Tuesday, 13 September 2011

குழந்தை வளர்ப்பு : கேள்வி கேட்கும் குழந்தைகள்



எழுதியவர் சம்பத்குமார்.B 

குழந்தைகள் கேள்வி கேட்பது எவ்வளவு நல்ல விஷயம்! அம்மா (பா) ஏன் வானம் நீலமா இருக்கு?  ஸ்விட்ச் போட்டதும் லைட் எப்படி எரியுது? ஏ.டி.எம்மில் எப்ப்டி பணம் வருகிறது? டி.வி எப்படி வேலை செய்கிறது ?... இப்படியெல்லாம் அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டால் எந்த பெற்றோருக்கும் சந்தோஷமாகத்தான் இருக்கும்.மேலும் குழந்தைகளிடம் இருந்து வரும் பெரும்பாலான கேள்விகள் அம்மா நீ ஏன் வேலைக்கு போக மாட்டேங்கற?, அப்பா, நீ ஏன் கறுப்பா இருக்க?, ஏன் அந்த அண்ணாவும், அக்காவும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க?...இது போன்று குழந்தைப் பருவத்தில் மட்டுமல்லை. எல்லாப் பருவத்திலும் அவர்கள் கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். மாற்றங்களை அவர்கள் பார்க்கும்போது இந்த மாதிரியான கேள்விகள் வருகின்றன. கேள்வி எழும் பருவத்தைப் பொறுத்து, அதற்கான பதிலை யாரிடம் கேட்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள். குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குத் தெரிந்த ஒரே தீர்வு பெற்றோர்கள்தான்.

மூன்று வயதுவரை குழந்தைகள் வெளி உலகத்தை அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள். எங்கே போனாலும் அம்மா, அப்பா அல்லது மாமா, அத்தை ஆகியோருடன்தான் போவார்கள். உலகத்தை இவர்களது கண்களின் மூலம்தான் பார்ப்பார்கள். ஆனால் பள்ளியில் பல விதமான மாணவர்கள், டீச்சர்கள், என எல்லாமே வித்தியாசமாக இருக்கும். வித்தியாசத்தைப் பார்க்கும்போது அது ஏன் என்று கேள்வி கேட்கும் ஆர்வம் இயல்பிலேயே அனைவருக்கும் இருக்கும். அதுதான் குழந்தைகளுக்கும் இருக்கிறது.

குழந்தைகள் எவ்வளவு ஏடாகூடமாகக் கேள்வி கேட்டாலும் பதில்சொல்வதைத் தவிர்க்கக் கூடாது. அவர்களுக்குப் புரியும் விதத்தில் ஏதாவது பதிலைச் சொல்ல வேண்டும்.நீங்கள் பதில் சொல்ல வில்லை என்றாலும், அந்தக் கேள்விகளுக்கான பதிலைக் குழந்தைகளே தெரிந்துகொள்வார்கள்.இன்றைய சமுதாயமும்,டிவியும், சினிமாவும் கற்றுத் தந்துவிடும். அதன் விளைவுகள் நன்றாக இருக்காது.  



பெற்றோர்களும் நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு அறிவியல் பூர்வமாக பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவர்கள் அந்த பதிலை வைத்து மற்ற விஷயங்களை அணுகுவர்கள். அவர்களுடன் செலவிடும் நேரம் வெட்டித்தனமாக இல்லாமல் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களுக்குப் புரியும் வகையில் பதில் சொல்ல வேண்டும்.அதேபோல் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது. அப்புறம் அவர்கள் உங்களிடம் கேள்வி கேட்பதைக் குறைத்துக்கொள்வார்கள். ஏடாகூடமான கேள்விகளை வேறு யாரிடமாவது போய்க் கேட்டால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.

குழந்தைகள் பல விஷயங்களை வீட்டிலிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். பேச்சு, நல்ல பழக்கவழக்கங்கள், நல்லது  எது? கெட்டது எது ? என பல விஷயங்களுக்கும் அஸ்திவாரம் போடுவது வீடு என்னும் கோயில்தான். பெற்றோற்கள் குழந்தைகளின் எதிரில் ரொம்பவும் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும். கறுப்பு, சிவப்பு, ஜாதி, மதம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அவர்கள் முன்னிலையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். கோபம் வரும்போதுகூட வார்த்தைகளைப் பார்த்துதான் பயன்படுத்த வேண்டும்.

கேள்விகள் கேட்கும் குழந்தைகள் மட்டும்தான் அடுத்த கட்டத்திற்கு விரைவாகச் செல்லும். ஏன் குழந்தைகள் இப்படிக் கேள்வி கேட்கிறார்கள் என்று புலம்பக் கூடாது. பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை குழந்தை வளமாக  வளரும்.

எழுதியவர் சம்பத்குமார்.B 

No comments:

Post a Comment