Sunday, 18 December 2011

பள்ளி தேர்வுக்காலத்தில் அறிவைத் துலக்கும் உணவுகள்!கல்வி மீதான அக்கறை கடுமையாகக் கூடி இருக்கும் காலம் இது. இந்த விஷயம் வரவேற்பிற்குரியது தான் என்றாலும், தற்போதைய கல்வித்திட்டம் எந்த அளவிற்கு ஒரு சிறந்த மனிதரை உருவாக்குகிறது என்பதில் சர்ச்சை இருக்கத் தான் செய்கிறது. மதிப்பெண் எடு
க்க, மனப்பாடம் செய்ய தரும் பயிற்சி, ஆளுமையை பெருக்க, சமூக அக்கறையை அதிகரிக்க தரப்படுவதில்லை. அந்த மதிப்பெண்ணும் மனப்பாடப் பயிற்சியுமே ஒரு மாணவனின் உயர்படிப்பிற்கான தகுதியாகக் கருதப்படுவதால், ஒண்றரை வயசிலேயே குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்பெற்றோர் ஏராளம்.
பார்த்து, ரசித்து, பழகி, புரிந்து நகரும் குழவிப்பருவத்தின் மூளையில், இங்கிலீஷ் பாட்டை திணித்து, அதில் மனம் களிக்கும் பெற்றோர் அதிகரித்து வருவது பெரும்
வேதனை. சூப்பர் மேனாகவும், சூப்பர் சிங்கராகவும், சூப்பர் ஸ்டாரகவும் தன் குழந்தையை கற்பனை செய்யும் பெற்றோர், அந்த குழந்தைக்கென ஒரு அற்புதமான மனது இருப்பதை மறக்கவும் மறுக்கவும் செய்வது தான் இன்றைய துரித, நவீன நாகரீக வாழ்வு தந்த பரிசு.
இன்னும் போதாக் குறைக்கு தொழிற்கல்வி மட்டுமே மிகச் சிறந்த விஷயம். அதற்கு, வீட்டில் இருந்து படித்தால் சரியாக இராது. விடுதியுடன் கூடிய பள்ளிச் சிறையில் தள்ளு என்ற மனோபாவமும் பெருகி விடுதிப்பள்ளிகள் பெருகி வருகிறது. படித்தவுடன் சில பல ஆயிரங்களுடன்/லகரங்களுடன் பன்னாட்டுக் கம்பெனியில் வேலை என்ற சு(ப)ய நல நோக்கு

பெருகியிருப்பதுதான், இந்த அடிமைப் பயிற்சிப்பட்டறையின் அடித்தளம்.
பொதுவாக, பிறக்கும் குழந்தைகளுக்கு மொத்தம் ஒன்பதுவகை புத்திசாலித்தனம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கைபற்றிய அறிவு(Naturalist intelligence),இசை அறிவு( musical intelligence) கணித அறிவு (logical-mathematical intelligence), existential intelligence, ளுமை தரும் அறிவு (interpersonal intelligence)உடலை வில்லாக ஆடவைக்கும் அறிவு(Bodily kinesthetic intelligence),மொழி அறிவு(linguistic intelligence), தன்னை உணரும் ஞான அறிவு(intrapersonal intelligence)சிற்பம்-ஓவியம் அறிவு(spatial intelligence) – என்பன தான்
இந்த ஒன்பது வகை அறிவு. இதில் ஒன்று உங்கள் குழந்தைக்கு கண்டிப்பாக இருக்கும். அதை கண்டிபிடிப்பது பெற்றோர் கடமை. ஹாய்! ஹவ் ஆர் யூ? ஹவ் இஸ் யுர் டே?, என விருந்துக்கு வந்தவன் போல் பிள்ளகளை யதேச்சையாகச் சந்திக்கும் பிஸி பெற்றோரால் இதை
கண்டுபிடிக்க முடியவே முடியாது.
நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். அதிகம் பேச வேண்டும். கொஞ்சி மகிழ வேண்டும். அவர்கள் அறியாமையை ரசிக்க வேண்டும். அவர்களுடன் படிக்க வேண்டும். கண்ணை விரித்து அவர்கள் ரவுலட் சட்டம் பற்றி எப்படிம்மா தெரியும் உனக்கு?” என கேட்டவுடன், பெருமையாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.
சரி..விஷயத்திற்கு வருவோம்..இந்த மார்க் மேனியா’ பெருகி இருப்பதில் கூடிவரும் இன்னொரு சிக்கல்..எதை சாப்பிட்டால் என் மகன் கணிதப்புலிஆவான்? எது குடித்தால் என் மகள் விஸ்வனாதன் ஆனந்த் ஆவாள்? என்ற தேடலில், ஹிஸ்டரி ஜாக்ரஃப்ரியில் 100 வாங்கணுமா - எங்க கம்பெனி எனர்ஜி ட்ரிங்க் சாப்பிடுங்க,”- எனும் விளம்பரங்கள்!. மாலையில் பள்ளி வாசலில் வீட்டுக் குழந்தைகளைக் கூப்பிடக் காத்திருக்கும் பெற்றோர் கூட்டம்தெரியுமா.. உனக்கு? ராஜேஸ் அப்பா யூஎஸ்-ல இருந்து ஏதோ பிரய்ன் டானிக் வாங்கி வந்திருக்கார்...அவன் போன மாசம் மேக்ஸ்ல செண்ட்டம் வாங்கிருக்கான் தெரியுமா? எனச் சொல்ல, அருகிலே இருக்கும் ஒரு சூப்பர் மம்மி, “ நோ! நோ!..அது.. இப்ப இந்தியாவிலேயே கிடைக்கிறது.. நான் அதான் என் பையனுக்குக் குடுக்கிறேன்” என புளங்காகிதமாய்க் கூற, கஷ்டப்பட்டு வீட்டை அடகு வைத்து ஸீட் வாங்கின குருவம்மாவும், கிருஷ்ணவேணியும்,வேக வேகமாக அட்ரஸ் வாங்கிக் கொண்டு அந்த சூப்பர் உணவு வாங்க பாதி சம்பளம் தொலைக்க தயாராகிறாகள்.
எது சூப்பர் உணவு? எல்லாமே நல் உணவுதான். வெண்டைக்காய் சாப்பிடால் கணக்கு வரும் என்பதெல்லாம், கொஞ்சம் குழகுழன்னு வரும் வெண்டைக்காயைச் சாப்பிட மறுக்கும் குழந்தையை சாப்பிட வைக்க சொன்ன குட்டிகதை.. வளரும் குழந்தைக்கு தேவையான அளவு கார்போஹைட்ரேட், புரதமும் நல்ல சிறு கனிமங்கள் நிறைந்த காய்கறிகளும், நிறைய பாலிஃபீனல்கள் உள்ள கனிவகைகளும் போதும். முட்டையும் மீனும் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு.
படிக்கும் குழந்தகட்கு மீன் உணவு ஒரு மிகச் சிறந்த உனவு என்கின்றது தற்

போதைய உணவு அறிவியல். அதிலுள்ள DHAசத்து மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மீன் எண்ணெயில் அந்த DHA சத்து கிடைப்பதால் மீன் எண்ணெய் சாப்பிடுவது நல்லது. மீனில் நேரடியாகக் கிடைக்கும் இந்த DHA, வெஜிடேரியனுக்கு, ஃப்ளாக்ஸ் விதை எண்ணெயில் அதிகம் கிடைக்கும். ஆனால் ஃப்ளாக்ஸ் விதை எண்ணெயில் - இருந்து அதிலுள்ள ஒமேகா சத்து EPA ஆக மாறி, பின் அதிலிருந்து DHA உற்பத்தியாகும். மீனோ, முட்டையோ, பாசிப்பயறு கூட்டோ எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். வெஜிடேரியனாக இருந்தால் கூடுதல் மூளை வளரும் என்பது கட்டுக்கதை. உலகின் நோபல் பரிசு வாங்கியவர்களில் 90 சதவீதம் பேர் மீனும் மாட்டு இறைச்சியும் சாப்பிடுபவர் தான். அவரவர், உடலுழைப்பிற்கேற்றபடி, அருகாமையில்
கிடைக்கும் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
படிப்பில் கொஞ்சம் மந்தமான நிலை உள்ள குழந்தைக்கு வல்லாரை கீரையை சட்னியாகச் செய்து கொடுக்கலாம். அதனால் தான் அந்த கீரைக்கு ஞானவல்லி கீரை என்ற பெயருமுண்டு. நீர்ப்பிரமித் தண்டு எனும் மூலிகையை உணவில் சேர்க்க மூளையின் செயல்திறன் கூடுவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
நல்ல புத்திசாலியாக இருக்க, குழந்தைக்கு நல்ல தூக்கமும், நல்ல உடல் உழைப்பும் அவசியம். குப்பை உணவுகளைச் சாப்பிட்டு உடலை வளர்க்கும் குழந்தையால் அறிவுத்திறனைப் பெருக்க இயலாது. தினசரி காலையில் காய்ந்த அத்தி, பேரிச்சையை சாப்பிடச் சொல்ல வேண்டும். மாலையில் 5-10 கிஸ்மிஸ் பழங்களைக் கொடுக்க வேண்டும். இனிப்பு அதிகம் சாப்பிட்டால், அது தூண்டும் இன்சுலின் அதிகப்பட்ட நிலையில் மூளையின் செயல்திறன் குறைவதை தற்போது கண்டறிந்துள்ளனர். இனிப்புகளை, வெள்ளை சர்க்கரையை முடிந்த அளவு குறைக்க வேண்டும். இனிப்பு தேவைப்படும் போது லோகிளைசிமிக் தன்மையுடைய தேனோ அல்லது பனங்கருப்பட்டியோ பயன்படுத்துவது நல்லது. சாக்லேட் இனிப்புகளின் மீதான பிடித்தத்தில் இருந்து பழங்களில் விருப்பத்தை அதிகரிக்க வைக்க

வேண்டும்.
வரகரிசிச் சோறும் வழுதுணங்காயும் (கத்தரிக்காயும்) சாப்பிட்ட ஒவ்வையாரை மிஞ்சிய புத்திசாலிப் பெண் யாருமில்லை. வறுமையில், சுட்ட மீனும் ஒரு துண்டு பன்னும் சாப்பிட்ட தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இணையான அறிஞர் இன்றளவில் இல்லை.
ஆதலால், மூளையை வளர்த்து புத்திசாலி ஆக்குவேன் என்று கூறி வரும்வியாபார அமிர்தங்களைக் காட்டிலும், உங்கள் இடுப்பில் உட்கார வைத்துக் கொண்டு நிலவைக் காட்டி, பருப்பு சாதத்தை குழைத்து ஊட்டிப்பாருங்கள்! உங்கள் வீட்டுச் செல்லம் உலகை ஆளக் கூடும்!

No comments:

Post a Comment