Thursday 15 December 2011

இந்தியாவில் நடந்த அணுமின் விபத்துகள்


அணுமின் நிலையங்களில் நேர்ந்த விபத்துகளைப் பட்டியலிட்டு ‘தினமணி’ நாளேட்டில் ஆர்.எஸ். நாராயணன் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி: இந்திய அணுமின் நிலையத் தலைவர் எஸ்.கே.ஜெயின் கூறும்போது, “எங்களிடம் அணுஉலைகள் பற்றிய அறிவு முழுமையாக உள்ளது. இந்தியாவில் நிறுவப்பட்ட அணு உலைகள் அனைத்தும் எப்படிப்பட்ட பூகம்பத்தையும் எப்படிப்பட்ட சுனாமியையும் தாங்கும் சக்தி படைத்தது” என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் எப்படி அணு உலைகள் பத்திரமாக இயங்கி வரும் இலட்சணத்தை அறிவது நன்று. மொத்த மின்சார உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே வழங்கும் அணுசக்தித் துறை விஞ்ஞானிகளின் அலட்டலுக்கு ஒரு குறையுமில்லை. தாராப்பூரில் மட்டும் 1980 களில் தொடங்கி இன்று வரை சுமார் 400 தொழிலாளர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தில்லியிலிருந்து 200 கி.மீ. தூரத்திலுள்ள நாரோராவில் தீ விபத்து ஏற்பட்டு அணு உலை கட்டடம் வரை தீ பரவியது. அப்போது அமைக்கப்பட்டிருந்த அவசரநிலை ஏற்பாடுகள் எதுவும் வேலை செய்யவில்லை. நல்லவேiயாக தீ தானாகவே அணைந்துவிட்டதால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கைகாவில் சோதனையின்போது தவறான வடிவமைப்பால், கட்டுமானம் சரிந்தது. நல்லவேளையாக அப்போது அணுஉலை வேலை செய்யாததால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ராஜஸ்தான் அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சுக் கழிவுகள் 1995 இல் ஏரியில் விடப்பட்டதை மூன்று மாதம் கடந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 2003 இல் கல்பாக்கத்தில் ஆறு தொழிலாளர்கள் கூடுதல் கதிர்வீச்சுக்கு ஆளாகி மடிந்துள்ளனர். இந்திய அணுசக்தி வரலாற்றில் பணியாளர்கள் நேரிடையான கதிர்வீச்சுக்கு ஆளானது அனுமதிக்கப்படும் அளவுக்கு மேல் தாக்கப்பட்டதில் மோசமான ஒன்று.
கைகா அணுமின் நிலையத்தில் தொழிலாளர்களின் சிறுநீர்ப் பரிசோதனையின் போது கூடுதல் அளவில் ட்ரைட்டியம் இருப்பது புலனானதைத் தொடர்ந்து 2009 இல் தொழிலாளர் போராட்டம் வெடித்தது. விசாரணையின்போது தெரியவந்த விவரம் குடிதண்ணீர்த் தொட்டியில் ட்ரைட்டியம் கலந்துள்ளதும் புலனாயிற்று. ட்ரைட்டியம் குருதியில் கலந்தால் புற்றுநோய் ஏற்படும்.
1962 இல் இயற்றப்பட்ட அணு மின்சாரச் சட்டம், அணுசக்தித் துறைக்கு அவர்கள் விரும்பாத விஷயங்களைத் தெரியப்படுத்த வேண்டாம் என்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளது. உண்மையை மறைக்கும் அதிகாரம் – “நமது அணுசக்தி பலம் பாகிஸ்தானுக்கோ – சீனாவுக்கோ தெரிய வேண்டாம்” என்பது சரி. ஆனால், இயந்திரக் கோளாறு – அவசரகால பாதுகாப்பு கோளாறு – கட்டுப்படுததப்படாத கதிர்வீச்சுக் கழிவு…. பற்றிய செய்திகளை எப்படி மூடி மறைக்க முடியும்? எப்படியோ 2 ஜி ஊழல்போல் கசிந்து விடுகிறது.
யுரேனியம் தோண்டி எடுப்பதிலிருந்து அணுஉலை செயல்படும் வரை நிகழ்த்தப்படும் அணு எரிசுழற்சியில் – ஒவ்வொரு கட்டத்திலும் கதிர்வீச்சுக் கழிவு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. மண்ணில் சேரும் இக்கழிவின் கதிர்வீச்சு சக்தியின் ஆபத்து ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும். அணுமின் கழிவு பற்றிய ஆபத்தைப் பற்றி அணுமின் துறை ஒப்புக் கொள்ளவே மறுக்கிறது.
வங்காள விரிகுடாவில் எந்தவிதமான சுனாமியும் ஏற்படாது என்றோ – கடல் நீர் பெருக்கெடுத்து கடற்கரை நகரை அழிக்காது என்றோ என்ன உத்தரவாதம் உள்ளது? பாண்டியர் துறைமுகம் கொற்கை அழிந்தது. சோழர் துறைமுகம் பூம்புகார் அழிந்தது. பல்லவர் துறைமுகம் மாமல்லபுரமும் அழிந்தது. அப்படி இருக்கும்போது, கல்பாக்கமும், கூடங்குளமும் அழிக்க முடியாத ஆயிரங்காலத்துப் பயிரா என்ன? ஒருக்கால் அப்படி அழியுமானால்… மக்களோ, மரமோ, பயிரோ எஞ்சினால் நமது வாய்ப்பு தான்! இவ்வளவு மக்கள் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிக் கூடங்குளம் அணுமின் உலைகள் நிறுவப்படுமானால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.
நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்கு மட்டும் கிடைத்தாலே போதும்; கூடங்குளம் தேவை இல்லை கூடங்குளம் அணுமின் திட்டத்தை ஆதரித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ள கருத்துகளை முழுமையாக மறுத்து பழ.நெடுமாறன், அப்துல்கலாமுக்கு திறந்த மடல் ஒன்றை ‘தினமணி’ நாளேட்டில் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தின் மக்கள் தேவைக்கு தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரமே போதுமானது என்றும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கப் படுவதால் தான் இந்த நெருக்கடி என்றும் விளக்கியுள்ளார். பழ. நெடுமாறன் கட்டுரை யிலிருந்து ஒரு பகுதி:
தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமானால் அதற்கு அவசியமான கட்டமைப்பு மின்சாரம் ஆகும். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 2000 மெகாவாட் மின் உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி அணு மின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்துக்கு மிகப் பெரிய செய்தியாகும்.
கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வர வாய்ப்புள்ளது. இந்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்க இருக்கிறது எனவும் தமிழக மக்கள் நாவில் தேனைத் தடவ முயற்சி நீங்கள் செய்திருக் கிறீர்கள்.
உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளுக்குப் பின்னாலும் காவிரி நீரைத் தமிழகத்துக்குத் தர மறுக்கும் கர்நாடகத்துக்கும், முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்துக்கும், பாலாற்றை வழிமறிக்கும் ஆந்திரத்துக்கும் கூடங்குளம் மின்சாரத்தில் பாதி அளிக்கப்பட இருக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகப் போகும் மின்சாரத்தில் 50 சதவீதம் மட்டுமே தமிழகத்துக்கு அளிக்கப்படும் என்பதை பெரிய வாய்ப்புப்போல கூறியிருக்கிறீர்கள். மீதமுள்ள மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஆனால், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக உருவாகும் அபாயம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே. இது என்ன நியாயம்?
ஏற்கனவே நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்த மூன்று அண்டை மாநிலங் களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 26 கோடி யூனிட் மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை நாள் ஒன்றுக்கு 22 கோடி யூனிட்தான் ஆகும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நெய் வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையும் தமிழகத்துக்குக் கொடுத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அவசியம் இருக்காதே.
தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையைப் போக்க பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தாங்களே மின்நிலையங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வகுத்துள்ள திட்டத்தின்படி 3000 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 5 அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக் குறைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு இலவசமாகவும், பிறகு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்கப் படுவதும்தான் காரணமாகும். பன்னாட்டு நிறுவனங்கள் சொந்த மாகவே அனல் மற்றும் காற்று மின்உற்பத்தியைச் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட வேண்டும். அரசு உற்பத்தி செய்யும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கும் சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும் – என்று பழ.நெடுமாறன் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment