Saturday 17 December 2011

மருந்தும் விருந்தும்


மருந்தும் விருந்தும் ஓரிரு நாள் இருந்தால் மட்டுமே சிறப்பு என்று வழக்குமொழி ஒன்று உண்டு. ஆனால் இந்நாட்களில் இரண்டுமே அளவுக்கு அதிகமாக பெருகிவருகிறது. ’மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்,’ என்ற வள்ளுவன் மொழியில், உணவு தேவையில்லாமல் விருந்தாகி, தேவைக்கதிகமாகச் செல்லும் போது தான் மருந்தின் அவசியம் துவங்குவதை உணர்த்தியிருப்பார்.


இரவு நேரக் களியாட்டங்கள் மட்டுமல்ல, அவரவர் வசதி வாய்ப்பைக் காட்ட திருமணம் போன்ற நிகழ்வுகளில், ஏராளமான, திக்குமுக்காட வைக்கும் உணவைக் கொட்டிவைப்பது கலாச்சாரமாகி வருகிறது. பகட்டும், படோபமும் முன் நிறுத்தப்படும் இவ்விருந்துகளில் அவசியமும் ஆரோக்கியமும் புறந்தள்ளப்படுவது தான் வேதனை. ‘இன்றைக்கு ஒருநாள் தானே’- என்ற சமாளிப்புடன் அடிக்கடி அரங்கேறும் விருந்துகள் தரும் உடல் நலக்கேடுகள் ஏராளம். அதே சமயத்தில் அன்பின்பால் கொடுக்கப்படும் விருந்தை முகம் மலரச் சாப்பிட்டு, விருந்தளிப்பவரை மகிழ்விப்பதும் நம் தமிழர் கலாச்சாரம். எப்படி விருந்தளிக்கலாம்? எப்படி விருந்தெடுக்கலாம்?

குடும்பத்துடன் இரவு உணவிற்காக நண்பர் ஒருவர் வீட்டிற்கு விருந்தினராகச் சென்றிருந்தோம். எங்களை விருந்திற்கு அழைத்த அந்த முதிய தம்பதியினர் சமைத்து வைத்திருந்த ஏராளமான உணவு வகைகளைப் பார்த்ததும் உண்மையில் திகைத்துப் போய் விட்டோம். கேரளத்தவர்களான அவர்கள் தங்கள் மாநிலத்து பாரம்பரிய சிறப்பு உணவு வகைகளை அவர்களே சமைத்துப் பரிவுடன் பரிமாறிய விதம் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். அந்த 65 வயது அம்மா, விருந்தின் அத்தனை உணவையும் நேர்த்தியாக சமைத்தது மட்டுமல்லாமல், குழந்தைகட்கு, பெரியவர்க்கு என தேர்ந்தெடுத்து அன்புடன் பரிமாறியது விருந்தின் கூடுதல் சுவை. விருந்தில் மிகச்சிறப்பான விஷயம், அதை நாமே தயாரிப்பது. அதை மகிழ்வுடன் அக்கறையுடன் பரிமாறுவது. கடையில் விதவிதமாக வாங்கிப் பரிமாறுவதில் அன்பும் ஆரோக்கியமும் இரண்டாம் இடத்திற்குச் சென்றுவிடும்.

முதலில் குழந்தைகளை விருந்தில் ’எதையும் வீணடிக்கக் கூடாது’ என்ற விஷயத்தை வலியுறுத்திப் பழக்க வேண்டும். அது வீட்டிற்கும் நாட்டிற்கும் செய்யும் சேவை. இன்றளவில், 3 கோடி விலையுள்ள ’லம்போகினி’ காரும், 30,000 ரூபாய் விலையுள்ள, ’மோண்ட் பிளான்க்’ பேனாவும் விற்கும் நம் தேசத்தில் தான், 50% மான குழந்தைகட்கு அன்றாட சராசரி உணவியல் தேவை (RECOMMENDED DIETARY ALLOWANCE) கிடைப்பது இல்லை. அந்த வறுமை குறித்து குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டும். தேவையானவற்றை மட்டும் வாங்கி தட்டை முழுமையாக காலி செய்யும் பழக்கத்தை குழந்தைகட்கு புகட்டுவது முக்கியம். அதிக எண்ணெய்ச் சத்துள்ள பொரித்த உணவுகள், செயற்கை வண்ணம் நிறைந்த உணவுகள், பயண வழிச்சாலையில் விற்கப்படும் புலால் உணவுகள் ஆகியற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது.
விருந்து என்ற பெயரில் புதிய மேற்கத்திய துரித உணவுகளான, பிட்சா, பர்கர் மற்றும் குளிர்பானங்களை கூடியவரை குழந்தைகளிடம் கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது.

சுவையூட்டிகள், விரைந்து கெட்டுப் போகாமல் இருக்கச் சேர்க்கப்படும் கெமிக்கல்ஸ், சில நேரங்களில் தொடர்ந்து சாப்பிடத் தூண்ட வைக்கும் பொருட்கள் என பல புது வேதிகள் அதில் பெரும்பாலும் சேர்க்கப்படுவதால் அவற்றைத் தவிர்ப்பது அவசியம். இப்போது பல இடங்களில் பாரம்பரிய உணவு அங்காடிகள் புதுப் பொலிவுடன் வரத் துவங்கியுள்ளன. அங்கே கிடைக்கும் வெற்றிலை சாதம், பால் அப்பம், இனிப்பு கொழுக்கட்டை, வாழைப்பூ வடை, இளநீர் பாயாசம் எனும் புதிய பாரம்பரிய உணவை விருந்தாக உங்கள் குழந்தைக்கு அறிமுகம் செய்யுங்கள்.
’பஃபே’ விருந்துகள் இன்று பெருகி வருகிறது. ஓட்டலானாலும் சரி..திருமணங்களானாலும் சரி.. பஃபே உணவுகளுக்கு வரவேற்பு கூடுதல். ஆனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்க்கு பஃபே சரியான தேர்வு அல்ல. ஆறு சுவையில் வகைக்கு மூன்றாக வைப்பது தான் ’எங்க’ ஸ்டேட்டஸ் என இறுமாப்பில் வைக்கும் விருந்தில், “போதும் போதும்” என்று சொன்னாலும் துளி துளியாய் உள்ளே சென்று கிளைமாக்ஸில் கலோரி கணக்கு பார்த்தால், மிரட்டும். ஆதலால், உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர், சமர்த்தாய் ஓரிரு அயிட்டங்களோடு ஆசுவாசப்படுத்திக் கொள்வது சிறப்பு.

சர்க்கரை நோயாளிகள் விருந்துக்கு தானே என பரவசத்துடன் பாயாசத்தை பருகுவதும், சில ரோட்டோர கடைகள் சாலையை கொஞ்சம் கொஞ்சமாய் ஆக்ரமிப்பது போல, ஒரத்திலிருந்து இனிப்பை சின்ன சின்னதாய் பிய்த்து பிய்த்து கடைசியில் மொத்ததையும் முடிப்பது சாதாரணமாக விருந்தில் நடக்கும் வைபோகம். நடுஇரவில நெஞ்சுவலி வரும் போதோ அல்லது அடுத்த நாள் காலையில் அலற வைக்கும் இரத்த சர்க்கரை அளவைப் பார்க்கும் போதோ, ரொம்ப நல்ல பிள்ளையாய் ”இதுக்குத் தான் சொன்னேன் நான் விருந்துக்கு ஓட்டலுக்கு எல்லாம் வரலை,”-ன்னு வசனம் பேசுவதில் பிரயோசனம் இல்லை. ஒரு மாத கிடுக்கிப்பிடி கட்டுப்பாட்டை ஒரு துண்டு ’மைசூர்பா’ கபளீகரம் செய்துவிடும். இது தவிர, இன்றைக்கு ஒரு நாள் தானே என சாப்பிடும் இனிப்பில், அந்த 2-3 நேரம் சர்க்கரை இரத்ததில் போடும் ஆட்டத்தில் இதய நாளங்கள், சிறு நீரகத்திற்கு வரும் இழப்பு தவிர்க்க முடியாதது தான். ”இவ்வளவு நாள் கட்டுப்பாட்டில் தானே இருந்தேன்..இந்த ஒரு தடவையிலா?” என வசனம் பேசவே முடியாது!
வேகவைக்க வேண்டியதை பொரிப்பதும், அப்படியே சாப்பிட வேண்டியதை பொரித்து வருத்து சாப்பிடுவதற்குப் பெயர் விருந்தல்ல. புதுசு புதுசாய் தினுசு தினுசாய் இருந்தால் தால் விருந்திற்கு போன மாதிரி இருக்கும் என்ற மனோபாவம் தான், உணவு வணிகர்களை இது போன்ற உத்திக்கு அழைக்கிறது. ’வாழைப்பழ பஜ்ஜி, வெண்டைக்காய் ஊறுகாய், பூசணிக்காய் ஃப்ரை’ என சம்பந்தமில்லாமல் சமைப்பது அந்த காய்கனிகளின் இயல்பானச் சத்தை முழுமையாய் இழக்க வைக்கும். ஒருவேளை அந்த சுவை உங்கள் நாக்கிற்குப் பிடித்தும் போய் விட்டால், தொடரும் அந்த ’மாயாஜால’ மெனுக்கள் வீட்டிலும் அரங்கேறும் ஆபத்து அதிகரிக்கும்.வித விதமான பழங்கள், வேறு வேறு கலாசார, சமூக பழக்கங்களில் உள்ள உணவுகள்-ஐ நம் உடலுக்கு நல்லதா என யோசித்து சுவைப்பதில் தவறேயில்லை. பெல்ஜியத்தில் சிறுதானியத்தில் செய்த ஆப்பமும், ஜிம்பாவே நாட்டில் கிழங்கு மாவில் செய்த தோசையும் ருசியுங்கள். அதன் சுவையில் பண்பாடு ஒளிந்திருக்கும். வணிக உத்தி மறைந்திருக்காது.

No comments:

Post a Comment