Tuesday, 6 September 2011

திண்ணை கிளினிக் -ஆசிரியர் மூலம் ஏன் வருது


 திடீரென்று நேற்று விழுந்த சிறு மழையில் பூமி குளிர்ந்து கிடந்தது.  தெருவோரம் கோடை வெயிலில் காய்ந்து கருகிக் கிடந்த செடிகள், லேசாக உயிர் வந்ததைப் போல புன்னகைத்தன.

திண்ணையில் வந்து அமர்ந்த வைத்தியர், மெல்ல உயிர்த்தெழும் தாவரங்களின் புன்னகையில் தன்னை மறந்து லயித்திருந்தார்.

கோடையின் முடிவில் வான் தரும் கொடையாக  வந்து விழும் இத்தகைய மழைதான் உலகை உயிர்க்க வைக்கிறது.  அதனால்தான், கோடையில் பெய்யும் மழையை முன்னோர்கள் அமுதத்தோடு ஒப்பிட்டார்கள்.

மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்.. இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்.  உலகம் செழிக்க மழை தேவை என்பதை ஒரு கவிஞன் இப்படி அழகாகப் பாடிச் சென்றான்.  அதுவும் கோடையின் முடிவில் பெய்யும் மழை இருக்கிறதே.. உண்மையிலேயே உலக உயிர்களுக்கு உயிரூட்டும்  அமுதம்தான்.

வைத்தியரின் சிந்தனை கோடை மழை குறித்த பெருமித நினைவில் கரைந்து கொண்டிருந்தது. 

எதிரில் நெடு நேரமாக வந்து நின்று கொண்டிருந்த அங்குச்சாமியை கவனித்த வைத்தியர், தன் சிந்தனையை சற்று கலைத்து, அவரை திண்ணையில் அமரும்படி வைத்தியர் சைகை காட்டினார். 
ஆனால் அவர் அமராமல் நின்று கொண்டிருந்ததைக் கண்ட  வைத்தியர், அட உட்காருன்னா உட்காரவேண்டியதுதானேப்பா.. ஏன் இப்படி நின்னுக்கிட்டே இருக்கே... என்று கேட்டார்.
எனக்கென்ன உட்காரக்கூடாதுன்னு விரதமா வைத்தியரய்யா... உட்கார முடியாமத்தான் நிக்கிறேன்.. என்று சங்கடத்தில் நெளிந்தவராய்ச் சொன்னார் அங்குச்சாமி.

அப்படி என்னப்பா உட்காரக்கூட முடியாத அளவுக்கு அவசரமான காரியம்..


வைத்தியரின் மெல்லிய கிண்டல், அங்குசாமியின் சங்கடத்தை மேலும் அதிகரிப்பது அவர் முகத்தில் தெரிந்தது.

அவசரமெல்லாம் ஒண்ணுமில்லை வைத்தியரய்யா.. அவஸ்தைதான்..


மலம் வெளியேறும்போது எரிச்சலோட ரத்தம் வெளியாவுது.. மலம் சரியா போகமாட்டேங்குது.. மலத்துவாரத்துல புண் மாதிரி இருக்கு..   அதுனாலதான் உக்கார முடியல.. உக்கார மட்டுமா.. எதுவுமே முடியலை.. அதுக்கு ஒரு மருந்து சொல்லுவீங்கன்னுதான் உங்கக்கிட்டே வந்திருக்கேன்..

வைத்தியருக்கு அங்குச்சாமியின் அவஸ்தையும், வேதனையும் இப்போது நன்றாகவே புரிந்தது.

இப்பல்லாம் அடிக்கடி தண்ணியடிக்கிறியோ...


வைத்தியரின் சட்டென்ற கேள்விக்கு பதில் கூற முடியாமல் நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்துகொண்டார் அங்குசாமி...

இந்த மூலம் ஏன் வருது தெரியுமா..

ராவுல அளவுக்கு அதிகமாக கடினமான உணவ கண்ணா பின்னான்னு சாப்பிடுறது.. கண்டமேனிக்கு தண்ணியடிக்கிறது.. அதுக்கு சைடுக்கு எண்ணெயில பொரிச்ச பண்டங்கள காரசாரமா சேத்துக்குறது.. 

அதும் வெயில் காலத்துல இப்படியெல்லாம் உள்ள போச்சின்னா.. அது வேகத்த இப்படித்தான் காட்டும்..

சாப்பிட்ட உணவு சரியா செரிக்காம.. வயிறு மந்தமாகி மலச்சிக்கல் உண்டாகி, மலத்த வெளியேத்த முடியாம வாயு சீற்றமாகி ஆசன வாயில வீக்கத்தையும் புண்ணையும் உண்டாக்குது.. அது காலப்போக்குல பல தொந்தரவுகள கொடுக்க ஆரம்பிக்குது... அளவான உணவும், மிதமான சுவையும் எப்போது உடம்புக்கு தீங்கு செய்யாது.. ஹம்ம்ம்.. அதத்தான் யாரும் இப்ப கடைப்பிடிக்கிறதில்லையே..

சரி... இனிமேலாவது நாக்கு ருசிக்காக இப்படி கண்ட பொருளையும் வாங்கி சாப்பிடாத.. இப்ப நான் சொல்றத கேட்டுக்க..


கோவைக்காய்     - 5


சின்ன வெங்காயம்    - 5


சீரகம்        - 1/2 தேக்கரண்டி


சோம்பு        - 1/2 தேக்கரண்டி


மணத்தக்காளி கீரை    - 1 கைப்பிடி


கொத்தமல்லி இலை    - சிறிதளவு


கறிவேப்பிலை    - சிறிதளவு


முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி 1 நாளைக்கு ரெண்டு வேளைன்னு 10 நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வா.. 

மூலத்தோட வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும்.

அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வா.. அப்புறம் மூலம் உன் பக்கமே திருப்பிப்பாக்காம ஓடிப்போயிடும்..


வைத்தியர் சொன்ன மருந்தைக் கேட்கும்போதே அங்குசாமிக்கு வேதனை குறைந்தது போலிருந்தது.  சற்று ஆறுதலுடன், வைத்தியருக்கு நன்றி கூறிவிட்டு நடந்தார் அங்குசாமி.

No comments:

Post a Comment