Sunday, 19 June 2011

நேற்று வரை இல்லாத காதல்...!




      னது இளமை காலம் பெரும் பகுதி மருத்துவமனையிலேயே கழிந்தது பெரிய குற்றங்களை செய்துவிட்டு சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளின் நன்னடத்தையைப் பொருத்து அவர்களை சில காலம் பெயிலில் வெளியே விடுவார்களாம் அதே போலத்தான் என்னையும் மருத்துவமனையில் இருந்து சில மாதங்களோ அல்லது சில நாட்களோ வீட்டிற்கு கூட்டி வருவார்கள்

அப்படி கூட்டி வரும் நாட்களில் தான் நான் பள்ளிக்கூடம் போவது நண்பர்களோடு விளையாடுவது என்று நடக்கும் நான் வீட்டில் இருக்கும் காலங்களில் எனது தந்தையாரும் கூட இருந்துவிட்டால் சைக்கிளில் வைத்து என்னை கோயில் அரசியல் கூட்டம் இலக்கியம் மேடைகளுக்கு கூட்டி போவார் அப்படி போக நேர்ந்தால் தூக்கம் தூக்கம் மாக வரும் எப்போதடா கூட்டம் முடியும் என்று பல நாள் விழிப்பிதுங்க காத்திருப்பேன்



  அதற்கு காரணம் இலக்கியவாதிகள் பேசுவது எதுவுமே எனக்கு புரியாது தமிழ் வார்த்தைகளைத் தான் அவர்கள் பயன்படுத்துவார்கள் ஆனாலும் எனக்கு அது வேறு ஏதோ பாஷை போல் இருக்கும் புரியாத விசயத்தை எப்படி இத்தனைபேர் ரசித்து கேட்கிறார்களே  என்றும் தோன்றும்

      இதனாலேயே தமிழ் இலக்கியங்கள் என்றவுடன் எனக்கு வெகுநாள் ஒரு பயம் இருந்தது புதியதாக ஒருவன் ஆங்கிலம் கற்க முற்படும் போது அவனுக்குள் எழும்பும் இதை நம்மால் கற்றுக் கொள்ள முடியுமா என்பது போன்ற இயல்பான பயம் அல்ல அது கஷ்டப்பட்டு புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எதவுமே அதில் இல்லை மனிதனின் அழகை இயற்கையின் வனப்பை வீரத்தின் செரிவை மிகைப்படுத்தி காட்டும் சாதாரண சங்கதியான தமிழ் இலக்கியத்தை கஷ்டப்பட்டு கற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என்ற அலட்சியத்தில் உருவான அல்லது நிஜமான சோம்பேறித்தனத்தில் உருவான போலியான பயம் அது


      இந்த பயத்தால் நான் இழந்தது அளவிட முடியாதவைகள் என்று அப்போது எனக்கு புரியவில்லை எல்லோரும் புதுக்கவிதை எழுதுகிறார்கள் நாமும் அதையே எழுதினால் என்ன மரியாதை இருக்கிறது? கடினமானது என்றாலும் மரபுக் கவிதை தான் எழுதி பழக வேண்டும்மென ஒரு எண்ணம் மனதில் தோன்றிய போது செயல்படுத்த முனைந்த போது நான் இழந்தவைகளில் உள்ள மதிப்பு தெரிய ஆரம்பித்தது

      தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தவுடன் தமிழாசிரியர் புலவர் சு.கண்ணன் அவர்களை நாடினேன் அவர் கவிஞன் பெண்ணை வளவன் என்ற பெயரில் பல மரபுக் கவிதைகளை எழுதி தமிழுக்கு தந்தவர் குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா போல குழந்தைகளும் தமிழிலக்கணத்தை மிக சுலபமாகவும் . சுகமாகவும் கற்றுக் கொள்ள பாட்டு வடிவில் பைந்தமிழ் இலக்கணம் என்ற நூலை எழுதியவர் ஆங்கில மொழியே கலக்காமல் சுத்தமான தமிழில்தான் எப்போது உரையாடுவார் 


அவரிடம் சென்று இலக்கணம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டவுடனேயே சம்மதித்துவிட்டார் வாரத்தில் ஒரு நாள் வகுப்பிற்கு வரச் சொன்னார் மார்கழி மாதக் குளிரில் அதிகாலை 5 மணிக்கு அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து தமிழ் இலக்கணம் கற்ற அந்த நாளை மறக்கவே முடியாது

 ஒருநாள் அவர் உனக்கு சங்க பாடல் ஏதாவது தெரியுமா என்று கேட்டபோது பழந்தமிழ் இலக்கியத்தில் அவ்வளவாக எனக்கு நாட்டம் இல்லை அந்த தமிழ் நடையை புரிந்து கொள்வது கடினம் என்று பதில் சொன்னேன் அப்போது அவர் ஒரு வார்த்தை என்னிடம் சொன்னார் அப்பனும் பாட்டனும் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரியாமல் வாழ நினைப்பவன் கண்களை முடிக்கொண்டு நெருப்புக் குண்டத்தில் விழுந்தவன் ஆவான் என்றார்

 இதை என்னால் எப்போதுமே மறக்க முடியாது எனது முன்னோர்கள் முட்டாள்களாக முழுமடையர்களாக வாழந்தார்கள் என்றால் நான் மட்டும் எப்படி அவர்களிடம் இல்லாத அறிவை பெற்றவன் ஆவேன்? எப்படி என்னால் மட்டும் தனியாக அறிவை பெற முடியும்? என் பாட்டனார் குதிரை சவாரி செய்து மெய்க்காப்பாளர்களோடு பயணம் செய்தவர் அவருடைய பேரனான நான் அப்படி போக முடியவில்லை என்றாலும் கூட சாராயம் குடித்துவிட்டு சாக்கடையில் புரளாமல் இருந்தாலே போதும் அவர் மரியாதையை காப்பற்றியவன் ஆவேன்  


   பழந்தமிழ் சங்க பாடல்களை படிப்பதனால் இலக்கிய சுவை கிடைக்கும் புதியதாக கற்பனை செய்ய வழி கிடைக்கும் முன்னோர்கள்களை பற்றிய அறிவுமாக கிடைக்கும் என்று எனக்கு தோன்றவே அவரிடம் அப்போதே சரித்திரம் படித்தால் கிடைக்கக் கூடிய அறிவு இலக்கியம் படித்தால் கிடைக்குமா? என பளிச் என்று கேட்டும் விட்டேன் மெலிதாக சிரித்த அவர் சரித்திரத்தில் எழுதப்பட்டவைகள் வெறும் விவரக் குறிப்புக்கள் தான்  அதில் உணர்வு இருக்காது காட்சிகள் இருக்காது இலக்கியம் அப்படி அல்ல அக்கால  சூழலை நமக்கு உள்ளப்படி காட்டுவது போலவே மனிதர்களின் உணவுர்களையும் அதையும் தாண்டி நிற்கும் உண்மைகளையும் நமக்கு காட்டும் என்றார்.

      அந்த நாள் முதற்கொண்டு சங்கப் பாடல்களில் மீதியிருந்த அலட்சியத்தையும் அச்சத்தையும் விலக்கி இதற்குள்ளும் ஏதோ ஒரு புதையல் இருக்கும் என்ற ஆர்வத்தில் தேடிப் பார்க்கலானேன் ஆரம்பத்தில் பழம் தமிழ் பாடல்களை உச்சரிக்க முடியாமல் நாக்கு தள்ளாடியது வார்த்தைகளை வாய்விட்டு சொல்லும்போது பற்கள் தந்தி அடித்தன ஒன்றுமே புரியாத ஆப்பிரிக்காவில் மாட்டிக்கொண்டது போல ஒரு உணர்வு ஏற்பட்டது

  சுருக்கமாக சொல்வது என்றால் ஒரு மண்ணாங்கட்டியும் புரியவில்லை. தெரியவில்லை என்று எந்த விஷயத்தையும் விட்டுவிடும் சுபாவம் எனக்கு எப்போதுமே கிடையாது புரியும் வரை போராடுவேன் வெற்றி பெறும்வரை போராட்டத்தை நிறுத்தவே மாட்டேன் நீயா நானா பார்த்து விடலாம் என சங்கப்பாடலோடு மல்லு கட்ட ஆரம்பித்தேன் கடைசியில் பாடல்கள் என்னை பார்த்து பரிதாபப்பட்டன இந்த மரமண்டைக்கு விளங்கிதான் தொலைப்போமே என்ற இரக்கத்தில் இரங்கி வந்தன

       பலாப்பழத்தைப் பிளந்து எண்ணைய் தேய்த்த குச்சியில் பலாப்பாலை உருட்டி எடுத்து சுளைக்குள் இருக்கும் கொட்டையை எடுத்து எறிந்து விட்டு மொய்க்க வரும் ஈயையும் துரத்தியடித்து சுளையை சுவைக்கும் போது கிடைக்கும் ஒரு சந்தோஷம் பழைய பாடல்கள் புரிய ஆரம்பித்தவுடன் கிடைத்தது முதல் முதலில் நான் படித்து புரிந்து கொள்ள முயற்சித்தது திருக்குறளில் உள்ள காமத்துப் பாலே ஆகும்

குறளை நான் தொட்ட போது என் வயது 22 அது விடலைப் பருவம் கவர்ச்சியை மட்டுமே அந்த பருவத்துக் கண்கள் பார்க்கும் எதில் ஆர்வம் இருக்கிறதோ அதிலிருந்து உனது முயற்சியை துவங்கினால் தான் சுலபமாக வெற்றியடைய முடியும் என நண்பர்கள் சொன்னதனால்அந்தப் பகுதியை படிக்கலானேன் இதை இங்கு சொல்லுகிறோம் என்ற வெட்கம் எனக்கில்லை உண்மையை சொல்கிறோம் என்ற திருப்திதான் வருகிறது காமம் .களவு. கோபம் இப்படி எல்லா அசுத்தங்களையும் கடந்து வந்தால் தானே அமைதி மரத்தில் சாந்தி பழத்தை பறித்து சுவைக்கலாம்.


     மனிதர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான ஆசைகள் வருகின்றது. தொட்டிலில் கிடக்கும் போது அம்மாவின் தாலாட்டை கேட்க ஆசைப்படுகிறோம் தொட்டிலை விட்டிறங்கி தளர் நடை பயிலும் போது விதவிதமான பொம்மைகள் மீது ஆசைப் பிறக்கிறது. அதன் பிறகு பம்பரம் .கோலி. கபடி என்ற தாண்டி மீசை முளைக்கும் பருவத்தில் ஆசையின் நிறம் மாறுகிறது

அந்த மாற்றமே பணத்தாசை. பதவியாசை என விரிந்து கடைசியில் உயிரின் மீது ஆசையாக முடிவடைகிறது ஆசைகள் பிறப்பதும் மாறுவதும் தவறல்ல அது இயற்கையின் விளையாட்டு ஆனால் சிலபேருருடைய ஆசை எதாவது ஒரிடத்திலேயே நிலைத்து நின்றுவிடுகிறது அப்போது தான் மனிதன் முழுக்க முழுக்க உணர்வுகளுக்கு அடிமையாகி புறப்பட்ட இடத்திலேயே நின்று விடுகிறான்.

 பம்பரம் விளையாடும் ஆசை பல் போன பிறகும் தொடர்ந்தால் எப்படி தவறோ அதே போலவே இளமைப் பருவத்தில் அறுப்பும் காதல் உணர்விற்கு தலை நரைத்து போன பிறகும் அடிமையாக கிடப்பது தவறுதல் ஆகும்   அந்த பருவத்தில் படித்த காமத்துப்பால் திருக்குறள் மனதை செம்மைப்  படுத்தியதே தவிர சஞ்சலப்படுத்தவில்லை


இரு நோக்கு அவளின் கண் உள்ளது ஒரு நோக்கு நோய் நோக்கு மற்றொன்று அந்நோய்க்கு மருந்து என்ற குறட்பா பெண்மையின் விழியசையில் உள்ள நளினத்தை மட்டும் கற்பிக்கவில்லை பெண் மோகத்தில் உள்ள கம்பீரத்தையும் தலைக்குனிவையும் கூட கற்பித்தது.

      இப்படி உணர்வுகளை மட்டும்மல்ல அக்காலத்திய சமூக சித்திரத்தையும். பழம்தமிழ் பாடல்கள் நமது கண் முன்னால் தூசி தட்டி விரித்து வைக்கிறது நற்றிணையில் உள்ள ஒரு அழகான சித்திரத்தை இந்த இடத்தில் காண்பது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

 இளம் காதலர்கள் இருவர் ஒரு தன்னந்தனி தோப்பிற்க்குள் நடந்து வருகிறார்கள் மாலை இளம் சூரியனின் இதமான வெப்பமும்.குளிர் மிகுந்த தென்றலும் இருவர் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது அந்த சோலையில் ஒரு புன்னை மரம் நிற்கிறது அதன் அடர்ந்த நிழலில் உட்கார்ந்து இன்பக் கதைகள் பேச ஆசைப்படுகிறான் காதலன் ஆனால் வெட்கத்தோடு மறுக்கிறாள் காதல் தலைவி

 காரணம் என்னவென்று அவன் கேட்க இந்த புன்னை மரம் எனக்கு தமக்கை உறவாகும் என்று அவள் வீணை குரலில் கிசுகிசுக்கிறாள் மங்கைக்கு சகோதரி பச்சை மரமா என்று அவன் கேள்வி கேட்க துணியும் போதே அவளிடம் இருந்து பதிலும் வந்து விடுகிறது என் அம்மா குழந்தைப் பருவத்தில் இந்த சோலைக்கு வந்து தான் விளையாடுவாளாம் அப்பொழுது கேட்பாரற்று கிடந்த புன்னை மரம் விதை ஒன்றை எடுத்து மணலில் ஊன்றி வைத்தாளாம்


அவள் வாலிப பருவத்தை தொட்டப் போது அன்று ஊன்றிய விதை துளிர்த்து நிற்பதை கண்டாளாம் . அதன் நிழலில் தான் தோழிகளோடு விளையாடுவாளாம். அன்னை வளர்த்த மரம் என்பதால் இவளுக்கு இது அக்காவாய் ஆனதாம் இது உன் தமக்கை என்று அம்மா தான் அறிமுகம் செய்து வைத்தாளாம் .அதன் காரணமாக அக்கா முன் அத்தான் நீ தொட்டால் பற்றிக் கொள்ளாதோ  வெட்கம் மென விளக்கம் சொன்னாளாம் பொருளை புரிந்த பிறகு இந்த நற்றிணை பாடலை படித்துப் பாருங்கள்
        விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
        மறந்தனம் துறந்த காழ்முலை அகைய  
        நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது
        நும்மினும் சிறந்தது நுவ்வை யாகும் என்று
        அன்னை கூறினள் புன்னையது சிறப்பே 
        அம்ம நாணுதும் தும்மொடு நகையே!

     இதில் என்னப்பெரிய விஷயம் இருக்கிறது ஜன்னிநோய் கண்டவன் உளறுவதுபோல காதல் நோய் வந்தவர்கள் அர்த்தமற்ற வார்த்தைகளை கூறி பிதற்றுவது வழக்கம் தானே என்று சிலர் கேட்கலாம் நானும் அப்படித்தான் ஒரு காலத்தில் கேட்டுக்கொண்டிருந்தேன் நேற்று வரை இல்லாத காதல் இன்று காலையில் அறும்பியவுடன் காதலனின் கருவாட்டு வால் மீசை ராஜராஜ சோழனின் கத்தி போல்இருக்கும் அவன் நாயை போல் வாலை சுருட்டிக் கொண்டு ஒடுவது கூட புலியும் சிங்கமும் கம்பீரமாக நடப்பது போல் தெரியும் 


ஆண்கள் மட்டும் இழைத்தவர்களாக என்ன? அவள் காலுக்கு செருப்பு வாங்கி கொடுக்க காசு இருக்காது ஆனால் அதை வெளிக்காட்ட முடியுமா உடனே மலரே நீ நடக்க பாதையெல்லாம் பூவிரித்தேன் என்பான் குளிக்காமல் நாற்றம் அடிக்கும் அவள் வியர்வையை செந்தேன் துளி எனச் சொல்லி  நம்மை அறுவருப்பு அடைய வைப்பான் அப்படித்தான் இந்த நற்றிணை காதலியும் எதையோ சொல்ல வந்து சொல்லத் தெரியாமல் மரம் எனக்கு அக்கா என்று உளறுவதுபோல் தோன்றும்.

       காதல் என்பதே ஒரு வித பைத்தியம் தான் அப்படிப்பட்ட பைத்தியக்கார பேச்சாக இந்த பாடலை நாம் எடுத்துக் கொள்ள முடியாது இதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளின் பின்னனியை ஆராய்ந்தால் நமக்கு மலைப்பு ஏற்படுகிறது முதலில் காதலர்கள் நடந்துவரும் சோலையை எடுத்துக் கொள்வோம். இந்த சோலை காதலியின் அம்மா காலத்திலும் சோலையாகத்தான் இருந்திருக்கிறது இப்போதும் அப்படித்தான் இருக்கிறது இதில் நமக்கு கிடைக்கும் உண்மை பண்டைய கால தமிழன் இயற்கையை சிதைக்க முயலவில்லை அதை வளர்க்கவே விரும்பியிருக்கிறான் அதனால்தான் நாடும் நகரமும் வளமையோடு இருந்திருக்கிறது

மேலும் இந்த பாடலில் அவள் விதையை ஊன்றினாள்  என்று எழுதப்பட்டிருக்கிறதே தவிர தண்ணீர் ஊற்றி வளர்த்தாள் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை தண்ணீர் இல்லாமல் ஒரு விதை எப்படி மரமாகும் இங்கே ஆகியிருக்கிறது அப்படி என்றால் மாதம் மும்மாரி மழை பெய்தது என்று சொல்வது கற்பனை அல்ல. அலங்கார வார்த்தையல்ல நிஜமான உண்மையென்பது தெரியவரும். 


மாதம் தோறும் மழை வராவிட்டால் நிச்சயம் விதை துளிந்தவுடன் கருகி போகுமே தவிர வளர்ந்து மரமாகாது இன்னொரு விஷயம் இந்த சோலைக்கு தாயும் குழந்தைப் பருவத்தில் வந்திருக்கிறாள் மகளும் வந்திருக்கிறாள் எனும் போது இந்த சோலை ஊரிலிருந்து வெகு தொலைவில் இல்லை ஊருக்கு பக்கத்தில் இருக்க வேண்டும் அல்லது ஊரே சோலையாக இருக்க வேண்டும்

இதில் எது நிஜம் என்றாலும் இப்போது போல் அந்த காலத்து மனிதன் வீடுகளைக் கட்டி குடியிருப்பதற்காக மரங்களையும் வனங்களையும் தேவையில்லாமல் அழிக்கவில்லை என்பது தெளிவாகிறது இது நற்றிணை பாடல் காட்சியின் சுற்றுச்சூழல் சார்ந்த சித்திரமாகும் இனி இதனுள் மறைந்து கிடக்கும் சமுதாயச் சித்திரத்தை பார்வையிடுவோம்.

        அம்மா ஊன்றினாள் மகள் அதை சகோதிரியாக கருதினாள் என்பது தான் பாடலின் பிரதான கருத்து நமக்கு நன்றாக தெரியும் அந்தக் காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி நம் நாட்டு ஆண்களுக்கு மட்டும் தான் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே குடும்பம் சொந்தமாக இருக்கிறது ஆனால் பெண்கள் நிலை அப்படியல்ல திருமணம் முடியும் வரை பிறந்த வீட்டை தன் சொந்த வீடு என்கிறாள் திருமணத்திற்க்கு பிறகோ நேற்று வரை தன்ககு சம்பந்தமே இல்லாத புதிய வீட்டாரை தனது உரிமையாக கொள்ள வேண்டிய நிலை வருகிறது

 நகை கொடுத்து பெட்டி நிறைய சீதனம் கொடுத்து கட்டில். மெத்தை.பீரோ. என்று எல்லாமும் கொடுத்து ஒரே ஒரு மஞ்சள் கயிற்றை படுபாவி பயல் கட்டிவிட்டான் என்பதற்காக பெற்றவரை மறந்து. உற்றவரை துறந்து கற்ற காலத்தில் கதை பேசிய தோழியன் நடப்பை சிதைத்து எங்கோ கண் காணாத இடத்திற்கு அவனோடு போக வேண்டிய நிலை உருவாகி விடுகிறது.

  ஆனால் நற்றிணை காட்சி இப்படி ஒரு சோக சித்திரத்தை நமக்கு காட்டவில்லை அம்மா போட்ட விதை மரமாகி நிற்பதை மகள் காண்கிறாள் என்றால் அம்மாவுக்கு மணமுடிந்ததும் அந்த ஊர்தான் மகள் காதலனோடு அதே சோலையில் நடமாடுகிறாள் என்றால் அறிமுகம் இல்லா புதிய ஆடவன் ஊருக்குள் இருக்கும் சோலைக்குள் சுதந்திரமாக நடமாட அந்தகாலத்தில் முடியுமா? இப்போது கூட புதிய நபர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நடமாடினால் நம்மால் சந்தேகப்படாமல் இருக்க முடியுமா?

ஆகவே மகளின் காதலனும் அந்த ஊர் காரணாகவே இருக்க வேண்டும் அல்லது பக்கத்து ஊர்காரணகவோ இருக்கலாம் இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் ஆதிகால தமிழன் வியாபாரம் அரசியல் காரணங்கள் தவிர தனிப்பட்ட வாழ்க்கை தேவைகளுக்கு போக்குவரத்தை அதிக தூரத்திற்கு வைத்துக்கொள்ளவில்லை குறிப்பிட்ட தூரத்திற்குள்ளேயே வைத்து இருக்கிறான் அதனால்தான் அவனது சமுக சூழல் பரபரப்பு இல்லாமல் அமைதியாக ஒரு ஓடையின் தண்ணீரை போல அமைந்திருக்கிறது

இப்படிதான் இன்றும் வாழ வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை நமது தேவைகளை குறைத்துக் கொண்டு பரபரப்பு இல்லாமல் வாழ்ந்தால் மனம் அமைதியாக இருக்கும் இரத்தக் கொதிப்பு இதயநோய் சர்க்கரை போன்ற சனியன்கள் எல்லாம் நம்மை தொட்டுக் கூட பார்க்காது இது சங்க இலக்கியம் தரும் ஒரு சின்ன தகவல் அவ்வளவுதான்

 இன்னும் ஏராளமான புதையல்கள் அதனுள் ஆழ்ந்தும் மறைந்தும் கிடக்கிறது அவைகளைப் பற்றி வேறு சில நேரத்தில் சிந்திப்போம்.          

No comments:

Post a Comment