Saturday 7 April 2012

அழகு




அந்த ’பளிச்’ பாட்டியை எனக்கு, அவரது குடும்ப மருத்துவராய்ப் பத்து வருடமாய்த் தெரியும். எழுபதை நெருங்கும் அவர் பல நேரம் எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். ’கொஞ்சம் கண்ணுக்கு கீழே கருவளையம் வந்தாப்பிலே தெரியுது. மெடிசின் இல்லாமே எதனாச்சும் டயட் அட்வைஸ் இருக்கா டாக்டர்?’ அறுபதுகளிலும் அவர் காட்டும் அழகு மீதான அக்கறை அசர வைக்கும். ”சார்! சீக்கிரம் என் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்னையைப் போக்கிடுங்க. ஒரு வேளை அடுத்த வருசம் பாரீஸில் ’கேட் வாக்’ போக வேண்டியிருக்கும்,” என்ற கூட வந்த அந்த அபிஷேக்பச்சன் தாத்தாவின் குறும்பில், அவர் அழகு மெனக்கிடல் எத்தனை தூரம் அந்நியோன்யமான அவர்களது ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திட்டிருக்கிறது என்பது புரியும். 

அழகு ஆண்டவன் அளித்த சிபாரிசுக் கடிதம்”, என்று ஒரு கவிதை உண்டு. ’பளிச்’ என்று அழகாய் இருப்பது இன்று, எல்லோரும் விருப்பப்படும் ஒன்று. ஆனால் பலரும் “சிவப்பு தான் அழகு; பகட்டு தான் பளிச்” என நினைப்பது தான் முட்டாள்தனம். மோர்க்குழம்பு நிறமும் மோனாலிசா முகமும் வாய்க்கவில்லை எனத் தாழ்வைத் தனக்குள் வளர்ப்பது தவறு. சிகப்பு நிறத்தைக் காட்டிலும், கருப்பு நிறம் தான் வசீகரத்தை வெளிப்படுத்துவதில் சிறப்பானது என பிரபல புகைப்படக் கலைஞர்கள் கூறுவதுண்டு. கருப்பு நிறத்திலும் களையாய், பளிச்சென உங்களை வைத்துக் கொள்ள உதவும் உணவும் மருந்தும் நம்மிடம் ஏராளம். இன்னொரு விஷயம் சிவப்பைக் காட்டிலும், கறுப்பர்களுக்கு, உடல் நோய் எதிர்ப்பாற்றலும் அதிகம்!

ஆணோ/பெண்ணோ, இளம் வயதில் வசீகரத்திற்காக அக்கறைப்படும் அளவிற்கு வயதான பின்பு யோசிக்காமல் இருப்பதும் அழகைத் தொலைக்கிறது. செல்லத் தொப்பை/சிசேரியன் தொப்பை என தன்னை அறியாமல் வளரும் தப்பைத் திருத்திக் கொள்ளவில்லை எனில் அழகு அடுத்த வீட்டில் தான் தெரியும். அதான் நாப்பது ஆயிடுச்சே! இனி எதுக்கு சீவி சிங்காரிக்கணும் என அலட்சியப் படவேண்டாம். ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கும் இந்த வேகமான மன அழுத்தமிக்க காலகட்டமான, நடுத்தர வயதில் தான் துணையின் ஈர்ப்பும், அரவணைப்பும் மிக அவசியம். அந்த ஈர்ப்பு திருமண வாழ்வில் எப்போதும் எந்த வயதிலும் தம்பதியரிடம் நிலைத்து இருக்க இந்த ’பளிச்’ விஷயம் முக்கியம். மேலும், தனக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கவும், தளர்ச்சியையோ, தள்ளாமையையோ தலைகாட்ட விடாமல் இருக்கவும் கண்ணாடியில் நம் உடலும் முகமும் அழகாய் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும். அழகாக ’பளிச்’ என இருக்க என்ன செய்யலாம்?
அழகு, இன்ஸ்டெண்ட் இடியாப்பம் மாதிரி வருவதல்ல. அதுபோல் பளிச்சென மிளிர்வது என்பதும் கண்ட கண்ட அழகு கிரீம்களால் முகத்தை பட்டி பார்த்தும் கொண்டுவருவதல்ல. நேற்றிரவு சாப்பிட்ட சமோசாவிற்கும் இன்றைய உங்கள் முகச்சோர்விற்கும் நிறையவே தொடர்பு உண்டு. முதலில் உணவுத் தேர்வில் தான் உங்கள் அழகு தொடங்கும்.

முகத்தின் அழகுக்கு:

அகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும். அகம் என்றால் மனம் மட்டுமல்ல. வயிறும் தான். எண்ணெய்ப் பிசுக்கான முகம் இருந்தால் தினசரி சீரகத் தண்ணீர் அருந்தவும். பால், வகையராக்களை ஒதுக்கி விட்டு, பழ ஆகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். குறிப்பாய் பாலிஃபீனால்கள் நிறைந்த பப்பாளி தினசரி உணவில் இருக்கட்டும். கேரட், தக்காளி சேர்த்த ஜூஸ் அதனுடைய ஆண்ட்டிஆக்சிடண்ட் தன்மையால், முகத்தில் சுருக்கங்கள் வராது பாதுகாக்கும். நிறைய பருக்கள் (PIMPLES), சிறு குருக்கள்(ACNE) உள்ள முகமா? வெள்ளைப்பூசணீக்காய் (தடியங்காய்),பாசிப்பயறு சேர்த்து கூட்டாக சமைத்து அடிக்கடி சாப்பிடுங்கள். 

கூடவே ஆவாரம்பூ, ரோஜா இதழ் சமபங்கு எடுத்து, இருமடங்கு முல்தானிமட்டி மணலில் கலந்து நன்கு மாவாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த கலவையைப் பன்னீரில் குழைத்து வாரம் மூன்று நாள் முகப்பூச்சாகப் போடவும். போட்டு ½ மணி நேரம் கழித்து முகம் கழுவவும். பளிச் முகம் பத்தே தினங்களில்!

தினசரி உடல் இயங்கியலின் போது ஒவ்வொரு செல்லிலும் சேரும் தனி ஆக்சிஜன் அணுக்கள் செல் அழிவை ஏற்படுத்துவது தான் வயோதிகத்தைத் தொடங்கி வைக்கிறது. தோல் சுருக்கம், நரை திரை மூப்பு எல்லாம் இதன் அடிப்படையில் தான் தொடங்கி அழிவை ஆரம்பிக்கிறது. ஆண்ட்டிஆக்ஸிடண்ட் சத்துள்ள உணவுகளும் மூலிகைகளும் தாம் இந்த செல் அழிவை கூடிய வரை தடுத்தும் தள்ளிப் போட்டும் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் வித்திடுகிறது. இந்த சங்கதி அதிகம் இருப்பது வண்ணமிகு காய்கனிகளில் தான். ஆதலால், கனிகள் மீது கண்டிப்பாய் காதல் கொள்வீர்.

வசீகரமான தோலுக்கு :

இன்று பலரும் சும்மாவேணும் விட்டமின் மாத்திரைகளை சத்து மாத்திரை என வாங்கி சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளார்கள். தேவையின்றி விட்டமின் சாப்பிடுவது கெடுதலோடு, உணவில் இருந்து உடல் உயிர்சத்தை (விட்டமினைப்) பிரித்தெடுக்கும் திறனையும் குறைத்துவிடும். அழகுக்கும் சில விட்டமின்கள் ரொம்பவே அவசியம். அதிலும் குறிப்பானது,விட்டமின் A, C, E ஆகிய மூன்றும். விட்டமின் A என்றதும் பலரும் நினைப்பது கேரட்டை மட்டுமே. முருங்கைக் கீரை, முள்ளங்கி, வெந்தயம், பப்பாளி, ஆரஞ்சு, கறிவேப்பிலை, கொத்துமல்லி இவற்றில் எல்லாம் பீட்டா கரோட்டின்கள் உண்டு. தோல் வறண்டு போகாமல் இருக்க, தோல் வனப்புடன் வசீகரமாக இருக்க இவை உணவில் தினமும் இருக்கும்படி பார்க்க வேண்டும். முன்பெல்லாம் கண்ணுக்கு மட்டும் பேசப்பட்ட இந்த விட்டமின் சத்து இப்போது, மாரடைப்பைத் தடுக்க, சிறு நீரகக்கல் வராமல் தடுக்க என பல பயன்களுக்காகவும் அறிவுறுத்தப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் இருந்த போதும் அன்னாசியில் இந்த விட்டமின் ஏ சத்து அதிகம் கிடையாது. பழுத்த இனிப்பு மாம்பழமும் விட்டமின் ஏ சத்தை தருவது இன்னொரு இனிப்பான செய்தி.

வனப்பான மென்மையான தோலுக்கு :

விட்டமின் சி-யும் ஈ-யும் தோல் வனப்பிற்கு ரொம்பவும் அவசியமான விட்டமின்கள். இவற்றின் ஆண்டிஆக்ஸிடண்ட் தன்மையால் தோலை வனப்புடன் வைப்பதுடன், இளமையையும் பாதுகாக்கின்றது. ரைஸ் பிரான் ஆயில், பருத்திவிதை எண்ணெய், நல்லெண்ணெய் முதலான தாவர எண்ணெய்களில் விட்டமின் ஈ சத்து அதிகம். இது தவிர பசுங்கீரைகள், சோளம் இவற்றிலும் இந்த விட்டமின் ஈ உண்டு.. ஆண்மைக்குறைவு தீரவும்,மலடு நீங்கவும் இந்த விட்டமின் ஈ அவசியம் என்பது அழகு தாண்டி இன்னொரு செய்தி. அவ்வை பாட்டிக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனிதான் இன்றைய இந்திய மருத்துவ மூலிகைகளின் சூப்பர்ஸ்டார். இந்த நெல்லிக்கனியில் நிறைந்துள்ள விட்டமின் சி சத்து முதுமையைப் போக்கும் மாமருந்து மட்டுமல்ல; நோய் எதிர்ப்பாற்றல் வழங்கிடும் அமுதும் கூட. தினசரி நெல்லிக்கனியை உணவாகவோ மருந்தாகவோ சாப்பிட இளமை நிச்சயம் நிலைபெறும் நீடித்த ஆரோக்கியத்துடன். நெல்லிக்கனி இல்லாமல், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கொத்துமல்லிகீரையிலும் இந்த ’சி’ விட்டமின் சத்து உண்டு.

அழகைத் தரும் காயகல்பம் :

சில போலியான விளம்பரங்களால் இந்த வார்த்தைக்குத் தவறான அர்த்தம் கற்பிக்கபட்டுவிட்டது. ’காயகல்பம்’ என்பது உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் உறுதி செய்ய, அந்தக் காலத்தில் தமிழ்ச் சித்தர்கள் காட்டிய உணவும் ஒழுக்கமும், யோகப் பயிற்சியும் தானே தவிர எந்த, ’ஸ்பெசல் சிட்டுக்குருவி’ லேகியமுமல்ல. அழகான உடலை வசீகரத்துடன் அன்றைய சாதுக்கள் பெற்றிருந்தமைக்கு இந்த காயகற்பப் பயிற்சி ஒரு முக்கிய காரணம். அழகு நிலைத்து இருக்க, ஒவ்வொருவரும் அவரவர் உடலுக்கேற்ற உணவு, குறிப்பிட்ட மூலிகையை மருத்துவர் ஆலோசனைப்படி தேர்ந்தெடுத்து தினசரி சாப்பிடுவதும், பிரணாயாமப் பயிற்சியினை தினசரி செய்வதும் என்றும் உங்களை கண்டிப்பாக பளிச் –என வைத்திருக்கும்.

No comments:

Post a Comment