Saturday, 30 July 2011

விளையாட்டை அரசியலாக்கும் கேவலம்...... ஒரு விழிப்புணர்வு பார்வை....!



எழுதியவர் கூர்மதியன் 

அரசியலை விளையாட்டாய் ஆடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு விளையாட்டை அரசியலாய் மாற்றுவது எம்மாத்திரமாய் ஆகி விடப் போகிறது. 100 கோடிக்கும் மேல் மக்கள் வளம் கொண்ட ஒரு தேசத்தில் ஒலிம்பிக் விளையாட்டில் எத்தனை தங்கப் பதக்கங்கள் நம்மால் பெறப்படுகிறது? விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அதற்கேற்ற வசதிகளைச் செய்து கொடுக்காத அரசும், பணம் ஈட்டும் வழிகளில் மட்டும் கவனத்தை செலுத்தும் ஸ்பான்ஸர்களாலும், மிகைப்பட்ட பேர்கள் பொதுப்புத்தியில் ஊறிப் போன விளையாட்டாய் தலைமுறையாய் பார்த்து ரசிக்கா விட்டால் எங்கே தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்று நாகரீகத்துக்காக விளையாட்டினை பார்க்கும், பேசும் எம் இளையர்களும் இருக்கும் வரை எல்லா விதமான விளையாட்டுக்களும் எங்கணம் வளரும்.

கிரிக்கெட் என்னும் அசுரனால நிறைய லாபம் பார்த்த இந்திய வியாபரிகள் அதைக் கட்டிக் கொண்டு அழுவதின் விளைவு மற்ற விளையாட்டுக்களை நசுக்கித்தான் விட்டது என்று கோபப் பார்வை பார்க்கும் இந்தக் கட்டுரை சற்றே உங்கள் புருவங்களை உயர்த்தி விழிப்புணர்வு பார்வை கொள்க என்ற வேண்டு கோளையும் வைக்கிறது.

விளையாட்டு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதார வகையிலும் பெருமைபடுத்தும் வகையிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. எது எடுத்தாலும் மூக்கை நுழைக்கும் அரசியல்வாதிகள் இந்த விளையாட்டு துறையையும் விட்டுவைப்பதில்லை. இது நாம் எல்லோரும் அறிந்ததே.!




கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நம் நாட்டில் இதுவரை வேறு எந்த விளையாட்டுக்கும் கொடுத்ததில்லை. விடுமுறை நாட்கள் என்று வந்துவிட்டால் கையில் மட்டையை தூக்கிகொண்டு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கிரிக்கெட் விளையாட ஓடிவிடுவர். இதனால் பல கிரிக்கெட் ரசிகர்களும், கிரிக்கெட்டை சார்ந்த அரசியல்வாதிகளும் கிரிக்கெட்டை நமது தேசிய விளையாட்டாக மாற்ற முற்பட்டனர்.




இதுதான் ஒரு அரசியல்வாதியின் பாங்கா.!? இப்படிதான் நடந்துகொள்வதா.!? தூங்கிகொண்டிருப்பவனை உயர்த்துவது சிறப்பா அல்லது உயரத்தில் இருப்பவனை தூக்கி தலையில் வைத்து ஆடுவது என்பது சிறப்பா.!?




கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக மாற்ற வேண்டும் என்று பேச்சு நடந்த போது பிரபல ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை அவர்களை சந்தித்தேன்.‘’ஹாக்கியில் சாதிக்கவில்லை என்று சொல்லும் அரசு எங்களுக்கு சரியான ஊக்கத்தை தர மறந்திருப்பது தெரியாதா!? சாதாரண போட்டிக்காக கிரிக்கெட் வீரர்கள் சவேரா ஹோட்டலில் தங்கும் அதே நேரம் ஜன்னல் ஓரத்தில் சாக்கடைகள் ஓடும் மின் விசிறி கூட அற்ற ஒரு அரசாங்க பள்ளிகூடத்தில் கொசுக்கடியில் ஆசிய கோப்பைக்காக தங்கியிருந்தோம் நாங்கள். இது மனதளவில் ஒரு விளையாட்டு வீரனை பாதிக்காதா.!?’’ என்றார்.




உண்மைதானே.! ஒரு விளையாட்டில் முழுமையான ஈடுபாடு இல்லாமல் ஒரு வீரனால் எப்படி சாதிக்க முடியும்.!? அந்த ஈடுபாடை சீர்குலைக்கும்படி நடப்பது ஒரு அரசுக்கு சிறப்பா!?


பரப்பளவில் நம் தமிழகத்தின் அளவு கூட வரமுடியாத எத்தனையோ நாடுகள் ஒலிம்பிக்கில் சாதிக்கும் போது ஒற்றை தங்க பதக்கத்தை வைத்துகொண்டு உளமாற மகிழ்வது போல நடிப்பது தான் நாம் தேடுகின்ற பெருமையா.!?




எத்தனையோ திறமை வாய்ந்த வீரர்கள் ஸ்பான்சர்கள் இல்லாமலும், சிறப்பான வழிகாட்டுதல் இல்லாததாலும் எங்கோ ஒரு மூலையில் ஓய்ந்து சராசரி மனிதனாக மாறிவிடுகின்றனர்.




எனது பள்ளி பருவத்திலே நான் ஹாக்கி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு என் பள்ளி ஹாக்கி அணியில் சேர்ந்தேன். சோனல், டிஸ்ட்ரிக்ட், டிவிசன் என எல்லாத்திலும் ஜெயித்து முத்திரை பதித்தது எங்கள் அணி. எங்கள் பள்ளியின் கிரிக்கெட் அணி சோனலின் பைனலில் தோற்றது. அவர்கள் படத்தை பெரிதாக போட்டு எங்கள் பள்ளி இதழில் ‘ரன்னர்ஸ் அப்’ என்று போட்டது மட்டுமல்லாது தினமணியில் படத்தோடு செய்தியும் வந்தது. இந்த இரண்டு அங்கீகாரமும் எங்கள் உழைப்புக்கு இல்லாமல் போனது. எங்கள் அணியில் இருந்த திறமையான வீரர்கள் பலரும் இப்போது மாற்றுத் துறையில் இருக்கின்றனர்.




இதுபோன்று தான் ஒவ்வொரு வீரனும் மழுகடிக்கப்படுகிறான். இரண்டு வருடம் முன்பு படித்த ஒரு செய்தியில் பள்ளி விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க விடாததால் மாணவன் தற்கொலை செய்துகொண்டான் என்று இருந்தது. அதற்கு காரணம் என்ன என்று விசாரித்த போது மாணவன் தேர்வில் சரியான மதிப்பெண் பெறாததால் விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க தடை விதிக்கப்பட்டதாக சொன்னர். என்ன இது.!? ஒழுங்காக படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் அங்கீகாரம் தருவேன் என்று பள்ளிகள் இருப்பது சரியா.!?




பெரிதாக சாதிக்கும் மனிதரை தான் ஏத்துவோம்.! பெரிதாக சாதிக்கப்படும் விளையாட்டில் தான் கவனம் செலுத்துவோம் என்று மக்கள் அடம்பிடிப்பது சரியா.!? அப்படி இருந்தால் நம் ‘கபடி’ என்ன ஆனது. கபடி உலக கோப்பை தொடங்கிய முதல் இன்று வரை மூன்று முறை நாம் தானே கபடி சாம்பியன்ஸ். 1990ல் இருந்து இன்று வரை நாம் தானே ஆசிய சாம்பியன்ஸ். 1985லிருந்து(1993 தவிர்த்து) இன்று வரை நாம் தானே தெற்கு ஆசிய சாம்பியன். இதுவரை பங்கெடுத்த பெரிய போட்டிகளில் இந்தியா ஒரே ஒரு முறை தான் தோற்றிருக்கிறது. மத்தபடி 1985முதல் நாம் தான் கபடியில் முத்திரை பதிக்கிறோம். IPL என்று பணம் பறக்கும் போட்டி நாம் அறிவோம். KPL-அதாவது கபடி ப்ரமியர் லீக் என்று ஒன்று சமீபத்தில் ஜூன் 8 முதல் 16 வரை நடந்ததை யாராவது அறிவீர்களா.!? அசைக்க முடியாத வலிமையான அணி கபடியில் இந்தியா. அதன் வீரர்கள் இன்றும் வாடகை வீட்டில் தான் இருக்கின்றனர்.




சமீபத்தில் இருங்காட்டுக்கோட்டையில் நடந்த ஒரு ரேஸ் நிகழ்ச்சியில் பிரபல பைக் ரேஸர் ரஜினியை சந்தித்தேன். அவர், ‘‘ நான் ஒரு சாதாரண மெக்கானிக். எனக்கு ரேஸில் கலந்துகொள்ள ஸ்பான்சர் கிடைக்க படாத பாடு பட்டேன். கிரிக்கெட் என்றால் ஓடும் பலர் ரேஸ் என்றால் வரவே மறுக்கின்றனர். அதுவும் தப்பி தவறி வரும் ஸ்பான்சர்களும் கார் பக்கமே போகின்றனர். பைக் ரேஸ் என்பதற்கு ஸ்பான்சர் கிடைப்பதற்குள் இறந்து மறுபிறவி எடுக்கவேண்டும்’’ என்றார். பணத்திற்காக ஸ்பான்சரிங் இல்லாமல் ஊக்குவிக்க ஸ்பான்சர் செய்யும் யாராவது ஒருவர் இங்கு இருக்கின்றனரா.!? இல்லை.




சமீபத்தில் பதிவுலகின் நண்பர் ஒருவர் கூறுகையில், ‘‘ எங்கள் கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு அமைப்பு தொடங்க போறோம். அதன் மூலம் ஸ்பான்சர் இல்லாது தவிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு உதவ போகிறோம்’’ என்றார்.




ஆம்..!! நாம் மற்றவர்களை குறை சொல்லும் நேரத்தில் இது போன்ற செய்கைகளில் ஈடுபட்டால் என்ன.!? அவர்களும் திருந்தமாட்டார்கள் நாமும் குறை சொல்வதை விடமாட்டோம் என்று இருந்தால் இனி நாம் குறைகளை மட்டுமே அடுக்கிகொண்டு போகவேண்டியது தான்.

அனைத்தையும் ரசிப்போம்.! அனைவரையும் ஊக்குவிப்போம்.!

No comments:

Post a Comment