நன்றி தமிழ்ச்சுவை
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இராது என்கிறது ஆங்கிலப் பழமொழி. ஒரு காலத்தில் வேண்டுமானால் இந்தப் பழமொழி உண்மையாக இருக்கலாம். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு.
ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமே. கொலெட்ரோலைக் குறைப்பதற்கும் சரும நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் அது அரிய பங்காற்றுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையான நல்ல பழம்.
அதுவும் ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப் பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடுதான் சாப்பிட வேண்டும் என்று கூறுவர். ஏனெனில் பெக்டின் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு உதவுகிறது. ஆனால் இப்பொழுது சந்தையில் விற்கப்படும் ஆப்பிளைத் தோலோடு சாப்பிடுவது சாத்தியமில்லை.
நீங்கள் ஆப்பிள் பிரியர் என்றால் ஆப்பிளை வாங்குவதற்கு முன்பதாக அது பளபளவென்று இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். ஆப்பிளின் தோல் பளபளவென்று இருந்தால் அதன் மேல் பாகத்தில் மெழுகு பூசப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
நம் நாட்டில் ஆப்பிள் விளைவதில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிலி, நியூசீலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் ஆகிய ஆப்பிள் வகைகளை இறக்குமதி செய்கிறார்கள்.
அவை நம் நாட்டை வந்தடைய சுமார் 3 மாதங்களாவது பிடிக்கும். அவற்றின் நிறம், சுவை கெடாமல் இருக்கவும் பூச்சிகள் நுழைந்துவிடாமல் தடுக்கவும், நீர்ச்சத்து வெளியேறாமல் இருக்கவும், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும் பொருட்டும் அதன் மேல் மெழுகு தடவி இறக்குமதி செய்கிறார்கள். சாதாரண பழம் 10 நாட்களில் கெட்டுப்போகும் என்றால் மெழுகு பூசப்பட்ட பழம் 6 மாதம் வரை கெடாது.
ஆரம்ப காலங்களில் பீஸ் மெழுகு, கார்னோபா மெழுகு, ஷெல்லாக் மெழுகு ஆகிய மூன்று வகைகளை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் இதனை ஒரு ஆப்பிளின் மேல் 3 மில்லிகிராம் அளவே தெளிக்க வேண்டும். "பீஸ் மெழுகு" என்பது தேனடையில் கிடைக்கும் மெழுகு. கார்னோபா, ஷெல்லாக் ஆகியவை மரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை மெழுகுகள்.
இவற்றால் ஆபத்துக்கள் குறைவு. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் இரசாயன மெழுகையும் தண்ணீரில் கரையும் பேரா·பின் மெழுகையும் பயன்படுத்துகிறார்கள். நைட்ரேட் சேர்க்கப்படும் பழங்களில் "நைட்ரைஸோ மார்போலின்" என்னும் ஒரு இரசாயனம் உருவாகிறது. இது புற்றுநோய்க்கான முக்கிய காரணி ஆகும்.
நீங்கள் வாங்கிய ஆப்பிளை படத்தில் உள்ளதைப் போன்று கத்தியை வைத்துச் சுரண்டவும். அதில் மெழுகுத் துகள் வெளியேறினால் அது மெழுகு பூசப்பட்ட பழமாகும்.
நீங்கள் ஆப்பிளை எப்படிக் கழுவினாலும் அதிலுள்ள மெழுகு போகாது.
பெரும்பாலும் குழந்தைகள் ஆப்பிளை அப்படியே கடித்துச் சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கு ஆபத்தாக முடியும். மெழுகு பூசிய ஆப்பிளைச் சாப்பிடும்பொழுது அந்த மெழுகு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் படிந்துவிடும். இதனால் குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, வாயுத்தொந்தரவு, புற்றுநோய் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகம்.
ஆகையால் நீங்கள் ஆப்பிள் பிரியராக இருந்தால் தோலை சீவிவிட்டு பழத்தை மட்டும் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
No comments:
Post a Comment