”நீரின்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர். இந்த உலகின் அத்தனை சீவராசிகளுக்கும் அடிப்படை வாழ்வாதாரம் நீர். நீர் தான் முதல் தலையாய உணவும் கூட. உலகின் 70% இடத்தை ஆக்ரமித்திருக்கும் தண்ணீரை தவிர்த்து எந்த ஒரு செயல்பாட்டையும் கற்பனை செய்வது கூட கடினம். நம் உடலின் நலவாழ்வுக்கு மிக அடிப்படை தேவையும் சரியான அளவிலான தண்ணீர்தான். சராசரியாக 3-4 லிட்டர் தண்ணீர் ஒரு நல்ல உடலுக்கு அவசியம் தேவை. நம் உடல் எடை, உருவ அமைப்பு, தட்பவெப்பம், பணியிடம் பொறுத்து இந்த அளவு கொஞ்சம் மாறாலாம். நம் உடலின் நீரளவு 2% மேல் குறைய துவங்கினாலே மயக்கம் தலை சுற்றல் என பாதிப்பைத் தரும்.ஆதலால், அப்புறமாய் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம் என தாக உணர்வை தவிர்ப்பது, “அட! நான் எங்க இருக்கிறேன்? எல்லாரும் ஏன் என்னைச் சுற்றி இருக்கிறார்கள்? முகத்தில ஏன் தண்ணீர்?” என வசனம் பேசும் காட்சிக்கு
’எந்த தண்ணீர் உடலுக்கு நல்லது? என்ற அக்கறையில் துவங்கி, ’நான் பாட்டில்-வாட்டர்ல தான் முகம் கழுவி வாய் கொப்பளிப்பேன். வில்லேஜ் தண்ணீர் ஒத்துக்குமா? என்ற அதிகப்பிரசங்கி முன்ஜாக்கிரதைகள் வரை தண்ணீர் வீட்டிலும் நாட்டிலும் அரசியலுக்கும் அடித்தளமாய் இருப்பதறிவோம். விவசாயம் பெருக பெருக நல்ல தண்ணீருக்கான தேவையும் கூடியதில், தற்போது கிட்டத்தட்ட உலகில் உள்ள நல்ல தண்ணீரில் 70% அளவு விவசாயத்திற்கு மட்டுமே தேவைப்படுகிறதாம். பசுஞ்சாணியும் வேப்பம் புண்ணாக்கும் கோமேயமும் ஊற்றி விவசாயம் செய்த போது தேவைப்பட்டதைக் காட்டிலும் இந்த ’நட்டு போல்ட்டு, வெடிகுண்டு இரசாயனம், விஷத் தெளிப்பான்கள்’ போட்டு செய்யப்படும் நவீன விவசாயத்தில் இந்த தண்ணீரின் தேவை பல மடங்கு பெருகியது. ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பக்கத்து மாநிலத்திற்கு தண்ணீர் தரமாட்டோம்.. மலையில் வாழ்வோரை எல்லாம் விரட்டி பெரிய அணைகட்டுவோம்..” என்ற மனிதநேயம் தொலைத்த வசனங்களுடன் அரசியல் வக்கிரங்கள் கூடவும் வகை செய்தது.
தண்ணீர் நம் தலையாய உணவு. நாம் சாப்பிடும் உணவின் சாரத்தை கரைத்து அதிலுள்ள உப்பு, கனிமங்களில், தாவர சத்துக்கள், பலவற்றைக் கரைத்து குடலுறிஞ்சிகளால் உட்கிரகிக்கப்பட்டு உடலின் வளர்சிதை மாற்றம் பிரச்சினையின்றி சுமூகமாக நடைபெற சரியான அளவு தண்ணீர் அவசியம் தேவை. நாம் குடிக்கின்ற தண்ணீரிலுமே குறிப்பிட்ட அளவு உப்புக்களும் கனிமங்களும் உள்ளது என்பதை மறந்து விடக் கூடாது. கல்லிடைக்குறிச்சி தாமிரபரணித் தண்ணீரும், கோவையின் சிறுவாணித் தண்ணீரும் சுவைபட இருப்பது அத்தண்ணீர் கடந்துவரும் பாதியில் கரைத்துவரும் கனிமங்களால் தான். சாக்கடையையும், சாயத்தையும்..கண்ட கண்ட இராசயனங்களையும் ஆற்றிலும் மண்ணிலும் இஷ்டத்திற்கு கரைத்து விடும் களவாணித்தனம் பெருகியதில் தண்ணீரின் சுவை மட்டும் மாறவில்லை. தண்ணீரினால் வரும் நோயும் பெருகியது. சுத்தமில்லாத தண்ணீரினால், வாந்தி பேதி வந்த காலம் போய், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைப்பேறும், புற்று நோயும் கூட வர ஆரம்பித்திருப்பதுதான் வேதனை.



நல்ல சுத்தமான சரியான ’டிடிஸ்’ அளவுள்ள தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்து பாத்திரங்களில் சேமித்து அருந்துவது நல்லது. பிளஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை சேமித்து வைத்து அருந்துவது நல்லதல்ல. சில வகை பிளாஸ்டிக்குகள் அதில் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் பாட்டில் செய்யும் போது பயன்படுத்தப்படும் ரசாயனத்தை மிக நுண்ணிய அளவு அதில் கலக்கின்றன எனும் செய்திகள் பல வருகின்றன. அவை உடலுக்கு கேடு என்றும் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் வருகின்றன. ஆதலால் முடிந்த வரை பிளாஸ்டிக் பாட்டிலைத் தவிர்ப்பதும் கூட நல்லது தான்.
தினசரி காலையில் நீரருந்துவது போல, இரவில் படுக்கும் போது வெதுவதுப்பான நீர் 2-3 குவளை அருந்துவதும் மிக மிக நல்லது. இரத்தக் கொதிப்பு, மதுமேகம், மலச்சிக்கல், அசீரணமுடன் கூடிய வயிற்றுப்புண் எல்லாம் நன்றாகக் கட்டுப்பட இந்த தண்ணீரின் மீதான அக்கறை உதவிடும்.
மொத்தத்தில் தண்ணீர் உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படை. சுத்தமான பாதுகப்பான தண்ணீரை தேடி, அதை சரியான அளவில் தினசரி அருந்துவதும், நம் வருங்கால சந்ததியரின் நல்வாழ்விற்காக, நம் சுற்றுப்புறத்து தண்ணீரை கேடடையச் செய்யாமல் இருப்பதும் நம் கடமை
No comments:
Post a Comment