Saturday, 7 April 2012

அழகாயிருக்க என்ன செய்யலாம்?


”அது என்ன கண்ணாடி முன்னாடி இவ்வளவு நேரம்? சீவி சிங்காரிச்சது போதும்..ஸ்கூலுக்கு போறியா..ஆட்டத்திற்கு போறியா?..என்னது? ’ஜிம்’ முக்கு போகணுமா? படிச்சது போதும்னு நினைச்சு அண்ணா மைதானத்தில மிலிட்டரிக்கு ஆள் எடுக்கிறாங்களே அதுக்கு போகப் போறியா?,”- இதெல்லாம் 25 வருடங்கட்கு முன்னர் வீட்டில் அழகுக்காக கொஞ்சம் மெனக்கிட்ட போது, எங்கள் வீட்டில் கேட்ட வசனங்கள். அப்போது எல்லாம் அலங்கரித்துக் கொள்வது, நாடக மேடையிலோ அல்லது ஒண்ணு விட்ட மாமா கல்யாணத்திலோ மட்டும் தான். எண்ணெய் படிய தலை சீவி, டவுசர் கடைசி
பட்டனை கஷ்டப்பட்டு வயிறை உள்ளிழுத்து தலையணை உறை மாதிரி திணித்துப் போட்டு பிள்ளையாராட்டம் மூச்சிரைக்க ஓடி முதல் பெஞ்சில் இருந்தால் தான் சமர்த்து. கடைசி பெஞ்சு ஸ்டீஃபன், நல்லபெருமாள் மாதிரி உயரமா சிக் உடம்போட இருந்தால் ’படிப்பு வராது’ என்ற பொய்ப் பிரச்சாரம் வேறு!. 

இப்போது காலம் மாறி விட்டது. அழகாய் இருப்பது; பொலிவாய்த் திரிவதென்பது எசன்ஷியல் குவாலிஃபிகேஷனுக்கு வந்தாயிற்று. ரேம்ப்பில் மட்டுமல்ல கேட்டுக்கு வெளீயேவே ’கேட் வாக்’ அழகிகள் நடப்பதும், ஜெமினி கணேசன் ஜெய்சங்கர் மாதிரி இருந்தா மாமாக்கள் எல்லாம்-சிக்ஸ் பேக் கேட்டு ஜிம்மில் நாயாக ஓடுவதும் தினம் பெருகி வருகிறது. ஆணுக்கு சிக்ஸ் பேக் உடம்பும், பெண்ணிற்கு சிக் இடுப்பும் உள்ள உடம்பும், நாகரீக நவீன உலகின் சாமுத்ரீகா லட்சணமாக ”சௌந்தர்யலகரி”- யின் புது ரீ- எடிஷன் வரப் போகிறதாம்..எந்த உணவு இந்த அழகை எனக்குப் பெற்றுத் தரும்?

அழகாய் இருக்க முதலில் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும். எது அழகு என்ற தெளிவு இருக்க வேண்டும். எப்போதும் பொலிவாய் இருக்க குதூகலமாய் மனது இருக்க வேண்டும். நம்மை ஆண்டவர்கள் எல்லாம் நிறைய பேர் வெள்ளையாக இருந்ததில், ’வெள்ளாவியில் வச்சு வெளுத்தாவது’ வெளுத்த அழகை பெறுவது முட்டாள் தனம். ’கறுப்பு அழகு. வசீகரிக்கும் நிறம்.’-என்பதை நம் வீட்டுக் குழந்தைகட்கு சொல்வதில் பெருமிதம் கொள்ள வேண்டும். கறுப்பு நிறமுள்ள விளிம்பு நிலை மனிதர்களை நேசிக்கும் மனம் அப்போது தான் அவர்கட்கு வரும். கறுப்பு நிறம் மீதான பேத உணர்வும், அவர்கள் கடைசித் தேர்வாகப் போவதும் மாதிரி வன்கொடுமை உலகில் ஏதும் இல்லை. நெல்சன் மண்டேலாவின் நிறத்திலோ, செனகல் பெண்ணின் கண்ணிலோ உள்ள வசீகரத்தை உற்றுப் பார்த்தால் தான் தெரியும். அவர்களுக்குள் அழகு மட்டுமல்ல என்ன ஒரு அற்புதமான வலிமையான மனது இருக்கிறது என்று. 

அடுத்து கருப்போ சிவப்போ- மிக வனப்புடன் இருந்து கொண்டு சந்தோஷம் என்றால் ’கிலோ என்ன விலை?’ என கேட்கும் கூட்டம் பெருகி வருகிறது. ’வள்’ என விழுந்து பேசி வாழும் ’அழகுத் தம்பதியர்’ பலர் நம் குடும்பங்களில் பார்த்திருக்க முடியும். அங்கே அழகு என்பது ’கிஃப்ட் ரேப்பர்’ சுற்றிய குப்பைத் தொட்டி மட்டுமே! ரொம்ப ரொம்ப சந்தோஷமான தருணங்களில் கண்ணாடி முன் நின்று பாருங்கள். அலங்காரம் இல்லாமலே அழகு கொப்பளிக்கும்.

வயதிற்கு ஏற்ற உயரம், உயரத்திற்கு ஏற்ற எடை, நோயற்ற உடல், உதட்டில் புன்னகை, உள்ளத்தில் மகிழ்ச்சி-இது அழகின் அடையாளங்கள்.இந்த அடையாளங்களில் 60 % வாங்கி விடுவீர்களா? நீங்கள் நிச்சயம் அழகானவர்கள்!

அழகாய் இருக்க சரியான உணவுத் தேர்வு மிக அவசியம். தினசரி பழ உணவு ஒரு வேளையாவது இருக்க வேண்டும். குறிப்பாய் காலை அல்லது இரவு பழங்களால் பசியாறலாம். தோலின் வரட்சியைப் போக்கும் பல உயிர்ச்சத்துக்கள்( விட்டமின்கள்), ஆண்ட்டி ஆக்சிடண்டுக்கள் பழங்களில் மட்டுமே கிடைக்கும். குறிப்பாய்ப் பப்பாளி தோல் வறட்சியைப் போக்குவதில் நிறைய விட்டமின் ’ஏ’ சத்தை நமக்களிக்கும். மாதுளை ரசம் இரத்த விருத்தியளித்து முகத்தை பிரகாசமாக்கும். சிவந்த அதன் நிறத்தில் உள்ள நிறமிச் சத்து நோயுற்ற காலத்தில் வேகமாய் நோய் வெளியேறிட உதவிடும். வயோதிக மாற்றங்களான தோல் சுருக்கம், நரை ஆஸ்டியோபோரோசிஸ் எனும் உடலின் தேயும் தன்மையை மாற்ற நெல்லிக்கனி மிக மிக சிறந்தது.(அதை உப்புக் கண்டம் போட்டு ஊறவைத்து எண்ணெயில் மூழ்க வைத்து பாழாக்கிடாமல் அப்படியே சுவைப்பது தான் நல்லது). அத்திப் பழத்தை காலையிலும் காய்ந்த திராட்சையை மாலையிலும் சாப்பிடுவது காலை நேரத்தில் முகம் பொலிவாய் இருக்க உதவும்.

முகத்தில், நெற்றியில், கரும்படை எனும் hyper pigmentation அல்லது melasma இருக்கிறதா? மிகவும் காரத்தன்மையில்லாத சோப்பில் முகம் கழுவுவதுடன் நேரடியாக சூரிய ஒளி முகத்தில் படுவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். மெலனின் எனும் சத்து, அவ்விடங்களில் அதிகரிப்பதை சூரிய ஒளிக்கற்றையின் UV கதிர்கள் தூண்டிவிடும்.விட்டமின் ஏ சத்துள்ள உணவை எடுப்பதுடன், அவ்விடங்களில் மருத்துவரை அணுகி ஆலோசித்து தோலுக்கேற்ற மூலிகைக் களிம்புகளை போடுங்கள். உலகஅழகிகள் காசுக்காக நாசூக்காக சொல்லும் களிம்புகள் அவசியமா என்பதை உங்கள் குடும்ப மருத்துவர் உறுதி செய்யட்டும்.(பல களிம்பு உறைகளில் கொஞ்சம் உற்றுபார்த்தோ அல்லது லேப் மைக்ராஸ்கோப்பில் வைத்தோ பார்த்தால்- ‘எதுக்கும் டாக்டரைப் பாருங்க’ என மைக்ரோ எழுத்தில் அச்சிட்டிருப்பர்கள்)
தொப்பை போகும் வித்தை தேடும் நாற்பது வயது மாமாவும் அத்தையும் இன்று ரொம்ப ரொம்ப அதிகம். சிக்ஸ் பேக் வேண்டாம் டாக்டர். சிங்கிள் பேக்காக இருக்கும் இந்த தொப்பையை போக்க எதாவது வழியுண்டா என்று கேட்காதவர்கள் குறைவு. ”கொஞ்சூண்டு!.. குழந்தைக்குச் சோறூட்டுவது போல கையைக் காட்டி இதோ இவ்வளவு தான் சாப்பிடறேன்..ஆனாலும் உடம்பு ஏறிக்கிட்டே போறது,” என கவலைப்படும் அவர்கள், கவலையை மூலதனமாகக் கொண்டு இன்று வியாபாரம் பெருத்திருக்கிறது.அவர்கள் மெலியக் காணோம்!

சர்க்கரை-இனிப்பு-பால் இல்லாத ’லோ கிளைசிமிக்’ உணவை, அளவாக நேரத்திற்குச் சாப்பிடுவதும், தினசரி 45 நிமிடம் வேக நடைப் பயிற்சி செய்வதும், கபாலபாதி முதலான பிராணாயாமப் பயிற்சியை தினம் காலை மாலை உணவிற்கு முன் செய்வதும், மருத்துவர்- உடற்பயிற்சியாளர் அறிவுரைப்படி மட்டும் உடற்பயிற்சி செய்வதும் 90% உங்களை மெலிய வைக்கும். மருந்துகளின்/சூப்பர் உணவுகளின் பணி 10% மட்டுமே. அப்படி ’திடீர் மெலிவு’ ஏதும், சிறப்பு உணவுகள்/மருந்துகள் தந்தால் அடிக்கடி இரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ளுங்கள்.

காலையில் பால் சேர்க்காத கிரீன் டீ, காலை உணவாக சிற்றுண்டியில் முளைகட்டிய பாசிப்பயறு, பப்பாளி முதலான பழத்துண்டுகள், 11 மணிக்கு தேவைப்பட்டால், பழச்சாறு அல்லது மோர், மதியம் கண்டிப்பாக ஏதாவது ஒரு கீரை அதிகம் எண்ணெய் இல்லாத சமைத்த காய்கறி, கொஞ்சமாய் பிரவுன் அரிசி (பட்டைதீட்டாத புழுங்கல் அரிசி), மாலையில் மறுபடி தேநீர், இரவில் தினையரிசி அல்லது சோள தோசை சாப்பிடுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல். வாய்ப்பிருந்தால் 15 தினங்கட்கு ஒருமுறை மூலிகைத் தைல பிழிச்சலும் நீராவிக் குளியலும் செய்யுங்கள். ஆரோக்கியமுடன் அழகு இலவசம்!

No comments:

Post a Comment