Saturday 7 April 2012

காய்ச்சல்.

ஒன்பது பத்து வயதிருக்கலாம்..ஆனால் இன்னும் அந்த காய்ச்சலின் கதகதப்பு மறக்கவில்லை.”எக்கா! ரொம்ப சுடுதுக்கா..பேசாம நவனீதன் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிடலாம் என லோகு மாமா, என் அம்மாவிடம் சொன்னதும், “இன்னும் பத்து நிமிசத்தில கசாயம் வைக்கிறேன், ரண்டு வேளை பாத்திட்டு அப்புறம் குறையலேன்னா டாக்டர் வீட்டுக்குப் போகலாம்”, என பாட்டி சொல்லிக் கொண்டே வீட்டு முற்றத்தில் இருந்த கருப்புத் துளசியை கை நிறைய பறித்து வைத்துக் கொண்டு.,ஏல லோகு! தோட்டத்தில போய், ஒரு கைப்பிடி கப்பூர வல்லி, கொஞ்சம் நிலவேம்பு அரிஞ்சிட்டு வா” என சொல்லிய குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது.
சொன்னபடி பத்து நிமிஷத்தில் அந்த அடுப்பங்கரை, அவசர சிகிச்சை தரும் மருத்துவமனையாகும். அதுவரை எண்ணைய்ப் பிசிக்குடன் இருந்த அஞ்சரைப்பெட்டியின் முகம் திடீர் முதலுதவிப் பெட்டியாக மாற மடமடவென, மிளகு, சுக்கு, ஓமம் என ஒவ்வொரு பொருளாய் வர, செம்புப் பாத்திரத்தில், கசாயம் கொதிக்கத் துவங்கும். உள்ளிருந்து வரும் மணம் மானாவெளியில் உட்கார்ந்திருக்கும் என் நாசியில் ஏற ஏற உடல் வலி குறையத் துவங்கும். கசப்பான அந்தக் கசாயத்தைத் தன் கண்டாங்கி சேலைத் தலைப்பில் இறுகப் பிடித்து எடுத்து வந்து..”மடமடன்னு குடிக்கணும் சொல்லிட்டேன்’ அப்பத்தான் கடைசி வாய்க்குக் கருப்பட்டி தருவேன்,” என்ற பாட்டியின் அதட்டல் அன்பில், வேகமாய்க் கசாயம் குடித்து முடிக்கையில், காது பக்க முடி நனைந்து, வியர்வைத் துளிகள் முகமெங்கும் வர வர காய்ச்சல் விடைபெற்றிருக்கும்..மூணு, நாலு நாளில் சளி எல்லாம் வெளியேற, ”கருப்பட்டி தனியா தரமாட்டீங்களா பாட்டி?” என்ற என் வினவலுடன்..காய்ச்சல் காணாமல் போகும்.
”என் பையன் ரொம்ப கெட்டி சார்.! லேசா ஃபீவர் வரணும், அவனே போய் ’டோலோ’ வாங்கிப் போட்டிருவான்.. ’ஆண்டி பயாடிக்’ கூட அவனுக்கு அத்துப்படி..” என்ற அவசரகால அம்மா ஒருவர் என்னிடம் மருத்துவமனையில் சொன்னதைப் பார்க்கும் போது, எங்கே போய்விட்டாள் என் பாட்டி? எங்கே போகிறார்கள் இவர்கள்?” என என் மனம் ஏனோ தேடும்.
காய்ச்சல்- எந்த ஒரு இரும்பு மனிதரையும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் பதம் பார்க்கும் துன்பம் காய்ச்சல். ‘எனக்கு காய்ச்சலே வந்ததில்லை’, என எவரும் சொல்ல முடியாது. ஆனால், இந்தக் காய்ச்சல் ஒரு தனி நோய் இல்லை. வேறு ஏதெனும் நோய்க்கான ஒரு வெளிப்பாடு அல்லது குறிகுணம் தான் காய்ச்சல். எப்படி இதனை எதிர் கொள்வது? உடனே மருத்துவரை நோக்கி ஒடணுமா? அலட்சியமாக இருக்கலாமா?

காய்ச்சல் பற்றிய அடிப்படை அறிவு,, ”சாமுத்ரிகா பட்டு” மாதிரி, ”நேச்சுரல் வண்ணப் பட்டு” மாதிரி, ”பி.ஃப்.கடனுக்கான வட்டிக் கணக்கு” மாதிரி ”கண்டிஷனர் கலந்த ஷாம்பு” பற்றி எல்லாம் தெரிந்திருக்கிற மாதிரி, கண்டிப்பாய் ஒவ்வொரு அம்மாக்கும், அப்பாக்கும் தெரிந்திருக்கணும். .தெரிஞ்சுக்குவோமா?
நம் உடலுக்குள் ஏதேனும் வைரசோ, பாக்டிரீயாவோ திடீர் அழையா விருந்தாளியாக உள் நுழைந்தால், ஏதேனும் உடலின் வெளிப்புறமோ, உள்புறமோ காயங்கள் ஏற்பட்டிருந்தால், வேறு ஏதும் நோய் நிலையிலோ, நம் உடல் தன்னை காத்துக் கொள்ளவும், காயத்தை ஆற்றவும், வைரஸ், பாக்டீரியாவை எதிர்க்கவும் நடத்தும் போரில் வரும் உடல் வெப்ப உயர்வே காய்ச்சல். நல்ல ஆரோக்கியமான உடலில் இந்தக் காய்ச்சல் பெரும்பாலும் ஒன்றும் செய்வதில்லை. ஓரிரு நாள் சுரம் காய்ந்து ஓய்வதுடன் வேறேதும் நிகழ்வதில்லை. ’லங்கணம் பரம் ஒவுஷதம்’, என்று ஒரு மருத்துவ மொழி உண்டு. அதன் பொருள், ’காய்ச்சலுக்கு மருந்து பட்டினி’, என்பது தான். இப்போதைய உடல் வலுவுக்கு பட்டினி இருத்தல் நல்லது அல்ல. எளிய, விரைவில் செரிக்கக் கூடிய உணவு (இட்டிலி, இடியாப்பம், புழுங்கல் அரிசி கஞ்சி….போன்ற) மட்டுமே குறைவாக எடுப்பது சிறந்தது. நிறைய வெதுவெதுப்பான நீர் அருந்துவதும், புளிப்பில்லாத பழச்சாறு குடிப்பதும் மிக அவசியம். நிலவேம்புக் கசாயம் மட்டும் மூன்று நாள் தவறாமல் எடுத்துக் கொள்ளுதல் போதுமானது.
சளியுடன் கூடிய காய்ச்சல் எனில் காலை மாலை இரண்டு வேளை ஆடாதொடைக் அல்லது தூதுவேளை கசாயமும் குடிப்பது அவசியம். ’அதுக்கெல்லாம்..கொல்லிமலைக்குப் போகணுமோ என ஆயிரத்தில் ஒருவனாக’ கற்பனை எல்லாம் செய்ய வேணாம்..உங்கள் அடுக்குமாடி வீட்டு அறையில் கூட கொஞ்சம் வெளிச்சம், தண்ணீர், கூடவே கொஞ்சம் அக்கறையும் ஊற்றி இம்மூலிகையினை அழகாய் வளர்க்கலாம். ”நேரமில்லயே!” என வழக்கமான புலம்பல் வேண்டாம். கிளினிக் வாசலில் காத்து நிற்கும் நேரத்தை விட இதற்கு மெனக்கிடுவது குறைவாகத் தான் இருக்கும்.
சிறு குழந்தைக்கு வந்த சுரம் எனில், துளசி, மிளகு, கற்பூரவல்லி, வெற்றிலை, மாசிக்காய் தூள், கசாயமாக்கி 30-60 மிலி இரண்டு வேளை 4 நாட்கள் கொடுக்கலாம்.அசீரணத்தினைத் தொடர்ந்து வந்த சுரம் எனில், சீரகக் கசாயம் இரு வேளை கொடுங்கள். மலம் சரியாக பிரியவில்லை எனில் ஒருமுறை பேதியாகும் படி ஆமணக்கு எண்ணெயோ, அருகாமையில் உள்ள உங்கள் குடும்ப மருத்துவர் தரும் பேதிமருந்தோ எடுப்பது நல்லது.
வைரஸ் காய்ச்சல் பெரிய தொந்தரவு பெரும்பாலும் தருவதில்லை என்ற பரவலான கருத்து பொய்த்து வருகிறது. புவி வெப்பமடைதலாலோ, இந்த மண்ணையும் நம் சூழலையும் நாம் கண்டபடி நம் வசதிக்கென கெடுத்து வந்ததாலோ, கோபம் கொண்ட நட்பு வைரஸ்கள் எல்லாம் நம்மோடு ’டூ’ விடத் துவங்கிவிட்டன. அதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் தமிழகத்தைப் பாடாய்ப்படுத்தி, எல்லா மருத்துவருக்கும் ’பெப்பே’ காட்டி வரும் மாறுதலான சிக்கன் குனியா.



எங்கோ மேற்கு ஆப்பிரிக்காவில் லேசாய் 1950 களில் தலைகாட்டி, 40ஆண்டுகள் ஆளரவமில்லாமல் இருந்த ஆல்ஃபாவைரஸ் நம்மூர் கூவத்துச் செழிப்பில், கொழித்துப்போன ஏடஸ் ஏஜிஸெகிப்டிகஸ் கொசுவில் குடித்தனம் வைத்து 2006 டிசம்பர் முதல் நம்மைச் சுற்றி அதிகம் வலம் வரத் துவங்கிவிட்டன. விளைவு..காய்ச்சல், அது போன பின்பும் மூட்டுவலி, காலை எழுந்தவுடன் கை, கால் மூட்டுகள் எல்லாம் ஃபெவிக்கால் போட்டு இறுகியது போன்ற உண்ர்வும் கூடவே தாங்க முடியாத வலியும் மாதக் கணக்கில் தொடர்கிறது. மிகவும் கொடுமையான விஷயம், இந்த சாதாரண சுரம், தமிழகத்தில் சில சாமானிய மக்களை மரணமும் அடையச் செய்திருப்பது தான்.
சிக்கன் குனியாவைப் பரப்புவது அந்த ஏடஸ் வகைக் கொசு தான். ஒருவரை அது கடித்துவிட்டு அருகாமையில் உள்ளவரைக் கடித்தால் வைரஸ் அவரிடம் இருந்து இவருக்குப் பரவி விடும். கொசுவை கூடிய வரை உள் நுழையாது கவனமாக வீட்டை வையுங்கள். நல்ல தண்ணீரை சேமித்து வைப்பதில் கொசு பரவ வாய்ப்பு அதிகம். இதனைத் தவிர்த்துவிடுங்கள். வீட்டில் வாரம் மூன்று நாள் நெல்லிக்காய்ப் பச்சடி (பெரிய நெல்லிக்காயில்), மிளகு ரசம், கண்டிப்பாகச் செய்யுங்கள். இன்னும் ஓரிரு மாதத்தில் பூக்கத் துவங்கும், வேப்பமரத்தின் பூவினை வைத்து வேப்பம்பூ ரசம் வையுங்கள். உணவில் கூடியவரை இனிப்பைத் தவிர்த்துவிடுங்கள்.அருகாமையில் இந்தக் காய்ச்சல் இருந்தால், சித்த மருத்துவரிடம் கிடைக்கும் நிலவேம்புக் குடிநீரை வாங்கி, வீட்டில் உள்ள அனைவரும் தினசரி காலை மாலை வெறும் வயிற்றில் 60-90 மிலி அளவு கசாயம் வைத்து ஒரு வாரம் சாப்பிடுங்கள்.
காய்ச்சலின் தன்மை மாலை மட்டும் உயர்ந்தாலோ, சளியுடன் இருந்தாலோ அது பிரைமரி காம்பிளக்ஸ் எனும் காசமாக இருக்கலாம். காய்ச்சலுடன் பல்லீறுகளில் இரத்தம் கசிவது, கெண்டைக்கால் மட்டும் வலிப்பது இருந்தாலோ டெங்கு அல்லது லெப்டோஸ்பைரோஸிஸ் எனும் எலிச்சுரமாகவோ இருக்கலாம். வலப்பக்க வயிறு வலி வீக்கத்துடன் கண்கள் மஞ்சளித்து இருப்பதும், சிறுநீர் மஞ்சளாகப் போவதும் இருப்பின் காமாலையாக இருக்கலாம். கஞ்சி போல் பேதியாவதுடன், தினசரி படிப்படியாக காய்ச்சலிருப்பின் டைபாய்டாக இருக்கலாம். இது போன்ற சூழலில் உங்கள் குடும்ப மருத்துவரின் நோய்க் கணிப்பும் முறையான சிகிச்சையும் மிக அவசியம்.
காய்ச்சலில் சில சிறு குழந்தைகட்கு அதிக சுரம் தாங்காமல் வலிப்பு வரக் கூடும். அதைத் தவிர்க்க, சுரம் 100-102 வரும் வரை பார்த்துக் கொண்டிராமல், தகுந்த சிகிச்சையுடன், நெற்றியில் வெள்ளைத்துணியை நனைத்து குளிர்பிப்பது அவசியம். அவ்வித ஃபெப்ரைல் கன்வல்ஷன்ஸ் எனும் வலிப்பு குறித்து வாழ் நாள் முழுதும் தொடர்ந்திடுமோ என்று அச்சமடையத் தேவையில்லை. உடல் நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்திட்டால் போதும்.
காய்ச்சலில் இவ்வளவா? என்கிறீர்களா? சித்த மருத்துவம் 62 வகை சுரம் பற்றி பேசுகிறது. அத்தனையும் அறிந்திருப்பது இயலாது. ஆனால் ஒவ்வொரு வீட்டுப் பெரியவரும் இதன் அடிப்படை சில உண்மைகளையாவது அறிந்திருப்பது மிகவும் அவசியமல்லவா?

No comments:

Post a Comment