Friday, 17 June 2011

சமூகத்துக்குத் தேவைப்படும் பாலியல் பகுத்தறிவைப் பெற ஒரு கால் போதும் !

என்ன தான் இந்தியா பழம் பெரும் நாடு, புத்திஜீவிகள் பலர் வாழ்ந்த நாடு என பீற்றிக் கொண்டாலும். பலநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த பகுத்தறிவுத் தனங்கள் கூட பிற்கால சமய எழுச்சிக் காலங்களுக்குப் பின் இல்லாமல் போனதே எதார்த்தம். குறிப்பாக இன்றையக் காலக் கட்டத்தில் பழைமையின் நன்மைகளையும், புதுமையின் நன்மைகளையும் உள்வாங்கி முன்னகரும் சமூகமாக நாம் இல்லாமல் இருக்கின்றோம். மாறாக பழைமையின் தீமைகளைத் தக்க வைத்துக் கொள்வதிலும், புதுமையின் தீமைகளையும் அயலகங்களில் இருந்து வாறி எடுத்து குழப்பமடைந்த சமூகமாக மாறிவருகின்றது. காரணம் சீரற்ற அரசுகளின் ஆட்சியில் இருப்பதாலே தான். அரசு என்பது வெறும் அரசு இயந்திரங்களை நடத்துவதற்கும், வரிகளை வசூலித்து சுவிஸ் வங்கிகளில் போடுவதற்கும் அல்ல. இது மக்களின் வாழ்வையும் சீராக மாற்றியமைக்க முனையவேண்டும். அதில் இந்தியா இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது.

இன்று சமூகத்தில் பாலியல் அறிவு என்பது மக்களில் பெரும்பாலானோருக்கு சுத்தமாக இல்லவே இல்லை எனலாம். பாலியல் அறிவு மட்டும் வந்துவிட்டால் போதாது, பாலியல் ஒழுக்கத்தையும், பாலியல் வரைவுகளையும் சீராகப் போதிக்கப்படல் வேண்டும். பாலியல் பகுத்தறிவு என்பது ஆணுறை விளம்பரங்களோடு நின்றுவிட்டன.

இருப்பினும் அரசு சிறிய முயற்சியாக ஜன்சாங்கிய ஸ்திரத கோஸ் என்றப் பெயரில் பாலியல் நலன், குடும்ப நலன், இனப்பெருக்கம் மற்றும் சிசுக்கள் நலன் தொடர்பாக ஒரு இலவச தொலைப்பேசி முனையத்தை நிறுவி உள்ளது. இந்த கால்-செண்டருக்கு அழைத்து குடும்ப மற்றும் பாலியல் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள உதவி செய்கின்றார்கள். குறிப்பாக பதின்ம வயதில் இருப்போர், திருமணமானோர், திருமணமாகவிருப்போர் என அனைவருக்குமான ஒரு தகவல் மையம் இதுவாகும்.

அதற்கான தொலைப்பேசி இணைப்பு : 1800-11-6555 ( TOLL FREE )

இந்த நிலையத்தில் பணியாற்றுவோர் அனைவரும் தொழில்ரீதியாக நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். புது தில்லியின் சென். ஸ்டீபன் மருத்துவமனை மருத்துவர்களின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டோரே இந்த கால் -செண்டரில் பணியாற்றுகின்றார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் கணனியின் பல்வேறுப்பட்ட தகவல்களையும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளதால் உங்களின் பாலியல் சந்தேகங்கள் பலவற்றையும் இது தீர்க்கவல்லது.

பொதுவாக பாலியல் விடயங்களை குடும்பத்தாரோடும், நண்பர்களோடும் பல நேரங்களில் பேசுவது இல்லை. அப்படி பேசினாலும் அவர்களுக்கும் போதிய அறிவு இருப்பதில்லை. பல சமயங்களில் மரபுசார் நம்பிக்கைகளை பல பழமைவாதிகள் போதிய அறிவியல் ஆதாரங்கள் இன்றியும், பல நேரங்களில் திரித்தும் தவறான தகவல்களை தந்துவிடுவது உண்டு. அதனால் மக்களுக்கு சரியான பாலியல் அறிவினையூட்ட இந்த கால் செண்டர் இயங்கி வருகின்றது. இது பல கிராமப்புற மற்றும் நகரவாசிகளுக்கும் கூட பயன்படும். உங்களின் தனிப்பட்ட விவரங்கள் எதனையும் அவர்கள் கோருவதில்லை. நீங்கள் உரையாடுவது அனைத்தும் பத்திரமாக பாதுக்காக்கப்படும் என்பதால் அச்சமில்லாமல் உங்களின் கேள்விகளை அவர்களிடம் எடுத்து வைக்கலாம். அனைத்து இந்திய அங்கீகாரிக்கப்பட்ட மொழிகளிலும் தகவல்கள் கிடைக்கும்.

இந்த கால் -செண்டரின் ஒரே பின்னடைவு, சில சமயங்களில் காத்திருப்பு நேரம் அதிகமாக இருக்கின்றது. ஆரம்ப நிலையில் இருப்பதால் மேன்மேலும் இந்த சேவையை அரசு விரிவுப் படுத்த வேண்டும்.

குறிப்பாக அண்மையக் காலங்களில் வளரும் மக்கள் தொகையின் காரணமாக ஏகப்பட்ட பாலியல் குற்றங்கள், பாலியல் பிரச்சனைகள் எழுந்துவருகின்றன. குறிப்பாக பெண்கள் வீதம் வீழ்ச்சியடைந்த மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுகள் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் இத்தகவல்களை உங்களது உற்றார், உறவினர் எனப் பலரிடமும் பகிர்ந்துக் கொள்வதால் பாலியல் பகுத்தறிவினைப் பெறுவதற்கான முதல் படியை அனைவரும் தொடலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment