மொழிக்கும் சூழியலுக்கும் உள்ள இருவழி உறவு மேம்படுத்தப்பட வேண்டும். சூழியல் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் போது மொழி பற்றிய சொல்லாடல் அங்கே இடம்பெற்றாக வேண்டும்.
- மொழியியலாளர் டேவிட் கிறிஸ்டல், மொழியின் மரணம் எனும் நூலில் (1)
தமிழ் போன்ற தொல்பெரும் மொழிகளில் சுட்டப்படும் காட்டுயிர்களின் பாரம்பரியப் பெயர்களை வெறும் சொல்லாக மட்டும் கருதக் கூடாது. ஒவ்வொரு பெயரும் ஒரு சிறு இயற்கை வரலாற்று "விவரக்குறிப்பாக"வே அமைந்திருக்கும். பொருள் பொதிந்த காரணப்பெயர்கள் அவை. அந்த உயிரினத்தைப் பற்றிய முக்கிய தகவலை உள்ளடக்கி இருக்கும் சொற்றொடர் என்று கூறலாம். எடுத்துக்காட்டாக, ஒரு பறவையின் தமிழ்ப் பெயர் அதன் இயல்பைப் பற்றிய முக்கியமான தகவலை நமக்குத் தரக்கூடும். அடர்ந்த சோலைக்காடுகளில் வாழும், உலகிலேயே சிறந்த பாடும் புள்ளினம் Shama என்று ஆங்கிலப் பெயர் பெற்ற பறவை. இதன் தமிழ்ப் பெயர் என்ன தெரியுமா? சோலைப்பாடி. அது போலவே mouse deer என்று அறியப்படும் ஒரு சிறு விலங்கினத்தை காடர் பழங்குடியின 'கூரன் பன்னி' என்று குறிப்பிடுகின்றனர். பெரிய மரங்களின் மரப் பொந்துகளில் வாழும், மான் போன்ற இந்த விலங்கு உண்மையில் மான் வகையைச் சேர்ந்ததல்ல. பன்றியினம் என்கின்றனர் உயிரியிலாளர்கள்! அதே போல வங்குகளில் வாழும் சிறிய நரிக்கு குழிநரி என்று பெயர்.
ஆனால் நம் மண்ணில் உள்ள மிகப் பெரிய அவலம் என்னவென்றால் இந்தப் பெயர்கள் - பறவைகள், பாலூட்டிகள், பாம்புகள் - எல்லாமே இன்று வழக் கொழிந்துகொண்டிருக்கின்றன. உயிரினங்களின் பெயர்கள் மட்டுமல்ல...அவை சார்ந்த பழ மொழிகள், சொற் றொடர்கள் என பல்வேறு அம்சங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை காலனி ஆட்சியின் ஒரு விளைவுதான். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் இயற்கை வரலாற்றுத் துறையில் சிறப்பான பணியாற்றி இருக்கின்றார்கள். மேலை இயற்கை இயலாளர்கள் பல முக்கியமான பதிவுகளை செய்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் வசதிக்கேற்ப, அவர்கள் நோக்கில் இந்திய காட்டுயிர்களுக்கு பெயர்களைக் கொடுத்து விட்டார்கள். Gaur எனப்படும் காட்டெருதை bison என்றனர். Bison என்றால் எருமை என்று பொருள். ஆனால் முதுமலை போன்ற நம்மூர் காடுகளின் வாழும் காட்டெருது எருமை இனத்தை சேர்ந்ததல்ல. இது காட்டு மாடு. அதேபோல மழைக்காடுகளில் வாழும் மந்தியை liontailed macaque என்றனர். இதன் வால் சிங்கத்தின் வாலைப் போல் இல்லாமலிருந்தும் சிங்கவால் குரங்கு என்ற பெயர் மட்டும் நிலைத்து விட்டது. அதன் தமிழ்ப்பெயரான சோலைமந்தி மறைந்துவிட்டது.
தமிழ்நாட்டிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஆங்கிலேயர் வருவதற்கு முன் தமிழில் பெயர்கள் இருந்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த மூலப் பெயர்கள் மறக்கப்பட்டு, பிரித்தானியர்கள் நம் காட்டுயிர்களுக்கு வைத்த ஆங்கிலப் பெயர்களை தமிழில் மொழிபெயர்த்து பொருத்தமில்லாத புதிய பெயர்களை நாம் உயிரினங்களுக்கு சூட்டி விட்டோம். ரசு ஆவணங்களிலும், வனத்துறையின் வெளியீடு களிலும், பள்ளிப் புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் இந்த மொழி பெயர்ப்பு பெயர்களே இடம்பெற்று விட்டன. எடுத்துக் காட்டாக, king cobra என்று அறியப்படும் உருவிலும் நீளத்திலும் பெரியகாட்டில் வசிக்கும் பாம்பின் தமிழ்ப் பெயர் கருநாகம். இதை மறந்து விட்டு, ஆங்கிலப் பெயரைதமிழாக்கம் செய்துராஜநாகம் என்று உயிர்க் காட்சி சாலை களிலும் எழுதி வைத்துள்ளனர். அருவி என்ற அழகிய சொல் மறைந்து நீர்வீழ்ச்சி நிலைத்துவிட்டதுபோல இது இருக்கிறது.
இந்தப் புதிய ஆங்கில மொழிபெயர்ப்புப் பெயர்கள் பெருங்குழப்பத்தை உண்டாக்குகின்றன. வேர்களை இழந்த பெயர்களை வைத்து நம் சொல்லாடலைத் தொடருவதும் காட்டுயிர் பாதுகாப்பு பற்றி பேசுவதும் ரொம்பவே சிரமம். தமிழ்நாட்டில் காட்டுயிர் பாதுகாப்பு ஒரு மக்கள் இயக்கமாக உருவாகததற்கு இது ஒரு காரணம் என்று சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். சுற்றுச்சூழல் பற்றிய கரிசனம் மேட்டுக்குடியினருக்கே உரித்தானது என்ற மாயை உருவானதும் இதனால்தான்.
அண்மையில், நமது பள்ளிகளில் சுற்றுச்சூழல் ஒரு பாடமாக வைக்கப் பட்டிருக்கின்றது. இந்தத் துறையில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் பாரம்பரிய தமிழ்ப்பெயர்களை பயன்படுத்துவது அவசியத் தேவையாகின்றது. உயிரினம் சார்ந்த தமிழ்ப் பழமொழிகள், உவமைகள், உருவகப்படுதல்கள் இவற்றை நாம் பயன்படுத்தினால், புறவுலகையும் அதில் வாழும் உயிரினங்களையும் நம் மாணவர்கள் புரிந்து கொள்வது எளிதாகும். உயிரினங்களின் பெயர்கள் நம் மொழிவளத்தின் ஒரு பரிமாணம். காட்டுயிர் பராமரிப்பு வளர, மக்களிடைய அந்தக் கரிசனம் பரவுவதற்கு அவை பள்ளிகளில், ஊடகங்களில் பரவலான புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
கிராம மக்களிடையே இந்தப் பெயர்கள் இன்னும் வழக்கிலிருந்தாலும், நாளிதழ்களிலும், தொலைக் காட்சிகளிலும் இவை பயன்படுத்தப் படுவதில்லை. வயற்புறம், காடுகளில் காணப்படும் உயிரினங்கள் பற்றிய மக்களின் பட்டறிவு பதிவு செய்யப்படாமல் மறைந்து போகின்றது. இந்த அறிவும் அதன் உள்ளடங்கிய சொற்களும் மீட்கப்பட்டு புழக்கத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும். இன்று நாம் இந்த தமிழ்ப் பெயர்களிலிருந்து வெகு தூரம் சென்றுவிட்டோம். 'அலையாத்தி காடுகள்' என்ற அர்த்தம் பொதிந்த பெயரை விட்டு மாங்குரோவ் காடுகள் என்கிறோம். அது மட்டுமல்ல. புறவுலகைச் சார்ந்த பல பாரம்பரிய கருதுகோள்களையும் காற்றில் பறக்க விட்டுவிட்டோம். வெப்ப பூமியான தமிழ்நாட்டின் பருவ காலங்களை மக்கள் 'இளவேனில், முது வேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி' என ஆறு வகைகளாக பிரித்திருந்தினர். இது வடஇந்திய பருவ காலங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இவற்றை மறந்துவிட்டு, இன்று மேலை நாட்டிலுள்ள நான்கு பருவங்களின் அடிப்படையில் காலக் கணக்கீடு பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
காட்டுயிர் சார்ந்த தமிழ்ப்பெயர்களை பட்டியலிட இதுவரை சீரிய, ஒன்றிணைந்த முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இயற்கையியலாளர் மா. கிருஷ்ணன் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் எழுதிய தமிழ்க் கட்டுரைகளில் பாரம்பரிய தமிழ்ப் பெயர்களை பயன்படுத்தியுள்ளார். 1954இல் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தில் பல பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இன்றைய தமிழ் இலக்கிய படைப்புகளில் சில எழுத்தாளர்கள் பாரம்பரிய பெயர்களை பதிவு செய்திருக்கிறார்கள். பெருமாள் முருகன் எழுதிய கூளமாதாரி (2), சோ. தர்மன் எழுதிய கூகை (3) போன்ற நாவல்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்,. கடல்வாழ் உயிரினங்களின் பெயர்கள் பலவற்றை ஜோ டி குருஸ் தனது ஆழி சூழ் உலகு (4) என்ற நாவலில் பதிவு செய்திருக்கின்றார்.
தமிழ்நாட்டில் நாம் எளிதாகக் காணக்கூடிய சில பாலூட்டிகளின் பெயர்கள்கூட இன்று புழக்கத்தில் இல்லை. டால்ஃபினின் தமிழ்ப் பெயர் ஓங்கில் என்பதையும், டுகாங் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் மற்றொரு அரிய கடல்வாழ் பாலூட்டியின் தமிழ்ப்பெயர் ஆவுளியா என்பதையும் ராமேஸ்வரம் சென்றிருந்தபோது மீனவர்களிடம் பேசியபோது தெரிந்து கொண்டேன். பெயர்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதன் இயல்பு சார்ந்தும் பல தனித்துவ சொற்கள் உண்டு. யானையின் பிளிறல், வேங்கையின் உறுமல், நரியின் ஊளை, மயிலின் அகவல் என. மனிதருக்கு வெகு அருகில் நட்புறவுடன் வாழும் சில உயிரினங்களுக்கு 'பிள்ளை' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது - அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை என. இது அவற்றுடனான நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய சொல்லாடல் மீட்கப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் பற்றிப் விவாதிக்க தமிழில் துறைச்சொற்கள் உருவாக் கப்படவில்லை. இதனால்தானோ என்னவோ சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் விவாதம் ஒன்றையும் நமது இதழ்களில் காண முடிவதில்லை. நதிகள் வறண்டுவிட்டது ஏன் என்ற கேள்வியை யாரும் எழுப்பவில்லை. சங்கப் பாடல்களில் இயற்கையைப் பற்றி, தாவரங்கள், புள்ளினங்கள், விலங்குகள் பற்றிய துல்லியமான, கவின்மிகு குறிப்புகளை காணும்போது, தற்காலத் தமிழில் அது இல்லாதது புலப்படுகின்றது. தமிழ் இலக்கிய மரபில், ஏதோ ஒரு காலகட்டத்தில் புற உலகிற்கும் நமக்கும் இருந்த பாரம்பரிய பிணைப்பு அறுபட்டு போய் விட்டது என்பது புரிகின்றது.
தமிழ் மக்களிடையே, சுற்றுச்சூழல், பல்லுயிரியம் பற்றிய விழிப்பை உருவாக்க காட்டுயிர் சார்ந்த பாரம்பரிய பெயர்களை, சொற்றொடர்களை பயன்படுத்துவது அவசியம். இந்த மொழிவளம் உயிரூட்டப்பட்டு துறைச் சொற்கள் மீண்டும் புழக்கத்தில் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் சூழியல் சார்ந்த கருதுகோள்களை எளிய தமிழில் வெளிப்படுத்த முடியும். இதன்மூலம் சூழியல் சீர்கேட்டுக்கும் வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்துக்கும் பல்லுயிரியத்துக்கும் உள்ள பிணைப்பு ஆகியவற்றை சாமானிய மக்களும் அறிந்து, உணர்ந்து செயல்பட முடியும். அப்போதுதான் சுற்றுச்சூழல் பற்றிய கரிசனம் தமிழ்நாட்டில் ஒரு மக்கள் இயக்கமாக உருவாக முடியும்.
சான்றுகள்:
1. கிறிஸ்டல் டேவிட், Language Death (மொழியின் மரணம்), கேம்ப்ரிட்ஜ் யுனிவெர்சிட்டி பிரஸ், 2000.
2. பெருமாள் முருகன், கூளமாதாரி, தமிழினி பதிப்பகம், 2000.
3. தர்மன்.சோ, கூகை, காலச்சுவடு பதிப்பகம், 2004.
4. ஜோ டி குருஸ், ஆழிசூழ் உலகு, தமிழினி பதிப்பகம், 2004.
(கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை)
No comments:
Post a Comment