Saturday, 7 April 2012

வெங்காயம் - உரிக்க உரிக்க... நிறைய நிறைய...


 
உரிக்க உரிக்க
ஒன்றுமில்லாமல் போய்விடும் அதன் அழகைப்பார்த்து, இழிவாக பிறரைப் பேச 
ஒரு வெங்காயமும் இல்ல,””போடா வெங்காயம்!”- என சொல்வதுண்டு. ஆனால் வெங்காயம் தரும் உடல் ஆரோக்கியம் மிக உயர்ந்தது. அரிசி போல் மிக பாரம்பரியமாக மனிதனின் உணவுப்பட்டியலில் நெடும் நாளைக்கு முன்னரே இடம்பெற்ற பொருள் வெங்காயம்.
மத்திய ஆசியாவில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று கருதப்படும் வெங்காயம் குறித்து நம்ம ஊர் சித்தர் அகத்தியரும், வட நாட்டு ஆயுர்வேதம் படைத்த சரகரும் ,மட்டும் பாடவில்லை. கிரேக்கம், அரபு, சீனம் லத்தீன் ஹீப்ரு மொழியில் எல்லாம் வெங்காயம் பெருவாரியாக புகழப்பட்டிருக்கிறதுபக்கத்து தேசமான பாகிஸ்தான் வெங்காயம் எங்க ஊர்ல பிறந்தது என்றும் சொல்லி வருகிறது


இயேசுநாதர் காலத்திலிருந்து நேற்று படைக்கப்பட்ட பீட்சா பர்கர் வரை வெங்காயம் உணவில் உண்டு. சில மீன் துண்டுகளும், வெள்ளரி, பூசணியும், வெங்காயமும் பூண்டும் கொண்ட உணவு”-என்ற விபரம் பைபிளில் சொல்லப்படுள்ளது வெங்காயத்தின் தொன்மையைப் பரைசாற்றும் விபரமாகும். உணவாய் மட்டுமல்ல, மருந்தாய், விருந்தாய் கிரேக்கத்தில் வெங்காயம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த காலத்து மம்மி..வெங்காயம் உரிக்க அழுவது நமக்கு தெரியும் அந்தகாலத்து கிரேக்க மம்மிகளின் (பிரமிடுகளில் இன்றும் உறங்கிக் கொண்டிருக்கும்) கண்களின் துளைகளில் வெங்காயம் பொதிக்கப்பட்டுள்ளது.

சரி! வெங்காயம் ஒரு சிறந்த உணவென்பதற்கு அதை உரிக்க ஆரம்பித்தவுடன் வரும் ஆன்ந்தக் கண்ணீரே சாட்சி. ஆனந்த கண்ணீரா..ம்ம்! உரிச்சுப்பாருங்க கஷ்டம் புரியும்! என தடாலடியாகக் கோபப்பட வேண்டாம்! வெங்காயத்தை உரித்தவுடன் அதிலிருந்த வரும் கந்தக அமிலம் காற்றில் கலந்து வந்து கண்ணீர் பையை உசுப்பிவிட கண்ணீர் வழிகிறது..அந்த கந்தக அமிலம்தான், நம் உடலில் கிருமிகள் தாக்கவண்ணம் பாதுகாக்கிறது.. அட! இப்ப சொல்லுங்க அது ஆனந்த கண்ணீர் தானே? வெங்காயம் வெறும் கிருமிநாசினி மட்டுமல்ல..அதையும் தாண்டி பெரிய தன்மையுடையது!
சிவந்த தோலுடைய வெங்காயத்தில் ஏராளமான பாலிஃபீனால் சத்து நிறைந்து உள்ள்து. அது என்ன பாலிஃபீனால்? தாவரங்கள் நமக்காகச் சேமித்துத் தரும் ஒருவகை மருத்துவ கூறுகள் அவை. ஒரு தாவரத்தில் இதன் இருப்பை வைத்து அதை உயர் மூலிகை என்ற பட்டமும் கூட  தரலாம்.

 வெங்காயம் ஒரு உணவுப்பொருள் மட்டுமல்ல..உயிர்காக்கும் உயர் மூலிகையும் கூட. சின்ன வெங்காயம் எனும் சாம்பார் வெங்காயம், பல்லாரிஎனும் பெரிய வெங்காயத்தைக் காட்டிலும் மருத்துவ குணத்தில் உயர்ந்தது.இந்த பாலிஃபீனால்கள், சிறிய வெங்காயத்தில் பல்லாரியைக் காட்டிலும் பல மடங்கு உள்ளது. இனிமேல் உணவைத் தாளிக்கும் போதோ, தயிர் பச்சடி செய்யும் போதோ, ஆனியன் ஊத்தப்பம் பண்ணும் போதோ சிறிய வெங்காயத்திற்கு முதலிடம் தாருங்கள்..அது உங்கள் ஆரோக்கியத்திற்கு முதலிடமளிக்கும்.


வெங்காயம் குளிர்ச்சியா? வெப்பமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு பதில் தெரிய, ஓரகடத்தில் அடுக்குமாடி வீடு ஒன்று கொடுக்கும் அளவிற்கு போட்டி நடத்தலாம்.. நிறைய சர்ச்சை இருந்தாலும், சித்த மருத்துவமோ..வெங்காயம் வெப்ப தன்மையை உடையது என்கிறது. அதே சமயத்தில் வாய்ப்புண், உடல் சூடு தணிக்க முதல் மருந்து என்றும் கூறுகிறது.
இரத்தக் கொதிப்பு  நோயை ஆங்கிலத்தில் silent killing disease என்பர். மன அழுத்தமும் இறுக்கமும் பெருகிவரும் இன்றைய துரித வாழ்வில் பலருக்கும் 30-களிலேயே இந்த இரத்தக் கொதிப்பு பிரச்சினை தலை விரிக்கிறது. அவர்கட்கெல்லாம் இந்த வெங்காயம் சிறந்த உணவு. அப்ப வெங்காயம் சாப்டுட்டு பி.பி. மாத்திரையை எல்லாம் ஒரம் கட்டிரலாமா? என அவசரப்படாதீர்கள்..வெங்காயம் இரத்தக் கொதிப்பு  நோயினருக்கான சிறந்த உணவு....மருந்தல்ல.

கருத்தரிக்க தாமதமாகும் பெண்கள் கட்டாயம் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய பொருள் வெங்காயம் விட்டமின் பி6-ம் ,விட்டமின் சி-யும் நிறைந்திருப்பதால் கருத்தரிக்க வேண்டிய காலத்தில் தேவைப்படும் ஹார்மோன்கள் சீருடன் இருக்க பெரிதும் உதவும். கூடவே உடல் எடை குறைப்பிலும் பங்களிப்பதால்,பாலி சிஸ்டிக் ஓவரி நோயில் குண்டான உடலுடனும், மாதவிடாய் சிர்கெட்டு இருக்கும் நிலையிலும் தொடர்ச்சியாக வெங்காயம் எடுத்துவர, மாதவிடாய் சீராகும் வாய்ப்பு உண்டு.
சித்த மருத்துவத்தில் பெண்களுக்கு மாதவிடாய் நோயில் பரிந்துரைக்கப்படும் பல மருந்துகளில் வெங்காயச்சாறு கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். 8% ஃபோலிக் அமிலம் இருப்பதால், கருத்தரிக்கும் சமயம் கருவின் உள்ளுறுப்புக்கள் சரியாக இடம் பெறவும் உதவிடும்.

பெண்ணிற்கு மட்டுமல்ல ஆணுக்கும் இந்த வெங்காயம் கருத்தரிப்பை வேகப்படுத்த பெரிதும் உதவும். அந்த காலத்திலேயே சுமேரியர்கள், கிரேக்கர்களுக்கெல்லாம் இந்த வெங்காயம் வயாகராவாக பயன்பட்டிருப்பதை வரலாறு கூறுகிறது.  நீரிழிவு நோயில், மற்றும் பிற காரணங்களால் ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருப்பின் வெங்காயம் உணவாக பெரிதும் பயன்படும்.
குயிர்சிடின்’- எனும் ஒரு ஃப்லேவனாய்டு (தாவர வேதிப்பொருள்) இந்த வெங்காயத்தில் ரொம்ப உண்டு. இதன் தனிச்சிறப்பு என்னவெனில் இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பை கரைப்பதுடன், இரத்த நாளங்களில் வெடிப்பு இருப்பின் அதையும் சரி செய்து, மாரடைப்பு வராது தடுக்கவும் பயன்படும் என்கிரது இன்றைய அறிவியல். இதே குயிர்சிடின் உடலின் வெளிக் காயங்களில் காயத்தழும்பு(SCAR) ஏற்படாமல் இருக்கவும் உதவுவதாக நவீன அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

தினசரி உணவில் சிறிய வெங்காயம் தினசரி 8-10 குமிழ்கள் தினசரி சாப்பிடலாம். ஒரு நாளைக்குத் தேவையான மாங்கனீசு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம் உப்புக்கள் எல்லாம் இந்த வெங்காயத்தில் இருந்தே 10% வரை கிடைத்து விடும். வெங்காயத்தில் அதிக அளவில் தண்ணீரும் இருப்பதால் தான் உடலுக்குத் தேவையான இந்த உப்புச்சத்து அந்த நீரில் கரைந்து 
இருக்கிறது.

இனி யாரேனும் சுத்த வெங்காயம் அவர்-என்றால், தலை கவிழ வேண்டாம்..மாற்றாய் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள். வெங்காயம் உடலாரோக்கியத்தை தூக்கி நிறுத்துவது போல!

No comments:

Post a Comment