கர்நாடக சுரங்கத் தொழிலின் தாதாக்களான ரெட்டி சகோதரர்களில் சீனிவாச ரெட்டி மற்றும், ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர். சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தியதாக இவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ யிடம் சிக்கிய இரண்டாவது ரெட்டி இவர்கள். முதல் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜனார்த்தன ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி.
கர்நாடகாவின் அசைக்க முடியாத சக்தியாக இவர்கள் விளங்கிக் கொண்டிருந்தார்கள். யார் இந்த ரெட்டி சகோதரர்கள் ?
தென்னிந்தியாவின் எந்த மாநிலத்திலும் கால் பதிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பிஜேபிக்கு ஆபத் பாந்தவனாக வந்தவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள். ஆந்திராவைச் சேர்ந்த இந்த ரெட்டி சகோதரர்களின் தந்தை ஒரு சாதாரண தலைமைக் காவலராக இருந்து ஓய்வு பெற்றவர். 2000 ஆண்டில், “Ennoble India“ என்ற சீட்டுக் கம்பெனி நடத்தி மக்கள் 200 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டவர்கள் தான் இவர்கள்.
கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகிய மூன்று சகோதரர்கள் போக, ஸ்ரீராமுலு என்று அவர்கள் குடும்பத்தின் அங்கமாகவே கருதப்படும் 4 பேரும் தான் இன்று கர்நாடகாவை ஆட்டிப் படைக்கிறார்கள். 1999ல் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள் ரெட்டி சகோதரர்கள். அதிலிருந்தே, பெல்லாரி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில், பிஜேபியை வெற்றி பெறச் செய்வதில் இவர்களின் பங்கு குறிப்பிடத் தகுந்தது. ரெட்டி சகோதரர்களின் வளர்ச்சி, இரும்பு தாது சுரங்கத்தில்தான் தொடங்கியது. “ஓபாலபுரம் சுரங்க நிறுவனம்“ என்று தொடங்கி, கர்நாடக மாநிலத்தின் எல்லை அருகே ஆந்திராவில் இரண்டு லைசென்ஸுகள் பெற்று உள்ளனர் ரெட்டி சகோதரர்கள். 2005ம் ஆண்டில் ஆண்டுக்கு 5 லட்சம் டன்களுக்கு முதலில் லைசென்ஸ் பெற்றவர்கள், குறுகிய காலத்திலேயே 60 லட்சம் டன்கள் எடுக்க உரிமம் பெற்றார்கள். இது எப்படி சாத்தியமாகியது என்பது புரியாத புதிர். தோராயமாக கணக்குப் பார்த்தால் ஒரு டன் 3000 ரூபாய் விற்கும் நிலையில், ஒரு நாளைக்கு 20,000 டன்கள் எடுக்கும் ரெட்டி சகோதரர்களின் ஒரு நாளைய வருவாய் 6 கோடி. ஆண்டுக்கு 1800 கோடி. இந்த வருமானத்தில்தான், திருப்பதி வெங்கடாசலபதிக்கு 45 கோடி செலவில் கிரீடம் வாங்கி காணிக்கை செலுத்தினர் ரெட்டி சகோதரர்கள். இந்த ரெட்டி சகோதரர்கள் தான் கர்நாடகாவில் எல்லாமே. இவர்கள் அன்றி ஒரு அணுவும் அசையாது. 2010ம் ஆண்டு, தென் மாநிலங்கள் முழுக்க வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட நிலையில் 15 நாட்களாக ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்து, டெல்லியில் “கட்டப் பஞ்சாயத்து“ நடத்தி வந்திருக்கின்றனர். முதலில் கட்டப் பஞ்சாயத்து செய்த ராஜ்நாத் சிங் கின் பஞ்சயாத்தின் படி, ரெட்டி சகோதரர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படும் ஷோபா மற்றும் சில அதிகாரிகளை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சமரசம் எட்டப் பட்டது. தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள இதற்கு சம்மதித்த எடியூரப்பா அதற்கு பின்பு அளித்த டிவி பேட்டியில், முதலைக் கண்ணீர் வடித்து, என்னை நம்பியவர்களை மோசம் செய்து விட்டேன், வெள்ள நிவாரணப் பணிகளை பார்க்காமல் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தியது தவறு, ஆண்டவன் என்னை மன்னிக்க மாட்டார் என்று அரற்றி விட்டு, அப்போதும் கர்நாடக மாநிலத்திற்கு திரும்பி வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்க்காமல், தன் நாற்காலியைக் காப்பாற்றியதற்காக, காஷ்மீர் மாநிலத்திலுள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று நன்றி செலுத்தினார்.
கண்ணீர் வடிக்கும் முதலை
இதற்குப் பிறகாவது, படம் முடிந்து விட்டதா என்றால் இல்லை. பிரச்சினை முடிந்து விட்டது என்று எடியூரப்பா பேட்டி அளித்தார். முடியவில்லை, எடியூரப்பாவை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்று ரெட்டி பேட்டியளிக்கிறார். பார்வையாளர்களின் குழப்பம் அதிகரித்துக் கொண்டே போனது. இந்த நிலையில்தான், களத்தில் இறங்குகிறார் சுஷ்மா சுவராஜ். பிஜேபி தலைவர்களாலேயே முடியாக ஒரு விஷயத்தை, தான் முடித்துக் காட்டுவதன் மூலம், கட்சியில் தன் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள, ரெட்டி சகோதரர்களையும், எடியூரப்பாவையும் தன் வீட்டுக்கு அழைத்து சமாதானம் செய்து வைத்தார். இதற்குப் பிறகு நடந்த க்ளைமாக்ஸ் இருக்கிறதே. அடடா…. எடியூரப்பா ரெட்டிக்கு கேக் ஊட்டும் அந்தக் காட்சி இருக்கிறதே. காணக் கண் இரண்டு போதாது. 2008ல் நடந்த தேர்தலில் பிஜேபி 110 சீட்டுகளை வெல்வதற்கு, கருணாகர ரெட்டி, சோமசேகர் ரெட்டி, ஜனார்தன ரெட்டி, ஆகியோர் எடியூரப்பாவின் ஆட்சியைக் காப்பாற்றியதற்காக அமைச்சர்களாக்கப் பட்டனர்.
ரெட்டி சகோதரர்களின் அரசியல் வளர்ச்சி, அவர்களின் தொழில் ரீதியான வளர்ச்சியை ஒட்டியது. சர்வதேச சந்தையில் இரும்புத் தாது ஏற்றுமதிக்கு ஏற்பட்ட தேவையை கணக்கில் கொண்டு, தாறுமாறாக சுரங்கத் தொழிலில் இறங்கினர் ரெட்டி சகோதரர்கள். கர்நாடகா, ஆந்திரா என்று இரண்டு மாநிலங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
2001-2002 ஆண்டில் தான், ரெட்டி சகோதரர்கள் தங்களின் ஓபாலபுரம் சுரங்க நிறுவனத்தை தொடங்குகின்றனர். ஆன்ஜநேயா என்பவர், ரெட்டி சகோதரர்களின் ஓபாலபுரம் சுரங்க நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராக பணி புரிந்தார். இவர் இந்திய சுரங்கத் துறை மற்றும் தொழிலாளர் நலத் துறை இணைந்து வழங்கும் சுரங்க தொழிலில் நிபுணர் என்ற சான்றிதழை வைத்திருக்கிறார். எதற்காக ஆஞ்சநேயாவை ரெட்டி சகோதரர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால், இது போல மத்திய அரசு, சான்றிதழ் பெற்ற நபர் வேலையில் இருந்தால் தான், இந்தியாவின் சுரங்கச் சட்டங்களின் படி, கனிம வளங்களை வெட்டி எடுக்க முடியும். ரெட்டி சகோதரர்களின் ஓபாலபுரம் கனிம நிறுவனத்தில், அந்தாரா கங்கம்மா கோண்டா என்ற இடத்தில் ஆஞ்சநேயா பணியாற்றி வருகிறார்.
திடீரென்று 9 டிசம்பர் 2009 அன்று, ரெட்டி சகோதரர்களின் சுரங்க நிறுவனத்தை சிபிஐ சோதனையிடப் போவதாக தகவல் வருகிறது. ஆஞ்சனேயாவின் அலுவலகம், ஒரு மலையின் அடிவாரத்தில், இரும்பு ஷீட்டுகளால் கட்டப் பட்ட அலுவலகம். அந்த இடத்தில் தனது உதவியானர் லட்சுமி பிரசாத்துடன் ஆஞ்சனேயா பணியாற்றி வருகிறார். வழக்கம் போல, டிசம்பர் 9 காலை தனது அலுவலகத்துக்கு சென்ற ஆஞ்சநேயாக அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவரது அலுவலகம் இருந்ததற்கான தடயமே இல்லை. அதற்கு முதல் நாள் இரவு, ஒரு கருப்பு நிற ஸ்கார்ப்பியோ வந்தது. அந்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அத்தனையும் அந்த ஸ்கார்ப்பியோவில் ஏற்றப் பட்டன. அந்த அலுவலகத்தில் இருந்த தளவாடங்கள் ஒரு வாகனத்தில் ஏற்றப் பட்டன. ஒரு பொக்லேன் எந்திரம் வந்து, அந்த அலுவலகம் இருந்த இடத்தை அடியோடு மாற்றப் போட்டது.
எரிச்சலடைந்த ஆஞ்சனேயா, நேராக தனது நிறுவனத்தின் எம்டி சீனிவாச ரெட்டி அலுவலகத்துக்கு செல்கிறார். “எனது அலுவலகம் எங்கே, ஆவணங்கள் எங்கே” என்று கேட்கிறார். சீனிவாச ரெட்டி அமைதியாக, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்று கூறுகிறார். ஆனால், ஆஞ்சனேயா, சிபிஐ யிடம் தங்களை போட்டுக் கொடுத்து விடுவாரோ என்று பயந்த ரெட்டி சகோதரர்கள் அவர் குடும்பத்தின் மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்தனர். ஆஞ்சநேயா ஒரு முறை தற்கொலைக்குக் கூட முயன்றார்.
ஆந்திர கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பெல்லாரி மாவட்டம், மிக மிக வளமையான கனிம வளங்களைக் கொண்டுள்ளது. சாதாரணாக அரசு அனுமதித்துள்ள அளவுக்கு கனிம வளத்தை எடுத்தால் 30 ஆண்டுகளுக்கு எடுக்க முடியும். ஆனால் ரெட்டி சகோதரர்கள் இன்று எடுக்கும் அளவில், 6 ஆண்டுகளில் மொத்த வளமும் தீர்ந்து போகும் அபாயம் உள்ளது.
சிறிய வயதில் தன் வீட்டில் ஒரு காவலரின் மகனாக வளரும் பொழுதே, ஜனார்த்தன ரெட்டிக்கு பணத்தின் முக்கியத்துவம் புரிந்தது. பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது. அதன் விளைவாகவே பணத்தின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் நிலைக்கு கொண்டு வந்தார். தொடக்க காலத்தில் ஒரு பத்திரிக்கையை வேறு தொடங்கினார் ரெட்டி. அந்தப் பத்திரிக்கையை தொடங்கியதால், பத்திரிக்கைகளின் மீதான பயம் அறவே போய் விட்டது ரெட்டிக்கு.
இந்த ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்பர், இறந்து போன ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி. இந்த ராஜசேகர ரெட்டி ஓபாலபுரம் கனிம நிறுவனத்துக்கு ஏராளமான உதவிகளைச் செய்தார். அதற்கு கைமாறாக, அவர் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை உடைப்பதற்கு உண்டான அத்தனை உதவிகளையும் செய்தனர் ரெட்டி சகோதரர்கள். இன்று சிபிஐ ரெட்டி சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதற்கு, இதுவும் ஒரு முக்கிய காரணம். ஒரு வேளை, ஆந்திராவில் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை ரெட்டி சகோதரர்கள் எடுத்திருப்பார்களேயானால், இந்த வழக்குகள் வராமல் போயிருக்கும்.
திருட்டுக் குடும்பம்
ரெட்டி சகோதரர்கள் மீது இவ்வளவு தாமதமாக நடவடிக்கை எடுப்பதற்காக காரணம், காங்கிரஸ் கட்சி, எப்படியாவது இந்த ரெட்டி சகோதரர்களை ஜெகன் மோகனுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு, எடுத்த முயற்சிகள் வெற்றி பெறாததே காரணம்.
ஆயிரக்கணக்கான கோடிகளை, சட்ட விரோத கனிம வளக் கடத்தலினால் சம்பாதித்த ரெட்டி சகோதரர்கள் பெல்லாரியில் மிகப் பெரிய சொகுசு மாளிகையை கட்டியுள்ளனர். 60 அறைகளைக் கொண்ட இந்த வீடுகளை 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய தனியார் பாதுகாவலர்கள் பாதுகாத்து வருகின்றனர். ஹெலிகாப்டர் வந்து இறங்க ஹெலிபேடோடு இந்த வீடு கட்டப் பட்டுள்ளது. இருபது ஹெலிகாப்டர்களை வாங்கி அவற்றை வாடகைக்கு விட்டு, ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற புதிய தொழிலை தொடங்கவும் ரெட்டி சகோதரர்கள் உத்தேசித்திருந்தனர்.
கர்நாடகாவில் சுரங்கம் தோண்டுவதற்கான லைசென்ஸ் கிடைத்து, மேற்கொண்டு முதலீடு செய்ய முடியாமல் இருக்கும் சுரங்கங்களைப் பார்த்து அந்தச் சுரங்கங்களையும் ரெட்டி சகோதரர்கள் வளைத்தனர். இரும்புத் தாதை வெட்டி எடுத்து செல்லும் போது, கூடுதலாக எடுப்பதன் மூலம் கொள்ளை லாபம் அடித்தனர். ஒரு சிங்கில் ஆக்சில் லாரியில் 15 டன் கனிமம் ஏற்ற முடியும். ஒரு டபிள் ஆக்சில் லாரியில் 25 டன் ஏற்ற முடியும். அனால் ரெட்டி சகோதரர்கள் சிங்கள் ஆக்சில் லாரியில் 25 டன்களும், டபிள் ஆக்சிள் லாரியில் 50 டன்களும் ஏற்றி 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுகத்துக்கு அனுப்புவார்கள். ஒரு இது போல லாரிகள் ஓவர் லோடு ஏற்றிக் கொண்டு செல்வதை போக்குவரத்துத் துறையினரோ, காவல்துறையினரோ தடுக்க மாட்டார்கள். கர்நாடகத்திலும் தடுக்க மாட்டார்கள், ஆந்திராவிலும் தடுக்க மாட்டார்கள். இவ்வாறு சட்ட விரோதமாக கடத்துவதன் மூலம், ஒரு நாளைக்கு ரெட்ட சகோதரர்கள் ஈட்டும் லாபம் 20 கோடி. ஒரு நாளைக்கு 20 கோடி என்றால் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். நாளைக்கு 10 ஆயிரம் லாரிகள் செல்கின்றன. 10 ஆயிரம் லாரிகளை ஓட்டுவதற்கு, லைசென்ஸ் உள்ள லாரி டிரைவர்கள் கிடைக்காததால் கிளீனர்களை வைத்து லாரிகளை ஓட்டியுள்ளனர்.
எடியூரப்பாவின் நெருங்கிய தோழி ஷோபாவுடன் எட்டி
ஒரு டன் இரும்புத் தாது எடுக்க 400 முதல் 500 வரை செலவு ஆகிறது. அந்த ஒரு டன் இரும்புத் தாது 7000 ரூபாய்க்கு விற்கப் படுகிறதென்றால் இவர்களின் லாபத்தை கணக்குப் போட்டுப் பாருங்கள். ரெட்டி சகோதரர்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்ததென்றால், பிரிட்டிஷார் காலத்தில் உருவாக்கப் பட்ட எல்லைகளை மாற்றும் அளவுக்கு இருந்தது.
கர்நாடக அதிகாரிகள் சோதனைக்கு வந்தால், எல்லைக் கற்கள் ஆந்திர எல்லையை நோக்கி நகர்த்தப் படும். ஆந்திர அதிகாரிகள் வந்தால் கற்கள் கர்நாடகாவை நோக்கி நகர்த்தப் படும். பிரிட்டிஷார் காலத்தில் உருவாக்கப் பட்ட ஒரு எல்லைக் கல், பூமியில் பல அடி ஆழத்தில் புதைக்கப் பட்ட பெரிய கல். அதில் எல்லை எந்த ஆண்டு அளவிடப் பட்டது என்பது போன்ற விபரங்கள் பொறிக்கப் பட்டிருக்கும். அந்தக் கல்லை வெடி வைத்து தகர்த்திருக்கின்றனர் ரெட்டி சகோதரர்கள்.
கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவின் அறிக்கையின் படி, போக்குவரத்துத் துறை, கனிம வளத் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, வணிக வரித் துறை, சுற்றுச் சூழல் துறை, தொழிலாளர் நலத் துறை மற்றும் எடை அளவுத் துறையைச் சேர்ந்த 617 அதிகாரிகளுக்கு, லஞ்சமாக மட்டும், 2 கோடியே 46 லட்சம் கொடுக்கப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.
காந்திக்கு மாலை போடும் திருடன்
அன்னா ஹசாரே போராட்டத்தின் போது, பரிசுத்த ஆவியாக கொதித்தெழுந்து போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த, பிஜேபி கட்சி, ரெட்டி சகோதரர்கள் போட்ட பிச்சையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. ரெட்டி சகோதரர்களின் சுரங்க நிறுவனத்திடமிருந்து, கர்நாடக பிஜேபியின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன்கள் நடத்தும் ட்ரஸ்ட் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுக்கப் பட்டிருக்கிறது. மேலும் பெங்களுரில் 1 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒரு நிலத்தை, ரெட்டி சகோதரர்கள் 20 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். இந்த இரண்டு சம்பவங்களும், நேரடியாக ரெட்டி சகோதரர்களிடமிருந்து பெறப்பட்ட லஞ்சம் என்று லோக் ஆயுக்தா அறிக்கை தெரிவிக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றியும், ஊரில் உள்ள அத்தனை ஊழல்களைப் பற்றியும் குரல் கொடுத்து வழக்கு போடும் சுப்ரமணிய சுவாமி, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சுரங்க ஊழலைப் பற்றி மட்டும் வாயைத் திறக்க மாட்டார்.
ஊழல் என்று வந்தால், காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை. இவ்வாறு, காங்கிரஸ் மற்றும் பிஜேபி இடையே நடக்கும் மோதலால், ஏற்படும் நல்ல விளைவுகளில் ஒன்றுதான் இன்றைய ரெட்டி சகோதரர்களின் கைதும், வழக்குகளும்.
கைது நடவடிக்கை எடுக்கப் பட்ட உடனேயே, பிஜேபி, “ரெட்டி சகோதரர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிப்பார்கள்” என்று அறிக்கை வெளியிடுகிறது. ரெட்டி சகோதரர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிப்பது இருக்கட்டும் அது வரை அவர்களை கட்சியிலிருந்து நீக்க பிஜேபி தயாரா ?
|
Tuesday, 13 September 2011
கெட்டிக் கார ரெட்டிக்களும், பிஜேபியின் இரட்டை வேடமும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment