Tuesday, 20 September 2011

குழந்தைகளின் நல்ல நண்பன் யார் ?



எழுதியவர் சம்பத்குமார்.B 

இந்த கேள்விக்கு விடை தேடினால் வரும் பதில் புத்தகம் என்பது யாரலும் மறுக்க முடியாத உண்மையே.அவர்களிடம் புத்தக வாசிப்பை கொண்டுவருவது எப்படி ? என்பது பற்றி பார்ப்போமா…

புத்தகம் என்றாலே இந்த காலத்துக் குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்களே, அவர்களிடம் பாடப் புத்தகத்தை படிக்கச் சொல்வதே கஷ்டமாக இருக்கிறது. இதில் மற்ற புத்தகத்தை வேறா? என்று கேட்கிறீர்களா? பாடப்புத்தகம் தேர்வு சம்பந்தப் பட்டது. மனப்பாடம் செய்தே ஆக வேண்டிய கட்டாயம். ஆனால் மற்ற புத்தகங்கள் அப்படி இல்லையே. நல்ல பழக்கத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்ற நம்பிக்கையோடும் கொஞ்சம் உற்சாகத்தோடும் முயற்சியை துவங்குங்கள்.



பெற்றோற்களே முதலில் உங்கள் வீட்டில் புத்தக அலமாரியை அமையுங்கள். இதனை அமைப்பதற்காகவே  புத்தகம் வாங்குவீர்கள். வாங்கிவிட்டோமே என்று படிக்க ஆரம்பிப்பீர்கள். அப்பா(மா) படிக்கிறாரே என்று மெல்ல மெல்ல குழந்தைகளும் புத்தகங்களை தொட ஆரம்பிப்பார்கள்.பெற்றோர்கள் ஆபிஸ் டென்ஷன், பிஸினஸ் டென்ஷன், அல்லது வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் என ஏதாவது காரணம் சொல்லி அவர்கள் டிவியில் உட்கார்ந்துவிடுகிறார்கள். உண்மையில் ரிலாக்ஸ், புத்தகங்களில் ஏற்பட வாய்ப்பு உண்டே தவிர டிவியின் மூலம் அல்ல. மேலும் பிஸினஸ் டென்ஷனுக்கு டிவி பார்ப்பதால் டென்ஷனை தள்ளிப்போடலாமே தவிர தீர்வுகள் எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் துறை சார்ந்த புத்தகங்களை படித்தால் தீர்வுகளும் கிடைக்கும், டென்ஷன் நீங்கி தெளிவும் ஏற்படும். எனவே, நீங்களும் டிவிக்கு பதிலாக புத்தகம் படிக்கும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள்.இந்த பழக்கம் அவர்களுக்கும் கண்டிப்பாக வரும்.

அடுத்து, படித்து முடிக்காமல் ஒரு புத்தகத்தை அலமாரியில் வைப்பதில்லை என்று முடிவெடுங்கள். படித்து முடிக்கும் வரை அது கண்ணில் படுகிற இடத்திலேயே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இதையே உங்கள் குழந்தைகளையும் பின்பற்றச் சொல்லுங்கள்.குழந்தைகளுக்கு காமிக்ஸ் புத்தகங்களும் மற்றவர்களுக்கு வயதிற்கு ஏற்றவாறு ஜோக்ஸ் அல்லது புதிர்கள், குட்டிக்கதைகள் அடங்கிய புத்தகங்கள், படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதை எளிதாக்கும்.

அவர்களுக்கு பிடித்த துறையில் வெற்றி பெற்றவர்களின் கதைகளை வாங்கிக் கொடுங்கள். படிக்கும் பழக்கத்தை தொடங்குவதற்கு எளிதாக இருக்கும். உதாரணத்திற்கு கிரிக்கெட் பிடிக்கும் என்றால் சச்சின் மற்றும் திராவிட் ஆகியோரது சுயசரிதைகளை வாங்கிக் கொடுங்கள்.மேலும் குழந்தைகளின் பிறந்த நாளுக்கு புத்தகங்களையே பரிசாக வாங்கிக் கொடுங்கள். ஆடை அந்த நாள் மட்டும்தான் பொலிவை தரும். ஆனால் நல்ல புத்தகங்கள்தான் வாழ்நாள் முழுவதும் பொலிவோடு இருக்கச் செய்யும். மற்ற பொது நிகழ்ச்சிகளுக்கும் நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து பரிசளியுங்கள்.சினிமா தியேட்டர், ஹோட்டல்களுக்கு பதில் குழந்தைகளை புத்தக கடைகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். புத்தகக் குவியலை பார்க்கும்போது நாம் படிக்க வேண்டியது எவ்வளவு இருக்கிறது என்றும் இதை பார்க்கையில் நம் பள்ளிப் பாடங்கள் ஒன்றுமில்லை என்று எண்ணுவார்கள் அல்லது நாம் கற்க வேண்டியது இன்னும் இருக்கிறது என்று எண்ணுவார்கள்.


ஒரு புத்தகத்தை எடுத்ததும் பத்து பக்கமாவது படித்தால்தான் டிவி அல்லது விளையாட்டு அனுமதி என்ற முறை கொண்டு வாருங்கள். ஆரம்பத்தில் அலுத்துக் கொண்டே படித்தாலும் படிப்பதில் உள்ள சுகம் விரைவிலேயே அவர்களுக்கு புரிந்துவிடும்.உணவு நேரம், டிவி நேரம் போல புத்தகம் படிக்கவென்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு பொதுவான நேரம் ஒதுக்குங்கள். எல்லோரும் உட்கார்ந்து படிக்கும் போது குழந்தைகளும் ஆர்வமாகி விடுவார்கள்.இரவு உணவின்போது புத்தகத்தில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறகு அவர்களையும் பகிர்ந்து கொள்ள பழக்கப்படுத்துங்கள்.


எழுதியவர் சம்பத்குமார்.B 

No comments:

Post a Comment