Sunday, 19 June 2011

மனதை பாதித்த சாலை விபத்துக்கள்




நன்றி A.R.ராஜகோபாலன் 


                                இன்று வளர்ந்து வரும் வாகன பெருக்கத்திலும் நமது அவசர போக்குவரத்திலும் , தகுதி இல்லாத வாகன ஓட்டிகளாலும், குடி போதைகளாலும் , கவனக் குறைவுகளாலும் , முறையற்ற பாதுகாப்பற்ற போக்குவரத்தாலும், அவசியமே இல்லாத அவசரங்களாலும் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?????
ஒரு லட்சத்து முப்பத்தையிந்தாயிரம் பேர் (1,35,000), இதில் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

         தமிழகத்தில் 2006​ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 11,009 பேர். 2010​ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 15,409 பேர். 2007 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை 2006​ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, 2013​ஆம் ஆண்டு 20 சதவீதம் உயிர் இழப்பைக் குறைப்போம் என்ற கொள்கை முடிவை எடுத்தது. ஆனால், 2010​லேயே 40 சதவீதம் உயிர் இழப்பு அதிகரித்து இருக்கிறது. 5 வருடங்களாக தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துகளில் உயிர் இழந்தவர்கள் 59,870 பேர்.  

            உலகின் வாகன எண்ணிக்கையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள இந்தியாவில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 13 சதவீதம்; சாலை விபத்து உயிரிழப்புகளில் உலகிலேயே இந்தியாதான் முதலிடம் என்ற புள்ளி விவரங்கள்,என் மனதை என்னவோ செய்கிறது.ஜப்பானில் ஒரு அணுகுண்டு வீசப்பட்டபோது, இறந்தவர்கள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேர்.இது, சுனாமியின் பாதிப்பை விட அதிகம்; பூகம்பங்களில் உயிர் இழப்பவர்களை விட அதிகம். ஆனால், இந்த இழப்பு, ஒவ்வொரு நாளும் பரவலாக ஏற்படுவதால் ஒட்டுமொத்த பாதிப்பு நமக்குப் புரிவது இல்லை. ஒவ்வொரு விபத்திலும் உயிர்களை இழப்பவர்களது குடும்பங்கள், வேதனையில் துடிக்கின்றன. அவர்களது எதிர்கால வாழ்வு இருண்டு போகிறது.அவர்களிப்பற்றி கொஞ்சமாவது சிந்திக்கிறோமா நாம் , எதற்கடுத்தாலும் அவசரம் எங்கும் அவசரம் எதிலும் அவசரம் ஒரு சிறு இடைவெளி கிடைத்தாலும் புகுந்து வெளியே வர அவசரம், நாம் இல்லாது போனால் நம் குடும்பத்திற்கு யார் துணை என எண்ணிப்பார்த்தால் இப்படி கவனக்குறைவாக நடந்து கொள்வோமா??



    இந்த விஷயத்தில் போக்குவரத்து காவலர்களுக்கும் கொஞ்சம் பொறுப்பும் , வேலையில் கவனமும் தேவை சிக்னலை மீறும் வாகன ஓட்டிகளை இவர்கள் கண்டு கொள்ளுவதே இல்லை , நேற்று தி.நகரில் இருந்து திரும்பிக்கொண்டு இருந்த  நான் எனக்கான சிக்னல் விழுந்ததும் என் வண்டியை செலுத்திய வேளையிலே எதிர்புறத்தில் இருந்து வந்த ஒரு பைக் என்னை மின்னலென கடந்து சென்றது , நான் கொஞ்ச வேகமாக எடுத்திருந்தாலோ  இல்லை அவன் சற்றுமெதுவாக வந்திருந்தாலோ ஒரு விபத்து நடந்திருக்கும் என்பது நிச்சயம், அவனின் அஜாக்கரதைக்கு அவன் விழட்டும் சாலை விதிகளை பின்பற்றும் நான் ஏன் பாதிக்க படவேண்டும்.இதை தேமே என்று பார்த்து கொண்டிருந்த அந்த போக்குவரத்து காவலரை என்ன செய்வது, தவறு செய்தால் தண்டிக்க படுவோம் என்ற எண்ணம் எந்த வாகன ஓட்டிகளுக்குமே இல்லை, அப்படியே அவர்கள் பிடிப்பட்டாலும் ஐம்பதோ  நூறோ கொடுத்து சரிக்கட்டிவிடலாம் என்ற எண்ணம் தான் அவர்களை இப்படி பொறுப்பின்றி செயல்படச் செய்கிறது, அந்த பணம் அவர்களுக்கோ அல்லது ஏதோ ஒரு அப்பாவிக்கோ போடும் வாய்க்கரிசி என்பதை அவர்கள் உணர்ந்தால் தான் மாற்றம் வரும்.

        இது ஒருமாதிரியான கொடுமை என்றால் நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்கள் இன்னும் மோசமானது, அதுவும் இரவு நேரப்பயணம் மிகவும் ஆபத்தானது , முன்னே செல்லும் வாகனம் கண்களுக்கு தெரியவேண்டி, எரிய விடவேண்டிய சிவப்பு விளக்குகள் எந்த லாரியிலுமே எரிவதில்லை , சில பஸ்களிலும் இருப்பதில்லை இதையெல்லாம் எந்த போக்குவரத்து காவலரும் கவனிப்பது இல்லை , நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாரும் பணமே கண்ணாக இருப்பதால் இது மாதிரியான கொடுமைகள் நிகழ்கின்றன , அதுவும் சாலை திருப்பங்களில் நிறுத்தப்படும் லாரிகளால் தான் மிக அதிகமான விபத்துகள் நடக்கின்றன.



இதற்கல்லாம் என்ன தீர்வு என்பது நாம் அறியாத தெரியாத விஷயம் எல்லாம் அல்ல , தனி மனித ஒழுக்கமும் , மற்றவர்களின் உயிரின்மீதும் உடமையின்மீதும் இருக்க வேண்டிய மதிப்பும் மிக அவசியம்.நம்முடைய பொறுப்பற்ற செயலாலும் நமக்கும் மற்றவருக்கும் ஏற்ப்படும் இழப்பை என்ன செய்தாலும் திருப்பி தர முடியாது என்பதை மக்களாகிய நாம் அனைவரும் உணரவேண்டும், அரசாங்கமும் அதன் பொறுப்பை உணர்ந்து சட்ட திட்டங்களை சீர்ப்படுத்தி கடுமையான தண்டனைகளை உறுதிப்படுத்தினால் இது மாதிரியான தேவை இல்லாத இழப்புகளை தடுக்கலாம், இது போன்ற சாலை விபத்தில் தன அமைச்சரவை சகாவையே இழந்த நம் முதல்வர் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம் , அதே போல் நாம் நல்ல முறையில் வாகனத்தை ஓட்டினால் மட்டும் போதாது எதிரே , அருகே வருபவரும் எப்படி ஓட்டுகிறார் என்பதை பார்த்து யூகித்து வாகனத்தை செலுத்தி சாலை விபத்துக்களை தடுக்கவேண்டும் என உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்



     இந்த ஒரு படமே சாலை விபத்தின் கோரத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லும் , ஆயிரம் வார்த்தைகள் சாதிக்காததை ஒரு படம் கொண்டு சேர்க்கும் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப இதை இணைத்துள்ளேன். இதை படித்த ஒருவராவது இனி நமக்கும் நம்மால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராதவாறு வாகனம் ஓட்டுவேன் என முடிவு செய்தீர்களேயானால் அதுவே இந்த பதிவின் வெற்றி
நன்றி

No comments:

Post a Comment