மெச்ச வேண்டாம். டாக்டரிடம் கொண்டு போய் ”அனீமியா” இருக்கிறதான்னு பார்த்து விடுங்கள். PICA என அழைக்கப்படும் இரத்த சோகைக்கான அறிகுறி இது. நெஞ்சுக்குள் குதிரை ஓடுவது போல் ஒருவித படபடப்பு, மூச்சிரைப்பு, இருந்து கொண்டே இருந்தாலும் இரும்புசத்தை தேடும் உடலின் நிலையாக இருக்கலாம்!
உடலுக்கு தேவையான முக்கிய சத்து இரும்பு. அதை காந்தமாய் உணவிலிருந்து கவர்ந்திழுக்க இளமை முதல் தவறிவிட வேண்டாம். மறுத்தாலோ, மறந்தாலோ, நோய் காந்தமாய் ஒட்டிக் கொள்ளும்!
No comments:
Post a Comment