எழுதியவர் ஆனந்தி
நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை திமிர்ந்த ஞானச்செறுக்கு கொண்டு எம் தேசத்தில் பெண்கள் திகழ வேண்டும் என்ரு விரும்பிய முண்டாசுக்கவிஞனின் கனவு இன்னமும் அவனின் கவிதை வரிகளுக்குள்ளேயேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆயிரம் உதாரணங்களைக் கூறி பெண்கள் எல்லாம் இன்றைய சமுதாயத்தில் சரி சமமாக எல்லா இடத்திலும் பங்கெடுக்கிறார்கள் என்று நாம் கூறிக் கொண்டிருந்தாலும் இன்னமும் பெண்கள் பற்றிய சமுதாயப் பார்வை மேம்படவேண்டும்.
நவீன மகளிரின் பிரச்சினைகளை எமது தோழமைகளிடமே கட்டுரைகளாய்ப் பகிரச் சொல்லி இதை ஒரு தொடர் போல கொடுக்கலாம் என்ற எமது உத்தேசத்தின் பின்னணியில் வீற்றிருப்பதும் விழிப்புணர்வே என்பதே அறிக
மகளிர் என்றாலே எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல். இதில் நவீன மகளிருக்கென்ன புதிதாய் பிரச்சினை இருந்திடப் போகிறது?? இருக்கிறது..!!
முன்பெல்லாம் ஒரு திருமணம் பேசினாலே பையன் என்ன வேலை செய்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று விசாரிப்பாங்க. இப்போது அப்படியே தலைகீழா மாறிவிட்டது.பெண் எங்கே வேலை செய்கிறாள் மாச சம்பளம் எவ்வளவு வருமென்று தான் முதல் கேள்வியே...! அதிலும் சில மாப்பிள்ளை வீட்டார் ரொம்ப சமத்து...! முதலிலேயே கட் அண்ட் ரைட்-ஆக பெண்ணிடம், " நீ வேலைக்கு போறதெல்லாம் சரி தான்.. அங்கே லோன், கீன் எதாச்சும் பாக்கி வச்சிருந்தா அதெல்லாம் கழுத்துல தாலி ஏறுறதுக்கு முன்ன அடச்சு முடிச்சிரு.. ஏன் சொல்றேன்னா கல்யாணத்துக்கு அப்புறம் மொத்த சம்பளமும் என் கையில குடுத்தாகணும்."ன்னு பேசி விடுவார்கள்.!! என்ன ஒரு தெளிவு..!!? என்ன ஒரு அறிவு.!!? சும்மா சொல்லக் கூடாது.
இக்காலத்து பெண்கள், முதலில் சொந்தக் காலில் நின்றாக வேண்டும். இன்றைய சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு போனால் ஒழிய தங்கள் குழந்தைகளுக்கு நினைத்த கல்வி தகுதி வழங்குவது பெரும்பாலும் சாத்தியம் இல்லை. அங்கே இங்கே நீங்கள் ஒரு சில விதி விலக்குகளை வேண்டுமானால் சுட்டி காட்டலாம். சில பள்ளிகளில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்க வேண்டும், இல்லை என்றால் குறைந்த பட்சம் இருவரும் பட்டதாரிகளாகவாவது (கல்வித் தகுதி உடையவராக) இருக்க வேண்டும் என்கிறார்கள்.
சரி ஒருவழியாக படித்து வேலைக்கும் சென்றாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். அங்கேயாவது நிம்மதி உண்டா?? சுயமாக வண்டி வைத்திருந்து விட்டால் அது வேறு விசயம். இல்லை என்றால், ஷேர் ஆட்டோவிலோ, பஸ்ஸிலோ பயணம் செய்து ஆபீஸ் சென்று அடையும் முன்பு பாதி உயிர் போய் விடும். சரி.. ஒரு வழியாய் ஆபீஸ் போய் சென்று விட்டால் அங்கேயாவது நிம்மதியாய் வேலை செய்ய முடிகிறதா...?? அங்கேயும் 1008 பிரச்சனைகள்.. மேலதிகாரியிடம் திட்டு வாங்காமல் கவனமாக இருத்தல், வழிசல் கேஸ்-களிடம் இருந்து தப்பித்தல்... இத்யாதி விசயங்கள்.
திருமணமான பெண்களுக்கு இன்னுமொரு பிரச்சனை. குழந்தைகளை எங்கே யாரிடம் விடுவது.? முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இருந்தது. பாட்டி, தாத்தாவிடம் விட்டு விட்டு போக முடிந்தது. இப்போதெல்லாம் எங்கே இருக்கிறது கூட்டுக்குடும்பம்.?. அதையெல்லாம் இனி பள்ளி பாடத்தில் படித்து தான் தெரிந்து கொள்ள வேண்டி வரும் போல இருக்கு நிலைமை..! வரும் காலத்தில் மாணவர்கள் பாடப் புத்தகத்தில் தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் பாடம் படிக்கும் போது,"முன்பொரு காலத்தில் கூட்டுக் குடும்பம் என்ற ஒரு அமைப்பு இருந்ததாம்........!!!!" என்று படிப்பார்கள் போலும்.
காலை முதல் மாலை வரை அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்தால் அக்கடா என்று உட்காரத் தோன்றும்.! அப்போது தான் கணவனுக்கு காஃபி, குழந்தைக்கு சிற்றுண்டி, வீட்டுப் பாடம் செய்ய வைத்தல், ராத்திரி டிஃபன் இப்படி வரிசையாய் வேலைகள் வக்கிரமாய் புன்னகை செய்யும். ஒரு சமயம் போல் ஒரு சமயம் மனமும், உடலும் ஒத்துழைப்பதில்லை.. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தான் ஏதேனும் வாக்குவாதம் வந்து விடுகிறது.
வேலைக்கு போகாத பெண்களுக்கோ வேறு மாதிரி பிரச்சினைகள்..! விடிந்தது முதல் அடையும் வரை வீட்டு வேலைகள் விக்ரமாதித்தன் கதை போன்று விஸ்வரூபம் எடுத்து ஆடுகிறது.
இன்னொரு பிரச்சனை பற்றி பார்ப்போம்.. கூட்டுக் கிளிகளாய் இருந்த பெண்கள், வெளி உலகத்தில் விமரிசையாய் வலம் வருவதால் எதிர் படும் பல்வேறு மனிதர்களில் உயரிய குணம் உள்ளவராய் சிலரை எண்ணுவதால் தனெக்கென்று வாய்த்த துணை தன்னிடம் அப்படி இல்லையே..! இப்படி இல்லையே..! என்று ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.இதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறைவதோடு ஏக்கங்களும்,வெறுப்புகளும் உருவாகிற வாய்ப்பு உள்ளது. இதனால் தான் என்னவோ விவாகரத்தும் இன்றைய நாட்களில் பெருகிக் கொண்டே வருகிறது.
இன்னொரு புறம் விளம்பர மாடல் பெண்களின் பேச்சு, நடை, உடை, பாவனைகளை. சில பெண்கள் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு தாங்களும் அப்படி இருந்தால் தான் மதிப்பென்று நினைத்து அதனை பின்பற்றுகிறார்கள்...! இதனால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
இப்படி நம் கண்ணுக்குத் தெரிந்தே நடக்கும் பிரச்சினைகள் கடுகளவு..... கண்ணுக்குத் தப்பியவை காடளவு!!
No comments:
Post a Comment