Tuesday, 19 July 2011

பயங்கரவாதிகளை உருவாக்குவோம்.....

இந்த உலகத்தின்  எந்த மூலையில்  பிறந்தவனும் அமைதியான   வாழ்க்கையே விரும்புவான்.  அடிப்படை சுதந்திரம்  மறுக்கப்பட்ட போதும்  அவன் அவ்வளவு சீக்கிரம்  வன்முறையின் பக்கம் நாடமாட்டான்.  அதையும் மீறி அவன் வன்முறையின்  பக்கம் செல்ல  என்னை பொறுத்த  வரை  இரண்டு காரணங்களை சொல்வேன் .

ஒன்று அவன்   மனநோயாளியாக   இருக்கவேண்டும், 
இரண்டு  அவனை வன்முறைக்கு தள்ளிய புறச்சூழல் காரணிகள்.

இதில் முதலாவதை  விடுவோம். உற்று நோக்கினால் அது மிக குறைந்த  பகுதி தான்.  ஆனால் இரண்டாவதை    உருவாக்குவதில்  பெரும் பங்கு வகிப்பது  அதிகார வர்க்கம் தான் என்பது மறுப்பதற்கில்லை.   எந்த ஒரு  வன்முறையாளனையும்  எடுத்துக்கொள்ளுங்கள் அவனை உருவாக்கியதற்கு பின்னால் எதோ ஒரு அதிகார வர்க்கம், அவர்களால் முடக்கப்பட்ட   நாட்டின் சட்டங்கள், மறுக்கப்பட்ட நீதி  போன்றவை  தான் பின்னணியாக  இருக்கும்.

இதில்  முக்கிய   பங்கு ஒரு நாட்டின் இராணும் போலீஸ் துறையை சாரும். அமெரிக்காவில் இருந்து  இலங்கை வரை யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது கணக்காய்  வேலியே (!) பயிரை  மேயும் சம்பவங்கள் நடந்துள்ளன /நடந்துகொண்டுள்ளன.



வாதாம் கொட்டை  பறிப்பதற்காக  இராணுவ விடுதிக்குள்  நுழைந்த பதின்மூன்றே வயசான சிறுவனை  இரக்கம்  சிறிதும்  இன்றி ஒரு இராணுவ அதிகாரி (நாட்டையும், மக்களையும் காப்பாற்றுபவர்களாம்)  குடி போதையில்(!) சுட்டு கொன்றுள்ளார்.  சரி, வெறியிலே  புத்தி பேதலிச்சு  சுட்டுவிட்டான் என்று வைப்போம்; ஆனால்  சுடப்பட்டு அந்த சிறுவன்  குற்றுயிராக கிடந்த போது அங்கே  நின்ற  ஏனைய இராணுவத்தினர் என்ன செய்திருக்க வேண்டும்...?

உயிருக்கு  போராடியவனை  உடனடியாக வைத்தியசாலை  கொண்டு செல்லும் நடவடிக்கையை கூட எடுக்காது,   எதோ "தெருநாயை சுட்ட  பின் ஈ எறும்பு மொய்க்குமே"  என்பது போல இலைகளாலே மூடி விட்டுள்ளார்கள்.

இது  கடந்த  ஞாற்று கிழமை  நடந்தது.  இன்னமும்  குற்றவாளி கைது செய்து நீதிமன்றத்திலே  நிறுத்தவில்லை.  இதுவே  ஒரு அரசியல்வாதியின் மகனுக்கோ  இல்லை அதிகாரங்களை சட்டை பையில்  கொண்டலைபவனின் மகனுக்கோ நடந்திருந்தால்  அரைமணி  நேரத்தில் குற்றம் செய்தவன் கைதுசெய்யப்பட்டு  இருப்பான்.   ஆனால் பாதிக்கப்பட்டது ......?,   எதோ அறுபதடி கிணற்றில் தூண்டில் போட்டு  மீன்  பிடிப்பது  போல  ஐந்து  நாட்களாக குற்றவாளியை தேடுகிறார்களாம்.   சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு "நியாயமான  தண்டனை"  வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே!

இன்று முகநூலில் ஒரு சிலர்  இந்த செயலை நியாயப்படுத்துகிறார்கள். காரணம் அந்த சிறுவன்  குண்டு  வைக்க வந்திருப்பான்  என்று நினைத்து  இராணுவ வீரன் சுட்டது தவறில்லையாம்.  என்ன கொடுமை! , அப்படியெனில் மும்பையில் குண்டுவைத்து அப்பாவி  மக்களை  கொன்ற கசாப்பை  எதற்காக ராஜ மரியாதையோடு உள்ளே வைத்திருக்கிறார்கள்.  அவனையும் சுட்டுத் தள்ள வேண்டியது தானே.   இவர்கள் கதைப்பார்கள், காரணம் செத்தது  இவர்கள் பிள்ளையோ, உறவவோ  இல்லையே !  

இனி அந்த  மகனை  பெற்ற  தாய்க்கோ, குடும்பத்துக்கோ, சுற்றி உள்ளவர்களுக்கோ  இராணுவம்  என்றால் ஒரு காழ்புணர்ச்சி, குரோதம்  சாகும் வரை  தொடர்ந்து  இருக்க தான் செய்யும்.  இப்படியானவர்கள்  நாளை  நீதி கிடைக்காத போது  வன்முறையின் பக்கம் நாடினால் அதற்கு யார் பொறுப்பு!   இவ்வாறு  இவர்களே  ஒருவன்  வன்முறையாளனாக உருவாக காரணமாக இருந்துவிட்டு,  நாளை  அவனுக்கு "பயங்கரவாதி" என்று பெயரும் கொடுத்து  துப்பாக்கிகள்  சகிதம்  துரத்துவார்கள்.

"நாட்டை காக்க தன் உயிரையே பணயம்  வைக்கும்  இராணுவம்/பொலிஸ் துறை"  என்பது எவ்வளவு  புனிதமான தொழில்/கடமை.  நாட்டின் பாதுகாப்பிற்காக இல்லற வாழ்க்கை துறந்து  தன்னுயிரை கொடுத்த தன்னலமற்ற வீரர்கள் எத்தனை எத்தனை.  ஆனால் ஒரு சிலரால் /கூட்டத்தால்    நாட்டுக்கே  அவமானம் தேடித்தரவும்  இவர்களால்  மட்டுமே  முடியும். 


இது முதலாவது சம்பவம் இல்லை.  இதை போல இதற்கு முன்னரும்  பல சம்பவங்கள் நடந்துள்ளது;  இனியும்  நடக்காது  என்பதற்கு  எந்த வித உத்தரவாதமும்  இல்லை.  இந்த  உலகிலே மோசமான  இராணுவம்  என்றால் என் அனுபவத்தில்  இலங்கை  இராணும் என்று  தான் கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன்.   ஆனால்  இதே  கேள்வியை 87 களில்  ஈழத்தில்  இந்திய   இராணுவத்தின்  கட்டுப்பாட்டில்  வாழ்ந்த  தமிழ் மக்களை   கேட்டு பாருங்கள் ...!

No comments:

Post a Comment