அண்ணா ஹசாரே தனது சொந்தக் கிராமமான ராலேகான் சித்தியில் மாபெரும் புரட்சியை சாதித்திருப்பதாக ஒரு பிரமை உருவாக்க்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல என்பதை வினவு செய்தியாளர்கள் அங்கே சென்று அறியத் தருகிறார்கள்.
ஆகஸ்டு புரட்சி – அண்ணா ஹசாரே கடந்த ஆகஸ்டு மாதம் தில்லி ராம் லீலா மைதானத்தில் நடத்திக் காட்டிய உண்ணாவிரதக் கூத்தினை ஆங்கில ஊடகங்கள் இப்படித்தான் வருணிக்கின்றன. காந்தியத்தை நெம்பித் தூக்கி வந்து இந்திய அரசியல் அரங்கின் மையத்தில் வைத்தார் அண்ணா ஹசாரே என்று அனைத்திந்திய ஊடகங்கள் தொடங்கி இலக்கிய பிரிண்டிங் மிசின் ஜெயமோகன் வரை மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள்.
பழைய பேப்பர்கடையில் சேர்ந்திருக்கும் சில கோடி டன் அச்சிடப்பட்ட செய்திக்காகிதங்கள், கார்ப்பரேட் ஊடகங்களுக்கு கிடைத்த பல கோடி ரூபாய் விளம்பர வருவாய், நாடு தழுவிய அளவில் அதிகரித்த மெழுகுவர்த்தி மற்றும் தேசியக்கொடி உற்பத்தி போன்ற உடனடி விளைவுகளைத் தவிர, மேற்படி புரட்சி சாதித்தது என்னவென்பதை நாம் அறியோம்.
ஊழல் மட்டுமல்ல, விவசாயிகள் தற்கொலை, விவசாய நிலம் பறிப்பு, தனியார்மய – தாராளமயக் கொள்ளைகள், சாதிவெறி வன்கொடுமைப் படுகொலைகள், இந்து மதவெறி பாசிசம் போன்ற பல்வேறு பிரச்சினைகளும் இணைந்ததுதான் நமது நாட்டு மக்களின் அரசியல் சமூக வாழ்க்கை. ஹசாரே எனும் மீட்பர் இந்த நாட்டின் மற்றப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் என்ன கருதுகிறார்? குஜராத்தில் மோடி அமல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களும், அவரது ஊழலற்ற ஆட்சியும் தனக்குப் பிடித்திருப்பதாக ஹசாரே சொன்னபோதுதான், ஆர்.எஸ்.எஸ். மண்டைகள் கருப்புத் தொப்பிகள் மட்டுமின்றி காந்தித் தொப்பிகளும் அணியக்கூடும் என்ற உண்மை பலருக்குத் தெரிய வந்தது.
ஹசாரேயின் பேச்சுகளைக் கேட்டு அவரைப் புரிந்து கொள்வதை விட, அவருடைய ஊரைப் பார்த்து, அதிலிருந்து அவரைப் புரிந்து கொள்வது எளிதல்லவா? காந்திய வழிமுறைகளைக் கையாண்டு அந்தக் கிராமத்தையே ஒரு மாதிரி கிராமமாகவும் சொர்க்கபுரியாகவும் மாற்றியிருக்கிறார் அண்ணா ஹசாரே என்றும், ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும் அறம் சார்ந்த தகுதியை அதுதான் அவருக்கு வழங்கியிருப்பதாகவும் அவருடைய பிரச்சாரகர்கள்முழங்கி வருவதால், அந்த மெக்காவைத்தான் பார்த்துவிடுவோமே என்று யாத்திரை கிளம்பினோம்.
அண்ணா ஹசாரே டெல்லியிலிருந்து ராலேகான் திரும்பிய ஐந்தாவது நாள், நாங்கள் அங்கே சென்று சேர்ந்தோம். ராலேகான் சித்தி மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டதைச் சேர்ந்த கிராமம். சரியான பேருந்து வசதி இல்லை. இருபத்தோராம் நூற்றாண்டின் காந்திய சொர்க்கம் பற்றி சொன்னவர்கள் எவரும் மேற்படி சொர்க்கத்துக்கு ஒழுங்கான பேருந்து வசதியில்லை என்பதைச் சொல்லவில்லை. கிராமத்தில் கால் வைத்ததும் நாங்கள் கண்டது நேரடி ஒளிபரப்பு வசதிகள் கொண்ட அதிநவீனமான நான்கு மீடியா வேன்களைத்தான். அண்ணா ஹசாரேவின் அங்க அசைவுகள் அனைத்தையும் இந்திய நடுத்தர வர்க்கம் தரிசிக்க உதவும் ஜனநாயகக் கடமையை ஆற்றும் பொருட்டு அவை நின்று கொண்டிருந்தன. உள்ளே வடநாட்டு ஓட்டுநர்களும் செய்தியாளர்களும் சாவகாசமாக பாலிவுட் குத்துப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஊரின் முகப்பில் ஐந்தாறு கடைகளே இருந்தன. தேநீர்க்கடைக்குச் சென்றோம். உடன் வந்த தோழர் மராத்தியில் தேநீருக்குச் சொல்லிக் கொண்டிருந்தபோது காணக்கூடாத காட்சி ஒன்றைக் கண்டோம். கடையின் முன்னே போடப்பட்டிருந்த பெஞ்சில் ஒரு முதியவர் ரசித்து ரசித்து பீடி இழுத்துக் கொண்டிருந்தார். என்னது..? சொர்க்கத்திலேயே திருட்டு தம்மா… என்கிற ஆச்சர்யம் தாக்க, எமது புகைப்படக் கலைஞர் கேமராவைப் பிரிக்க ஆரம்பித்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் சட்டெனச் சுதாரித்து பீடியைத் தூர எரிந்தார். தான் புகைப்பிடித்ததை அண்ணா ஹசாரேவிடம் சொல்லி விடுவீர்களா என்று எங்களை அச்சத்தோடு வினவினார். இல்லையென்று சமாதானப்படுத்தினோம். “இந்த கிராமத்தில் புகைப்பழக்கமோ குடிப்பழக்கமோ இல்லை; அவற்றை விற்பதும் இல்லையென்று சொன்னார்களே..?” என்று நாங்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமலேயே இடத்தைக் காலி செய்தார். ‘நிம்மதியா ஒரு பீடி இழுக்க முடியாமல்’ கெடுத்துவிட்ட எங்களை அவர் சபித்திருக்கக்கூடும்.
நாங்கள் கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை வியாபாரம் ஆவதாக’ சொன்னார். அதுவும் அண்ணா தொலைகாட்சியில் பிரபலமான பின் நிறைய பேர் கிராமத்துக்கு வருவதாகவும், அதனால்தான் இந்தளவுக்கு வியாபாரம் சூடுபிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அங்கே மக்களின் நலவாழ்வை முன்னிட்டு அண்ணா தடை செய்திருப்பதாக சொல்லப்படும் புகையிலை, சிகரெகட் போன்றவற்றை வெளியாருக்கு தெரியும்படி விற்பதில்லை. உள்ளூர்காரர்களுக்கு மட்டும் மறைவாக விற்பதை புரிந்து கொண்டோம். ‘பீடி குடிப்பது பிரச்சினையில்லை; ஆனால், அது வெளியாருக்குத் தெரிந்து குடிப்பதுதான் பிரச்சினை’ என்கிற வினோதமான ஒழுக்கநெறியை வியந்து கொண்டே கிராமத் தகவல் மையம் செல்வதற்கான வழியை கடைக்காரரிடம் விசாரித்துக் கொண்டோம்.
ஏற்கனவே தகவல் மையம் நோக்கி கோட்சூட் அணிந்த மாணவர் பட்டாளம் ஒன்று சென்று கொண்டிருந்தது. மிகத் துடிப்புடன் காணப்பட்ட ஆஷிஷ் என்கிற மாணவரிடம் பேச்சுக் கொடுத்தோம். தாங்கள் பூனாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்றும், எம்.சி.ஏ. படித்துக் கொண்டிருப்பதாகவும், தொழிற்சாலை சுற்றுலாவாக இங்கே வந்திருப்பதாகவும் சொன்னார். தொழிற்சாலைகளே இல்லாத ராலேகான் சித்திக்கு தொழிற்சாலை சுற்றுலாவா? ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆற்ற வந்துள்ளீர்கள் என்று விசாரித்தோம்.
ஒரு குறும்பான புன்னகையுடன் எம்மை நோக்கியவர், “இதெல்லாம் சும்மா தமாஷ் தலிவா… ஒரு ஜாலி ட்ரிப் அவ்வளவுதான்” என்றார்.
“அண்ணா ஹசாரேவைப் பார்த்தீர்களா?” என்றோம்.
“ஆங்… பார்த்தோமே… எங்களுக்கு நிறைய நல்லொழுக்க போதனைகள் எல்லாம் கொடுத்தாரே…” என்றார்.
“ஓ… அப்படின்னா நீங்க இன்றிலிருந்து ஒரு காந்தியவாதி ஆகப் போகிறீர்களா?” என்று சிரிக்காமல் கேட்டோம்.
எங்களை முறைத்தவர், “ஆர் யூ க்ரேஸி? இதெல்லாம் சும்மா ஒரு ஜாலி; வந்தமா என்ஜாய் பண்ணமா; போனமான்னு இருக்கணும். ரொம்ப சீரியஸா எடுத்துக்கக் கூடாது” என்று ஒரு வியாக்கியானமும் கொடுத்தார்.
ஆங்கில சானல்களில் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை ஆதரித்து மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியவர்கள், காமெராவின் முன் ‘பாரத்மாதா கீ ஜே’ என்று கோஷமிட்டவர்கள், இதோ எங்களுடன் பேசும் ஆஷிஷ்.
“சரி… அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் ஊழலை ஒழித்து விடும் என்று நம்புகிறீர்களா?” என்று கேட்டோம்.
“இல்லை..” என்று சிரித்தார். ஏனென்று கேட்டோம்.
“பாஸ்… திஸ் ஈஸ் இண்டியா. நம்ம காலத்துலேன்னு இல்லைங்க; நம்ம பேரன் பேத்தி காலத்திலும் ஊழல் இருக்கும். அப்பவும் ஒரு ஹசாரே வருவார். டி.வி.ல பரபரப்பா வரும். எல்லாம் இப்படியே நடக்கும். ஆனா, ஊழல் மட்டும் ஒழியாது” என்று முடித்தார்.
“அப்படின்னா அண்ணா ஹசாரேவின் போராட்டத்தால் என்னதான் பயன்?” என்றோம்.
“இப்பப் பாருங்க, இவர் ஒரு பெரியாள் ஆகியிருக்கார். அரசியல்வாதிங்க அப்டியே இவரைப் பார்த்து மிரள்றாங்க. இப்படி ஒரு விஷயம் இருக்கணும் பாஸ். அப்பத்தான் சரியா இருக்கும். அரசியல்வாதி இருக்கான், ஊழல் இருக்கு, லஞ்சம் இருக்கு… அப்படியே அண்ணாவும் இருந்துட்டுப் போகட்டுமே..?”
இந்த தத்துவத்தை மென்று செரிப்பதற்குள் தகவல் மையம் எதிர்ப்பட்டது. அது மூன்று பெரிய ஹால்களைக் கொண்ட ஒரு கான்க்ரீட் கட்டிடம். உள்ளே அண்ணா ஹசாரே பல்வேறு தலைவர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், ராலேகான் சித்தியில் நடந்துள்ள பணிகளின் புகைப்படங்களும் அழகாக வைக்கப்பட்டிருந்ததன. ஏர் சுமக்கும் விவசாயி, மண்வெட்டி வேலை செய்யும் விவசாயி, கிராம பஞ்சாயத்தின் மாதிரி வடிவம் போன்றவற்றை அழகான பொம்மைகளாக வடித்து வைத்திருந்தனர். ஏசி குளிரூட்டப்பட்ட அறைக்குள் விவசாயம் சிலுசிலுவென்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
வந்திருந்த மாணவர்கள் இந்தப் பொம்மைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். விவசாயம் பற்றியும் அதில் மக்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள், கடன்கள், தற்கொலைகள், அழிந்துப் போன குடும்பங்கள் என்று எதைப் பற்றியும் கேள்விப்பட்டிராத அவர்கள், ராலேகான் விஜயம் குறித்து பீற்றிக் கொள்ளும் பொருட்டு, தங்கள் வருகையை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டியது அருவருப்பாக இருந்தது.
நாங்கள் தகவல் மையத்தின் பொறுப்பில் இருந்தவரிடம் உரையாடினோம். கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் இருப்பதாகவும், விவசாயமும் விவசாயம் சார்ந்த கூலி வேலைகளுமே பிரதானம் என்றும் குறிப்பிட்டார். கிராமத்தில் தொன்னூறு சதவீதமானவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்றும் தெரிவித்தார். அருகிலேயே அண்ணா ஹசாரே நிர்மானித்த உறைவிடப் பள்ளி ஒன்று இருப்பதாகவும், ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் சொன்னார். காந்திய சொர்க்கத்திலும் காசுக்குத்தான் கல்வி எனும் யதார்த்தம் முகத்திலறைந்தது.
மேற்படிப்பு பற்றி விசாரித்தோம். கிராமத்தில் இருந்து சுமார் பதினைந்து பேர் வரை டாக்டர்களாகி இருக்கிறார்கள் என்றும், இவர்கள் அனைவருமே இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் என்றும் சொன்னார். குறைந்த மதிப்பெண் பெறும் வசதியான வீட்டுப் பிள்ளைகள் ரூபாய் மூன்று – நான்கு லட்சங்கள் கொடுத்து பொறியியல் படிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். அகில இந்திய மட்டத்தில் லஞ்ச ஊழலை எதிர்த்து வீரச்சமர் புரிந்து கொண்டிருக்கும் அண்ணாவின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த “தகுதி”யற்ற மாணவர்கள் பணம் கொடுத்து சீட் வாங்குகிறார்களாம். அண்ணாவின் அகராதிப்படி இது லஞ்ச ஊழலில் சேருமா, கட்டணத்தில் சேருமா அல்லது நன்கொடையா என்று தெரியவில்லை.
அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போரில் அவரோடு கைகோர்த்து நிற்கும் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் பலர் இட ஒதுக்கீடு எதிர்ப்பில் முன்நின்றவர்கள். அவர்கள் எத்தனை பேருக்கு ராலேகான் சித்தியில் இருந்து மருத்துவர்களாகியிருப்பவர் எல்லாம் இடஒதுக்கீட்டின் மூலம் வந்தவர்கள் என்பது தெரிந்திருக்கும்? தொடர்ந்து விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றியும் கேட்டோம். குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் மழையை நம்பித்தான் விவசாயம் செய்து வருகிறார்கள் என்றும், அவர்களே விவசாயக் கூலிகளாகவும் இருப்பதாகச் சொன்னவர், ஆண்களின் கூலி ரூ.200 என்றும் பெண்களின் கூலி ரூ.150 என்றும் தெரிவித்தார் தகவல் மையத்தின் பொறுப்பாளர்.
அதே போல், ராலேகான் சித்தியில், உயர்சாதி மராத்தாக்கள் சிலரிடம் மட்டுமே நிலம் குவிந்திருப்பதும், தலித்துகளான மகர்கள் பெரும்பாலும் நிலமற்றவர்களாக இருப்பதும் தெரியவந்தது. மராத்தாக்களிலேயே சில குடும்பங்களிடம் குறைவாகத்தான் நிலம் இருந்தது. இதுதான் அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியில் நிலைநாட்டியிருப்பதாகச் சொல்லப்படும் சமத்துவத்தின் உண்மையான யோக்கியதை. ‘அண்ணா வருவதற்கு முன் ராலேகான், வந்த பின் ராலேகான்’ என்று வருபவர்களுக்கெல்லாம் தகவல் மையத்தில் பிலிம் காட்டுகிறார்கள். ஆனால், ஒரு குழி நிலம் கூட மறுவிநியோகம் செய்யப்படவில்லை என்பதே உண்மை. அண்ணா வருமுன் எப்படி இருந்ததோ அப்படியேதான் உள்ளது நில உடைமை. பல இலட்சங்கள் செலவில் கட்டப்பட்டிருக்கும் தகவல் மையத்தின் பளபளப்பில் உண்மையைக் காண முடியாது என்பதால், ஊருக்குள் இறங்கி நடந்தோம்.
ஞான் தேவ் பாலேகர் என்கிற உள்ளூர் இளைஞர் (மாராத்தா சாதி) எம்மோடு இணைந்து கொண்டார். ராலேகான் சித்தியில் நடக்கும் திருமணங்கள் பற்றி அவரிடம் விசாரித்துக் கொண்டே நடந்தோம். ராலேகானில் திருமணங்கள் எளிமையாக நடக்கும் என்றும், வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ கிடையாது என்றும் பெருமையாகச் சொல்லிக் கொண்டே வந்தார். இதற்கிடையே சாலையின் இடது புறம் மற்ற வீடுகளின் மத்தியில் ஒரு சிதிலமான குடிசை தென்பட்டது.
இது யாருடையது, ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்று விசாரித்தோம். “இது மூன்று பெண் குழந்தைகளைப் பெற்ற ஒருவருடைய குடிசை” என்றார்.
“ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது?” என்று கேட்டதற்கு, “ஓ… அதுவா, அவர் மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்ததில் இப்படி ஏழையாகி விட்டார்” என்றார்.
“ராலேகான் சித்தியில் வரதட்சணை கிடையாது, திருமணம் எளிமையாக நடக்கும் என்றெல்லாம் சொன்னீர்களே?” என்று திரும்பவும் கேள்வி எழுப்பினோம்.
“ஆங்… அது வந்து… வரதட்சணை இல்லைதான்… ஆனால், விருப்பப்பட்டு செய்வார்களில்லையா?” என்றவர் எங்கள் பார்வையைத் தவிர்த்துக் கொண்டார்.
‘கம்பெல் பண்ணி வாங்குறதில்லை சார். விருப்பப்பட்டு அவங்களா கொடுக்கிறத வாங்கிக்குவோம்’ என்று சொல்கிறார்களே, அவர்களெல்லாம் அண்ணாவின் ஜன்லோக்பால் சட்டத்தின்படி ஊழல் பேர்வழிகளா இல்லையா என்ற கேள்வி மனதில் எழுந்தது. நாங்கள் அந்தக் குடிசையில் இருந்த முதியவரிடம் பேச முயற்சித்தோம். “இப்போது நேரமில்லை. வேலைக்குச் செல்ல வேண்டும்” என்று தந்தி வாக்கியங்களில் கத்தரித்தார்.
நாங்கள் அந்த சமயத்திலும் அதன் பின்னும் கவனித்த முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், ராலேகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊரைப்பற்றி ஊடகங்கள் ஏற்படுத்தியிருக்கும் பிம்பம் குறித்து நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவே, அந்தப் பிம்பத்தைக் குலைக்கும் விதமான பதில்களை அவர்கள் வெளியாரிடம் சொல்வதில்லை. பொதுவாக ‘இங்கே எல்லாம் நன்றாகத்தான் உள்ளது’ என்பது எந்தக் கேள்விக்கும் தயாரான பதிலாக வருகிறது. குறிப்பான விஷயத்தை நுணுகிக் கேட்டால் ஒன்று தவிர்க்கிறார்கள் அல்லது மழுப்புகிறார்கள்.
இதற்கு சற்று முன்பு மதிய உணவு சமயத்திலும் இதே அனுபவம் ஏற்பட்டிருந்தது. ஜெயமோகன் தனது கட்டுரையொன்றில், இடதுசாரிகள் ராலேகான் சித்தியில் இறைச்சி தடை செய்யப்பட்டிருப்பதாக அவதூறு சொல்வதாகவும், தானே ராலேகானில் குளத்து மீன் சாப்பிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் மீன் உணவு பற்றி அங்கிருந்த இரண்டு உணவகங்களில் கேட்ட போதும் ‘இல்லை’ என்கிற மறுப்பு விறைப்பாக வந்தது. ஆனால், காலையில் தேனீர் குடித்த கடையில் மறைவாக மட்டன் மசாலா தொங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கவனிக்காமல் இல்லை. மட்டன் மசாலா ஊழலா, அதை மறைப்பது ஊழலா என்பது குறித்து ‘அண்ணா’யிசத்தில்தான் விடை தேட வேண்டும்.
ராலேகானில் அண்ணா ஹசாரே ஏற்படுத்தியிருக்கும் நீர்ப்பாசன வசதி பற்றி ஞான்தேவ் வெகு உயர்வாகப் பேசினார். அண்ணா உருவாக்கிய தடுப்பணைகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பயன்கள் அதிக நிலம் வைத்திருப்பவர்களுக்கே கிடைத்திருப்பதை நேரில் காண முடிந்தது.
சில பணக்கார மராத்தாக்களிடமே பெரும்பாலான நிலம் குவிந்துள்ளது. முற்றிலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கிராமம் என்பதால், நிலமற்றவர்களான தலித் மக்கள், மராத்தா நிலச்சுவான்தார்களைச் சார்ந்தே இருக்கின்றனர். அண்ணாவின் பக்தர்கள் சொல்லும் ‘தலித்’ மேம்பாடு என்பதன் மெய்யான பொருள் இதுதான்.
இதற்கிடையே கிராமக் கமிட்டியின் உதவித் தலைவர் வீட்டை அடைந்தோம். உள்ளே ஒரு புதிய மாடல் இண்டிகா விஸ்டா கார் நின்று கொண்டிருந்தது. பெரிய முற்றம். அதன் இருபுறமும் தகர ஷெட்டுகள் அமைக்கப்பட்டு சுமார் இருபது ஜெர்சி பசுமாடுகள் நின்று கொண்டிருந்ததன. உதவித் தலைவரின் தாயாரை சந்தித்தோம். வேலைக்கு உள்ளூர்காரர்களை வைத்திருக்கிறீர்களா என்று கேட்டோம். “உள்ளூர்காரர்கள் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் நகரங்களுக்குக் கூலி வேலைகளுக்குச் சென்று விடுகிறார்கள். இங்கே அக்கம்பக்கத்து கிராமத்தவர்கள்தான் கூலி வேலைக்குக் கிடைக்கிறார்கள்” என்றார். கூலி பற்றி கேட்டதற்கு, வருடத்திற்கு முன்னூறு கிலோ தானியமும் ஐயாயிரம் ரூபாயும் கொடுப்பதாகச் சொன்னார்.
ஞான் தேவிடம் உள்ளூர்காரர்கள் நகரங்களுக்குக் கூலிகளாகச் செல்வது பற்றி விசாரித்தோம். நிலமற்ற ஏழைகளுக்கு உள்ளூர் கூலி கட்டாததால் பெரு நகரங்களில் டிரைவர்களாகவோ, சித்தாள்களாகவோ அல்லது அது போன்ற வேலைகளுக்கோ சென்று விடுவதாகச் சொன்னார். அவர் சொன்ன விவரங்களில் இருந்து தமிழகத்தின் வறண்ட மாவட்டமான தர்மபுரியிலிருக்கும் ஒரு கிராமத்தை விட, ராலேகான் சித்தி எந்த வகையிலும் உயர்ந்ததாகத் தெரியவில்லை
ஞான்தேவிடம் பசுவதை பற்றிக் கேட்டோம். தாங்கள் பசுக்களைக் கொல்வதில்லை என்றும் அதற்கும் அண்ணாவின் வழிகாட்டுதல்கள்தான் காரணமென்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். “அப்படியானால் வயதான பசுக்களை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர், “அவற்றையெல்லாம் மகர்களிடம் கொடுத்து விடுவோம். அவர்கள் அதை பாரனேரியில் இருக்கும் சந்தையில் அடிமாடாக விற்றுவிடுவார்கள். நமக்கு ஏன் அந்தப் பாவமெல்லாம்?” என்று முடித்தார். ஆதிக்க சாதியினர் அமல்படுத்தும் இந்த ‘கொல்லைப்புறக் கொலை வழியை’, அதாவது பெஞ்சு கிளார்க் மூலம் லஞ்சம் வாங்கும் புனிதர்களான நீதிபதிகளின் வழியை, அண்ணா ஹசாரேதான் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாராம்.
மெல்ல ஞான்தேவைத் தவிர்த்து விட்டு நாங்கள் மகர் குடியிருப்பை நோக்கிச் சென்றோம். ஊரும் சேரியும் தனித்தனியேதான் இருந்தன. அது நமது கிராமங்களில் இருக்கும் சேரிகளுக்கு எந்தவிதத்திலும் மேம்பட்டதாகத் தெரியவில்லை. அண்ணா, ராலேகானின் தலித்துகளுக்கு மேம்பட்ட ஒரு வாழ்க்கைத் தரத்தை உண்டாக்கித் தந்திருப்பதாகச் சொல்லப்படும் கட்டுக்கதைகளின் உண்மையான யோக்கியதையை அங்கே நேரிடையாகப் பார்த்தோம்.
முதலில் எதிர்பட்ட வீட்டின் வாசலில் முதிய பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். மெலிந்து சுருங்கிய உடலில் கிழிசலான சாயம் போன புடவை ஒன்றைச் சுற்றியிருந்தார். பூஞ்சையான கண்களில் இலக்கில்லாத பார்வை ஏதோ கேள்வியுடன் எங்களை வெறித்தது. நாங்கள் எங்களை அறிமுகம் செய்து கொண்டு அவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தோம். பொக்கை வாயெங்கும் சிரிப்புடன் எங்களை உள்ளே அழைத்து அமரச் சொன்னார். அவரெதிரே மண்தரையில் நாங்கள் அமர்ந்து கொண்டோம். அவரது பெயர் சவித்ரா சீமா ஜாதவ். கணவர் இறந்து விட்டார். ஒரே மகன். அவரும் வெளியூரில் கூலி வேலைக்குச் செல்வதாக தெரிவித்தார்.
அது பத்துக்குப் பத்து அளவில் ஒரே அறை கொண்ட வீடு. தரை சாணி போட்டு மொழுகப்பட்டிருந்தது. சிதிலமான சுவர்களில் சிமெண்டுப் பூச்சு இல்லை. வீட்டினுள் வறுமை தலைவிரித்தாடியது. ஒரே கட்டில். துருப்பிடித்து இற்றுப் போன நிலையில் ஒரு இரும்பு பீரோ, கீழே விழும் நாளை எதிர்நோக்கி நின்றது. அந்த பீரோவின் கதவு உடைந்து கிடந்தது. உள்ளே வெகு சொற்பமான சாயம் போன துணிமணிகள் நேர்த்தியாக மடித்து அடுக்கப்பட்டிருந்தன. சமையல் பாத்திரங்கள் என்று பார்த்தால் இரண்டு கைவிரல்களின் எண்ணிக்கைக்குள் அடங்கி விடும் அளவுக்கே இருந்தன. அந்த வீட்டுக்கு மின்சார இணைப்பு இல்லை. பக்கத்து வீட்டிலிருந்து ஒயர் இழுத்து ஒரு புகைபடிந்த குண்டு பல்பு போடப்பட்டிருந்தது.
நாங்கள் ஊடகங்களில் ராலேகான் சித்தி பற்றி சொல்லப்படுவதற்கும் இவரது நிலைமைக்கும் உள்ள முரண்பாட்டை விசாரித்தோம். தங்களுக்கு விதிக்கப்பட்டது இவ்வளவு தானென்று சொன்னவர் தங்கள் குடும்பத்திற்கென்று விவசாய நிலம் ஏதுமில்லையென்றும், தனது மகன் கூலி வேலைக்குச் செல்வதாகவும், அதில் ஒரு நாளைக்கு 150 ரூபாய் கிடைக்குமென்றும் குறிப்பிட்டார். தகவல் மையத்தில் 200 ரூபாய் கூலி என்று சொன்னது பச்சைப் பொய்.
தொடர்ந்து பேசியதில் அசைவ உணவுகளை வீட்டில் சமைப்பதில்லையென்றும், வெளியூருக்குச் செல்லும்போது பிள்ளைகள் அசைவம் சாப்பிடுவார்கள் என்றும் சொன்னார். குடியும் கூட அப்படித்தானென்று குறிப்பிட்டார். தனது ஏழ்மை காட்சிப் பொருளாக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. குடும்பத்தின் ஏழ்மையான நிலை பற்றியோ கிராமத்தின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்புப் பற்றியோ கேள்விகள் வைத்தபோது நேரிடையாக பதிலளிப்பதையோ எங்கள் முகத்தைப் பார்ப்பதையோ தவிர்த்தார்.
அதே நேரத்தில் அந்த மக்களின் வாழ் நிலைமைகள் பற்றி வெளி உலகத்தில் சொல்லப்படும் கதைகளைக் கேட்ட அவர் முகத்தில் ஆச்சர்யம் தெரிந்தது. அண்ணாவின் சீடர்கள் இணையவெளியெங்கும் இரைத்து வைத்துள்ள ராலேகான் பற்றிய சித்தரிப்புகளில் சிலவற்றை நாங்கள் அவரிடம் சொன்னபோது ஒரு எள்ளல் சிரிப்போடும் பதிலேதும் சொல்லாமலும் கேட்டுக் கொண்டார். நாங்கள் அவரிடம் விடை பெற்ற போதும் அதே சிரிப்போடு எங்களை அவர் வழியனுப்பினார். அந்த எள்ளல் எங்களை நோக்கியதல்ல என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டபோதும், அந்த சிரிப்பை மட்டும் நினைவை விட்டு அகற்ற முடியவில்லை.
அடுத்து மகர் வகுப்பைச் சேர்ந்த யதூ பீமாஜி கெய்க்வாட் என்பவரைச் சந்தித்தோம். இவரது குடும்பத்திடம் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. மகன்கள் இருவருமே மும்பையில் டிரைவர்களாக இருப்பதாகச் சொன்னார். மும்பையில் வாழ்க்கைச் செலவுகள் அதிகமென்பதால் குடும்பங்களை கிராமத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர்.
ராலேகான் சித்தியில் விவசாயம் செய்பவர்கள் எல்லாம் சுபீட்சமாக இருப்பதாக பத்திரிகைகளில் சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும் போது உங்கள் பிள்ளைகள் ஏன் வெளியூருக்கு கூலி வேலை செய்யப் போக வேண்டும் என அவரிடம் கேட்டோம். அதற்கு தங்கள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் கைக்கும் வாய்க்குமே போதவில்லையென்றும், நிலத்தை சும்மா போட்டால் வீணாகி விடுமே என்பதால்தான் ஏதோ விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். மேலும், மூன்று ஏக்கர்கள் என்பதால் கிணற்றுப் பாசனத்துக்கு வசதியில்லை என்றும், நிறைய நிலங்கள் வைத்திருக்கும் மராத்தாக்களுக்கு மட்டும்தான் விவசாயத்தால் ஆதாயம் என்றும் குறிப்பிட்டார்.
பேசிக்கொண்டிருந்த போதே அவரது வீட்டின் முகப்பில் இருந்த விநாயகர் படம் கண்ணில் பட்டது. பௌத்தர்களான அவர்கள் வீட்டில் விநாயகர் படம் இருப்பதைப் பற்றிக் கேட்டபோது, தாங்கள் அசைவம் உட்கொள்வதை நிறுத்திக் கொண்ட பின்னர்தான் அண்ணா ஹசாரேவின் முயற்சிகளால் ஊருக்குள் தடையில்லாமல் நடக்க முடிகிறது என்றும், கோயில்களுக்கும் சரிசமமாக போய் வர முடிகிறது என்றும் சொன்னார்.
தலித் மக்களை அசிங்கமானவர்கள் என்று இழிவுப்படுத்தி, அவர்களை சுத்தப்படுத்தி ‘இந்துக்களாக’ ஏற்றுக் கொள்ளும் இந்துத்துவ கும்பலின் பார்ப்பனமயமாக்கம் அண்ணா ஹசாரேவால் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தது. முன்பொரு காலத்தில் அண்ணா ஹசாரே தங்களின் பகுதிக்குள் வந்து, தங்களது உணவுப் பழக்கங்களை மாற்றுவது பற்றியும், ‘சுத்தமாக’ இருப்பது பற்றியும் அறிவுரைகள் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
நாங்கள் அவரிடம், “அதுதான் அண்ணா ஹசாரே சொல்லியபடி நீங்களெல்லாம் சுத்தமானவர்களாகி விட்டீர்களே, இப்போது உங்கள் இளைஞர்களுக்கு மராத்தா பெண்களை மணம் முடித்துக் கொடுக்கிறார்களா?” என்று கேட்டோம். இந்தக் கேள்வியைச் செவிமடுத்த பீமாஜி, ஏதோ காதில் காய்ச்சிய ஈயத்தைக் கொட்டியதைப் போன்றதொரு முகபாவனையைக் காட்டினார். “அப்படியொரு சம்பவமே நடக்காது” என்று அவசரமாகச் சொன்னவர், ”அப்படியெல்லாம் உலகத்தில் நடக்குமா?” என எதிர்கேள்வியும் எழுப்பினார்.
அவரோடு மேலும் இது குறித்துப் பேசியதிலிருந்து சாதி மறுப்பு என்பது அவர்களின் கற்பனையில் கூட இது நாள் வரையில் தோன்றியிருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அண்ணா ஹசாரே ராலேகானில் நிலைநாட்டியிருப்பதாகச் சொல்லப்படும் சமத்துவம் என்பது ‘நாமெல்லாம் இந்து’ என்று ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் இந்து முன்னணி கூறும் சமத்துவம்தான். இந்த உரிமையற்ற நிலை அங்கே இயல்பாக நிலவுகிறது என்பது மட்டுமல்ல, அந்த இயல்புநிலையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு சிறிய கல் கூட அந்தத் தேங்கிய குளத்தில் விட்டெறியப்படவில்லை.
ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் சொல்வது போல் அது தன்னிறைவு பெற்ற கிராமம் அல்ல. அது ஒரு பச்சைப் பொய். அந்த கிராமத்தின் சாதாரண மக்கள் தங்களின் அடுத்த வேளை உணவுக்கும் கூட நித்தம் நித்தம் போராடத்தான் வேண்டியிருக்கிறது. பிள்ளைகளின் கல்வி குறித்தோ, எதிர்காலம் குறித்தோ, மருத்துவச் செலவுகள் குறித்தோ அவர்களிடம் திட்டங்கள் ஏதுமில்லை.
பீமாஜியிடம் உங்களது பேரக் குழந்தைகளை என்னவாக ஆக்கப் போகிறீர்கள் என்று கேட்டோம். ஒரு பேச்சுக்காவது ‘நன்றாகப் படிக்க வைப்போம்’ என்றோ, ‘நல்ல வேலைகளுக்கு அனுப்புவோம்’ என்றோ அவர் கூறவில்லை. “அதை அவர்களின் காலம் தீர்மானிக்கும்” என்றார். நம்பிக்கைகள் வறண்ட பதில்! மேட்டுக்குடி இந்து மனத்தின் கருணை வெள்ளம் பாய்வதற்கு ஒரு தாழ்வான வறண்ட நிலம் தேவை. ராலேகானின் மகர் குடியிருப்புகளில் அதனைக் காண முடிந்தது.
பௌத்தரான பீமாஜியோடு இந்த விவகாரங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது இந்தியாவின் இசுலாமியர்கள் நினைவுக்கு வந்தார்கள். ஒருவேளை ராலேகான் சித்தி இந்தியாவெங்கும் விரிந்தால் இசுலாமியர்களின் நிலை என்னவாக இருக்கும்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது.
குடிப்பவர்களையும், புகைப்பவர்களையும் அண்ணா கட்டி வைத்து சவுக்கால் அடிப்பாராம். பதினெட்டு பட்டி வரையில் சவுக்கை வைத்து சமாளிக்கலாம். அதிகாரம் அதைத்தாண்டி விரியும்போது தண்டனை முறைகள் எப்படி இருக்கும்? அண்ணா முத்தி முதல்வரானால் மோடியா?
நேரம் மாலை நான்கைக் கடந்திருந்தது. மீண்டும் ஊருக்குள் திரும்பினோம். மக்களிடையே ஒரு பரபரப்புத் தோன்றியிருந்தது. இரண்டு ஆம்னி பேருந்துகள் உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. அதிலிருந்து சில மாணவர்களும், வேறு சிலரும் இறங்கினர். விசாரித்தபோது, பூனாவில் இருந்து வருவதாகவும், மாலை நேரத்தில் அண்ணா ஹசாரே நிகழ்த்தப் போகும் பிரசங்கத்தைக் கேட்க வந்திருப்பதாகவும் சொன்னார்கள்.
ராலேகான் சித்தியில் ஒரு சொர்க்கத்தை எதிர்பார்த்து வந்து கடுமையாக ஏமாற்றம் அடைந்திருந்ததால், குறைந்தபட்சம் சொர்க்கத்தின் மூலவரான அண்ணாவையாவது பார்க்கலாமே என்று நினைத்தோம். அதிலும், ஜெயமோகன் உள்ளிட்ட அண்ணா பக்தர்கள் ‘அவர் கோயில் திண்ணையில் படுத்துறங்கும் எளியவர்’ என்றெல்லாம் ஏகத்துக்கும் அவரது எளிமை குறித்து பல்வேறு பில்டப்புகளைக் கொடுத்திருந்ததால், குறைந்த பட்சம் அந்த எளிமையையாவது தரிசிப்போமே என்று அண்ணா தங்கியிருந்த பத்மாவதி கோயிலுக்குச் சென்றோம்.
சுமார் அரை ஏக்கர் அளவுக்குப் பரந்து விரிந்திருந்தது அந்தக் கோயிலின் சுற்றுச் சுவர். அதன் ஒரு கோடியில் அண்ணா உரையாற்றுவதற்கு ஏதுவாக ஒரு சிறிய மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் வலது பக்கம் நவீன வசதிகள் கொண்ட ஒரு ஒற்றைத்தள கட்டிடம் இருந்தது. அதில்தான் அண்ணா ஹசாரே தங்கியிருந்தார். அக்கம் பக்கத்தில் ‘கோயில் திண்ணை’ போன்ற அமைப்பு ஏதும் உள்ளதா எனத் தேடினோம். இல்லை. மண்டபத்தின் முன்னே நிறைய விழுதுகள் கொண்ட மிகவும் வயதான பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. வந்திருந்த மாணவர்களும் பிற இளைஞர்களும் அந்த விழுதுகளைப் பிடித்துத் தொங்கி ஆடிக் கொண்டிருந்தனர்.
அண்ணா தங்கியிருந்த கட்டிடத்தை எளிதில் யாரும் நெருங்கி விட முடியாதபடிக்கு இரும்புக் கிராதி அமைக்கப்பட்டிருந்தது. வெளியே இருக்கும் கூட்ட எண்ணிக்கையையும் நிலவரத்தையும் அண்ணா ஹசாரேவிடம் உடனுக்குடன் தெரிவிக்க நான்கைந்து வேலையாட்கள் தயாராக இருந்தனர். ஐந்து மணிக்கு அண்ணா ஹசாரே தனது இருப்பிடத்திலிருந்து வெளிப்பட்டார். அவர் தங்கியிருந்த கட்டிடத்திற்கும் மண்டபத்திற்கும் ஒரு பத்தடி தூரம் இருக்கும். அவர் நடந்து வந்த இருபுறமும் மக்கள் வரிசைகட்டி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். வெளியே திரண்டிருந்த கூட்டத்திலிருந்து ‘பாரத் மாதாகீ ஜேய்’, ‘வந்தே மாதரம்’ போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. கூட்டத்தின் முன்னே அமர்ந்த அண்ணா ஹசாரே, மராத்தியில் தனது உரையை ஆரம்பித்தார்.
நாங்கள் சுற்றும் முற்றும் பார்த்தோம். வந்திருந்த மக்களில் சாதாரண கிராமத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும்பாலும் பூனா, மும்பை போன்ற நகரங்களில் இருந்து வந்திருந்த உயர் நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் இருந்தனர். நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.
அண்ணா ஹசாரே கொச்சையானதொரு பொருளில் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மட்டும் குறிவைத்து ஊழலைப் பற்றிப் பேசுகிறார். ஊழலின் ஊற்றுக்கண்ணான கார்ப்பரேட் முதலாளிகளைப் பற்றிப் பேசவில்லை; ஊழலைப் பெருகச்செய்த தனியார்மயத்தைப் பற்றிப் பேசவில்லை; தாராளமயம் அழித்த விவசாயத்தைப் பற்றி பேசவில்லை; கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படும் விளை நிலங்கள் பற்றி பேசவில்லை; சாதி ஆதிக்கம், தீண்டாமைக் கொலைகள், இந்துமதவெறி… போன்ற எதைப்பற்றியும் பேசவில்லை. அவர் பேசாத விசயங்கள் அனைத்திலும் ஆளும் வர்க்கக் கருத்துகளுடன் அநேகமாக அவர் உடன்படுகிறார். அதனால்தான் ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஊழல் பெருச்சாளிகளால் அவர் ஸ்பான்சர் செய்யப்படுகிறார். நேரலைத் தொலைக்காட்சியின் செய்தியாளர்கள், சம்பவங்களே இல்லாத அந்தக் கிராமத்தில் அவ்வப்போது புழுதி கிளப்புகிறார்கள்.
மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப சமூகத்தின் மீது வருண தருமத்தை நிலைநாட்டுகின்ற தனது பாசிச அரசியலுக்கு மிகவும் பொருந்தி வருகிறார் என்பதனால்தான், அண்ணா ஹசாரேயை இலட்சிய மனிதராகவும், அவரது கிராமத்தை இலட்சிய கிராமமாகவும் ஆர்.எஸ்.எஸ். கொண்டாடுகிறது.
இராணுவத்தின் கடை நிலை ஊழியருக்கே உரிய அடிமைப்புத்தியும் முரட்டுத்தனமான ஆதிக்க மனோபாவமும், நிலப்பிரபுத்துவ நாட்டாமைத்தனமும், பார்ப்பன இந்து பண்பாட்டு விழுமியங்களும், கொஞ்சம் அசட்டுத்தனமும் நிறைய தற்பெருமையும் கலந்த அந்த ‘நல்லொழுக்கச் சீலரை’ தரிசிக்க வந்த இளைஞர்கள் ஏ.சி. பேருந்திலிருந்து இறங்கி, அவசர அவசரமாக பத்மாவதி கோயிலுக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள்.
______________________________________________________________
- வினவு செய்தியாளர்கள், ராலேகான் சித்தி – மராட்டிய மாநிலத்திலிருந்து
______________________________________________________________________
படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்