Saturday 7 April 2012

மூலிகை முதலுதவிகள்


’முதலுதவி செய்ய மூலிகை அறிவு’ என்பது அன்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், குறிப்பாய் குடும்பத்தலைவிக்கு நிச்சயம் உண்டு. தொழிற்புரட்சி காலத்திற்கு பின் இங்கிலீஷ் மருத்துவம் வேகவேகமாக உலகெங்கும் காலூன்றிய போது, நாட்டு மருத்துவம் முழுமையும் நசுங்கி விடாமல் காப்பாற்றப்பட்டதிற்கு பாட்டி வைத்தியமாய் அது வீட்டில் பெண்களால் பாதுகாக்கப்பட்டதும் முக்கிய காரணம். மூலிகை என்றதும் பலரும் நினைப்பது, ’ஏதோ ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி எடுக்கும் விஷயம்’ என்று. நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும்,
அருகாமை நிலத்திலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமல், ’சைரன் இல்லாத 108 வேன்’ மாதிரி பல மூலிகைகள் முதலுதவி செய்ய காத்திருக்கின்றன.

விருப்பமான உணவு தயாரிக்கும் வித்தை மாதிரி, முதலுதவிக்கு வீட்டில் இருந்தே கைமருந்தாய் கொடுக்கும் வித்தையும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய் தெரிந்திருக்க வேண்டும். ‘ஐய்ய்யோ! கைமருந்தா!?’ அது ஆபத்தாச்சே என்ற மேல்தட்டு மனோபாவம் மாற வேண்டும். எது அவசரம்? எது ஆரம்பம்? எது சின்ன சிரமம்? என்ற அடிப்படை அறிவு வீட்டில் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருப்பது அவசியம்.

நல்ல உருளைக்கிழுங்கு போண்டாவும் மொச்சைப்பயறும் சாப்பிட்டுவிட்டு கனவிலும் பைக்கில் மட்டுமே வாக்கிங் போகும் நபருக்கு, “கேஸ் போக மாட்டேங்குது: வயிரு உப்புசமாயிருக்கு; மார் வலிக்கிறது- பகவான் கூப்பிடரார்-னு நினைக்கிறேன். எனக்கு ஒருதடவை கடைசிப்புள்ள சுரேஷைப் பார்க்கணும்; புறப்பட்டு வரச் சொல்றியா?”ன்னு கேட்க, டாக்டருக்கும் விளி மானிலப் புள்ளைக்கும் போன்க்ள் பறக்கும். தடாலடியாய் ராவோடு ராவா பஸ்-டிரய்ன் பிடிச்சு அவர் வர, அவர் வந்து சேர்வதற்குள் , நட்சத்திர மருத்துவமனையில் வேகவேகமாக எல்லா ’டெஸ்டிங் சன்னதி’யிலும் சேவிச்சிட்டு கடைசியில், மூலஸ்தானத்து பெரிய டாக்டர் கடவுள், ” யு.ஆர்.லக்கி! ஒண்ணுமில்லே! இந்த மாத்திரைய சாப்பிடுங்க..ன்னு சின்னதாய் ஒரு மாத்திரை பிரசாதத்தையும், பெரிசாய் ஒரு பில்லையும் புன்னகையுடன் தந்து செல்வார்.
”நான் படிச்சு படிச்சு சொன்னேன்; இந்த போண்டா போளீ எல்லாம் வேண்டாம் வேண்டாம்-னு கேட்கிறாரா மனுசன் ?” என வீட்டம்மா அங்கலாய்க்க, ”ஏண்டி! அப்ப எனக்கு ஒன்றுமில்லே-ன்னு சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கா?”-ன்னு அவர் புலம்பும் வேளையில், கசங்கிப்போய் கடைசிப்பிள்ளை வாசலில் வந்து நிற்பார். ஒரு அவுன்ஸ் ஓம வாட்டரோ, ஒரு கிளாஸ் பெருங்காயம் கலந்த மோரோ அல்லது ஒரு ஸ்பூன் அன்னப் பொடியோ செய்து தரத் தெரியாத படித்த அறிவாளி நாகரீக குடும்பத்தில் இப்படித்தான் முதலுதவிகள் ரொம்ப காஸ்ட்லி! கைப்பக்குவமாய் முதல் உதவி செய்ய உதவும் மூலிகைகள் சில குறித்து பார்க்கலாமா?

ஆடாதொடை- எந்த உரமும் போடாமல்,எந்த பராமரிப்பும் தேவையில்லாமல் அழகாய் வளரக் கூடிய இந்த செடியின் இலைகள் சளி இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து. கொடிய கசப்புள்ள இந்த செடியின் சாறு தேன் சேர்த்து ஒரு சிரப் மாதிரி செய்து வைத்து கொடுக்க, குழந்தை பெரியவர்களுக்கு வரும் கொடிய இருமலுக்கு சளி வர தயங்கும் நீடித்த இருமலுக்கு அற்புதமான மருந்து! வளர்க்க இடமில்லாதவர்கள், இலையின் உலர்ந்த பொடியை கசாயமாக்கிப் பயன்படுத்தலாம்.

அதிமதுரம் - இனிப்பு சுவையுள்ள இந்த மூலிகை வேர் வறட்டு இருமல், வயிற்று வலி போக்கும் மருந்து. சிறு துண்டை நாவினுள் அடக்கிக் கொண்டு சாறை முழுங்குவது போதும்.

திப்பிலி – சளியுடன் வீசிங் வரும் சமயம், மருந்துகளுக்கு முன்னர் திப்பிலி கசாயமோ அல்லது அதன் வறுத்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுவது ’வீசிங்கை’ குறைக்கும். சளியை எளிதாகப் போக்க உதவும்.

ஓமம் – வயிறு செரிக்காமல், கொஞ்சம் உப்புசமோ அல்லது செர்யாது வயிற்றுப்போக்கோ இருந்தால் ஓமத்தை வறுத்து கசாயமாக்கி சாப்பிடலாம். ஓமவாட்டர் வீட்டில் வைத்திருந்து அதில் 10மிலி அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கலந்து ½ டம்ளர் குடிக்கச் சொல்லலாம்.
சீரகம்- லேசான கிறுகிறுப்பு அதிக பித்தம் மாதிரி இருப்பின் சீரகத்தூளை கரும்புச்சாறிலோ அல்லது வெந்நீரிலோ சாப்பிட குறையும்.

வாய்விடங்கம்- வாயுப்பிடிப்புடன் முதுகு-குறுக்கு வலியிருப்பின் வாய்விடங்கம், சுக்கு மிளகு சேர்த்து கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு மதிய வேளையில் மோரில் பெருங்காய தூள் போட்டு சாப்பிட தீரும்.

கடுக்காய்- விதையை நீக்கிய கடுக்காயை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு மலச்சிக்கல் இருந்தால் இரவுதோறும் 1 ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட மலம் எளிதில் கழியும்.

கற்றாழை – குமரி எனும் கற்றாழை பெண்களுக்கு மாதவிடாய் காலத்துவரும்வலிக்கு அருமையான முதல் உதவி. கற்றாழையின் உள் உள்ள சோறில் பூண்டு வெந்தயம் பனைவெல்லம் சேர்த்து லேகியமாக/களீயாக கிளறி எடுத்து தினசரி ஒரு சிரூ நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். உள் சோற்றை நன்கு கழுவி அப்படியேவும் 1ஸ்பூன் அளவு சாப்பிடலாம். கற்றாழை பெண்ணிற்கான முதல் மூலிகை!

சாதிக்காய்-தூக்கம் வராமல் சங்கடப்படுபவருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய் தூள் ½ சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.

இலவங்கப்பட்டை – பிரியாணியில் வாசம் தூக்க மட்டுமல்ல, இந்த பட்டையை தே நீரில் கொஞ்சம் போட்டு சாப்பிட மதுமேகம் கட்டுப்படும். உணவில் சிறிதளவு சேர்த்துவர குடற்புண்கள் ஆறும்.

இந்த பட்டியல் பெரிது..ஆனால் இந்த அறிவு மிக முக்கியமானது. பிட்சாவிற்கு மெக்ஸிகன் சில்லி போடவும் சல்சா சட்னி தொடவும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம், நம் பாரம்பரிய சொத்தை மறப்பதும் மறுப்பதும் மடமை. ஹெல்தி கிச்சன் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அந்த கிச்சனில் இந்த பொருட்களும் பொருள் குறித்த அறிவும் மிக அவசியம். எந்த மூலிகை எப்படி இருக்கும் என எனக்கு தெரியாதே என டபாய்க்க வேண்டாம். ’ஓட்ஸ்’ தெரியாத பாட்டியோ/பேத்தியோ இன்று கிடையாது. ஐந்து வருட்த்திற்கு முன் ’ஓட்ஸ்’-என்றால் எத்தனை பேருக்கு தெரிந்த்து? ஆனால் தினையோ கம்போ பற்றி பேசினால், ”இப்பல்லாம் அது கிடைக்கிறதா என்ன?”- என வியப்புடன் கேட்பார்கள். காரணம் ஓட்ஸ் வேக வேகமாக சந்தைப்படுத்தப்படுவது தான்.

அதிலுள்ள வணிக லாபங்கள் அவசர அவசரமாக அதன் நற்குணங்களை முதன்மைப்படுத்துகின்றன. நம்ம ஊர் கம்பும் தினையும் யதார்த்த சினிமாவின் கவிதை வரியில் மட்டும் ஒட்டிச் சிலாகிப்பதுடன் நின்று போகின்றன. ஆதலால் நாம் தான் இந்த மூலிகைகளை நலம் பயக்கும் சிறு தானியங்களை கூடுதல் அக்கறையுடன் தேடித் தெரிய வேண்டும். தெரிந்து பயன்படுத்த வேண்டும். அது நம்மையும், நம் விவசாயத்தையும் பாதுகாக்கும்!

No comments:

Post a Comment